Published:Updated:

மஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்!

மஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்!

விவசாயத்தில் பெரும்பாலான பயிர்களுக்கு விதைக்கிழங்குகளையும், விதைகளையும்தான் நடவு செய்து வருவார்கள். ஆனால், அதையே நாற்றாக வளர்த்தெடுத்து நடும்போது... பயிரின் வளரும் தன்மை உறுதிப்படுத்தப்படுவதோடு, விளைச்சலும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் தற்போது காய்கறிகள், தானியங்கள், கரும்பு... என பல பயிர்களிலும் நாற்று நடவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை மஞ்சள் நடவிலும் புகுத்தி... குழித்தட்டு மூலம் நாற்று உற்பத்தி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி வடிவேலு.

மஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்!

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வடிவேலுவைச் சந்தித்தோம். “விவசாயக் குடும்பங்கிறதால, சின்ன வயசுல இருந்தே விவசாயம் மீது எனக்கு ரொம்ப ஆர்வம். படிப்பு முடிச்சுட்டு தனியார் கம்பெனியில ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். அது பிடிக்காம விவசாயத்துக்கே வந்துட்டேன். திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலூகாவுல இருக்குற வளையப்பாளையத்துல எங்களுக்கு ரெண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. அது மானாவாரி நிலங்கிறதால நிலக்கடலை மட்டும்தான் பயிர் பண்ணுவோம். எனக்கு விவசாய நண்பர்கள் அதிகம் இருக்கிறாங்க. அவங்ககிட்ட பேசும்போதுதான் கரும்பை நாத்து விட்டு நடவு செய்ற மாதிரி, மஞ்சளை நடவு செஞ்சு பாத்தா என்னானு ஒரு யோசனை வந்துச்சு. அப்பறம், பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தெரிஞ்ச விவசாயிகள்ட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு குழித்தட்டுல மஞ்சள் நாற்றுகளை உற்பத்திப் பண்ணினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2012-ம் வருஷம், அவினாசி பக்கத்துல இருக்குற தண்டுகாரன்பாளையத்துல நண்பர் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல மஞ்சள் நாற்றுகளை சோதனை முறையில நடவு செஞ்சு பார்த்தோம். அவினாசி பகுதியில, வழக்கமா விதைக்கிழங்கு நடவு முறையில 25 குவிண்டால் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஆனா, நாற்று நடவு முறையில 35 குவிண்டால் அறுவடை செஞ்சோம்’’ என்று ஆச்சர்யமூட்டிய வடிவேலு தொடர்ந்தார்.

“பொதுவான நடவு முறையில், ஒரு ஏக்கருக்கு 800 கிலோவுல இருந்து 1,000 கிலோ வரை விதைமஞ்சள், தேவைப்படும். ஆனால் குழித்தட்டு முறையில் 175 கிலோவுல இருந்து 200 கிலோ விதைமஞ்சள் மட்டுமே போதுமானது. குழித்தட்டு நாற்றை 20 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யணும். இப்படி நாற்றாவே நடவு செய்றப்போ சரியான இடைவெளியில் பயிர் வளரும். அதில்லாம மொத்த மகசூல் காலத்துல 15 நாட்கள் மிச்சமாகும். மஞ்சள்ல ‘குளுக்கோமைன்’ங்கிற நிறம்தான் ரொம்ப முக்கியம். சாதாரண விதைப்பு முறையில் குளுக்கோமைன் 3.4 கிரேட் வரைதான் இருக்கும். நாற்று நடவு முறையில 3.7 கிரேட் வரை இருக்கும். அதனால கூடுதல் விலையும் கிடைக்கும்.

சாதாரண நடவு முறையில், ஒரு செடியில 300 கிராம் அளவுக்குத்தான் மஞ்சள் இருக்கும். நாற்றா நடவு செய்யும்போது ஒரு செடியில 800 கிராம் வரை மஞ்சள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் 32 ஆயிரம் செடிகளை நடவு செய்றப்போ கிட்டத்தட்ட 15 டன் அளவுக்கு மகசூல் கூடும்’’ என்று, நாற்றாக நடவு செய்யும்போது கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பேசிய வடிவேலு நிறைவாக,

“குழித்தட்டு முறையில ஒரு நாற்றை உற்பத்தி செய்யுறதுக்கு 50 பைசாதான் செலவாகும். ரொம்பவும் எளிய தொழில்நுட்பம்தான். அது பத்தின விவரம் தெரிஞ்சுக்க நினைக்கிறவங்களுக்கு நான் உதவி செய்யத் தயாரா இருக்கேன்” என்று ஆர்வம்பொங்கச் சொன்னார்.

தொடர்புக்கு,
வடிவேலு,
செல்போன்: 99440-33055

குழித்தட்டில் நாற்று!

குழித்தட்டில் நாற்று தயாரிக்கும் முறை பற்றி வடிவேலு சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

மஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்!

‘குழிதட்டு நாற்று தயார் செய்வதற்கு சராசரியாக 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக்கிழங்கைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதனை பிசிறு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய துண்டுகளின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு கணு இருப்பது போல பார்த்து வெட்ட வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒரு கணுவாவது முளைக்கும். வெட்டிய மஞ்சள் துண்டுகளை சூடோமோனஸ், டிரைகோடெர்மாவிரிடி கலந்த கலவையில் 10 நிமிடங்கள் அல்லது பீஜாமிர்தக் கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நிழலான பகுதியில், 4 அடி அகலம், 8 அடி நீளம், ஓர் அங்குல உயரத்தில் தேங்காய் நார்க்கழிவைக் கொண்டு, படுக்கை அமைத்து ஈரமாக்க வேண்டும். அதன் மீது, விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைமஞ்சள் துண்டுகளைப் பரப்பி, அதன் மீது மறுபடியும் தேங்காய் நார்க்கழிவைக் கொண்டு மூடாக்கு போட வேண்டும். இதே அளவில் ஐந்து படுக்கைகள் அமைத்தால், ஒர் ஏக்கருக்குப் போதுமான நாற்றுகள் கிடைத்துவிடும். தொடர்ந்து 6 நாட்களுக்கு மூடாக்கின் மீது பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஆறு நாட்களுக்குப் பிறகு, விதைமஞ்சள் முளைக்கத் தொடங்கும். பிறகு, தேங்காய் நார்க்குவியலைப் பிரித்து, விதைமஞ்சளைத் தனியாகப் பிரிக்க வேண்டும்.

மஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்!

பெட் அமைக்க தேவைப்பட்ட அளவு தேங்காய் நார்க்கழிவை எடுத்துக்கொண்டு... அதில் சிறிதளவு வேர் உட்பூசணம் ஒரு கிலோ, சூடோமோனஸ் ஒரு கிலோ , டிரைக்கோடெர்மாவிர்டி ஒரு கிலோ, பெசிலோமேசிஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, குழித்தட்டில் உள்ள குழிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு நிரப்ப வேண்டும். இதன் மீது விதைமஞ்சளின் முளைக்கட்டிய பகுதி மேலே இருக்குமாறு வைத்து, மஞ்சளைச் சுற்றி நார்க் கலவையை நிரப்ப வேண்டும். ஒரு குழித்தட்டில் 98 குழிகள் இருக்கும். ஒரு ஏக்கருக்கு 350 குழித்தட்டுகளைத் தயார் செய்ய வேண்டும். பிறகு, தட்டுகளில் தண்ணீர் தெளித்து பத்து பத்து தட்டுகளாக அடுக்கி, நிழலான பகுதியில் வைத்து... பாலித்தீன் கவரைக் கொண்டு காற்றுப் புகாதவாறு ஏழு நாட்கள் மூடி வைக்க வேண்டும். எட்டாம் நாள் தட்டுகளைத் தனித்தனியாகப் பிரித்து மர நிழலில் 25 நாட்களுக்கு வைத்து தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படித் தனியாக வைத்த 5-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி வீதம் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 10-ம் நாள் இதேபோல பஞ்சகவ்யா கரைசலத் தெளிக்க வேண்டும். 15-ம் நாள் கரிம ஊட்டச் சத்துக்கரைசலை இதேபோலத் தெளிக்க வேண்டும். 20-ம் நாள் ஜீவாமிர்தக் கரைசலலைத் தெளிக்க வேண்டும். 25 நாட்களுமே தண்ணீர் விட வேண்டும். 25-ம் நாளைக்கு மேல் சூடோமோனஸ் கரைசலைத் தெளித்து நாற்றுகளைப் பிரித்து வயலில் நடவு செய்யலாம்’.

கு.ஆனந்தராஜ்

படங்கள்: த.ஸ்ரீநிவாசன்