Published:Updated:

என் செல்லமே...

செல்லப் பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...

ந்த இயந்திர வாழ்க்கையில் இளைப்பாறுதலுக்கான இடமாக இருக்கிறது, பிராணிகள் வளர்ப்பு. இதிலும், தங்கள் இயலாமையை, சோகத்தை, மனச்சுமையைக் குறைப்பதற்காகச் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது அதிகரித்தே வருகிறது.

கொஞ்சி விளையாடும் கிளிக்கூட்டம், காவல் காக்கும் நாய்கள், மொட்டை மாடிக்கு அழகு சேர்க்கும் புறாக் கூட்டம், கம்பீரத்துடன் நடைபயிலும் ஜல்லிக்கட்டுக் காளைகள், பால் கொடுக்கும் பசுக்கள், ஏ.டி.எம் எனத் திகழும் ஆடுகள், ஆத்திர அவசரத்துக்குப் பண முட்டையிடும் கோழிகள், கௌவரத்தை நிலைநிறுத்தும் குதிரைகள் என கிராமம், நகரம்; ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாமல் வசதிக்கும், வலுவுக்கும் ஏற்ப செல்லமாகவும், செல்வமாகவும் பிராணிகளை வளர்க்கிறார்கள்.

என் செல்லமே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெற்ற பிள்ளைகள் படிப்பு, வேலை எனச் சிறகை விரித்த பிறகு, பெற்றோர் அன்புகாட்டுவது வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளிடம்தானே! ‘வீட்டுல எத்தனை பேரு’ எனக்கேட்டால் ‘நாங்க நாலு பேரு ‘மணி’யையும் சேர்த்து மொத்தம் அஞ்சு பேரு...’’ என வளர்ப்புப் பிராணியையும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே சொல்லி வரும் வெள்ளந்தி மனிதர்கள் இன்றும் கிராமங்களில் உண்டு. ‘அந்தி நேரம் வந்தா, தலையெல்லாம் எண்ணிப் பாரு... ஆடு மாடச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’ என்று ‘கருத்தம்மா’ திரைப்படப் பாடலில், எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து.

கிராமங்களை விடுங்கள்... கூட்டுக் குடும்பங்கள் சுக்குநூறாக நொறுங்கி தனிக்குடித்தனம், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை என ஆளுக்கொரு பக்கம் பிரிந்து போய் விட்ட நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரமாக வாய்த்தவை, செல்லப்பிராணிகள்தானே!

‘‘அப்பா, அம்மா இருவருமே வேலைக்குப் போகும் வீட்டில் நிச்சயம் ஒரு செல்லப்பிராணி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தக் குழந்தை மனரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று எச்சரிக்கும் குழந்தை நல மருத்துவர்கள், “பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளைக் கதவுகளில் தொங்கும் பூட்டுகளே வரவேற்கும் கணினி யுகத்தில், இன்டர்நெட்களிலும், செல்போன் விளையாட்டுகளிலும் மூழ்கி விடுகின்றனர், குழந்தைகள். இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் மூளை வளர்ச்சி தடைப்படுவதுடன், ஒரே இடத்தில் இருந்து விளையாடுவதால் உடல் சோர்வும், கண் பாதிப்பும் ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது குழந்தைகளுக்குச் சிறந்த பொழுதுபோக்காகவும், சுறுசுறுப்பு ஏற்படவும் ஓடியாடி விளையாட ஏதுவாகி, மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளின் ஆளுமைத் திறனும், பொறுப்புணர்வும் அதிகரிக்கிறது” என்கிறார்கள்.

பிராணிகள் வளர்ப்புக்கு ஆதரவுக் காரணங்கள் இப்படி அநேகம் இருக்க... பிராணிகள் வளர்ப்பில் இருக்கும் சிக்கல்களுக்குப் பயந்து, இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கவே தயங்குபவர்களும் இங்கே உண்டு. ஆனால், களைக்குப் பயந்து விதைக்காமல் இருக்கிறோமா? அதே போலத்தான் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால், சின்னச்சின்ன தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் நிவர்த்திச் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால்... நீங்கள் சமர்த்துதான்!

‘செல்லப்பிராணிகள்’ என்பவை நமது வருத்தங்களை மறக்கச் செய்பவை மட்டுமல்லாமல்... வருமானத்தைத் தருவதாகவும் இருந்தால், மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காதுதானே! அப்படிப்பட்ட செல்வப் பிராணிகள், அவற்றை வளர்க்கும் முறைகள் , நோய் மேலாண்மை, விற்பனை வாய்ப்புகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.

இனி, இதழ்தோறும் செல்வப் பிராணிகளோடு பயணிக்கப் போகிறீர்கள்.

வளர்ப்போம்.

முதல் செல்லப்பிராணி....

என் செல்லமே...

மனிதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி நாய்.

நாய்களின் உடலில் மோப்ப சக்தியை உணரும் 22 கோடி செல்கள் உள்ளன.

மோப்ப சக்தியால் காவல்துறை, ராணுவம் போன்ற பாதுகாப்புத் துறைகளில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தல் போன்ற பணிகளுக்கு நாய்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எந்தப் பிராணி அல்லது பறவையாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்புப்  போட்டுக் கழுவ வேண்டும். கையைக் கழுவி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். நாயின் எச்சில் அல்லது உடலில் ஒட்டியிருக்கும் கழிவில் இருந்து கிருமிகளோ நாடாப்புழுவின் முட்டை போன்றவையோ மனிதருக்குள் சென்றால், விளைவு... பயங்கர நோய்கள்!

நாயின் வயிற்றில் ஏற்படும் புழுக்களைக் கட்டுப்படுத்த, பூச்சிமருந்தை தகுந்த இடைவெளியில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நாடாப்புழு உருவாகிவிடும். இதனால் அதை வளர்ப்பவருக்கும் பிரச்னை. அந்தப் புழுவால் மனிதரின் இதயம், மூளை பாதிக்கப்படும். நாய்க்கு வரும் உருண்டைப்புழுவால் மனிதர்களின் கண்கள் பாதிக்கப்படும், தோல் பிரச்னை வரும். எனவே புழு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. முக்கியமாக நாயின் கழிவு, நம் கைகளில் படக் கூடாது.

இ.கார்த்திகேயன்

படங்கள்: ஏ.சிதம்பரம்