Published:Updated:

எச்சரிக்கை மணியோசை!

எச்சரிக்கை மணியோசை!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘விஷத்தன்மை இல்லை என்கிற சான்றிதழ் உள்ள காய்கறிகளுக்கு மட்டுமே கேரள மாநிலத்துக்குள் நுழைய அனுமதி!’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது கேரள அரசு.

இதையடுத்து, ‘முல்லை-பெரியாறு அணை பிரச்னையை மனதில் வைத்துத்தான், கேரளா இப்படிச் செய்கிறது’ என்று  பேச ஆரம்பித்துவிட்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘உண்மையிலேயே நாங்கள் நஞ்சில்லா உணவுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறோம்’ என்று இதற்கு காரணம் சொல்கிறது கேரளா. ஆம், இதற்கான முயற்சிகள், அங்கே சில ஆண்டுகளாகவே எடுக்கப்பட்டு வருவது உண்மை. இதைப் பற்றி நம் இதழிலேயே கட்டுரைகளை எழுதியிருக்கிறோம். இயற்கை விவசாயத்தை வலியுறுத்துவதற்காகவே, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்கிற சினிமாவே எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக அங்கே ஓடியது. இதைத்தான், ‘36 வயதினிலே’ என்ற பெயரில் சமீபத்தில் தமிழிலும் எடுத்தார்கள்.

கேரளா இன்றைக்குத்தான் சொல்கிறது. ஆனால், ஐரோப்பிய யூனியன் மற்றும் அரபு நாடுகள், ‘இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்களில் பூச்சிக்கொல்லி விஷத்தின் தாக்கம் இருக்கிறது. எனவே, அதை வாங்க மாட்டோம்’ என்று தடை விதிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வப்போது நடக்கின்றன. அந்த நாடுகள் எதிர்பார்ப்பதும், இயற்கை விவசாய விளைபொருட்களைத்தான், கேரளாவைப் போல!

எனவே, இந்த விஷயத்தில் உணர்ச்சித் தீயைக் கிளப்பிவிடுவதைவிட, புத்திசாலித்தனமாக யோசிப்பதுதான் சரியானதாக இருக்கும். இதை எச்சரிக்கை மணியோசையாக எடுத்துக்கொண்டு, ஒட்டுமொத்த மாநிலத்தையும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திருப்புவது ஒன்றுதான், இப்பிரச்னைக்கு அரசாங்கம் கண்டெடுக்கும் அற்புதத் தீர்வாக இருக்கும்.

இதைவிடுத்து எல்லாவற்றிலும் லாவணி பாடிக் கொண்டிருந்தால், நஷ்டம் நமக்குத்தான்!

-ஆசிரியர்