Published:Updated:

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...

நாட்டு மக்களுக்கான உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தவும், இதற்காக விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டதுதான் வேளாண்மைதுறை. இதற்காக அரசு எத்தனை சிறப்பான திட்டங்களைத் தீட்டினாலும், அதன் பலன் விவசாயிகளை முழுமையாகச் சென்றடைவதே இல்லை. அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாலமாக இருக்க வேண்டிய அதிகாரிகள், தங்கள் பாக்கெட் நிறைவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

‘கடைக்கோடி விவசாயிக்கும், தொழில்நுட்பங்களும், ஆலோசனைகளும் அரசின் திட்டங்களும் சென்றடைய வேண்டும்’ என்பதற்காகத்தான்... மூன்று அல்லது நான்கு வருவாய் கிராமங்களுக்கு ஓர் உதவி வேளாண்மை அலுவலரையும், ஒன்றியம்தோறும் வேளாண் அலுவலகங்களையும் அமைத்துள்ளது அரசு.

உழவாளி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘ஏ.ஏ.ஓ’ என அழைக்கப்படும் உதவி வேளாண் அலுவலரின் மாதச்சம்பளம் குறைந்தபட்சம் 30 ஆயிரம். இது, தினமும் வெயிலில் வறுபடும் ஒரு விவசாயப் பெண் கூலித்தொழிலாளியின் ஓர் ஆண்டுக்கூலி. கடும் உடல் உழைப்பைக் கொடுக்கும் ஓர் ஆண் விவசாயத் தொழிலாளியின் ஆறு மாதக் கூலி. மானாவாரி விவசாயியின் ஒரு போக சாகுபடியில் கிடைக்கும் மொத்த வருவாய். ஆக, ஒரு பெருங்கூட்டமே கடின உழைப்பின் மூலம் அடையும் பணத்தை, எதற்காக அதிகாரிகளுக்கு அரசு அள்ளி அள்ளிக்கொடுக்கிறது?

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவையான ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கத்தானே! அரசின் சலுகைகளைத் தகுதியான நபர்களைக் கண்டறிந்து கொடுத்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தானே!

உள்ள சுத்தியோடு சொல்லுங்கள் அதிகாரிகளே... உங்களில் எத்தனை பேர், கடமையைச் சரியாகச் செய்கிறீர்கள்? ஒவ்வொரு உதவி வேளாண் அதிகாரியும் 15 நாட்களுக்கு ஒரு முறை, தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள வருவாய் கிராமங்களுக்குச் சென்று வர வேண்டும் என்கிறது அரசு. உண்மையில் என்ன நடக்கிறது?

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடக்கும் விவசாயப் பணிகளை, செயல்படுத்தும் திட்டங்களை மேற்பார்வையிட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கி, பணி விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டியது இணை இயக்குநர்களின் முக்கிய பணி.

மாவட்டத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ற பயிர் ரகங்கள் பற்றியும் விவசாயிகளின் வருமானத்தை நிலைநிறுத்துவதற்கான பயிர் பற்றிய பரிந்துரைகளையும் செய்யவேண்டும். ஆனால், பெரும்பாலான இணை இயக்குநர்கள் அதைச் செய்வதில்லை. காரணம், எந்த மாவட்டத்திலும் முறையான புள்ளிவிவரங்கள் இல்லை.  உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் எத்தனை ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது என்ற துல்லியமான விவரங்கள் இல்லை. அப்படித் துல்லியமான விவரங்கள் இருந்தால், தமிழகம் முழுவதும் இந்தப் பருவத்தில் எத்தனை டன் மகசூல் வரும் என்பதை தோராயமாகக் கணக்கிட்டு, உள்ளுர் தேவை போக, எஞ்சியதை வெளிமாநிலத்துக்கு அனுப்புவது அல்லது மதிப்புக்கூட்டல் செய்யும் வழி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், இந்தப் பணிகளை யாரும் சரிவரச் செய்யாத காரணத்தால்தான் அடிக்கடி தக்காளி வயல்களில் மாடு மேயும் அவலம் நிகழ்கிறது.

மாவட்டம் முழுவதும் ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு இணைஇயக்குநருக்கும் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனம், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கான டீசல் என வழங்குகிறது அரசு. ஆனால், பெயருக்கு எப்போதாவது ஆய்வுக்குச் செல்வதாகக் கணக்கு காட்டுகிறார்கள் பலரும். இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாகனங்களில் பலவும், ‘வீட்டு அம்மாக்கள்’ ஷாப்பிங் போகத்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு இணை இயக்குநருக்கு காபி வாங்குவதற்காக மட்டுமே 10 கிலோ மீட்டர் தள்ளி உள்ள நகரின் பிரபலமான உணவு விடுதிக்கு தினமும் நான்கைந்து முறை சென்று திரும்புகிறது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அரசு வாகனம்.

ஆகக்கூடி, சீரான வளர்ச்சி இல்லாமல், இற்றுப் போயுள்ளது விவசாயம். இதைச் சீர்படுத்த வேண்டிய மருத்துவரான, வேளாண்துறையிடம் போனால், ஒட்டுமொத்தத் துறையிலும் ஊழல் நோய் ‘முடைநாற்றம்’ வீசுகிறது. இந்தத் துறையில் அடி முதல் நுனிவரை ஊழல் புற்றுநோயாக விரவிக் கிடப்பதைத்தான் கடந்த சில மாதங்களாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் கைது.

ஒரு பூனைக்குத்தான் மணி கட்டப்பட்டிருக்கிறது... மற்ற பூனைகள்?

வேட்டை தொடரும்...

உங்கள் பகுதிக்கும் உழவாளி வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். ‘உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 044-66802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.

வாட்ஸ் ஆப் பராக்... பராக்!

விரல் நுனியில் உலகம் சுருங்கி விட்டது. ஸ்மார்ட் போன் எனும் அற்புதம் மூலமாக நல்ல பல விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் இருந்த பல விஷயங்கள், தற்போது வெளிச்சத்துக்கு வந்து பலரையும் விழிப்படைய செய்து கொண்டிருக்கின்றன, பலருக்கு பலன்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஏன், அநியாயக்காரர்களை அலறவும் வைத்துள்ளன.

இதையெல்லாம் ஸ்மார்ட் போன் மூலமாக சாத்தியமாக்கியிருக்கிறது வாட்ஸ்ஆப்!

இதே ஆயுதத்தை நீங்களும் கையில் ஏந்தி, விவசாயத்தில் நடக்கும் புதுமைகள், சாகுபடி நுட்பங்கள், நல்ல விளைச்சல் பெற்ற விவரங்கள், தடங்கலாக நிற்கும் பிரச்னைகள் மற்றும் பூச்சி-நோய்த் தாக்குதல்கள்,  அவற்றுக்கு எதிராக நீங்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய தொழில்நுட்பம் என்று அனைத்தையும் போட்டோ, செய்தி, வீடியோ என்று உடனுக்குடன் வாட்ஸ்ஆப் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பசுமை விகடனுடன், பகிர்ந்து கொள்ள விரும்பும் பிற விஷயங்களையும் தாராளமாகப் பகிரலாம்.

உங்களின் வாட்ஸ்ஆப் 99400-22128 என்ற எண்ணுக்கு வந்து சேரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் உங்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள், விகடன் இணையதளம், ஃபேஸ்புக் மற்றும் பசுமை விகடன் இதழிலிலும் வெளியாகும். சிறந்த, பயனுள்ள பதிவுகளுக்கு தக்க பரிசு உண்டு!

உழவாளி

ஓவியம்: ஹரன்