Published:Updated:

மரத்தடி மாநாடு: காற்றில் கரைந்த கடன் அறிவிப்பு!

மரத்தடி மாநாடு: காற்றில் கரைந்த கடன் அறிவிப்பு!

‘‘பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம்.
 
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைப் பெறுவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம்’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்று பாடியபடியே ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி வந்து சேர, ஏற்கெனவே மரத்தடியில் தயாராக இருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘காய்கறி’ கண்ணம்மாவும்...

‘‘ஏதேது பாட்டெல்லாம் பலமா இருக்கு... இன்னிக்கு ரொம்ப சந்தோஷ செய்திகளா கொட்டப் போறீங்க போலிருக்கே...’’ என்று ஒரே குரலில் கேட்டனர்.

மரத்தடி மாநாடு: காற்றில் கரைந்த கடன் அறிவிப்பு!

‘‘ம்க்கும்’’ என்று தொண்டையைக் கனைத்துக் கொண்ட வாத்தியார்,- ‘‘விருட்ச ஆயுர்வேதம்கிற புத்தகத்துல மனுஷனைக் காட்டிலும் ஏரி, குளம், மரங்கள்தான் பெரிசுனு எழுதி வைச்சிருக்காங்க. இதை நம்பி வாழ்ந்ததாலதான் அந்தக் காலத்துல மாசம் மும்மாரி மழை பொழிஞ்சிருக்கு. இப்போ, காட்டை அழிச்சுட்டு, ஏரி, குளங்களை மண்ணு கொட்டி மூடிட்டு மழையைக் காணும்னு வானத்தை பார்த்துக்கிட்டிருக்காங்க’’ என்ற வாத்தியார், அப்படியே செய்திக்குள் புகுந்தார்.

‘‘சென்னை மக்களோட குடிநீருக்கு முக்கிய ஆதாரம் போரூர் ஏரி. ஒரு காலத்துல இந்த ஏரியில் இருந்து தண்ணி எடுத்து விவசாயமே நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ விவசாய நிலங்கள்ல வீடுகள் வந்துட்டதால ஏரித்தண்ணியைக் குடிநீரா பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. முன்ன 820 ஏக்கர் பரப்புல இருந்த ஏரி, இப்போ 170 ஏக்கரா சுருங்கிடுச்சாம். அந்தளவுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. இன்னமும் ஆக்கிரமிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

இதுக்கு துணைபோகுற மாதிரி, ஏரியில மண்ணைக் கொட்டி மேவிட்டு இருக்குதாம் அரசாங்கம். இந்த விஷயம் தெரிஞ்சு கொதிச்செழுந்து மக்கள் கேட்டதுக்கு, ‘பூங்கா அமைக்கப் போறோம்’னு சொல்றாங்களாம். இன்னும் கொஞ்ச நாள்ல ஏரி காணாமப் போயிடும்னு செய்தி பரவவே... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் எல்லாம் சேர்ந்து ‘தண்ணீருக்கான பொது மேடை’ங்கிற பெயர்ல போராடிக்கிட்டு இருக்காங்க. சில அரசியல் கட்சிகளும்கூட குரல் கொடுத்திருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சுனு சொல்லுவாங்க. இங்க 800 ஏக்கர் ஏரி இளைச்சு குட்டையாவே மாறிடும் போலிருக்கே’’ என்று வருத்தப்பட்ட காய்கறி, கொய்யாப்பழங்களை ஆளுக்கு இரண்டாக எடுத்துக் கொடுத்தார்.

‘‘ஓ... கொய்யா சீஸன் கொடிகட்டி பறக்குதோ...’’ என்றபடியே அதைக் கடித்த ஏரோட்டி, ‘‘இந்த வருஷ பட்ஜெட்ல 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் கொடுக்கப்படும்னு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சொல்லியிருந்தார். ஆனா, தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட அஞ்சு லட்சம் பேர் ஜூன் மாச குறுவை சாகுபடிக்காகவும் அக்டோபர் மாச சம்பா பயிர்க்கடனுக்காகவும் விண்ணப்பிச்சுட்டு கடன் கிடைக்காம காத்துக்கிட்டு இருக்குறாங்களாம்.

2013-ம் வருஷம் கடுமையான வறட்சி நிலவுனதால அந்த வருஷம் வாங்கின கடனை விவசாயிகள் திரும்பக் கட்டலை. அதனால இப்போ கூட்டுறவுச் சங்கங்கள்லயும் பேங்க்குகள்லயும் கடன் கொடுக்க மாட்டேங்குறாங்க” என்றார்.

‘‘ஏற்கெனவே தண்ணி கிடைக்காம அவதிப்பட்டுக்கிட்டு இருக்குறாங்க... இதுல இது வேறயா?’’ என்று காய்கறி அங்கலாய்க்க..

‘‘விவசாயிங்க கேட்டா, ஏற்கெனவே வாங்கின கடன கட்டுனு கத்துவாய்ங்க. ஆனா, கோடி கோடியா கடன வாங்கிட்டு திருப்பிக்கட்டாத தொழிலதிபருங்களுக்கு மட்டும் திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுப்பாய்ங்க. ஆனா, மேடையேறிட்டா... இந்தியா விவசாய நாடு, விவசாயிகள்தான் முதுகெலும்புனு வசனங்கள பேச ஆரம்பிச்சுடுவாய்ங்க’’ என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சத்தம் கொடுக்க, ‘‘இந்தா வந்துடுறேன்’’ என்று எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

விவசாயிகள் ஒன்று கூட வேண்டும்...

மரத்தடி மாநாடு: காற்றில் கரைந்த கடன் அறிவிப்பு!

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் ஜூலை 5-ம் தேதி சிதம்பரத்தில் `உழவர் தியாகிகள் தினம் மற்றும் விவசாயிகள் மாநாடு’ நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுப் பேசிய இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் ‘வேட்டவலம்‘ மணிகண்டன், ‘‘இன்றைக்கு விவசாயம் செய்வது என்பதே பெரிய போராட்டமாக உள்ளது.

ரியல் எஸ்டேட் பிரச்னை, கரும்புக்கு விலையின்மை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பல பிரச்னைகள் உருவெடுத்து நிற்கின்றன. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால், விவசாயிகளாகிய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாராயணசாமி அய்யாவைப் போல மக்கள் பிரச்னைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

ஓவியம்: ஹரன்