Published:Updated:

மண்ணுக்கும் மணலுக்கும் வித்தியாசம் தெரியுமா? #WorldSoilDay

மண்ணுக்கும் மணலுக்கும் வித்தியாசம் தெரியுமா? #WorldSoilDay
மண்ணுக்கும் மணலுக்கும் வித்தியாசம் தெரியுமா? #WorldSoilDay

மண்ணுக்கும் மணலுக்கும் வித்தியாசம் தெரியுமா? #WorldSoilDay

மண், இயற்கை நமக்கு அளித்திருக்கும் அருட்கொடை. தன்னுள் எது வந்து விழுந்தாலும் அதை மட்க வைக்கும் மண், விதையை மட்டும்தான் முளைக்க வைக்கிறது. கடுகு அளவு விதையையும், மாபெரும் விருட்சமாக மாற்றும் வித்தையை மண்ணைத் தவிர, வேறெதுவும் செய்ய முடியாது! மாபெரும் காடுகளாகட்டும், தெருவோரச் சிறு புல் பூண்டுகளாகட்டும்; அனைத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது மண்தான். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களுக்கும் மண் ஆற்றும் சேவை மகத்தானது. அதனால்தான் தாய்க்கு நிகராக மண்ணைப் போற்றி வணங்கினர், முன்னோர். இத்தனை சிறப்பு வாய்ந்த மண்ணைப் பற்றிய சரியான புரிதலை நாம் கைகொள்ளாததன் விளைவுதான்... இன்றைக்கு நடக்கும் இத்தனை இயற்கைப் பேரழிவுகள்.

அலட்சியப்படுத்தப்பட்ட அறிவியல்!

'மண்ணுங்கிறது காலுக்குக் கீழே சும்மா கிடக்குற தூசி’ என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. அதைத்தாண்டி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவே இல்லை. 'கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே... முன்தோன்றிய மூத்தக்குடி’ என்று பெருமை பேசித் திரிகிறோம். உவமைக்காகச் சொல்லப்பட்டது, உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், நமக்குப் பிறகு தோன்றியதாகச் சொல்லப்படும் மண்ணைப் பற்றிய அடிப்படையைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை என்பது வேதனையான உண்மை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று வகைப்படுத்தப்படும் ஆசைகளில் முதல் இடத்தில் இருப்பது மண்ணாசை. வரலாற்றின் அனேகப் பக்கங்கள் ரத்தத்தால் எழுதப்பட்டதற்கு, எழுதப்படுவதற்கு, எழுதப்பட இருப்பதற்கு காரணமே... இந்த மண்ணாசைதான். 

மண்ணைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக மண் எப்படி உருவானது என்ற வரலாற்றைத் தெரிந்துகொண்டால்தான் முழுமையான புரிதல் கிடைக்கும். சூரியனிலிருந்து தெறித்து விழுந்த எரிமலைக் குழம்புதான் பூமி என்பதை அறிவோம். அந்த எரிமலை, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறான இயற்கைக் காரணிகளால் பாறையாக இறுகியது. அடுத்தடுத்த காலநிலை மாற்றத்தில் அடுக்குப்பாறையாக உருமாறியது. அதன் பிறகு, மழை, காற்று, வெப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உருமாற்றுப் பாறைகளாக மாற்றமடைந்தது. இப்படி வெயிலுக்கு விரிந்து, மழைக்குச் சுருங்கும்போது, பாறையின் சில பகுதிகள் உடையும். அப்படி உடைந்த பகுதிகள் ஒன்று நாலாக, நாலு எட்டாக, எட்டு பதினாறாக... என உடைந்து, உடைந்து உருவானதுதான் மண்.

மண் என்பது மணல், களி, வண்டல் மூன்றும் கலந்த கலவை. மணலின் சதவிகிதம் அதிகமானால், அது மணல்சாரி மண். களி அதிகமாக இருந்தால், அது களிமண். வண்டல் அதிகமானால், அது வண்டல் மண். இவை மூன்றும் எந்தெந்த விகிதங்களில் இருக்கின்றன என்பதை வைத்துத்தான் மண்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடியும். நாம் வாழ்வதற்கு வீடு என்ற கட்டடம் எப்படி முக்கியமோ, அப்படி மண்ணுக்கு முக்கியமானது அதன் கட்டமைப்பு. இதுதான் ஒரு மண்ணில் என்னென்ன பயிர்கள் விளையும் என்பதைத் தீர்மானிக்கிறது. நமது நிலம் முழுக்க மண் இருந்தாலும், மேல்பரப்பிலுள்ள ஓர் அங்குல மண்தான் வளமானது. இந்த ஓர் அங்குல மண் உருவாக, '500 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும்’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். மலைப்பாக இருக்கிறதுதானே!

இத்தனை மகத்தான மண்ணைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல், சுயநலமே பிரதானமாகக் கொண்டதன் விளைவுகளைத் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேயில்லை. விளைச்சல் வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக, வகைதொகையில்லாமல் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு மண்ணை மரணிக்கச் செய்துவிட்டோம். ‘மண்ணில் இயற்கைச் சத்துகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் மிக மோசமான அளவில் மதுரை (0.23%) மாவட்டம் உள்ளது. அடுத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டம் (0.36%) இருக்கிறது. ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் எல்லை மீறிய அளவில் மண்ணில் கார்பன் சத்துகள் இருந்து வருகின்றன. அதாவது 4.04 மற்றும் 4.2 சதவிகிதமாக உள்ளன. இந்த மண்ணில் உள்ள கார்பன் சத்துகளின் அளவைச் சரியாகப் பராமரிக்க, மண்ணைப் புதுப்பிப்பது ஒன்றுதான் வழி’ என்கிறார்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். 1950-களில் இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு கிலோ ரசாயன உரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றைக்குச் சராசரியாக 133 கிலோ பயன்படுத்துகிறோம். இத்தனை ரசாயனங்களின் பாதிப்பு, விளைச்சல் வழியாக நமக்குத்தானே மீண்டும் வருகிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். மரத்தில் பழுத்த பழத்தை கல்லால் அடித்துப் பறிப்பது போன்றது ரசாயன வேளாண்மை. அதே பழத்தை காம்புக்குக்கூட வலிக்காமல் பறிப்பதுதான் இயற்கை விவசாயம் என்பார். உண்மைதான், மரணப்படுக்கையில் கிடக்கும் மண்ணை நலமாக்க வேண்டியது நமது கடமை. இதுவரை போனது போகட்டும். உலக மண்வள நாளான இன்று முதலாவது, ரசாயனங்களை மண்ணில் கொட்டுவதை தவிர்த்து, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தால் ஓரளவுக்காவது மண்ணை மீட்கமுடியும். 

நகர்ந்துகொண்டே இருக்கும் மண்!

நம் நிலத்திலுள்ள வளமான மேல் மண்ணும், நமக்குச் சொந்தமில்லை. காற்று, மழை மூலமாக மண் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு சென்டி மீட்டர் மண் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. மண் என்பது புதுப்பிக்க முடியாத வளம். நிலத்தில் 20 செ.மீ. ஆழம்  வரை உள்ள மண்தான் மேல் மண். ஒரு ஹெக்டேர் நிலத்திலுள்ள மேல் மண்ணில் 17 வகையான பூச்சிகள், 600 வகையான புழுக்கள், 1,500 வகையான பாக்டீரியாக்கள், 3,500 வகையான பூஞ்சணங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஒரு கைப்பிடி மண்ணில் உலக மக்கள் தொகையைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிர்ப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன.

மண்வாசம் கொடுக்கும் ‘ஆக்டினோமைசிட்ஸ்’!

கார அமில நிலை என்பதுதான் ஒரு மண்ணின் குணங்களைத் தீர்மானிக்கும் காரணி. பி.ஹெச். எனப்படும் கார அமில நிலை 6.5 புள்ளி முதல் 8 புள்ளி வரை இருக்கும் மண்தான், ‘போட்டது பொன்னா விளையும்’ எனச் சொல்வார்களே அப்படிப்பட்ட மண். இந்த அளவீட்டில் கார அமில நிலை இருக்கும் மண்ணில் பாக்டீரியாக்களின் பணி அற்புதமாக இருக்கும்.

4.5 புள்ளி முதல் 6.5 புள்ளி வரை உள்ள மண்ணில் பூஞ்சணங்களின் பணி சிறப்பாக இருக்கும். கார அமில நிலை 8 புள்ளி மற்றும் அதற்கு மேல் இருந்தால் ‘ஆக்டினோமைசிட்ஸ்’ அதிகமாகும். மழை பெய்யும்போது, வருமே மண்வாசனை. அந்த வாசனைக்குக் காரணம் இந்த ‘ஆக்டினோமைசிட்ஸ்’தான். எனவேதான், 6.5 முதல் 8 புள்ளிகள் வரை உள்ள மண் நலமான மண்ணாக இருக்கிறது. சராசரியாக 7 புள்ளி என்பது நலமான மண்ணின் பொதுவான குறியீடு.

மண்ணின் தன்மையைப் பொறுத்தே நீர்ச்சேகரிப்பு!

மண், பயிர் வளர்வதற்கான ஊடகம் மட்டுமல்ல. அதையும் தாண்டி மனிதவாழ்வில் அது நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் அநேகம். மழை ஒன்றுதான் நமக்கான நீராதாரம் என்பது உண்மைதான். ஆனால், அந்த மழைநீரை மனிதகுலம் முழுமையாகப் பயன்படுத்த, மண் மனது வைக்கவேண்டும். ஒரு பகுதி, வறட்சியாக மாறுவதற்கும், வெள்ளத்தில் சிக்கிச் சீரழிவதற்கும் மண்ணும் ஒரு காரணம். பெய்யும் மழைநீரை, மண் பிடித்து வைத்துக்கொண்டால், வெள்ளத்துக்கு வேலை இல்லை. மாறாக, வான்மழை அனைத்தையும், 'போப்போ மழையே’ என வடிய விட்டு விட்டால், வெள்ளம் தடுக்க முடியாத ஒன்றாகி விடும். அதேபோல பெய்யும் நீரைப்பிடித்து வைத்துக்கொள்ளாமல் வடிய விட்டு விட்டால் வறட்சிக்கு வரவேற்பு வளையம் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மண்ணின் தன்மையைப் பொறுத்தே நீர்ச்சேகரிப்பு சாத்தியமாகிறது.

மண்... மணல் வித்தியாசம்!

மணலில் மண்துகள்களின் இடைவெளி அதிகமாக இருக்கும். தண்ணீரை வேகமாக உறிஞ்சும். ஆனால், பிடித்து வைத்துக்கொள்ளும் திறன் இருக்காது. இதேபோலத்தான் சத்துகளையும் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனும் இருக்காது. இதனால்தான் மணலை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதில்லை. துகள்களின் அளவை வைத்து மணலை வகைப்படுத்துகிறார்கள். 0.05 மில்லி மீட்டரிலிருந்து 2 மில்லி மீட்டர் அளவில் துகள்கள் இருந்தால், அதற்குப் பெயர் மணல். 0.002 முதல் 0.05 வரைக்கும் இருந்தால் அதற்குப் பெயர் வண்டல். 0.002 மில்லி மீட்டரை விடக் கீழே இருந்தால் அது களிமண் எனத் தரம் பிரிக்கிறார்கள்.

இயற்கை கொடுத்த இலவச சத்துகள்!

நாம், பணம் செலவழித்து மண்ணில் உரம் இடுகிறோம். ஆனால், சில இலவச உரங்களை இயற்கையே மண்ணில் உண்டாக்கியிருக்கிறது. கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவைதான் அந்தச் சத்துகள். இவற்றை ‘முதன்மைச் சத்துகள்’ என்கிறது, மண்ணியல். 

கரிசல் மண்தான் அதிகம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை... கரிசல்மண்தான் அதிகப் பரப்பில் இருக்கிறது. இரண்டாவது செம்மண், அடுத்து வண்டல் மண். குறைந்தளவில்தான் களர் மண் நிலங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை செம்மண் அதிக பரப்பில் இருக்கின்றது.

உள்ளே... வெளியே!

மண்ணின் உட்புறத்தில் இருக்கும் காற்று, மேல்புறத்தில் நாம் சுவாசிக்கும் காற்று இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மண்ணின் உட்புறம் உள்ள காற்றில் ஆக்ஸிஜன் 20%, கார்பன்-டை-ஆக்சைடு 0.50 %, நைட்ரஜன் 78.60%, ஆர்கன் 0.90% என்ற அளவில் இருக்கும். வெளியில் இருக்கும் காற்றில், ஆக்ஸிஜன் 21%, கார்பன்- டை-ஆக்சைடு 0.03%, நைட்ரஜன் 78.03% ஆர்கன் 0.94% என்ற அளவில் இருக்கும். வெளிப்பகுதியில் இருப்பதை விட மண்ணுக்குள் பிராண வாயுவான ஆக்ஸிஜன் அளவு குறைவாகவே இருக்கும்.

உங்கள் மண் நலம்... நீங்களே சோதிக்கலாம்!

நமது நிலத்து மண் நலமாக இருக்கிறதா... வளம் இழந்து வருகிறதா... அல்லது முற்றிலுமாக வளமிழந்து விட்டதா? என்பதை சிறு சோதனை மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். நிலத்து மேல் மண்ணில் உள்ள சிறுசிறு கட்டிகளை 100 கிராம் அளவில் எடுத்து... மேல் மூடியில்லாத ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு, 500 மில்லி மழைநீர் அல்லது காய்ச்சி வடிக்கப்பட்ட நல்ல தண்ணீரை ஊற்ற வேண்டும். ஊற்றும்போது, நேரடியாக மண்ணில் படுவது போல ஊற்றக் கூடாது. பாட்டிலின் பக்கவாட்டில் சரிந்து இறங்குவது போல ஊற்ற வேண்டும். பிறகு, பாட்டிலின் மேல் பகுதியில் நமது உள்ளங்கையை வைத்து பொத்தி, தலைகீழாக ஒரே ஒரு முறை கவிழ்த்து, நேராக்கி அப்படியே ஓரிடத்தில் வைத்து விட வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து, கட்டிகள் மண்ணில் கரைந்து கீழே சென்று சேர்ந்திருக்கும். மேலே இருக்கும் நீர் எந்தளவுக்குத் தெளிவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து மண்ணின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். மிகத்தெளிவாக இருந்தால் அதை 0 என்றும்; சுமாரான தெளிவுடன் இருந்தால் 1 என்றும்; தெளிவே இல்லாமல் கலங்கி இருந்தால் 2 என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும். 0 என்றால் மண்ணில் பிரச்னையில்லை, 1 என்றால், பிரச்னை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, 2 என்றால் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மண்ணில் இருக்கும் பொருள்கள்!

தாதுக்கள் 45 %

காற்று 25 %

தண்ணீர் 25 %

அங்ககப் பொருள்கள் 5 %

(2015\ம் ஆண்டு பசுமை விகடனில் வெளியான மண் தொடரிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை.)

அடுத்த கட்டுரைக்கு