Published:Updated:

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...

உழவாளி

ஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...

Published:Updated:

தென்னை விவசாயம் தெரிஞ்சிக்க... குருவாயூர் கோயிலுக்கு டூர்..?!

ஆத்மா திட்டம் அலங்கோலம்!

விவசாயிகளிடம் ‘ஆத்மா திட்டம்’ என்றாலே... அதில் நடக்கும் முறைகேடுகள் குறித்துக் குமுறுகிறார்கள். ‘‘தமிழகம் முழுவதும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதை முறையாக ஆய்வுசெய்ய அரசு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுகிறார்கள் விவசாய சங்கத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழவாளி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் பயனீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் நடேசன், ‘‘ஒருகாலத்தில் ‘ட்ரெய்னிங் அன்ட் விசிட்’ என்ற திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்தது. அதற்கான விளம்பரப் பலகைகள், சுவர் விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்பட்டன. ஆனால், அந்த சிறப்பான திட்டமும் அதிகாரிகளால் முடக்கப்பட்டது தனிக்கதை. தற்போது விவசாயிகளுக்குப் பெரிதும் பயன்படும் ஆத்மா திட்டம் பற்றி எந்த விளம்பரமும், அறிவிப்பும் செய்வதில்லை. இதிலும் விளம்பரம் செய்வதற்கு திட்டத்தில் பணம் இருக்கிறது. ஆனால், இது விவசாயிகளுக்குத் தெரிந்தால் தங்களுக்குத் தொல்லை என நினைக்கும் அதிகாரிகள் கமுக்கமாக இருக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு திட்டம் இருப்பது கூட பல விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.

ஆத்மா குழுத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் இருப்பதால், போலி பில்கள், ஆவணங்கள் மூலமாக பணம் முறைகேடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை, ‘பசுமைச் சுற்றுலா’ அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால், அப்படி அழைத்துச் செல்லும் போதும் உண்மையான விவசாயிகளை விட்டு விட்டு கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு ‘இன்பச் சுற்றுலா’ போய் வருகிறார்கள். தப்பித்தவறி விவசாயிகளைக் அழைத்துச் சென்றால், தங்கும் வசதி, உணவு கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு குஜராத் கண்காட்சிக்கு ரயிலில் அழைத்து செல்வதாகக் கூறி பெண் விவசாயிகள்

உழவாளி

உட்பட பலரை நடுவழியில் இறக்கி விட்டதை, ‘பசுமை விகடன்’ கூட பதிவு செய்திருக்கிறது. ‘தங்கள் கிராமத்துக்கு தேவையான பயிற்சிகளை ஆத்மா குழு விவசாயிகள் தீர்மானம் போட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்பது விதி. ஆனால், குழு கூட்டம் நடக்கும் தகவல் சரியாக சொல்லப்படுவதில்லை. அப்படியே சில விவசாயிகள் கூட்டத்துக்கு வந்தாலும், ஒரு வடையும் டீயும் கொடுத்து அனுப்பி விட்டு விவசாயிகளுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆத்மா விவசாயிகள் கூட்டத்துக்கும் கால்நடைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, வேளாண்மை விற்பனைத்துறை வல்லுநர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் விதி. ஆனால் எந்தக்கூட்டத்துக்கும் முழுமையாக எந்த அதிகாரிகளும் வருவதில்லை. மாவட்ட அளவில் ஆத்மா திட்டத் தலைவராக உள்ள இணை இயக்குநர்கள் இதைக் கண்டுகொள்வதும் இல்லை” என்று ஆதங்கப்பட்டார்.

‘‘புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஆத்மா திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. மாவட்ட, வட்டார அளவிலான குழுக்களில் உண்மையான தகுதியுள்ள விவசாயிகள் நியமிக்கப்படுவதில்லை. விவசாயமே செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. அ.தி.மு.க உறுப்பினராக இருந்தால் போதும் என்பதைத்தான் அளவுகோலாக வைத்திருக்கிறார்கள். திருவையாறு பகுதியில் குத்தகைக்குக் கூட விவசாயம் செய்யாத அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் வட்டார அளவிலான ஆத்மா குழுவில் உறுப்பினராக உள்ளார். எங்கள் பகுதியில் உள்ள முன்னோடி விவசாயிகள் உளுந்து சாகுபடிக்கு மானியத் திட்டத்தில் ‘ரெயின் கன்’ அமைக்க வேளாண் துறையை அணுகினோம். ஆனால், எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதே நேரம் ஆத்மா குழு உறுப்பினர் என்பதால், அந்த அ.தி.மு.க பிரமுகருக்கு முழு மானியத்தில் ரெயின் கன் கருவி வழங்கப்பட்டது. அவர் அதை உடனடியாக விற்று பணம் பார்த்து விட்டார். இதுபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆத்மா நிதியில் ‘திருந்திய நெல் சாகுபடி’க்கான மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் சொல்லி பல முறைகேடுகள் நடந்துள்ளன. பல அதிகாரிகள் ஆத்மா குழு உறுப்பினர்களோடு கைகோத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். வேளாண் உயர் அலுவலர்கள் தன்னந்தனியாகவும் ஆத்மா திட்ட நிதியைச் சுரண்டி சாப்பிடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் உட்பட 21 அதிகாரிகளுக்கு ஆத்மா திட்ட நிதியில் விலையுயர்ந்த செல்போன்களும் சிம் கார்டுகளும் வாங்கப்பட்டன. இவர்களின் சொந்த உபயோகத்துக்குத்தான் அந்த செல்போன்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கான மாத கட்டணத்தையும் கூட ஆத்மா நிதியில் இருந்துதான் செலுத்தினார்கள். அதே நேரத்தில் விவசாயிகள் அவசரச் சூழலுக்கு அந்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், போனை எடுப்பதில்லை.

இப்போதும் சில அதிகாரிகள் ஆத்மா திட்டத்தில் இருந்து செல்போன், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டுகிறார், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச்செயலாளர் சுகுமாறன்.

உழவாளி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா, ‘‘வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு பண்ணைச் சுற்றுலாவுக்கு உண்மையான விவசாயிகளை அழைத்துப் போவதில்லை. உதாரணமாக, சென்ற ஆண்டு எங்கள் மாவட்டத்தில் இணை இயக்குநராக இருந்த சுப்பையா, ‘காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்துக்கு பட்டறிவு பயணம்’ என்ற பெயரில் தனக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குச் சென்று வந்தார். இதுபோலத்தான் பல மாவட்டங்களில் நடக்கிறது” என்றார்.

இது தொடர்பாக, அந்தப் பயணத்தில் பங்கேற்ற சேத்தூரைச் சேர்ந்த விவசாயி அம்மையப்பனிடம் பேசினேன். ‘‘மொத்தம் 23 பேரை பட்டறிவுப் பயணம்னு கூட்டிக்கிட்டுப் போயிருந்தாங்க. அதுல நானும் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஒரு விவசாயி தவிர, மத்த எல்லோரும் இணை இயக்குநருக்கு வேண்டியவங்க, சொந்தக்காரங்கதான். அவங்கள்லாம் குடும்பத்தோட வந்திருந்தாங்க. எங்ககிட்ட சொன்ன மாதிரி, காசர்கோட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகாம, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் இன்னும் சில கோவில்களுக்கும் மட்டும்தான் கூட்டிட்டுப் போனாங்க. இதுதொடர்பா, கலெக்டர்கிட்ட நான் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்.

இணை இயக்குநராக இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள சுப்பையாவிடமும் பேசியபோது, “என் மீது வீண் பழி சுமத்துறாங்க. என்கிட்ட எல்லா ரெக்கார்டும் பக்காவா இருக்கு” என்று  முடித்துக் கொண்டார்.

சென்னையில் தொடங்கும் ஊழல், கடைக்கோடி கன்னியாகுமரி வரை பரவிக்கிடக்கிறது  ஆத்மா திட்டம் பற்றி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, முன் வைக்கும் குற்றச்சாட்டுகளையும்,

இந்தப் பிரச்சனை தொடர்பாக வேளாண்மை துறை இயக்குநர் ராஜேந்திரன் சொல்லும் விளக்கங்களையும், அடுத்த இதழில் பார்ப்போம்...

வேட்டை தொடரும்...

உங்கள் பகுதிக்கும் உழவாளி வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். ‘உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 044-66802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism