Published:Updated:

மரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்!

மரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்!

மரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்!

மரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்!

Published:Updated:

கோகுலாஷ்டமியை முன்னிட்டு... தேரோட்டம், உறியடி, வாண வேடிக்கை என்று காலையிலேயே ஏற்பாடுகள் ஊரில் களைகட்ட, ஊரே கலகலப்பாக இருந்தது. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்களோடு பாதி வழியில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் இணைந்துகொண்டார்.

‘‘மழை வர்ற மாதிரி மோடம் போடுது, ஆனா, வர மாட்டேங்குதே’’ என்றார், ஏரோட்டி.

‘‘ஒரு வாரமா இப்படித்தான் போக்குக் காட்டிக்கிட்டே இருக்கு’’ என்று அதை ஆமோதித்தார், வாத்தியார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோட்டத்துக்குள் நுழையும்போது, மோட்டார் ரூமிலிருந்து ‘கரகர’வென சத்தம் வர, வேகமாக ஓடி மோட்டார் சுவிட்சை அமர்த்திவிட்டு வந்த ஏரோட்டி,

‘‘நான் வர்றதுக்கு லேட்டாகும்... காலையில கரன்ட் வந்தா தண்ணி பாய்ச்சிடுனு தோட்டக்காரர்கிட்ட சொல்லியிருந்தேன். மோட்டாரைப் போட்டுட்டு அந்தாளு கரட்டுக்கு ஆடு மேய்க்கப் போயிட்டார் போல. இங்க கிணத்துல தண்ணி குறைஞ்சு வெறும் மோட்டார் ஓடிக்கிட்டு இருக்கு. புகை வர ஆம்பிச்சுடுச்சு. இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருந்தா காயில் கருகிப்போயிருக்கும். நல்லவேளை நாம வந்தோம்’’ என்று சொல்ல, மூவரும் மரத்தடியில் அமர்ந்தனர்.

மரத்தடி மாநாடு: கொள்முதல் கொள்ளை... நெல் விவசாயிகளின் சோகம்!

ஒரு கதையைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.

‘‘ஒரு பங்களாவுல ஒரு தோட்டக்காரர் மட்டும் தங்கியிருப்பாராம். பங்களா முதலாளி எப்பவாச்சும்தான் வருவார். அந்த பங்களால இருக்கிற செடிகொடிகளுக்கு தண்ணி ஊத்தி பராமரிக்கிறதுதான் தோட்டக்காரர் வேலை. பங்களாவுக்குப் பக்கத்துல இருக்குற தோப்புல ஏகப்பட்ட குரங்குகள் இருந்துச்சாம். அதுல சில குரங்குகள் இந்தத் தோட்டக்காரருக்கு ரொம்ப பழக்கமாம். தோட்டக்காரரர் செய்றதையெல்லாம் அந்த குரங்குகளும் செய்யும். அவர் கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு அவர் கூடவே விளையாடிக்கிட்டே இருக்குமாம்.

ஒரு தடவை தோட்டக்காரர் வெளியூருக்குப் போக வேண்டி இருந்துச்சு. அதனால, அந்தக்  குரங்குகளைக் கூப்பிட்டு, ‘நான் வெளியூருக்குப் போறேன், வர ரெண்டு நாளாகும். அதுவரைக்கும் செடி, கொடிகளுக்கு தண்ணி பாய்ச்சிடுங்க’னு சொல்லியிருக்கார். அந்தக் குரங்குகள் ரொம்ப சந்தோஷமாகி, ‘எந்தப் பயிருக்கு எவ்வளவு தண்ணி பாய்ச்சணும்னு எங்களுக்குத் தெரியாதே’னு சொல்லியிருக்குதுக. ‘அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. வேர் பெரிசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்தணும். சின்ன வேரா இருந்தா கொஞ்சமா ஊத்துனாப் போதும்’னு தோட்டக்காரர் சொல்லிட்டுப் போயிட்டார்.

இவர் ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்து பார்த்தா, தோட்டத்திலிருந்த செடி எல்லாம் பிடுங்கிக் கிடந்திருக்கு. உடனே குரங்குகளைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கார். அந்தக் குரங்குகள், ‘வேர் பெரிசா இருக்கா, சிறிசா இருக்கானு பார்க்கிறதுக்குத்தான் செடிகளைப் பிடுங்கிப் பார்த்தோம்’னு சொல்லியிருக்குக. அன்னிக்குனு அங்க வந்த பங்களா முதலாளி இதைப் பார்த்துட்டு அவரை வேலையை விட்டு தூக்கிட்டாராம். எந்த வேலையை யார் யார்கிட்ட கொடுக்கிறதுனு தெரிஞ்சு கொடுக்கணும்’’ என்று ஏரோட்டிக்கு குட்டு வைத்தார், வாத்தியார்.

‘என் நேரம்’ என நொந்துகொண்ட ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொன்னார்.

‘‘நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்கிற சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், வில்லியநல்லூர், வழுவூர் உள்ளிட்ட கிராமங்கள்ல நெல் கொள்முதல் முறையா பண்ணலையாம். அதனால விவசாயிகள் நொந்து போய் கிடக்கிறாங்க. கொள்முதல் நிலையங்கள்லயே ரெண்டு, மூணு நாளா விவசாயிகளைக் காக்க வெச்சிட்டாங்களாம், கொள்முதல் நிலைய ஊழியர்கள். சில இடங்கள்ல மழை பெய்ஞ்சு நெல் ஈரமாகிப் போச்சாம். கொள்முதல் செய்ய பணம் இல்லைனு கிட்டத்தட்ட பத்து நாளா விவசாயிகளை அலைய வெக்கிறாங்களாம். சில விவசாயிகள் நெல் மூட்டைக்குக் காவலுக்கு ஆள் போட்டு சம்பளம் கொடுத்திருக்காங்களாம். அதிகாரிகங்ககிட்ட கேட்டா, ஒரே நாள்ல எல்லாரும் நெல்லைக் கொண்டு வந்தா பணத்துக்கு எங்க போறதுனு கேக்கிறாங்களாம்’’ என்றார்.

‘‘அடப்பாவிகளா... டெல்டா மாவட்டங்கள்ல ஊரே மொத்தமாத்தான் விதைப்பாங்க. மொத்தமாத்தான் அறுப்பாங்கனு கூடவா இந்த அதிகாரிகளுக்குத் தெரியாது’’ என்று கேட்டார், காய்கறி.

‘‘அதெல்லாம் தெரியாமயா இருக்கு... வியாபாரிகளோட அன்கோ போட்டுக்கிட்டு விவசாயிகளை அலைக்கழிப்பாங்க. பொறுக்க முடியாத விவசாயிகள், கொள்முதல் நிலையத்துலேயே சுத்திக்கிட்டு இருக்கிற வியாபாரிகளுக்கு வந்த விலைக்கு நெல்லை வித்துட்டுப் போயிடுவாங்க. இதுதான் அவங்க கணக்கு’’ என்ற வாத்தியார் அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘ஹைதராபாத்ல இருக்கிற இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகம், ஒவ்வொரு வருஷமும் சாதனை விவசாயிகளுக்கு விருது கொடுக்கும். இந்த வருஷம் 16 மாநிலங்கள்ல இருந்து 30 விவசாயிகளை விருதுக்குத் தேர்ந்தெடுத்திருந்தாங்க. அதுல தமிழ்நாட்டுக்காரர் ஒருத்தர். திருப்பூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ‘பார்த்தசாரதி’ங்கிற விவசாயிதான் அவர்.

இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகத்துல நடந்த விழாவுல மத்திய வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா  அவருக்கு விருது கொடுத்திருக்கார். பார்த்தசாரதி, சொட்டுநீர்ப் பாசன முறையில நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 5 டன் மகசூல் எடுத்ததுக்குத்தான் இந்த விருதாம்’’என்றார்.

‘‘சொட்டு நீர்ல நெல் சாகுபடியா... பரவாயில்லையே’’ என்று ஆச்சர்யம் காட்டினார், காய்கறி.

அந்த நேரத்தில் திடீரென்று வானம் கருத்து மழை வலுக்கத்தொடங்க, அன்றைய மாநாடும் அத்தோடு  முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism