Published:Updated:

என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...

என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...

Published:Updated:

ஆண்டுக்கு ரூ.6 லட்சம் பலே வருமானம் தரும் பாரம்பர்ய மாடுகள்!

டமாடும் உரத் தொழிற்சாலையாக, வாடகையில்லா டிராக்டராக, எரிபொருள் இல்லாத வாகனமாக, குடும்ப அட்டையில் இடம் பெறாத உறுப்பினராக... என தோட்டம்தோறும் இருந்த நாட்டு மாடுகளை ‘வெண்மைப் புரட்சி’ என்ற ஒற்றைச் சாட்டை விரட்டியடித்து விட்டது. விளைவு... அதிகப்பாலுக்காக வளர்க்கப்படும் கலப்பின மாடுகளின் பராமரிப்புச் செலவு, விவசாயிகளை விழிபிதுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அதிகப்பாலுக்கு ஆசைப்படாமல், விவசாயத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் நாட்டுமாடுகளை  வளர்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், மதனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு. இவர் நாட்டு ரக மாடுகளை வளர்த்து வருகிறார்.

என் செல்லமே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வல்லரசுவைச் சந்தித்தோம்.

‘‘எங்க தாத்தா காலத்துல இருந்தே நாங்க கிடைமாடுகளை வளர்த்துக்கிட்டிருக்கோம். நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப முப்பது, நாப்பது  மாடுகள் அளவிலதான் இருந்துச்சு. இந்த மாடுகள் மூலமா நல்ல வருமானம் கிடைச்சதால, மாடுகளோட எண்ணிக்கையை அதிகமாக்கிட்டே வந்தோம். இங்கேயே பிறந்த கன்னுகள், வாங்கின கன்னுகள்னு பெருகி இப்போ என்கிட்ட 150 மாடுகள் இருக்கு. இந்த மாடுகளால் எனக்கு வருமானம் மட்டுமல்ல. ஊருக்குள்ள ஏகப்பட்ட மரியாதையும் கிடைக்குது. சுற்று வட்டாரப் பகுதிகள்ல பெரும்பாலான விவசாயிகள்ட்ட  நாட்டு மாடுகள் கிடையாது. சாகுபடியை தொடங்குறதுக்கு ரெண்டு, மூணு மாசத்துக்கு முன்னாடியே ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுக்கிட்டு, கிடை போடுறதுக்குச் சொல்லி வச்சிடுவாங்க. எல்லா வகையிலும் எங்க குடும்பத்தைக் கௌரவமா வாழ வைக்குற தெய்வங்கள் இந்த மாடுகள்தான்” என்று பெருமையோடு தன் மாடுகளைப் பார்த்த வல்லரசு, தொடர்ந்தார். 

“இது எல்லாமே ‘கிடைமாடுகள்’ வகையைச் சேர்ந்தது. இதுல வயிறு, தாடை, நெற்றி பகுதி வெள்ளையா இருக்கிற மாடுகளை ‘அல்லசர மாடு’னு சொல்வோம். முழுமையான கறுப்பு நிறத்துல திட்டுத் திட்டா வெள்ளையா இருக்கிற மாடுகளை ‘கறுப்புசர மாடு’னு சொல்வோம்.  நிறம்தான் வித்தியாசமே தவிர குணங்கள் எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கும். மாடுகளோட கொம்புகளும், மத்த மாடுகளைக் காட்டிலும் வித்தியாசமா இருக்கும். கால்கள் நல்லா வலுவா இருக்கிறதால சேறு சகதில கூட சிரமப்படாம நடக்கும். மழை, வெயிலைத் தாங்கிக்கிற சக்தியும் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகங்கிறதால வைத்தியமே தேவையில்லை. புண், செரிமானக் கோளாறு எல்லாம் தானாவே சரியாகிடும். தொற்றுநோயும் அவ்வளவா வராது. மேய்ச்சல் நிலத்துல நாள் பூரா தண்ணியே கிடைக்கலைன்னாலும் துவண்டு போகாது. இதுகளை வண்டி இழுக்கவும் பயன்படுத்தலாம்.

பால் மொத்தமும் கன்றுகளுக்கே!

இந்த மாடுகள் தினமும் 3 லிட்டர் பால் கொடுக்கும். பால் நல்ல சுவையா இருக்கும். ஆனா, நாங்க பாலைக் கறந்து விற்பனை செய்ய மாட்டோம். அவ்வளவு பாலும் கன்றுக் குட்டிகளுக்குத்தான். பால் மூலம் வருமானம் பார்க்கணும்னு நாங்க ஆசைப்படுறதில்லை. கன்றுக்குட்டிகள் நல்லா தாய்ப்பால் குடிச்சு திடகாத்திரமா வளர்றதாலதான் எந்தப் பிரச்னையும் வர்றதில்லை. சரியா மூணாம் வருஷம் பருவத்துக்கு வந்து, சினை புடிச்சிடும்” என்று தனது மாடுகளின் மகிமை பேசும்போது வல்லரசுவின் முகத்தில் அத்தனை பிரகாசம்!

மேய்ச்சல் மட்டும்தான்...

என் செல்லமே...

தீவனத்துக்கு வேலையே இல்லை!

“காலையில பத்து மணியில இருந்து சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு விடுவோம். வேற எந்த தீவனமும் கொடுக்கிறதில்லை. அதுதான் இந்த மாடுகளோட சிறப்பே. பலவிதமான மூலிகைச் செடிகளையும் சாப்பிட்டு வளர்றதால இந்த மாடுகளோட சாணம், சிறுநீர்ல வீரியம் அதிகம். எங்க வயல்ல விதைக்கிறதுக்கு முன்னாடி இந்த மாடுகளைக் கிடை போடுவோம். வேற எந்த உரமும் போடுறதில்லை. என்ன பயிர் வெச்சாலும் ‘ஜம்’னு வளரும். எங்க வயல் இல்லாம சுத்துப்பட்டுல உள்ள வயல்களுக்கும் கிடை போடுறோம்.

150 மாடுகளை வெச்சு ஒரு ஏக்கருக்கு கிடை போட்டா 1,500 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு ஏக்கருக்கு ரெண்டு நாள் கிடை போட்டா போதும்” என்ற வல்லரசு, வருமானம் பற்றிச் சொன்னார்.

கிடையில் ரூ.1 லட்சம்... மாடுகளில் ரூ.5 லட்சம்!

“கிடை போடுறது மூலமா வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதில்லாம கன்னுக்குட்டிகளை விற்பனை செய்றது மூலமாவும் வருமானம் கிடைக்குது. ஆறு மாச வயசுள்ள காளை கன்னு நாலாயிரம் ரூபாய் வரை விலை போகுது. கிடேரி கன்னா இருந்தா மூணு வருஷம் வளர்த்து ஒரு ஈத்து கொடுத்ததும்தான் விற்பனை செய்வேன். அப்படி விற்பனை செய்யறப்போ ஒரு மாடு ஒன்பதாயிரம் ரூபாய்ல இருந்து பனிரெண்டாயிரம் ரூபாய் வரை விலை போகுது. வருஷத்துக்கு எப்படியும் சராசரியா 15 காளைக்கன்னுகளையும் 40 பசு மாடுகளையும் விற்பனை செய்வேன். அது மூலமா அஞ்சு லட்ச ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது.

கிடை போடுறதுல கிடைக்கிற  வருமானத்தையும் சேர்த்தா வருஷம் ஆறு லட்ச  ரூபாய் வருமானம் கிடைச்சுடும். மேய்க்கிறதுக்குக் கொடுக்குற கூலி, பராமரிப்புச் செலவெல்லாம் போக, எப்படியும் வருஷத்துக்கு நாலரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்’’ என்றவர்,

‘‘இந்த மாடுகளுக்குனு தனியா எந்த கவனிப்பும் செய்றதில்லை. ஆனா, பரம்பரையா பரம்பரையா அதுக பாட்டுக்கு வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கு” என்று நன்றி பெருக்கோடு மாடுகளைத் தடவிக் கொடுத்தார் வல்லரசு. 

தொடர்புக்கு,
வல்லரசு,
செல்போன்: 98424-88347

சாணத்தில் சத்துக்கள் அதிகம்!

தஞ்சாவூரில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர்  டாக்டர்.புண்ணியமூர்த்தியிடம், ‘கிடைமாடுகள்’ குறித்துப் பேசியபோது...

என் செல்லமே...

“தமிழ்நாட்டில் கிடைக்காக பல வகையான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் புலிகுளம், தென்பாண்டி ஆகிய ரகங்கள்; ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பர்கூர் மாடுகள்;  சேலம், மேட்டூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பாலமலை, ஆலம்பாடி ஆகிய ரகங்கள்; நாமக்கல் பகுதியில் கொல்லிமலை மாடுகள்; திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உம்பளச்சேரி, மணப்பாறை ஆகிய ரகங்கள் என ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேக ரகங்கள் உண்டு.

கிடைமாடுகளுக்கும் தமிழர்களுக்கும் பாரம்பர்ய தொடர்புண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்களில் கிடைமாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை நாட்டின் கௌரவமாக மதிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஆநிரை கவர்தல்’ என்று போருக்கான காரணமாகவும் மாடுகள் இருந்ததுண்டு.

வல்லரசு வளர்க்கும் மாடுகள் மலைமாடுகள் வகையைச் சேர்ந்தவை. இவற்றுக்கு அந்தந்தப் பகுதிகளில் வட்டார வழக்கில் பெயர் வைத்துக் கொள்வார்கள். இவை நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இலை, தழைகளையும் வேளாண்மைக் கழிவுகளையும் மட்டுமே இவை சாப்பிடுவதால், இவற்றின் கழிவுகளில் சத்துக்கள் அதிகம். இதன் கழிவுகளில் துர்நாற்றம் இருக்காது. அடர்தீவனம் உள்ளிட்ட செயற்கையான உணவுகளைச் சாப்பிடக்கூடிய மாடுகளின் சாணம் ‘தளதள’ என நீர் கலந்திருப்பதால், கிருமிகள் உருவாகி துர்நாற்றம் வீசுகிறது. இந்த மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்” என்றார்.

ஐரோப்பாவில் மவுசு இந்தியாவில் ரவுசு..!

என் செல்லமே...

பாரம்பர்ய மாடுகளை இனம்கண்டு அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சேவா தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விவேகானந்தனிடம் கிடைமாடுகள் குறித்துப் பேசியபோது, “டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் பாரம்பர்ய கிடைமாடுகளுக்கு அனைவரும் மரியாதை அளிக்கின்றனர். சாலைகளில் அவற்றுக்கு தனிப்பாதை உண்டு. கிடை போட மாடுகளை அழைத்து வரும்போதும், பிறகு அவற்றை அழைத்துச் செல்லும்போதும் நன்றி தெரிவிக்கும் விதமாக இசைக்கருவிகளை இசைத்து வரவேற்பு கொடுக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் அப்படியில்லை. இங்கு, மாடுகளை மேய்க்க வனத்துறையினர் அதிக கெடுபிடிகள் விதிக்கின்றனர். இதனால், கிடைமாடுகள் வளர்ப்பே அழிந்து வருகிறது. கிடைமாடுகளை காடுகளில் மேய அனுமதிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தாலும், வனத்துறை அனுமதி கொடுப்பதில்லை” என வருத்தப்பட்டார்.

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: க.சதீஸ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism