Published:Updated:

“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”

மனம் திறக்கும் ‘பசுமைப் புரட்சி’யின் தந்தை..!

“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”

மனம் திறக்கும் ‘பசுமைப் புரட்சி’யின் தந்தை..!

Published:Updated:

ந்திய விவசாயத் துறையில் தவிர்க்க முடியாத பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். சுருக்கமாக எம்.எஸ்.சுவாமிநாதன். மரபியல் விஞ்ஞானி. ‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’. ரமன் மகசாசே, பத்மவிபூஷன், நார்மன் போர்லாக் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். கேரள மாநிலம், மான்கொம்பு என்ற ஊரைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இந்திய ஆட்சியாளர்களால் கொண்டாடப்படும் இந்த வேளாண் விஞ்ஞானி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் வேளாண் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு முனைவர் பட்டங்களை பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவருக்கு வழங்கியுள்ளன.

“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1961-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தபோது, கோதுமையில் குட்டை ரகத்தை அறிமுகப்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தினார். இதேபோன்று நெல்லிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், நம்முடைய பாரம்பர்ய விதைகள் மெள்ள விடைபெறத் தொடங்கின, என்பதுதான் சோகம்.

உணவு தானிய உற்பத்திக்கு உயர்விளைச்சல் ரகங்களை அறிமுகப்படுத்தியது சரி. ஆனால், அந்தப் பயிர்களை வளர வைக்க ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் எப்படி வந்து சேர்ந்தன என்பது இந்திய வேளாண் அரசியலில் ஆய்வுக்குரிய ஒன்று.

தற்போது, ‘ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறையுங்கள்’ என்று பல மேடைகளில் பேசி வருகிறார் எம்.எஸ். சுவாமிநாதன். பல நாடுகள், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்க, மரபணு மாற்று விதைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அதேவேளையில், இவருடைய ஆராய்ச்சி மையத்தின் மூலம் தமிழ்நாடு (கொல்லிமலை), ஒடிசா ஆகிய இடங்களில் சிறுதானியங்களைப் பயிர் செய்யவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுதான் இவரிடமுள்ள முரண்பாடு. தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய வேளாண்துறையில் முக்கியப் பங்காற்றி வரும் எம்.எஸ். சுவாமிநாதன், சமீபத்தில் தன்னுடைய 90-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். இந்நிலையில், இந்திய விவசாயம், இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி என்று பலவற்றைப் பற்றியும் மின்னஞ்சல் மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். மின்னஞ்சல் மூலமாகவே அவற்றுக்குப் பதில்களை அளித்தார்.

முன்குறிப்பு: பல கேள்விகளுக்கு நேரடியாக அவரிடமிருந்து பதில் இல்லை. அவருடைய பதில்களைப் படிக்கும்போதே அதற்கான காரணம் உங்களுக்கு விளங்கிவிடும்.

“நீங்கள் வேளாண் துறையில் நுழைந்தபோது இந்திய விவசாயம் எப்படி இருந்தது?”

‘‘கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1944-ம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். அந்தச் சமயத்தில் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இருந்தது. அப்போது இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த வங்க தேசத்தில் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பசிப்பிணியால் இறந்து போனார்கள். நவகாளி யாத்திரையின்போது, ‘பசியால் வாடுபவனுக்கு உணவுதான் கடவுள்; எனவே சுதந்திர இந்தியாவில் பசியை வேரோடு களைவதுதான் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. இந்தப் பேச்சு என்னுடைய மனதை மிகவும் உறுத்தியது. அதனால், வேளாண்மைத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.”

“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”

‘‘இந்தியாவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?

‘‘1860ல் ஐரோப்பாவில் காபி, தேயிலை பயிர்களின் வளர்ச்சிக்காக பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் காபி, தேயிலை பயிர்களை அறிமுகப்படுத்தும்போதே பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பயன்படுத்தியிருக்கக் கூடும்.’’

“ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிக்கப்பட்டதை, இறக்குமதி செய்யமாட்டோம் என தடைபோடுகின்றன வெளிநாடுகள் பலவும். அதேசமயம், அத்தகைய நாடுகள் பலவும் ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரம் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. அவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குவது எந்தவிதத்தில் நியாயம்?”

“வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கனிம உரங்களையும், ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் கட்டுப்படுத்துவது அவசியம். உள்நாட்டிலே அவற்றை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றன. அதேசமயம் பயிர்களில் அதிக விளைச்சல் வேண்டுமென்றால், அதற்கான இடுபொருட்களையும் கொடுத்தாக வேண்டி உள்ளது. ஒரு டன் கோதுமை விளைச்சல் வேண்டுமென்றால், 25 கிலோ நைட்ரஜன் சத்து தேவை. இதை சுற்றுச்சூழலுக்குப் பொருந்திப்போகிற அளவில் பயன்படுத்தினால் நல்லதுதான்”

“2025-ம் ஆண்டுக்குள் பட்டினியில்லா உலகம் என்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே பஞ்சத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டுதான் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தினீர்கள். 50 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுநாள் வரை ஒழியாத பஞ்சம், இன்னும் 10 ஆண்டுகளில் ஒழிந்து விடுமா?”

“1940 களில் இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி. இப்போது 125 கோடி. இன்று உணவுதானிய உற்பத்தி போதுமான அளவில் இருக்கிறது. ஆனால், அதை வாங்கும் சக்தி ஒருவரின் வருமானத்தைச் சார்ந்து உள்ளது. அப்படி வாங்கும் பட்சத்தில் உடலானது உணவை எடுத்துக் கொள்ள வேண்டுமானால் தூய்மையான தண்ணீர், இடவசதி மற்றும் அடிப்படையான சுகாதாரம் வேண்டும். உணவைப் பெருக்குவதில் அதிக கவனம் காட்டும் நாம், அதைச் சார்ந்த வளர்ச்சி விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்துத்தான் ‘பசியில்லா உலகம்’ என்ற இலக்கை நோக்கிச் செல்வது குறித்துப் பேசுகிறேன்”

“மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்துத்தான் உயர் விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகங்களை அறிமுகப்படுத்தினீர்கள். அதற்கு ஏன் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பரிந்துரை செய்தீர்கள்... நமது பாரம்பர்ய சாணம், எரு, இலைதழைகளைப் பரிந்துரைத்து இருக்கலாமே?

“விளைச்சலுக்கு இடுபொருட்கள் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக, ஒரு டன் நெல் உற்பத்தி ஆக வேண்டுமானால் 20 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன் சத்து) தேவை. விவசாயி நிறைய கறவை மாடுகளை வைத்திருந்தால் பசுஞ்சாணம், கம்போஸ்ட் உரங்கள் மூலமாக இத்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் பெரும்பான்மையான விவசாயிகளிடம் போதிய அளவு கால்நடைகள் இல்லை. இயற்கை விவசாயத்தில் கம்போஸ்ட், பசுந்தாள், பசுந்தழை உரங்கள், நெல் பயிருக்குப் பின் பயறு வகைகளை சாகுபடி செய்தல், பசுஞ்சாணம் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முறைகளையும் ஒருங்கிணைத்து முறையாகச் செய்ய வேண்டும். அப்படி யாரும் சரி வரச் செய்வதில்லை. கடைகளில் அங்கக உரங்களை வாங்கலாம் என்றால், அவையும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ரசாயன உரங்களும், ரசாயன பூச்சிக்கொல்லிகளும் விவசாயத்தில் புகுந்துவிட்டன.”

“ரசாயன உரங்கள்- பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்!”

“அதிக ரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் பயன்பாட்டால் மண்வளம் கெட்டுவிட்டது. இதை ஆய்வு செய்வதனால் என்ன பயன்? இதற்குப் போர்க்கால அடிப்படையில் அரசே ஒரு தீர்வு கண்டால் என்ன?

“மண்வளம் என்பது மண்ணின் பௌதீக, வேதி மற்றும் நுண்ணுயிர் ஆகியவற்றின் மொத்த அம்சங்களையும் உள்ளடக்கியது. நவீன விவசாயத்தில் ரசாயன உரங்களைக் குறைந்தளவு மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக ரசாயன உரங்கள் பயன்படுத்துவோர், அடிக்கடி மண்ணை சோதனை செய்து கொள்வது நல்லது. இருபது ஆண்டுகளுக்கு முன்பே, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக, விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை அறிய மண்வள அட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டோம்.”

“1990-ம் ஆண்டில் நடந்த கான்பூர் மாநாட்டில், ‘விவசாயிகளின் பேராசைதான், ரசாயன உரங்களின் பயன்பாட்டுக்குக் காரணம்’ என்றீர்கள். ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தியதே பசுமைப் புரட்சியின் போதுதான். அதைக் கண்காணிக்க வேண்டியது அரசின் வேளாண் அதிகாரிகள். அவர்களை ஏன் நீங்கள் கேட்கவில்லை?”

“நான் எப்போதும் அதிகப்படியான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை எதிர்த்து வந்துள்ளேன். 1968-ல் உரையாற்றியபோதே, ‘பசுமைப் புரட்சியை பேராசைப் புரட்சியாக மாற்றக் கூடாது’ எனக் கேட்டுக் கொண்டேன். இதன் குறிக்கோள் விவசாயத்தை வருமானம் மிக்கதாக மாற்ற வேண்டும் என்பதே. இந்த விஷயத்தில் மற்றவர்களைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.”

விளைபொருட்களுக்கு நிரந்தர விலை ஏன் கிடைக்கவில்லை...

இயற்கை விவசாயம் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?

மரபணு மாற்றுப்பயிர்கள் ஒன்றுதான் ஒரே தீர்வா?

உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்...

நான்கு சதவிகித வட்டியில் கடன்!

தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும் ‘தேசிய விவசாயிகளுக்கான கொள்கை’ என்ற பெயரில், நாடாளுமன்றத்தில் 2007-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகள் இங்கே...

வேளாண் அமைச்சகம் என்ற பெயரை ‘விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகம்’ என மாற்றி அமைக்க வேண்டும். காரணம் விவசாயிகளின் நலனை அவர்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் (தற்போது மத்திய அரசால் வேளாண் அமைச்சகத்தின் பெயர், ‘விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது).

இந்தியாவுக்கென பிரேத்யகமான ஒரு சந்தையை நிறுவுவதன் மூலம் தங்களது விளைபொருட்களை எந்தத் தடையுமின்றி கொண்டு செல்ல முடியும்

விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டிக்குக் கடன் தருதல்.

விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய நிதி, வேளாண் காப்பீட்டுத் தொகையை விரிவுபடுத்துதல்.

விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கடன்களை தள்ளுபடி செய்தல்.

கொள்முதல் மற்றும் பொது விநியோக முறையை பலப்படுத்துவதன் மூலம் உறுதியான லாபகரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல்

குறைந்தபட்ச உத்தரவாத விலை என்பது உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் வரை கிடைக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி, இயற்கை விவசாயப் பகுதிகளை உருவாக்குதல். அப்பகுதிகளில் சிறு விவசாயிகள் இயற்கை விவசாயப் பண்ணைகளை ஊக்குவித்தல்.

விவசாயிகளின் உண்மையான வளர்ச்சியை அவர்களது நிகர லாபத்தை வைத்து அளவிட வேண்டுமேயன்றி, அவர்கள் பெற்ற மொத்த விளைச்சலை வைத்து அளவிடக் கூடாது.

த.ஜெயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism