Published:Updated:

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

Published:Updated:

ரில் உள்ள ஆரம்ப பள்ளியில் ‘வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்’ நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் பெயர்களை சரி பார்த்துக்கொண்டு வெளியில் வந்த சமயம்... பொங்கல் பிரசாதத்தோடு வந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. தோட்டத்துக்குக் கிளம்பலாம் என்று எத்தனிக்கையில்... ‘சடசட’வென மழை தூற ஆரம்பித்தது. அதனால், ஏரோட்டி வீட்டுத் திண்ணையிலேயே அன்றைய மாநாடு கூடியது.

‘‘இன்னிக்கு புரட்டாசி சனிக்கிழமையில்ல, அதான் பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். அரிசிப் பொங்கல் பிரசாதம் கொடுத்தாங்க, நீங்களும் சாப்பிடுங்க’’ என்று கொடுத்தார், காய்கறி. அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு கதையைச் சொல்லி மாநாட்டைத் துவக்கினார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சுப்பன்ங்கிற அந்த விவசாயி, தன் நிலத்துல கிணறு இல்லாததால, கிணறு வெட்டி தண்ணி எடுத்து விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டார். இதைத் தெரிஞ்சுக்கிட்ட பக்கத்துத் தோட்ட விவசாயி ரங்கன், ‘என்னோட கிணத்தை விலைக்கு வாங்கிக்கிறியா?’னு கேட்டார். கிணறு வெட்டற செலவுல பாதி அளவுதான் விலை இருந்ததால, கிரையமும் நல்லபடியா முடிஞ்சுது.

சுப்பன் நல்ல நாளா பார்த்து கிணத்துல இருந்து தண்ணி இறைக்கிற சமயத்துல அங்க வந்த ரங்கன், ‘நான் கிணத்தைத்தான் உனக்கு வித்தேன். அதுல இருக்குற தண்ணியை இல்லை. அதனால நீ தண்ணியை எடுக்கக் கூடாது’னு சொல்ல, ‘ஆகா, இதென்னடா வம்பா போச்சு’னு முன்சீப்கிட்ட பிராது கொடுத்தார், சுப்பன்.

முன்சீப் கொஞ்சம் சமயோசிதமான ஆள். அவருக்கு ரங்கனைப் பத்தி முன்னாடியே தெரியும். வழக்கு விசாரணைக்கு வந்த அன்னிக்கும் ரங்கன், சுப்பன்கிட்ட சொன்னதையே சொல்றார். உடனே முன்சீப், ‘நீ கிணறை சுப்பனுக்கு வித்ததுக்கு அப்பறம், கிணறு சுப்பனுக்கு சொந்தமாகிடுது. அந்தக் கிணத்துல உன்னோட தண்ணியை வைக்கிறதுக்கு உனக்கு உரிமையில்லை. அதனால உடனே தண்ணியை எல்லாம் எடுத்துட்டு கிணற்றை சுப்பன்கிட்ட ஒப்படைச்சுடு’னு தீர்ப்பு சொன்னார். தன்னோட குறுக்குப் புத்தி தோத்துப்போனது தெரிஞ்சதும், மன்னிப்பு கேட்டார் ரங்கன்.

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

இதுக்குத்தான் ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல உண்டு’னு சொல்லி வெச்சாங்க. நாமதான் அறிவாளினு வில்லங்கம் பண்ணுனோம்னா நமக்கு மேல ஒருத்தன் நம்மளைக் குட்டு வைக்க வருவான்’’ என்றார், வாத்தியார்.

‘‘கலிகாலத்துல குட்டு வைக்கிறதுக்கெல்லாம் ஒருத்தனும் வர மாட்டான். கெட்டவனுக்குத்தான் காலம்னு ஆகிப்போச்சு. இந்தா பாரு, இந்த வருஷமும் காவிரித் தண்ணியை கர்நாடகாக்காரன் கொடுக்க மாட்டேனுட்டான். சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போனாலும் அவனுங்க மசியுறதில்லை. இதை என்னானு சொல்றது?’’ என்று கோபமானார், ஏரோட்டி.

‘‘ஆமாய்யா... காவிரி தண்ணிக்காக தினமும் போராட்டம் நடக்குது போல... டி.வி நியூஸ்ல காமிச்சாங்க’’ என்றார், காய்கறி.

‘‘ஆமா, கண்ணம்மா... செப்டம்பர் 28-ம் தேதி, காவிரி உரிமை மீட்புக்குழு அமைப்பு சார்பா, நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் இருக்கிற பெட்ரோல் ஆலையின் முன்னால விவசாயிங்க குவிஞ்சு முற்றுகைப் போராட்டம் நடத்துனாங்க. அப்போ, ‘காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத மத்திய அரசே... எங்கள் காவிரிப் படுகையில் பெட்ரோல் எடுக்காதே’னு கோஷம் போட்டாங்க. விவசாயிகள் பனங்குடிங்கு வர்றதுக்கு முன்னாடியே அறுநூறு போலீஸ் கொண்ட படையை வரவழைச்சு ஆலைக்கு பாதுகாப்பு போட்டிருந்தாங்க. பேரணியா வந்த விவசாயிகளை போலீஸ்காரங்க தடுக்க முயற்சி செய்றப்போ... உணர்ச்சி கொந்தளிப்போட வந்த விவசாயிகள், போலீஸ்காரங்க வெச்சிருந்த தடுப்பு அரண்களையெல்லாம் தள்ளிவிட்டு முன்னேறிட்டாங்க. அதனால போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு வந்துடுச்சு. உடனே, விவசாயிகள் சாலை மறியல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அப்பறம் விவசாயிங்களைக் கைது பண்ணி பிரச்னையை முடிச்சாங்க.

அடுத்த நாளே இதே பிரச்னைக்காக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகனு மூணு கட்சிகளும் சேர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினாங்க. அக்டோபர் 1-ம் தேதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பா தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்டோடர் 3-ம் தேதி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பா தஞ்சாவூர்ல உண்ணாவிரதப் போராட்டம் நடத்துனாங்க. டெல்டா மாவட்டங்களே இப்போ போராட்டக் களமாத்தான் மாறிக்கிடக்கு’’ என்றார், ஏரோட்டி.

அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து அவித்த வேர்க்கடலையைக் கொண்டு வந்து மூவருக்கும் கொடுத்தார், ஏரோட்டியின் மனைவி. மழை, குளிர்காற்று சமயத்தில் சூடாக வந்த வேர்க்கடலை மூவருக்கும் இதமாக இருந்தது. அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: காவிரிப் போர்...டெல்டாவில் உச்சக்கட்ட உஷ்ணம்

‘‘நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகிக்கிட்டே இருக்கிறதால அதுல இருந்து வெளிவர்ற நச்சுப் புகையோட அளவும் அதிகரிச்சுக்கிட்டே இருக்குதுல்ல. அதுக்காக விழிப்பு உணர்வு ஏற்படுத்துற விதமா... டெல்லிக்குப் பக்கத்துல இருக்குற குர்கான் பகுதியில செப்டம்பர் 22-ம் தேதியை ‘கார் இல்லா பயண நாள்’னு (கார்  ஃப்ரீ டே) கொண்டாடியிருக்காங்க. அன்னிக்கு எல்லாரும் அவங்களோட காரை பயன்படுத்தாம சைக்கிள்ல பயணம் பண்ணி இருக்காங்க. ரொம்ப தூரம் போறவங்க பஸ், ஆட்டோ மாதிரி பொது வாகனங்களைப் பயன்படுத்தியிருக்காங்க. அன்னிக்கு குர்கான் பகுதி போலீஸ் கமிஷனர் நவ்தீப் சிங் விர்க் தன்னோட சைக்கிள்லதான் அலுவலகத்துக்கு வந்திருக்கார். இதேமாதிரி பிரான்ஸ் நாட்டுல பாரீஸ் நகரத்துலயும் கொண்டாடியிருக்காங்க” என்றார், வாத்தியார்.

‘‘ம்க்கும்... இதெல்லாம் ஒரு நாள் கூத்துக்கு மீசை வெக்கிற கதைதான். இதை வெச்சு என்ன நடந்துட போகுது. தேவை இருக்கோ இல்லையோ... வீட்டுக்கு நாலு காரு, நாலு பைக்னு வாங்கி நிறுத்திடறாங்க. வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடைக்குகூட நடக்க மாட்டேங்கறாங்க’’ என்று காய்கறி சொல்ல...

‘‘மக்கள மட்டும் குறை சொல்றியே... இந்த அமைச்சருங்க, அதிகாரிங்க, அரசியல்வாதிங்க பாத்ரூம் கிளம்பினா கூட படையோட இல்ல போறாங்க. ஒரு அமைச்சர் போனா.. ஒன்பது வண்டி போகுது. ஏன், எல்லாரும் ஒரே வாகனத்துல பயணம் செஞ்சா... புகையும் குறையும், செலவும் குறையும். ஆனா, ஊருக்கு உபதேசம் செய்யறதோட சரி. இந்த மாதிரி ஜென்மங்கள் திருந்தற வரை ஒரு நாள் மீசைக்குத்தான் இங்க முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அப்பத்தானே வருஷம் வருஷம் அந்த பேருலயும் ஒரு திருவிழாவைக் கொண்டாடி கணக்கெழுதி காசு பாக்க முடியும்’’ என்று ஏரோட்டி சீறித்தள்ளினார்.

அப்போது, வானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க ஆரம்பிக்க, ‘‘ம்... இன்னும் ரெண்டு, மூணு வீட்டுக்கு காய் கொடுக்கணும்’’ என்று சொன்ன காய்கறி, தன் கூடையைத் தூக்க, அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்

படங்கள்: த.க.தமிழ்பாரதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism