நாட்டு நடப்பு
Published:Updated:

“கும்பகோணம்... இனி மாடித்தோட்ட நகரம்”

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்

''கோவில்களின் நகரம்’னு எங்களோட கும்பகோணத்தை அழைக்கிறது வழக்கம். இனிவரும் காலங்கள்ல 'மாடித்தோட்டங்களின் நகரம்’ங்கிற பேரும் வரப்போகுது. எளிமையான தொழில்நுட்பங்கள், நம்பிக்கையைக் கொடுத்திருக்கு’ என சிலாகிக்கிறார்கள், கும்பகோணத்தில் நடந்த, 'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம் மற்றும் நீர்நிலைகள் மீட்பு’ பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள். 

அக்டோபர் 18ம் தேதி ஸ்ரீ பாலாஜி மகாலில், 'பசுமை விகடன்’ மற்றும் 'கும்பகோணம் ரோட்டரி சங்கம்’ ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ரோட்டரி சங்க நிர்வாகிகளான பாலாஜி, வைத்தியநாதன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்க, ரோட்டரி சங்கத்தின் தலைவர் சௌமியநாராயணன், 'மாடித்தோட்டம் அமைத்தால், நம் மனமும் உடலும் உற்சாகம் அடையும். பச்சைப் பசேல் காய்கறித் தோட்டத்தைப் பார்த்தால் மனஉளைச்சல் குறையும்' என்று சொல்லி கூட்டத்தினரின் கவனத்தைக் குவித்தார்.

“கும்பகோணம்... இனி மாடித்தோட்ட நகரம்”

தொடர்ந்து பேசிய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் குணசேகரன், 'பாரம்பர்ய உணவுகளை, ரசாயனம் இல்லாத மரபு விவசாயத்தைக் கைவிட்டதால்தான் நோய்நொடிகளுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாடித்தோட்டம் எந்தளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு நீர்நிலைகள் மீட்பும் அவசியமானது' என்று வலியுறுத்தினார்.  

மாடித்தோட்டம் குறித்துப் பயிற்சி அளித்த கனகராஜ், 'நிலங்களில் விளையக்கூடிய எல்லா வகையான காய்கறிகளையுமே மிக எளிமையாக மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம். சிமென்ட், மண் தொட்டிகளைவிட தார்பாயில் செய்யப்பட்ட பைகள் கனம் குறைவானவை. மாடிக்குப் பாதுகாப்பானவை. இடம், மண் மாற்றுவதும் எளிது. பழைய தண்ணீர் பாட்டில்கள், ஷூக்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றில் கூட புதினா, கொத்தமல்லித்தழை, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம்' என்றதோடு பல்வேறு தொழில்நுட்பங்ளை விவரித்தார்.

“கும்பகோணம்... இனி மாடித்தோட்ட நகரம்”

'காளான் வளர்ப்பு’ குறித்து பயிற்சி அளித்த சேகரன், 'மட்கக்கூடிய அனைத்து தாவரக்கழிவுகளிலும் காளான் வளர்க்கலாம். 300 முதல் 600 கிலோ வைக்கோலின் விலை ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால், இதைப் பயன்படுத்தி காளான் வளர்த்தால், 6 மாதங்களில் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கலாம்' என்று சொல்லி ஆர்வத்தைக் கூட்டினார்.

'நீர்நிலைகள் மீட்பு குறித்தான சட்ட வழிமுறைகள்’ குறித்து சுந்தர விமலநாதன், நீதிமன்றம் மூலம் குளத்தை மீட்டெடுத்த அனுபவம் குறித்து முத்துப்பேட்டை முகமது மாலிக் ஆகியோர் பேசினர்.