நாட்டு நடப்பு
Published:Updated:

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

தென்னை, கரும்பு, சம்பங்கி, மஞ்சள், எலுமிச்சை... லாப பாடம் சொல்லும் அனுபவ விவசாயிகள்

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

சென்ற இதழ் தொடர்ச்சி...

செப்டம்பர் 25 முதல் 28 தேதி வரை ஈரோடு மாநகரில் ‘பசுமை விகடன்’ சார்பாக நடைபெற்ற வேளாண் கண்காட்சி குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். கண்காட்சியின் ஒரு பகுதியாக நான்கு நாட்களும் நடந்த கருத்தரங்கில்... முன்னோடி விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் எனக் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அவர்கள் பகிர்ந்ததில் சில இங்கே இடம் பிடிக்கின்றன...

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

வறட்சியிலும் வாடாத தென்னை!

‘செலவைக் குறைக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில்... வறட்சியிலும் வாடாத தென்னைக்குச் சொந்தக்காரரும், மூடாக்கு வித்தைக்காரருமான முன்னோடி தென்னை விவசாயி ‘உடுமலைப்பேட்டை’ பாலகிருஷ்ணன் உரையாற்றினார். உரைக்கு முன்னதாக, அவரது தென்னந்தோப்பில் ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்த படக்காட்சி திரையிடப்பட்டது. அது, நேரடியாக அவரது தோட்டத்துக்குச் சென்று வந்த அனுபவத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது.

“தென்னையில் ரசாயன உரத்தை விட ஜீரோ பட்ஜெட் முறையில் அதிக மகசூல் பெறலாம். தென்னை மரங்களில் கூடுதல் மகசூல் என்பது சரியான முறையில் மண்ணுக்கு நாம் கொடுக்கக்கூடிய இடுபொருட்கள் மூலம்தான் சாத்தியம். தென்னை மரங்களைச் சுற்றி மூடாக்குப் போட்டு, சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதன் மூலம் வறட்சி காலங்களில் தென்னை மரங்கள் மடிவதைத் தடுக்கலாம். ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் இடுபொருட்களுக்கு அதிக செலவு செய்யத் தேவையில்லை. காய்ந்த மட்டைகளில் உள்ள இலைகளை எடுத்து வயல் முழுக்க மூடாக்கு போல பரப்பி வைப்பது; மரத்தின் வெளிச்சுற்றில் பாசனம் செய்வது, இவை இரண்டும்தான் முக்கியமானவை.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

 மூடாக்கு இடும்போது, அனைத்து நுண்ணுயிரிகளும் உயிர்ப்புடன் இருக்கும். அதோடு, மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஈரப்பதம் இருப்பதால் மண்புழுக்கள் அதிகளவில் இருக்கும். அவை கீழும், மேலும் மண்ணை உழுது காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து ஜீவாமிர்தம் பயன்படுத்தும்போது, சிறப்பான மகசூல் கிடைக்கிறது” என்ற பாலகிருஷ்ணன், தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளித்தார்.

ஆண்டுக்கு `5 லட்சம் சாத்தியமே!

25-ம் தேதி மதிய அமர்வில் முதலாவதாக மேடையேறினர், திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கி சாகுபடியில் கலக்கி வரும் மருதமுத்து-வாசுகி தம்பதி. “பொதுவாக பூக்களைப் பயிரிடும்போது, ‘பூக்களின் விலை நாளுக்கு நாள் ஏறி, இறங்கக்கூடியது. அதில் எப்படி லாபம் பார்க்க முடியும்?’ என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால், உண்மையில் பூ சாகுபடி பல விவசாயிகளைக் கடனில் இருந்து காப்பாற்றி இருக்கிறது, மாதந்தோறும் நிச்சய வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‘சம்பங்கி சாகுபடியில் 60 சென்ட் நிலத்தில் ஒர் ஆண்டில்  5 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன்’ என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. காரணம், நான் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுகிறேன்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

மண்ணுக்குத் தொழுவுரம் இட்டு வளமேற்றுவது முதல் விதைக்கிழங்கை நடவு செய்வது வரை முறையான தொழில்நுட்பங்களை சரியான முறையில் செய்ய வேண்டும். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட நீங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு... வயலைச் சுற்றிலும் மரவகைப் பயிர்களை நட்டு சம்பங்கியைப் பாதுகாத்து வந்தால், ஓர் ஆண்டில் ஐந்து லட்சம் நிச்சயம் சம்பாதிக்கலாம்” என்ற மருதமுத்து, ‘கரூர்’ மனோகர், ‘திருநெல்வேலி’ சுப்பிரமணி உள்ளிட்ட சில வெற்றிகரமான சம்பங்கி விவசாயிகளையும் மேடையில் அறிமுகப்படுத்தினார். சம்பங்கி மூலம் மாதம் குறிப்பிட்ட தொகை நிச்சய வருமானமாகக் கிடைப்பதை அவர்கள், பகிர்ந்துகொண்டது, விவசாயிகளையும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

கரும்புக்கு ஏற்ற ரெயின் கன் பாசனம்!

அடுத்ததாக கரும்பு சாகுபடி பற்றிப் பேசிய திருச்செங்கோடு நடேசன், “சொட்டுநீர்ப் பாசனத்தில் ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் ஆகிய இயற்கை இடுபொருட்களைக் கலந்து விடும்போது, குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாய்க்கால் வழிப்பாசனத்தில் இவற்றைக் கலந்தாலும் கடைசிப்பகுதி வரை சீராகப் பாயாது. இதற்கான  தீர்வுதான் ரெயின்கன். இதை நாமே சுலபமாக அமைத்துக் கொள்ளலாம். அதிக செலவு பிடிக்காது. நீர் மூழ்கி மோட்டாராக இருந்தால், 250 லிட்டர் பேரலில் அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தத்தை வைத்து விட்டால், எல்லா பகுதிகளுக்கும் சீராகவும், சமமாகவும் பாயும். ரெயின் கன் மூலம் தண்ணீர் பாய்ச்சினால், 100 அடி தூரம் வரை தண்ணீர் பாயும். நான், 8 மாதம் வரையிலும் கரும்பை ரெயின் கன் நீர்ப்பாசனம் மூலமாகத்தான் வளர்க்கிறேன். ரெயின் கன் மூலம் தண்ணீரை மேலிருந்து தெளிப்பதால் இலைகுருத்துப் புழு, குருத்துக்கட்டை ஆகியவை வராது. கரும்பும் உயரமாக வளர்வதால் நல்ல மகசூல் கிடைக்கும் இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

கரும்பில் உரிக்கும் தோகையை அப்படியே கரும்பின் மூட்டிலேயே வைத்து விடுவேன். அவை அப்படியே மண்ணோடு மட்கி விடும். தோட்டத்தை விட்டு எதுவுமே வெளியே போகக்கூடாது. கரும்பில் தொடர்ந்து இதுவரை 10 முறை கரும்பு வெட்டியிருக்கிறேன். 11-ம் மறுதாம்பு வயலில் இருக்கிறது. இதுவரை ஏக்கருக்கு சராசரியாக  60-லிருந்து 70 டன் மகசூல் கிடைத்திருக்கிறது. ரெயின் கன் மூலம் தண்ணீர் வேகமாவும், பரவலாவும் பிரிந்து போகும்போது தண்ணீரில் உள்ள உப்புச்சத்து குறைவதுடன், காற்றில் உள்ள நைட்ரஜனும் கிரகிக்கப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கூட இவ்வகை நீர்ப்பாசனம் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம். கரும்பைப் பொருத்தவரை வாய்க்கால் வழிப் பாசனம், சொட்டுநீர்ப் பாசனத்தை விடவும் ரெயின்கன் பாசனம் சிறந்தது” என்றார்.  

ஊடுபயிரில் சிறக்கும் மஞ்சள்!

தொடர்ந்து பேசிய பெரம்பலூரைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி ராமகிருஷ்ணன், “ஜீரோ பட்ஜெட் முறையில் மஞ்சள் சாகுபடி செய்ய விதைநேர்த்தி அவசியம். பீஜாமிர்தத்தில் விதைக்கிழங்கை நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். மண்ணுக்கு நாட்டு மாட்டு சாண உரமிடுதல் முக்கியம். தொடர்ந்து, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என இயற்கை உரங்களைக் கொடுத்தால், மகசூல் குறைய வாய்ப்பே இல்லை. பல்லடுக்கு முறை மஞ்சள் சாகுபடி குறைந்த செலவில் அதிக லாபத்தைத் தரும்.

வயலைச் சுற்றிலும் தென்னை, முருங்கை போன்ற மர வகைகளையும், அடுத்த அடுக்காக ஆமணக்கு போன்ற பயிர்களையும், தட்டைப்பயறு, வெங்காயம் போன்ற பயிர்களை ஊடுபயிராகவும் மஞ்சள் சாகுபடியில் விதைக்கலாம். இயற்கை விவசாயத்தில் மூடாக்கும், நீர்ப் பாசனமும் மிகவும் முக்கியம். தென்னை நார்க் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தலாம். சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் அதிக நீர் செலவு இருக்காது. இயற்கை விவசாயத்துக்கு 50% காற்று மிக அவசியம். திட்டமிட்டுச் செய்தால் இயற்கை விவசாயம் ஒரு எளிதான முறையாகத்தான் இருக்கும்” என்றார்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

நான் உணவில் பணக்காரன்!

தொடர்ந்து, ‘லாபம் கொடுக்கும் மண்வளக்கலை’ என்ற தலைப்பில் பேசிய முன்னோடி விவசாயி ’புளியங்குடி’ அந்தோணிசாமி, “வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் ரசாயன உரம் வாங்கிப் போட்டவன் நான். ஒரு கட்டத்துல விளைச்சலே இல்லாம அதிக நஷ்டம் ஏற்பட்டதும், மண்ணைப் பரிசோதனை செஞ்சுப் பாத்ததுல மண்ணுல எந்த சத்துமே இல்லைனு சொன்னாங்க. அதுக்குக் காரணம் ரசாயன உரம்தான்னு தெரிஞ்சது. உடனே இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். ‘உன் புருசனுக்கு புத்தி கெட்டுப்போச்சா?. சாணியையும், கோமியத்தையும் கலக்கி ஊத்திக்கிட்டு இருக்கானே இப்படிச் செஞ்சா எப்படி விளைச்சல் வரும்?’னு என் மனைவிகிட்ட எல்லாருமே கேலி பேசுனாங்க. ஆனா, அந்த வருஷம் மற்ற ரசாயன விவசாயிகளைவிட எனக்குத்தான் மகசூல் அதிகமா கிடைச்சுது.
இயற்கை விவசாயத்துக்கு நான் முழுமையா மாறி முப்பது வருசத்துக்கு மேல ஆகுது.

மேற்குத்தொடர்ச்சி மலைகள்ல வளரும் எலுமிச்சை மரங்களிலுள்ள விதைகளை என்னோட தோட்டத்தில் முளைக்க வைத்து அதை தாய்ச்செடியா வைச்சி, நாட்டு ரக செடிகளை ஒட்டுக்கட்டி புதுரக எலுமிச்சையைக் கண்டுபிடிச்சிருக்கேன். வழக்கமா நாட்டு எலுமிச்சை 5 வருஷத்தில் காய்ப்புக்கு வரும். ஆனா, இந்த ஒட்டு எலுமிச்சை இரண்டரை வருஷத்தில் காய்ப்புக்கு வந்துடும். வெளி இடுபொருள் ஏதும் கொடுக்கிறதில்லை. வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியையே உரக்கிடங்காக்கியிருக்கேன். அதுல, சணப்பு, தக்கைப் பூண்டு விதைச்சு, 40 நாள்ல பூக்குற பருவம் வந்ததும், மடக்கி விட்டுடுவேன். நாலாவது மாசம் கரும்புத் தோகையை உரிச்சு, அதையும் போட்டுடுவேன். அதெல்லாம் மட்கி உரமாயிடும்.

24 வருஷத்துக்கு முன்னாடி நட்ட கரும்பில இருந்துதான் இன்னிக்கும் அறுவடை செஞ்சுக்கிட்டிருக்கேன். மறுதாம்பு வந்துக்கிட்டே இருக்கு. ஏக்கருக்கு 60 டன்ல இருந்து 70 டன் வரை மகசூல் எடுக்கிறேன். என்னோட கரும்பு வயல்ல இருக்குற மண்ணோட அங்ககத் தன்மையைப் பார்த்துட்டு பல நாட்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யப்பட்டுப் போயிருக்காங்க. ஆரம்பத்துல எங்கிட்ட இருந்த 50 ஏக்கருக்கு ரசாயன உரத்துக்காக நான் செலவழிச்ச லட்சக்கணக்கான ரூபாய்க்கு கணக்கே இல்ல, ஆனா, இப்போ எங்கிட்ட இருக்கிற நூத்துக்கணக்கான ஏக்கருக்குமே ஒரு வருஷத்துக்கு இயற்கை உரம், இடுபொருள் செலவே ஒரு லட்ச ரூபாயைத் தாண்டாது.

ரசாயன உரம் போட்டு மண்ணோட வளத்தைக் கெடுத்ததெல்லாம் போதும். இனியாவது ரசாயனத்தை விட்டுட்டு இயற்கைக்கு மாறுங்க. பணத்துல நான் ஏழையா இருக்கலாம். ஆனா, உணவுல நான்தான் பணக்காரன். நினைச்சா தூயமல்லி, மாப்பிளைச்சம்பா, அறுவதாம் குருவை...னு பாரம்பர்ய அரிசி சாப்பாடு சாப்பிடுவேன். கேப்பை, கம்பங்கஞ்சி குடிப்பேன். ஒண்ணும் இல்லாட்டா பழைய சாதம் இருக்கு. இன்னைக்கு எந்த ஹோட்டல்லய்யா பழைய சாதம் கிடைக்குது?. இயற்கை விவசாயத்துக்கு மட்டும் மாறினா போதாது, உணவுலயும் மாறும்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்ங்கிறதை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்யா. அங்ககம்கிறது... விவசாயத்துல மட்டும் இல்ல... உணவுலயும்தான்’’ என்று அந்தோணிசாமி சொல்லி முடிக்கும்போது, கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.

மற்ற கருத்துரையாளர்கள் ஆற்றிய உரைகள் அடுத்த இதழில்...

பசுமைக்குழு,

படங்கள்: தி.விஜய், க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி