நாட்டு நடப்பு
Published:Updated:

“சொட்டு சொட்டாய் கண்ணீர்... கட்டுக்கட்டாய் கவலை...”

சொட்டுநீர்ப் பாசனக் கொள்ளை!உழவாளி, ஓவியம்: ஹரன்

 “சொட்டு சொட்டாய் கண்ணீர்... கட்டுக்கட்டாய் கவலை...”

த்மா திட்ட முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டது, வேளாண்துறையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதேநேரத்தில், பல்வேறு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் பெரும்பான்மையானவர்கள், சொட்டுநீர்ப் பாசனத்துக்கான மானியத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்திருந்தனர். 

'அரசு மானியம் அறிவித்தாலும், விவசாயிகளிடம் பணம் கேட்கும் அவசியம் என்ன... என்னதான் நடக்கிறது சொட்டுநீர்ப் பாசனத்துக்கான மானியத்தில்?’ என களத்தில் இறங்கி விசாரித்தால், கதை கதையாய் சொல்கிறார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

வறட்சி, விளைநிலங்களையெல்லாம் 'விலை’நிலங்களாக மாற்றி வருகிறது. கமலை ஏற்றத்தில் பாசனம் செய்த நிலை மாறி, ஆயிரம் அடிகளுக்கு கீழ் நீரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், விவசாயிகள். இந்நிலையில் சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக உள்ளன. ஆனால், அதற்கும் ஆப்பு வைக்கிறார்கள், அதிகாரிகள். சொட்டுநீர்ப் பாசனத்துக்கு அரசு 100 சதவிகிதம் வரை மானியம் அளித்திருக்கிறது. ஆனாலும், அது விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கிறது என ஆதங்கப்படுகிறார்கள், விவசாயிகள்.

 “சொட்டு சொட்டாய் கண்ணீர்... கட்டுக்கட்டாய் கவலை...”

ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்!

'சொட்டு சொட்டா தண்ணீர்... கட்டுக்கட்டா பணம்’ என்று விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்ட சொட்டுநீர்ப் பாசனம், அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளால், 'சொட்டு சொட்டா கண்ணீர்... கட்டுக்கட்டா கவலை’ என்ற மனநிலைக்கு விவசாயிகளைக் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நல்லசிவம், '100 சதவிகிதம் மானியம் என்பது 100 சதவிகிதம் பொய். சொட்டுநீர்க் கருவிகள் அமைத்துக் கொடுக்க... '5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம்;

5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம்’ என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது நடைமுறையில் இல்லை.

16 சதவிகிதம் லஞ்சம் கொடுக்கும் விவசாயிகளுக்குத்தான் சொட்டுநீர்க் கருவிகள் பொருத்தப்படுகின்றன. கிட்டத்தட்ட ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் நடைமுறையில் இருக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் என்றால், இலவசமாகத்தானே உபகரணங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால், போக்குவரத்துச் செலவு, கருவிகள் அமைக்க 'லேபர் சார்ஜ்’ என்று கணிசமான பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்.

தரமில்லாத உபகரணங்கள்!

சில இடங்களில் சொந்தமாக கைப்பணத்தைப் போட்டு, சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துக் கொள்ளவேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து திருப்தியாக இருந்தால் மட்டுமே மானியம் கிடைக்கும். அதுவும் 16 சதவிகிதம் பிடிக்கப்பட்டு மீதிப்பணம் காசோலையாக கம்பெனி முகவருக்கு வந்து சேரும். பிறகு, நடையாய் நடந்து கிடையாய் கிடந்துதான் மீதிப்பணத்தை விவசாயியால் வாங்க முடியும். சொட்டுநீர் உபகரணங்களை அமைக்க தேர்வான விவசாயி, தனக்கு விருப்பமான 'கம்பெனி’யில் போய் கருவிகளை வாங்கிப் பொருத்த முடியாது. தோட்டக்கலைத்துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள கம்பெனி டீலரிடம் உபகரணங்கள் வாங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும். பொருத்தப்படும் சொட்டுநீர் உபகரணங்கள் கண்டிப்பாக ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்றவையாக இருக்க வேண்டும் என்பது விதி. பாசனக்குழாய்களில் ஒரு மீட்டருக்கு ஒரு முறை ஐ.எஸ்.ஐ. முத்திரை பதியப்பட்டிருக்கவேண்டும். ஆனால், பெரும்பாலான முகவர்கள் பொருத்தும் குழாய்கள் தரம் குறைந்துதான் காணப்படுகின்றன. இதனால், ஐந்து ஆண்டுகள் வரை பயன்படக்கூடிய உபகரணங்கள் இரண்டு ஆண்டுகளில் பழுதாகி விடுகின்றன' என்று ஆதங்கப்பட்டார்.

பணம் கொடுத்தால்தான் பட்டியலில் இடம்!

விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் வட்டார விவசாயிகள் சங்கத் துணைத்தலைவர் முத்தையா, '2013ம் வருஷம் சட்டசபைக் கூட்டத்தொடரிலயே, 110 விதியின் கீழ் சொட்டுநீருக்கான மானியத்தை

 “சொட்டு சொட்டாய் கண்ணீர்... கட்டுக்கட்டாய் கவலை...”

முதல்வர் அறிவிச்சாங்க. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை ஆகிய மூன்று துறையின் கீழும் மானியம் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நான் நாலு ஏக்கர்ல மாங்கன்னுகளை வெச்சிருக்கேன். அறிவிப்பு வெளியான உடனே, நானும், 201314ம் வருஷத்துக்கான சொட்டுநீர் மானியத்துக்கு மனு கொடுத்தேன். நில உரிமைப் பட்டா, பயிரிருப்பு அடங்கல், சிறுகுறு விவசாயி சான்றிதழ் நகலை இணைச்சு விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சுக் கொடுக்கச் சொன்னாங்க. நானும் அதே மாதிரி கொடுத்தேன்.

ஒரு மாசத்துலயே, 'உங்க பெயர் டிரிப் மானியம் லிஸ்ட்ல செலக்ட் ஆயிடுச்சு, கம்பெனிக்காரங்க தோட்டத்துக்கு வருவாங்க’னு தோட்டக்கலைத்துறையில இருந்து போன் பண்ணி சொன்னாங்க. மறுநாளே, டிரிப் கம்பெனியில (எல்.ஜி கம்பெனி) இருந்து ஆட்கள் வந்து இடத்தை அளந்துட்டு, '4 ஏக்கர் நிலத்துக்கும் டிரிப் போட்டுடலாம், ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கணக்கு வெச்சு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்திடுங்க. ஆனா, குழி நீங்களாதான் தோண்டிக்கணும்’னு சொன்னாங்க.

'ஐயா, நான் குறுவிவசாயி, நூறு சதவிகித மானியத்துக்குத்தான் அப்ளை பண்ணியிருக்கேன். 10 ஆயிரம் ரூபாய் கேட்டா நான் எங்க போவேன். காசு இருந்தா சொந்தக் காசுல போட்டிருக்க மாட்டேனா?’னு கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமக் கிளம்பி போயிட்டாங்க. ஒரு வாரம் கழிச்சு தோட்டக்கலைத்துறைக்கு போன் பண்ணிக் கேட்டேன். சரியான முறையில பதில் சொல்லலை. அந்த மாசம் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துல கலெக்டரிடம் சொன்னேன் (அப்போதைய ஆட்சியர் பாலாஜி). தோட்டக்கலைத்துறை அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கேட்டார். அதுக்கு ஏதோ சொல்லி மழுப்புனாங்க. ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு நேர்லயே போய் கேட்டேன். ஆனா, அங்கு நடந்த கதை வேறு...'' என்று நிறுத்திய முத்தையா, அதை உணர்ச்சிகரமாகச் சொல்லத் தொடங்கினார்.

முத்தையாவின் சோகக் கதையையும் சொட்டுநீர்ப் பாசனம் தொடர்பான 110 விதி அறிவிப்புகள், மானிய விவரங்கள், அதிகாரிகளுக்கான கமிஷன் சதவிகிதம், விவசாயிகளின் ஆதங்கம் ஆகியவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

உங்கள் பகுதிக்கும் 'உழவாளி’ வர வேண்டுமா?

உங்கள் பகுதியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் அலட்சியங்களையும் அட்டூழியங்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். 'உழவாளி’ உங்கள் ஊருக்கு வந்து உண்மை நிலையை விசாரித்து, அவற்றை உலகறிய செய்வான். உங்கள் பகுதி பிரச்னைகளை 04466802927 என்ற எண்ணில் அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, செய்யும் தொழில், ஊர் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, உங்கள் பிரச்னைகளைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அதேசமயம், உழவாளியின் வேட்டையும் ஆரம்பமாகிவிடும்.