நாட்டு நடப்பு
Published:Updated:

‘நமக்கு நாமே’

மக்களின் பங்களிப்பில் சுத்தமான இலக்கியம்பட்டி ஏரி!எம்.புண்ணியமூர்த்தி

ர்மபுரி அருகே அழிவின் விளிம்பில் இருந்த இலக்கியம்பட்டி ஏரி, அரசின் உதவி இல்லாமல் பொதுமக்களால் தூர் வாரப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக... அக்டோபர் 18ம் தேதி 'மாரியகம் படையல் விழா’ கொண்டாடப்பட்டது. 

விழாவில் பேசிய சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், 'தண்ணீருக்கான பெயர்கள் தமிழில் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 'மாரி’. 'ஆலம்’ என்ற பெயர் மிகவும் பழைமையானது. அதன் காரணமாகவே 'ஆலம் கட்டி மழை’ என்ற பெயரும், 'ஆலங்குடி’, 'ஆலங்குளம்’ போன்ற ஊர்ப்பெயர்களும் வந்தன. ஏர் தொழில் (வேளாண்மை) செய்வதற்கான நீர்நிலையின் பெயர்தான் 'ஏரி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பெய்யும் மழையைச் சேகரிக்கும் அமைப்புள்ள இயற்கையான நீர்ப்பிடிப்புப் பகுதிக்குப் பெயர்தான் 'ஏந்தல்’. தொடர்ந்து அந்தத் தண்ணீர் அடுத்த இடத்துக்கு நகரும் பகுதிக்குப் பெயர் 'தாங்கல்’. இந்தப் பெயர்களைப் பின்னிட்டு உருவான ஏராளமான ஊர்ப்பெயர்கள் இருப்பதைக் காண முடியும்.

 ‘நமக்கு நாமே’

நம்முடைய நீர் நிலைகள் எல்லாமும் தொடர்பு இல்லாமல், துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டதால்தான், இன்று எல்லாம் மறைந்து போய், தண்ணீரும் கிடைக்காமல் போய்விட்டது. ராஜஸ்தானில் கடந்த 60 ஆண்டுகளில் காணாமல் போன 5 நதிகள், 10 ஆயிரம் குளங்களை, 72 கிராமங்களைச் சேர்ந்த மக்களை வைத்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தச் சாதனையைச் செய்தவர், ஆயுர்வேத மருத்துவரும் 'தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படுபவருமான, ராஜேந்தர் சிங். எனவே, நீர்நிலைகளை மீட்டெடுப்பது மட்டுமே முக்கியமான பணியாகக் கருதி விடக் கூடாது. அந்த நீர் நிலைகளைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கான தொடர் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

ஏரி சீரமைப்புப் பற்றி பேசிய தர்மபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, '10 ஏக்கர் பரப்பளவுள்ள இலக்கியம்பட்டி ஏரியில், தர்மபுரி மக்கள் மன்றத்தால் கடந்த ஏப்ரல் 25ம் தேதி சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. 6 ஏக்கரில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்டன. ஏரியைச் சுற்றிலும் 1,400 மீட்டர் தொலைவுக்கு நடைப்பயிற்சிக்கான தடங்களும், ஏறத்தாழ 3 ஆயிரம் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இரு யோகா மையங்களும், ஒரு அரைவட்ட அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன' என்றார்.

விழாவில் மரம் நடுதல், பறை இசை, தெருக்கூத்து நிகழ்ச்சிகளின் மூலம் இயற்கை வழிபாட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடந்தன.