நாட்டு நடப்பு
Published:Updated:

அக்டோபர் - 27 பருவமழை

மரத்தடி மாநாடுஓவியம்: ஹரன்

ன்று காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், தோட்ட வேலைகளை முடித்துவிட்டு, நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைப் பதிவைப் புதுப்பிக்கப் போய் கொண்டிருந்தார். வழியில 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், 'காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்தை நோக்கி வந்துகொண்டிருக்க... மூவரும் கண்மாய்க்கரை ஆலமரத்தருகில் சந்தித்துக் கொண்டனர். அங்கேயே அமர்ந்து மூவரும் பேச்சை ஆரம்பிக்க, கூடையில் இருந்து ஆளுக்குக் கொஞ்சம் பன்னீர் திராட்சைகளை எடுத்துக் கொடுத்தார் காய்கறி. 

''போன பதினாறாம் தேதி ராத்திரி, முன்னோடி இயற்கை விவசாயி 'புளியங்குடி’ அந்தோணிசாமி ஐயா வீட்டுல புகுந்த திருடனுங்க... அவரையும் அவரோட வீட்டம்மாவையும் அடிச்சு 16 பவுன் நகையைப் பிடுங்கிட்டாங்களாம். சத்தம் கேட்டு தோட்டத்துல இருந்த ஆட்கள்லாம் வரவும், திருடனுங்க ஓடிப் போயிட்டானுங்களாம். அதுல அந்தோணிசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்திருக்கார். இத்தனை வருஷத்துல அந்தப் பகுதியில இப்படி ஒரு சம்பவம் நடந்ததே கிடையாதாம்'' என்று வருத்தம்பொங்க முதல் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் வாத்தியார்.

''அடப்பாவிகளா... வயசான மனுஷங்களை அடிக்க எப்படித்தான் மனசு வருதோ'' என்று வருத்தப்பட்டார், காய்கறி.

''திருடன்கிட்ட மனிதாபிமானத்தை எதிர்பாக்க முடியுமா?'' என்ற ஏரோட்டி, அடுத்ததொரு திருட்டுச் செய்தியை ஆரம்பித்தார்.

அக்டோபர் - 27 பருவமழை

''பரம்பிக்குளம்ஆழியாறு பாசனத் திட்டத்தில, திருமூர்த்தி அணையில இருந்து நான்காம் மண்டலத்துல தண்ணீர் திறந்து விட்டிருக்காங்களாம். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல இருக்கிற ஒரு லட்சம் ஏக்கருக்கு இந்தத் தண்ணி மூலம் பாசனம் நடக்கும். ஆனா, தண்ணீர் கடைமடை வரைக்கும் வர்றதில்லையாம். அதுக்கு காரணம், இடையில நூற்றுக்கணக்கான இடங்கள்ல தொழிற்சாலைக்காரங்க தண்ணீரைத் திருடுறாங்களாம். குறிப்பா, சில தேங்காய் நார் ஆலைகள்தான் தண்ணீரை எடுக்கிறாங்களாம்.

பிரதான வாய்க்கால் ஓரமா கொஞ்ச நிலத்தை வாங்கி, அதுல கிணறு வெட்டிக்கிட்டு... வாய்க்கால்ல வர்ற தண்ணீரை கிணத்துல நிரப்பி, அதுல இருந்து ஆலைகளுக்கு பம்ப் பண்ணி கொண்டு போயிடுறாங்களாம். இரவு நேரங்கள்லதான் இந்தத் திருட்டு வேலை நடக்குதாம். அதிகாரிகள்கிட்ட விவசாயிகள் பல தடவை மனு கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம். இத்தனைக்கும் இதைக் கண்காணிக்க ஒரு பறக்கும் படை வேற இருக்குதாம்'' என்று நக்கலாகச் சிரித்தார் ஏரோட்டி.

''ம்க்கும்... இவங்க படை அமைச்சு செய்ற வேலை தெரியாதாக்கும். இந்தப் படையே, திருடனுங்களுக்கு சொறிஞ்சு விடறதுக்காகவே அமைச்சிருப்பாங்களாக்கும்'' என்று கிண்டலடித்தார் வாத்தியார்.

''இதுமாதிரி அநியாயம் பண்றதாலதான், வரவேண்டிய மழைகூட சரியா வந்து சேராம இருக்கு'' என்று கொதித்தார் காய்கறி.

''ஆமாம் கண்ணம்மா... அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை இன்னமும் போக்குக் காட்டுது. சென்னை வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 27ம் தேதி முதல் பருவமழை தொடங்கும்னு சொல்லி இருக்காங்க. 'ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியில மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்தக் குறியீடு, கடந்த காலங்கள்ல கிடைச்ச மழை அளவு இதையெல்லாம் வெச்சு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்திருக்கு.

இதன் அடிப்படையில, 'தமிழகம் முழுவதும் 60 சதவிகித அளவுக்கு மழை கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விருதுநகர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவும்; கோயம்புத்தூர், கரூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்ல சராசரிக்கு அதிகமான மழையும் கிடைக்கும்’னு சொல்லியிருக்கு அந்த ஆராய்ச்சி மையம்'' என்ற வாத்தியார்,

''இப்பவே நேரம் அதிகமாயிடுச்சு, அடுத்த முறை சந்திக்கும்போது, வழக்கமா நான் சொல்ற கதையைச் சொல்றேன்'' என்றார்.

''வெயிலும் ஏறிடுச்சு... ரேஷன் கடைக்குப் போகணும். இந்நேரம் கொஞ்சம் கூட்டம் குறைச்சிருக்கும், நான் போயிட்டு வந்துடுறேன்'' என்று ஏரோட்டி கிளம்ப, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.