நாட்டு நடப்பு
Published:Updated:

பருப்புக்கு மரியாதை!

பருப்புக்கு மரியாதை!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல்... எல்லோர் உணவிலும் இடம்பெறும் அத்தியாவசியமான பொருள் பருப்பு. இந்திய மக்களின் ஓராண்டு பயன்பாட்டுக்கு 220 லட்சம் டன் பருப்பு வகைகள் தேவை. ஆனால், 180 லட்சம் டன் மட்டும்தான் உள்நாட்டில் உற்பத்தியாகிறது. மீதி வெளி நாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், இது தொடர்கதையே!

இதிலும் இந்த ஆண்டு உள்நாட்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி, வழக்கத்தை விட 20% அளவுக்குக் குறைந்துவிட்டதால், வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த விலை ஏற்றத்தால் வழக்கம்போல விவசாயிகளுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை. அதேசமயம், பதுக்கல்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிறப்பாகப் பயன்பெற்று வருகிறார்கள்.

லாபத்தை விட்டுத்தள்ளுவோம். அது எந்தக் காலத்திலும் தனக்கு வந்து சேராது என்பது விவசாயிக்கும் தெரியும். ஆனாலும், சொற்ப லாபத்துக்கும் ஓயாது உழைத்து உற்பத்தியைப் பெருக்கவும் விவசாயிகள் தயாராகவே இருக்கிறார்கள். கொஞ்சம்போல ஊக்குவித்தால் போதும்... அரிசி, கோதுமை போல பருப்பையும் விளைவித்துக் குவித்துவிடுவார்கள்.

இத்தனைக்கும் துவரை, உளுந்து போன்ற பருப்பு வகைகள் மானாவாரியிலேயே நன்றாக விளைந்து மகசூல் கொடுக்கக் கூடியவைதான். இத்தகைய பயறு வகை உற்பத்தியை அதிகரிப்பதற்காக கடந்த காலங்களில் தீட்டப்பட்ட திட்டங்கள், தூசுபடிந்து கிடக்கின்றன. அதேசமயம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன.

நிலைமை இப்படியே போனால், பகட்டான கார் இருக்கும்... பருப்பு இருக்காது; பார்க்குமிடமெல்லாம் படாடோப பங்களாக்கள் இருக்கும்... பசிக்கு பருக்கைச் சோறு இருக்காது என்பது இந்த அதிகார வர்க்கத்துக்குப் தெரியாமலா இருக்கும்?!

-ஆசிரியர்