நாட்டு நடப்பு
Published:Updated:

பூச்சி, நோய்கள் உஷார்! உஷார்! தண்டுத்துளைப்பான் கவனம்!

முன்னறிவிப்பு

ற்போதைய தட்பவெட்ப நிலையில் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள்; அவற்றுக்கான தடுப்புமுறைகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம். அவை இங்கே.... 

திருநெல்வேலி, சேலம், கன்னியாகுமரி, தேனி, திருவாரூர், விழுப்புரம், தர்மபுரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் பரவலாக இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத்துளைப்பானின் தாக்குதலும்; கடலோர மாவட்டங்களில் குலைநோய் தாக்குதலும் காணப்படுகிறது. மாலை நேரங்களில் விளக்குப் பொறி வைப்பதுடன், 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு தெளித்து இவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒரு வார இடைவெளியில், இரண்டு முறை சூடோமோனஸ் கரைசல்  தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச்செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டம் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 5 இடங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறியும், காய்ப்புழுக்களின் தாக்குதல் உள்ள இடங்களில்  ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறியும் வைத்துக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சி, நோய்கள் உஷார்! உஷார்! தண்டுத்துளைப்பான் கவனம்!

கரும்பு தண்டுத்துளைப்பானுக்கு டிரைக்கோகிரம்மா!

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிச் செடிகளில் இலைக்கருகல் நோயும்; ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் செடிகளில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதலும் வர வாய்ப்புகள் உண்டு. தகுந்த பயிர் பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்தலாம்.

சேலம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்குக் குறைவாகவே தென்படுகிறது. ஆனாலும், இவற்றைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு சி.சி என்ற அளவில், 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை பயன்படுத்த வேண்டும்.

ஈரோடு, சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையில் இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது. விளக்குப்பொறி வைப்பதன் மூலமும், 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம்.  

 பசுமைக் குழு