நாட்டு நடப்பு
Published:Updated:

கத்துக்குட்டி - ஒரு பசுமைப் பார்வை!

விமர்சனம்பசுமைக் குழு, படங்கள்: க.சதீஷ்குமார், ம.அரவிந்தன்

'மளிகைப் பொருட்கள் பட்டியலில் மதுபானமும் இடம்பெற்றதால், டாஸ்மாக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை’ என்ற 'டைட்டில் கார்டு’ ஒன்றே படத்தின் போக்கைச் சொல்லி விடுகிறது. ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு அம்சங்களோடு, விவசாயிகளின் பிரச்னைகளையும் பேசும் தமிழ் சினிமா... 'கத்துக்குட்டி’. படம் முழுக்க காமெடியும் சேர்ந்து களைகட்டுவது, பார்வையாளர்களை விவசாயப் பிரச்னைகளுக்குள் இழுத்துக் கட்டிப் போடுகிறது. 

கத்துக்குட்டி - ஒரு பசுமைப் பார்வை!

சமூக அக்கறைக்காக எடுக்கப்படும் படங்களில், கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்கள் இருக்காது. வெற்றிகரமான கமர்ஷியல் படங்களோ, சமூக அக்கறையை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளும். ஆனால், 'கத்துக்குட்டி’ இரண்டையும் சரியாகக் கலந்து வந்திருக்கிறது.

பிரச்னைகளில் சிக்கிக் கிடக்கும் மண்ணின் வலியை, விவசாயிகளின் வலி நிறைந்த வாழ்க்கையை, அரசியல் சூழ்ச்சிகளை... கவர்ச்சிகரமான குத்தாட்டம் இல்லாமல், சினிமாத்தனமான சண்டைகள் இல்லாமல், எதார்த்தமாகக் காட்சிப்படுத்துகிறது, கத்துக்குட்டி.

கதாநாயகன் அறிவழகன் (நரேன்) செம ஜாலியான பேர்வழி. நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து டாஸ்மாக், ஊர் வம்பு என என்னதான் கும்மாளம் அடித்தாலும், தன்னுடைய மண்ணையும் விவசாயத்தையும் நெஞ்சார நேசிக்கக் கூடியவன்.

மீத்தேன் சோதனைக்காக தன்னுடைய கிராமத்துக்கு வரும் தாசில்தாருக்கு, இளநீரில் குளிர்பானம் கலந்து கொடுக்கிறான், நாயகன். தாசில்தாருக்கு உடல் உபாதை ஏற்படுகிறது. 'இளநீர்ல கொஞ்சோண்டு ரசாயனத்தைக் கலந்து கொடுத்தேன். இதுக்கே தாங்க மாட்டேங்குதே... மீத்தேன் டெஸ்டுங்கிற பேர்ல இவ்வளவு கெமிக்கலைக் கொண்டுவந்து கொட்டினா என் மண்ணுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரும்’ என நாயகன் பேசும் வசனம் ’நச்’. இதுபோல படம் நெடுகவே வந்துவிழும் வசனங்களின் வீச்சு, அசரடிக்கிறது!

எறும்புகளை விரட்ட வீட்டுக்கு வெளியே ஜீனி போட்டு, 'விரட்டுறதுன்னாகூட வலிக்காம விரட்டுங்க’ என இயற்கையைப் பற்றி பேசுகிறார் நாயகி (சிருஷ்டி டாங்கே). 'ஊருக்குள் செல்போன் டவர் வந்தால், அது பறவைகளுக்கு ஆபத்து’ என்று அழகாகப் பேசும் நாயகியை, 'இவ பெரிய... நம்மாழ்வார் பேத்தி’ என்று ஜிஞ்சர் கலாய்ப்பதிலேயே... அந்தப் பாத்திரப் படைப்பு மின்னுகிறது.

நெற்களஞ்சியமான தஞ்சையில் மீத்தேன் எடுத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை, சாமானியனுக்கும் புரியும் வகையில் கிராஃபிக்ஸ் மூலம் மிரட்டியிருக்கிறார்கள். மீத்தேன் எமனைத் தடுக்க, கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார், விவசாயி. உருக்கமான அந்தக் கடிதம் அதிகாரி மற்றும் அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு, தன் மகளின் காதல் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவு செய்யப்படுகிறது.

இந்திய விவசாயிகளின் தற்கொலைகள்... குடும்பப் பிரச்னை, காதல் விவகாரம், கடன் பிரச்னை என கொச்சைப்படுத்தப்படுவதை அழுத்தமாகப் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது.

படத்தின் காட்சியமைப்புகள் ஜனரஞ்சகமாக இருந்தாலும், அவற்றுக்குள்ளே இனிப்பு தடவி மருந்து கொடுப்பதைப்போல ஒவ்வொரு காட்சியிலும் மீத்தேனுக்கு எதிராக வந்துவிழும் வசனங்கள்... தமிழகத்தின் பிறபகுதி மக்களுக்கும் மீத்தேன் பிரச்னையின் வீரியத்தைப் புரிய வைத்துவிடுகிறது!

சினிமா, தமிழ்நாட்டின் வலிமையான மொழி, சொல்லவேண்டிய செய்தியை, விதைக்கவேண்டிய கருத்துக்களை திரைப்படத்தின் வாயிலாக வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதற்கு தமிழ்மண் சிறந்த எடுத்துக்காட்டு. அந்த தமிழ் மண்ணின் நெற்களஞ்சியத்துக்கு அரசுகளாலும், உலகமயமாக்கலாலும் தொல்லை வரும்போது ஒரு கலைஞனாக என்ன எதிர்வினையைச் செய்ய முடியுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இரா.சரவணன். படம் இயக்க வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில், கிடைத்த வாய்ப்பைக் கொண்டு முதல் படைப்பையே மண்சார்ந்த ஒன்றாக வெளிக்கொணர்ந்து இருப்பது பாராட்டுதலுக்குரியது!

விவசாயிக்கும் மண்ணுக்குமான உறவை வெளிப்படுத்துகிறது!

பேராசிரியர்  த. ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு: 'விவசாயிகளின் பேரெழுச்சிப் போராட்டங்கள் மூலமாக மட்டுமே மீத்தேன் அபாயத்தைத் தடுத்து நிறுத்த முடியும். சினிமா என்பது வலிமையான ஊடகம்.

கத்துக்குட்டி - ஒரு பசுமைப் பார்வை!

மீத்தேன் எதிர்ப்பில் கத்துக்குட்டியின் பங்களிப்பை மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு மனதாரப் பாராட்டுகிறது. அதேசமயம், மீத்தேன் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக விவசாயி தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல. யார் இறந்தாலும் அரசு அசைந்து கொடுக்காது. விவசாயிகளின் உயிர் விலைமதிக்க முடியாதவை. ஆனாலும், உயிர்த் தியாகம் செய்யும் அளவுக்கு இது முக்கிய பிரச்னை என எடுத்துக் கொள்ளலாம்.'

நா.வைகறை, காவிரி உரிமை மீட்புக்குழு: 'மீத்தேன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தஞ்சை பெரிய கோயில், நாகூர் தர்கா, வேளாங்கன்னி சர்ச் என புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் இடிந்து போகும் என்பதை கிராஃபிக்ஸ் மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.'