நாட்டு நடப்பு
Published:Updated:

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

அக்கரைச்சீமைபொன்.செந்தில்குமார்

யற்கை விவசாயம் வேகமாகப் பரவி வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு உள்ள பினாங்கு மாநிலத்தின் விவசாயிகள், இயற்கை விவசாயத்தில் வீறு நடைபோட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது... 'பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம்’. 

'விஷமில்லாத எதிர்காலம், எல்லோருக்கும் இயற்கை உணவு மற்றும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்தச் சங்கத்தினர், 'பசுமைச் செயல்பாட்டு வாரம்’ என்ற பெயரில் மலேசிய விவசாயிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த இயற்கை வல்லுநர்களை ஒருங்கிணைத்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ நூலின் அறிமுக விழாவும் நடந்தது.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநில விவசாயத் துறை இயக்குநர் ஷபானி, 'இச்சங்கம் எடுத்து வரும் 'சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயம் விஷமற்ற உணவுகள்’ குறித்த செயல்பாடுகளை பினாங்கு மாநில வேளாண்மைத்துறை பாராட்டுகிறது. பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் இயற்கை விவசாய முன் முயற்சிகள், மலேசிய நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், மிகபெரிய சாதனையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது' என்றார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமது இத்ரீஸ் பேசியதாவது, ''நான் ராமநாதபுரத்தில் பாரம்பர்ய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். இன்றளவும் அந்தப் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றி உணவிலும் சரி, உடையிலும் சரி மண்ணின் மணம் மாறாமல் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுடைய மொழி, கலாசாரம் என்பது அந்த மண்ணைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். இயற்கை விவசாயமானது அந்த மண்ணின் கலாசாரத்தையும், மண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாகவும், அங்கு வாழும் மக்களுக்கு விஷமற்ற உணவு வழங்குவதாகவும் மற்றும் சுற்றுச்சூழலைக் காப்பதாகவும் இருக்க வேண்டும். இதனால்தான் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் இயற்கை விவசாயம் மற்றும் மாடித்தோட்டம் உள்ளிட்ட விஷயங்களைத் தொடர்ந்து மக்களிடையே முன்னெடுத்துச் சென்று கொண்டுள்ளது.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

இயற்கை விவசாயத்தின் நுட்பங்களை முதன்முதலாக மலேசிய மண்ணிலே அறிமுகப்படுத்திய நம்மாழ்வார் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். பசுமை விகடன் இதழில் 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தலைப்பில் நம்மாழ்வார் எழுதி வந்த சுயசரிதை நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கான அறிமுக விழாவை மலேசிய மண்ணிலே எங்கள் சார்பாக நடத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், களப்போராளிகளும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. இந்த சிறப்பான நூலுக்கு விழா எடுப்பது எங்களின் கடமை. இதற்காக பசுமை விகடன் இதழுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

இந்நிகழ்ச்சியில் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் ஆலோசனைப்படி செயல்பட்டு வரும் முன்னோடி இயற்கை விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் தங்களது காய்கறிகள், ஆட்டுப்பால், பழ வகைகள்  போன்றவற்றை பார்வைக்காக கண்காட்சியில் வைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பர்ய சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டன.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

நம்மாழ்வார் எங்கள் 'சீப்பூ’!

மலேசியா நாட்டில் உள்ள தேசிய காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சான், ''இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற சீன விவசாயிகளுக்கும் குரு. சீன மொழியிலே அவரை 'சீப்பூ’ (குரு) என்றுதான் அழைப்போம். ரசாயன விவசாயத்தால், நொடிந்து கிடந்த, எங்களை இயற்கை விவசாயம் மூலம், மேல் நோக்கி வர வைத்தவர் நம்மாழ்வார்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளைப் பார்வையிட்டு வியந்து போனோம். அதன் பிறகு செலவு குறைந்த இயற்கை இடுபொருட்களை மலேசிய விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இயற்கை விவசாயத்தில் ஒரு நாள் மலேசியா சாதனை படைக்கும், அதில் தமிழ்நாட்டுக்கும், அந்த மண்ணில் பிறந்த நம்மாழ்வாருக்கும் பெரும்பங்கு எப்போதும் இருக்கும்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி, என்.சுப்பாராவ் நம்மிடம் பேசும்போது, ''இப்போது, நடைபெற்றுக்கொண்டுள்ள, 'பசுமைச் செயல்பாட்டு வாரம்’ நிகழ்ச்சிக்குக்கூட, இந்திய இயற்கை விவசாய கூட்டமைப்பின் செயலாளர் கிளாடு ஆல்வாரீஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பணிக்கம்பட்டி கோபாலகிருஷ்ணன், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம் போன்றவர்களை வரவழைத்து, இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார்.

பசுமையே வழிகாட்டி!

மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சன்மார்க்கம், ''ரசாயன விவசாயத்தால் நஷ்டம் அடைந்த எங்களுக்கு, இயற்கை விவசாயம்தான் ஒளிவிளக்காக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்து வரும் இயற்கை விவசாயப் பணிகளை 'பசுமை விகடன்’ இதழ் மூலம் படித்துத் தெரிந்து கொள்கிறோம். ஓர் இதழ்கூட தவறாமல் படித்துவிடுவோம். சாகுபடி நுட்பங்கள் மட்டுமல்ல, விவசாயத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துவருகிறீர்கள்.

‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...’மலேசியாவில் ஓர் அறிமுகவிழா!

மலேசியாவில், முற்றிலும் இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி யாரும் செய்தது கிடையாது. ஆனால், சாகுபடி செய்யப்போகிறேன். விதைப்பு முதல் அறுவடை முடிய மிளகாய் சாகுபடி பற்றி 'பசுமை விகடன்’ இதழில் வந்த கட்டுரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டேன். நிச்சயம் மிளகாய் சாகுபடியில் நல்ல லாபம் எடுப்பேன்'' என்றார்.

ஸ்ரீவிநாயக மூர்த்தி என்ற விவசாயி, ''மலேசியாவில் உள்ள தமிழ் விவசாயிகளுக்கு, 'பசுமை விகடன் இதழ்’தான், இயற்கை விவசாய வழிகாட்டி. என்னைப் போன்ற இளம் விவசாயிகள், விவசாயத்தில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை பசுமை விகடன் கொடுத்து வருகிறது'' என்றார் நெகிழ்ந்துபோய்.