நாட்டு நடப்பு
Published:Updated:

‘‘கோசாலை அமைக்க நிதி உதவி கிடைக்குமா?’’

நீங்கள் கேட்டவை புறா பாண்டி, படங்கள்: தி.விஜய்; கே.குணசீலன்

‘‘பாரம்பர்ய பசு மாடுகளைப் பாதுகாக்க கோசாலை தொடங்க விரும்புகிறோம். இதற்கு யாரிடம்

‘‘கோசாலை அமைக்க நிதி உதவி கிடைக்குமா?’’

அனுமதி வாங்க வேண்டும். அரசின் நிதி உதவி கிடைக்குமா?’’

மலர்விழி, சென்னை.

‘பாரதிய கோவம்ச ரக்ஷன் சம்வர்தன் பரிஷத்’ அமைப்பின், தமிழ்நாடு தலைவர் சுவாமி ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.

‘‘அந்தக் காலத்தில் கோயில்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள்தான் கோசாலைகளை நடத்தி வந்தன. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பசு மாடுகள் மற்றும் கறவை வற்றிய மாடுகளை, கோசாலையில் வைத்து பராமரித்து வந்தனர். காலப்போக்கில் வெளிநாட்டுக் கலப்பினங்களின் வருகையால், பாரம்பர்ய இனங்கள் அழிந்து வருகின்றன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மாடுகளின் மகத்துவம், மக்களுக்குப் புரியத் தொடங்கிய பிறகுதான், நாடு முழுக்கவே கோசாலை தொடங்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

‘‘கோசாலை அமைக்க நிதி உதவி கிடைக்குமா?’’

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் மூலமாக கோசாலை தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். தமிழ்நாட்டில் இதுவரை 180 கோசாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோசாலை தொடங்க, யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. நிதி உதவி பெற வேண்டும் என்றால், சங்கம் அல்லது அறக்கட்டளையின் பெயரில் கோசாலை தொடங்க வேண்டும். இதை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்திய கால்நடை நல வாரியத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

கால்நடை நல வாரியத்தின் தலைமையிடம் சென்னையில்தான் உள்ளது. இங்கு நேரில் சென்று விசாரித்தால், தேவையான உதவிகளை வழங்குவார்கள். இந்த அமைப்பிடம் இருந்து நிதி உதவியைப் பெற, குறைந்தபட்சம் கோசாலையில் 100 மாடுகள் வரை இருக்க வேண்டும். 1. ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கும் முறை. 2. கட்டமைப்பு வசதிக்கு நிதி உதவி வழங்குதல் 3. கால்நடைகளுக்கான மருத்துவனை தொடங்க நிதி உதவி என மூன்று வகையாக நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், பொதுமக்களும் கூட நன்கொடை கொடுக்க முன்வருவார்கள். மேலும், மாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, பஞ்சகவ்யா, விபூதி, குளியல் சோப்... போன்ற பல பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.’’

தொடர்புக்கு, இந்திய கால்நடை நல வாரியம், தொலைபேசி: 044-24571024, 24571025.

பாரதிய கோவம்ச ரக்ஷன் சம்வர்தன் பரிஷத், செல்போன்: 94432-29061

‘‘நான், மதுரை மத்தியச் சிறையில், சிறைவாசியாக இருக்கிறேன். வெளியில் வந்த பிறகு, எங்கள் நிலத்தில், ‘நன்னீர் மீன்’ வளர்க்க விரும்புகிறேன். இதற்கு எங்கு பயிற்சிக் கொடுக்கிறார்கள். அரசு உதவி கிடைக்குமா? ’’

வீ.கணேசன், மத்தியச் சிறைச்சாலை, மதுரை.

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) முனைவர். நாகூர்மீரான் பதில் சொல்கிறார்.

‘‘மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நிதிஉதவிகள் செய்துவருகின்றன. பண்ணைக் குட்டை வெட்டி, அதில் மீன்களை வளர்க்கலாம். இந்த பண்ணைக்குட்டை 100% மானியத்தில் வெட்டித் தரப்படுகிறது. மீன் வளர்க்க ஏக்கருக்கு `24 ஆயிரம் முதல் மானியமும் கொடுக்கிறார்கள். குஞ்சுப் பொரிப்பகம், தீவன உற்பத்தி, நவீன முறையில் பண்ணை அமைத்தல்... போன்றவைகளுக்கும் கூட மானியம் வழங்கப்படுகின்றன. எங்கள் பல்கலைக்கழகத்தின் மீன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள், பொன்னேரி, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர்ந்து மீன் வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கு, இதில் எந்தப் பகுதி அருகாமையில் உள்ளதோ, அங்கு சென்று பயிற்சி பெறலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.’’

‘‘கோசாலை அமைக்க நிதி உதவி கிடைக்குமா?’’

தொடர்புக்கு, விரிவாக்கக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.
தொலைபேசி: 04365-240448 / 04365-24144.

‘‘சுமார் 17 ஏக்கரில் இளநீர் ரக தென்னையை சாகுபடி செய்ய நினைக்கிறோம். எந்த ரகம் ஏற்றது?’’

ஏ.சிராஜ்தீன், கந்தர்வக்கோட்டை.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம் பதில் சொல்கிறார்.

‘‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப்  (Chowghat Orange Dwarf) என்ற ரகத்தைப் பற்றி ‘பசுமை விகடன்’ மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். இதன் கன்றுகளை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் பண்ணையில் விற்பனை செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அங்கு சென்று 600 கன்றுகளை வாங்கி வந்தோம். போக்குவரத்துச் செலவுடன், ஒரு கன்றுக்கு ரூ.50 செலவானது. இது குட்டை ரகம் என்பதால், தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் ‘ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும்.

‘‘கோசாலை அமைக்க நிதி உதவி கிடைக்குமா?’’

நடவு செய்த 3-ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து, 5-ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய அளவுக்கு தண்ணீர் வசதி இருந்தால் மட்டுமே தென்னையில் மகசூல் கிடைக்கும்.

இந்த ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை மாதம்தோறும் வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்க முடியும். இளநீர் ரகம் என்பதால், தோட்டத்திலேயே வியாபாரிகள் வந்து வாங்கிக் கொள்வார்கள். சராசரியாக இளநீர் ஒன்றுக்கு `15 வரை விலை கிடைக்கிறது.

இந்த ரகத்தின் சிறப்புகள், விவசாயிகள் பலருக்கும் பரவலாக தெரிந்திருப்பதால், மாண்டியாவில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் கன்றுகளை வாங்குவதற்கான முன்பதிவு 2017-ம் ஆண்டு வரை முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதற்காகக் காத்திருக்க வேண்டாம், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நர்சரிகளில், இந்த தென்னங்கன்றுகள் கிடைக்கின்றன. விலை சற்று கூடுதலாக இருக்கும். நன்கு விசாரித்து வாங்கிக் கொள்ளவும்.’’

தொடர்புக்கு, ஆர்.சுப்பிரமணியம், செல்போன்: 99425-96971.

Asst. Director, DSP Farm, Coconut

Development Board, Pura Village, Loksara P.O., Mandya District, Karnataka-571403.

Ph: 9449537659

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும்
pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.