நாட்டு நடப்பு
Published:Updated:

என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப்பிராணிகள் வரை... குறைவான செலவில் நிறைவான லாபம் கொடுக்கும் ‘பொமரேனியன்’ இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

பெரும்பாலான வீடுகளில் நாட்டு நாய்களுக்கு அடுத்த படியாக செல்லமாக வளர்க்கப்படுபவை பொமரேனியன் வகை நாய்களைத் தான்.  பொமரேனியன் வகை நாய்கள், குட்டை ரக நாய்கள் என்பதால் தான் இவற்றுக்கு மவுசு அதிகம் இருக்கிறது. இவ்வகை நாய்களை சுலபமாக கையில் தூக்கிவைத்துக் கொள்ளலாம். கார், பைக்குகளில் குழந்தையைப்போல் ஏற்றிச் செல்லலாம் என்பதால், இந்த நாயை பலரும் விரும்பி வளர்க்கின்றனர். அதிக முடிகளுடன் பார்ப்பதற்கு பஞ்சு அடைத்த குட்டித்தலையணை போன்று இருக்கும் இவ்வகை நாய்கள் பெரும்பாலான பெண்களின் தேர்வாக இருக்கிறது. இவ்வகை பொமரேனியன் நாய்களை வளர்த்து விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார், உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் கற்பகச்செல்வன்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து  4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்றல் நகரில் உள்ளது, அவரது நாய்ப் பண்ணை. நாம் உள்ளே நுழைந்ததும் குரைக்கத் தொடங்கிய பொமரேனியன்களிடம்... கற்பகச்செல்வன் நமக்கு புரியாத பாஷையில் ஏதோ சொல்ல, நாய்கள் அமைதியாகின. அவற்றுக்கு காலை உணவைக் கொடுத்து விட்டு நம்மோடு பேசத் தொடங்கினார், கற்பகச்செல்வன்.

என் செல்லமே...

“ஸ்கூல்ல படிக்கிறப்பவே பிராணிகள்னா ரொம்ப இஷ்டம். வகுப்புல உட்கார்ந்திருந்தாலும் வெளியில பறக்கிற காக்கா, குருவிகளை ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டே இருப்பேன். ஸ்கூல்ல காக்கா, குயில், மயில், கிளி, நாய், ஆடு, மாடு, குதிரைனு பிராணிகளோட சத்தங்களை ‘மிமிக்ரி’ செஞ்சு பரிசு வாங்கியிருக்கேன். தமிழ்த் தேர்வுல, ‘தன் வரலாற்றைக் கூறுதல்’னு கட்டுரை கேட்டா கூட மிருகங்கள், பறவைகள் தன் வரலாற்றைக் சொல்லுற மாதிரியான கட்டுரைகள்தான் எழுதுவேன். எப்பவுமே நாய்க்குட்டிப் படத்தை வரைஞ்சுக்கிட்டே இருப்பேன். அந்த அளவுக்கு பிராணிகள் மேல பைத்தியம் எனக்கு.

ஒன்பதாவது படிக்கும்போது, வீட்டுக்குத்தெரியாம ஒரு ஜோடி புறாக்களை வாங்கி, வீட்டு அட்டைப் பெட்டிக்குள்ள போட்டு, மாடியில் வெச்சு வளர்த்தேன். நான் அடிக்கடி மாடிக்குப் போயிட்டு போயிட்டு வர்றதை அம்மா பார்த்துக் கண்டுபிடிச்சு, என்னை அடிச்சுட்டு புறாவைப் பறக்க விட்டுட்டாங்க. என்னோட புறா வளர்ப்பு ஒரு வாரம்கூட நீடிக்கலை.

பத்துநாள் கழிச்சு திரும்பவும் புறா வாங்கிட்டு வந்துடுவேன். அப்பறம் மறுபடியும் வீட்டுல அடி கிடைக்கும். இப்படியே கஜினி முகம்மது மாதிரி இருபது முறை புறா வாங்கி வெச்சு பறக்க விட்டிருக்கேன்.

அந்த சமயத்துல ‘பத்தாம் வகுப்புல நான் சொல்லுற மார்க் வாங்கிட்டா உன் இஷ்டத்துக்கு என்ன வேணுமானாலும் வளர்த்துக்கோ’னு அம்மா சொன்னாங்க. செல்லப்பிராணி வளர்க்கிறதுக்காகவே கஷ்டப்பட்டு படிச்சு நிர்ணயிச்ச மார்க்கை வாங்கிட்டேன். பரீட்சை லீவுல கோவில்பட்டியில இருக்கிற சொந்தக்காரர் ஒருத்தர் வீட்டுக்குப் போனோம். அவங்க வீட்டுல இருந்த பொமரேனியன் நாய், 5 குட்டிகளைப் போட்டிருந்தது. அதுல 3 குட்டியை விற்பனை செய்துட்டாங்க. மிச்சம் இருந்த 2 பெண் குட்டிகள்ல ஒரு குட்டியை மட்டும் சந்தோஷமா தூக்கிக்கிட்டு வந்தேன்.

குழந்தையைப் பாத்துக்கிற மாதிரி பக்கு வமா வளர்க்க ஆரம்பிச்சேன். பொமரே னியன் நாய் வளர்க்கிற நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவங்க என்னவெல்லாம் சாப்பாடு கொடுக்கிறாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சேன். அது பருவத்துக்கு வந்து முதல்முறையா 4 குட்டிகளைப் போட்டது. எனக்கு அவ்வளவு சந்தோஷம். அப்பா கூட வேலை பார்க்கிறவங்க சிலர் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து மூணு குட்டியை வாங்கிட்டுப் போயிட்டாங்க. இந்தக் குட்டிக்கு இவ்வளவு விலையானு எனக்கே ஆச்சரியம். உடனே இன்னொரு குட்டியை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல ஆரம்பிச்சதுதான் என் நாய் வளர்ப்பு. எட்டு வருஷமா நாய் வளர்த்து விற்பனை செய்துக்கிட்டு இருக்கேன். இப்ப, என்கிட்ட 10 பெண் நாய்கள், 4 ஆண் நாய்கள்னு மொத்தம் 14 பொமரேனியன் நாய்கள் இருக்கு” என்று தான் நாய் வளர்ப்புக்கு வந்த கதை கூறிய கற்பகச்செல்வன், நாய் வளர்ப்பு முறை குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

என் செல்லமே...

சைவ உணவே சிறந்தது!

“முடி அதிகமுள்ளது, முடி குறைவாக உள்ளது என பொமரேனியன் நாய்களில் இரண்டு வகைகள் உண்டு. கறுப்பு, வெள்ளை, கோல்டன், சாக்லேட், ஆஷ், பிரவுன் எனப் பல நிறங்களில் இருந்தாலும், அனைவரும் விரும்புவது வெள்ளை நிற நாய்க்குட்டிகளைத்தான். தினமும் காலையில் 8 மணிக்கு பால் சாதம் அல்லது இட்லியில் பால் கலந்து கொடுப்பேன். மதியம் 2 மணிக்கு ஒரு நாய்க்கு 4 ரஸ்க் கொடுத்து தண்ணீர் கொடுப்பேன். மாலையில் ஒரு அவித்த முட்டையை 150 கிராம் சாதத்துடன் கலந்து கொடுப்பேன். தோல் நீக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ஆகிய பழங்களையும் சிறு துண்டுகளாக வெட்டி காலை 11 மணி அல்லது மாலை 7 மணிக்குக் கொடுக்கலாம்.

அசைவ உணவை விட, சைவ உணவே சிறந்தது. சைவ உணவு கொடுத்தே பழக்கி விட்டால் கோபம், மூர்க்க குணம் அதிகம் இருக்காது. அசைவ உணவு கொடுத்துப் பழக்கினால், ஒரு நாள் கொடுக்காவிட்டால் கூட நாய்கள் தன் கோபத்தை வெளிப்படுத்தும். சரியாகச் சாப்பிடாது. அசைவ உணவு கொடுத்தால் முடி அதிகம் உதிரும். வாழ்நாள் குறையும். கடைகளில் பாக்கெட்டுகளில் விற்பனையாகும் ரெடிமேட் உணவும் கொடுக்கலாம். சைவ உணவு கொடுத்தால் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும், அசைவ உணவு கொடுத்தால் மாதம் ஒரு முறையும் கட்டாயம் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

வாரம் ஒரு குளியல்!

தினமும் குளிப்பாட்டினால் முடி உதிரும். வீட்டுக்குள்ளேயே வளர்ப்பதால் வாரம் ஒரு முறை குளிப்பாட்டினால் போதும். வெயிலுக்கு முன்னால் அதாவது காலை 7 முதல் 8 மணிக்குள்ளும் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளும் குளிப்பாட்ட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சோப், ஷாம்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டி தலையைத் துவட்டிவிட்டு காதுகள், கண் ஓரங்களிலுள்ள அழுக்குகளை நீக்கி விட வேண்டும். அதற்குள் முடி காய்ந்து விடும். பிரத்யேக சீப்பால் சீவி விட வேண்டும். குளிப்பாட்டியதும் நாய்களுக்கு பசி எடுக்கும். ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் உண்ணிகள் இருக்கிறதா என கவனமாகப் பார்க்க வேண்டும். உண்ணி தென்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும். நாய் சோர்வாக காணப்பட்டாலோ, சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பொமரேனியன் நாய்கள், 9 முதல் 10 மாதங்களில் முதல் பருவத்துக்கு வரும். முதல் பருவத்துக்கு வந்ததும் இணை சேர்க்கக் கூடாது. முதல் பருவத்திலேயே இணை சேர்த்தால் நாயின் வளர்ச்சி பாதிக்கப்படும். 6 வயது வரை ஆண்டுக்கு இரண்டு முறையும், 6 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறையும் இனச்சேர்க்கை செய்யலாம். ஒரே பெற்றோருக்குப் பிறந்த குட்டிகளை இணைசேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் கால், கை ஊனம், பார்வைக்குறைவு, காது கேட்காமை ஆகிய குறைபாடுகளுடன் குட்டி பிறக்கும். பொமரேனியனின் ஆயுட்காலம் சராசரியாக 15 ஆண்டுகள். முறையாகப் பராமரித்தால் 18 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.

தடுப்பூசி அவசியம்!

சினை சேர்த்த 58 முதல் 63 நாட்களுக்குள் குட்டி போடும். 30 நாள் வரைதான் தாயிடம் பால் இருக்கும். பிறந்த 30-ம் நாள் முதல் 40-ம் நாள் வரை பாலில் ஊற வைத்த ரஸ்க், கேழ்வரகு மாவை பாலில் கலந்து ஸ்பூன் மூலம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுப்பேன். 40-ம் நாள் முதல் தானாகவே சாப்பிட ஆரம்பிக்கும். 45-ம் நாள் முதல் விற்பனை செய்யலாம். ஆனால், நான் 60 நாட்களுக்குப் பிறகுதான் விற்பனை செய்கிறேன். குட்டிகள் பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, பால்சாதம், முட்டைசாதம் கொடுக்க ஆரம்பிப்பேன். பிறந்த 40 மற்றும் 60-ம் நாட்களில் ஒரு தடுப்பூசியும், 100-ம் நாளில் ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும். தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை ரேபீஸ் தடுப்பூசி அவசியம் போட வேண்டும்” என்ற கற்பகச்செல்வன், விற்பனை குறித்துச் சொன்னார்.

ஆண்டுக்கு 80 குட்டிகள் விற்பனை!

“ஒரு பெண்நாய் ஒரு ஈத்துக்கு 4 முதல் 7 குட்டிகள் வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு 4 குட்டிகள்னு வெச்சுக்கிட்டாலே, வருஷத்துக்கு ரெண்டு முறை குட்டி போடுறது மூலமா, எட்டு குட்டிங்க கிடைக்கும். பத்து நாய்ங்க மூலமா 80 குட்டிகள் வரை கிடைக்குது. இதுல சுத்த வெள்ளை நிறக்குட்டிகள் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், மற்ற நிறக்குட்டிகள் 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகுது. சராசரியா 2 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் 80 குட்டிகள் விற்பனை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும்.

அசைவ உணவு, ரெடிமேட் உணவுகள் கொடுக்கிறதில்லைங்கிறதால செலவு ரொம்பக் குறைவு. பராமரிப்புச் செலவு, வேலையாட்கள் கூலி, மருத்துவச் செலவு, உணவுனு வருஷத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகிடும். குறைஞ்சபட்சமா 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிச்சய லாபம் கிடைச்சுடும்.

ராஜபாளையம், கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை மாதிரியான நாய்கள் காவலுக்காக விற்பனையானாலும், செல்லமா வளர்க்கிறதுக்காக பொமரேனியன் ரக நாய்களும் அதிகம் விற்பனையாகுது. இந்த ரக நாய்களுக்கு எப்பொழுதும் தேவையும், மார்க்கெட்டும் இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை” என்று நாய்களை செல்லமாகத் தடவிக் கொடுத்தபடியே சொன்னார் கற்பகச்செல்வன்.  

அதிகம் செலவு செய்யும் அமெரிக்கா!

செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பதில் அமெரிக்கர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். ‘பொருளாதார நெருக்கடி’க்கு ஆளாகியுள்ள நிலைக்கு அமெரிக்கா வந்துள்ள நிலையில், அதன் பொருளாதார வீழ்ச்சியை உலகநாடுகள் அனைத்தும் உற்று நோக்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள ‘ரீட்டெய்ல் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பு அமெரிக்கா முழுவதும் நடத்திய ஆய்வில் ‘அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல், பறவைகள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இதில் மற்ற வகை பிராணிகளை விட நாய்களே அதிகம் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

என் செல்லமே...


 

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை ஆடை அணிவித்து அலங்காரம் செய்தே வெளியில் அழைத்துச் செல்கின்றனர். சிலர் வாராவாரம் தன் செல்ல நாய்களை பியூட்டி பார்லர்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். இந்த நாய்களுக்கான அசைவ உணவு, வாராந்திர மருத்துவச் செலவு, நாய் தங்குவதற்கான குடில், உடை, கிளவுஸ், கண்ணாடி, விலை உயர்ந்த பிஸ்கட் பாக்கெட்கள் ஆகியவற்றுக்காக மட்டும் ஆண்டுக்கு 330 மில்லியன் டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 2,046 கோடி ரூபாய்) வரை செலவிடுகிறார்கள்’ எனத்தெரிய வந்துள்ளது.  

குறைந்த உயரமுள்ள பிஞ்சர்!

என் செல்லமே...

நாய் இனங்களில் மிகக் குறைந்த உயரமுள்ளது ‘பிஞ்சர்’ நாய்தான். 6 அங்குலம் முதல் 16 அங்குல உயரம் மட்டும் வளரும். ‘கிரேட் டேன்’ ரக நாய், மூன்றே கால் அடி உயரம் வரை வளரும்.

செல்லப்பிராணிகளுக்கான உணவகம்!

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் நாய்களுக்கென்றே தனி உணவகங்களும், பராமரிப்பகமும் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையிலுள்ள பனையூரில் முதன்முதலாக செல்லப்பிராணிகளுக்கான இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளுடன் ‘பெட் கஃபே’ உணவகமும், செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கான ‘ஹார்லேம்’ என்ற கிளப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வளர்ப்புப் பிராணிகளுக்கு சொகுசு விடுதியும், நாய்களுக்கான நீச்சல் குளமும் உள்ளது. இங்கு 24 மணி நேர கேமரா கண்காணிப்பும், மருத்துவ வசதியும் உண்டு. முற்றிலும் ஏ.சி வசதி செய்யப்பட்ட இந்த கிளப்பில் வார இறுதி நாட்களில் செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடலாம்.

அப்பார்ட்மெண்டுகளில் செல்லப்பிராணி வளர்க்கத் தடை உள்ளவர்கள், அலுவலகம் செல்பவர்கள், குடும்பத்துடன் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்பவர்களும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை இங்கே விட்டுவிட்டு செல்லலாம். வெளியூர், வெளிநாடுகளிலிருந்தே உங்கள் பிராணியை ‘ஸ்கைப்’ மூலமாகக் காணும் வசதியும் உள்ளது.    

நாற்றம் போக்கும் எலுமிச்சைத் தோல்!

என் செல்லமே...

நாய்க்குட்டிக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால், பிறந்து 40 நாட்களுக்கு மேல் ஆன குட்டிகளைத்தான் வாங்கி வளர்க்க வேண்டும். பொதுவாக, பிறந்து 60 நாட்களுக்கு மேல் ஆன குட்டியை வாங்குவது சிறந்தது. இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் வயிற்றில் பூச்சிகள் இருத்தல் போன்றவற்றால் முடி உதிரும். தாது உப்புகள் நிறைந்த உணவைக் கொடுத்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களைப் படுக்கை அறைக்கு அனுமதிக்கக் கூடாது.
ஏ.சி அறைக்குள்ளும் அனுமதிக்கக் கூடாது. ஆரஞ்சு, எலுமிச்சைப் பழங்களின் தோலைக் காய வைத்து பொடி செய்து... தண்ணீரில் சிறிது கலந்து காலையும், மாலையும் நாயின் இருப்பிடத்தைச் சுற்றித் தெளித்தால் நாய்வாசனை, மலம், சிறுநீர் நாற்றம் இருக்காது.

டிப்ஸ்... டிப்ஸ்..!

நாய்களுக்கு தண்ணீர் எந்நேரமும் பாத்திரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை நன்கு வேகவைத்து சாதத்தில் கலந்து கொடுத்தால் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாயின் உடம்பு வலுவாகும். பிரெட், பால் நாய்களுக்கேற்ற உணவு. பிரெட் பசியைத் தணிப்பதுடன் விரைவில் செரிமானமாகும்.
காலைவேளையில் காய்ச்சிய பாலை ஆற வைத்துக் கொடுத்தால், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நாய்க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அளவுக்கு அதிகமான உணவையும் கொடுக்கக்கூடாது. ரத்த சிவப்பணுக்களை அழித்து, ரத்த சோகையை ஏற்படுத்துவதால் வெங்காயம், பூண்டு ஆகியவை கலந்த உணவைத் தவிர்க்க வேண்டும். கோகோ, நாய்களுக்கு வலிப்பை ஏற்படுத்தும். எனவே, சாக்லேட்டையும் தவிர்க்க வேண்டும்