நாட்டு நடப்பு
Published:Updated:

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

காசி.வேம்பையன், படங்கள்: ஏ.ராஜேஷ்

“நெல், வாழை மாதிரியான பயிர் வகைகளையோ அல்லது ஆடு, மாடு மாதிரியான கால்நடைகளையோ தனித்தனியாக வளர்க்கும்போது, நஷ்டம் ஏற்பட்டால் அவற்றை ஈடுகட்டுவது சிரமம்தான். ஆனால், வேளாண் பயிர்களையும், கால்நடைகளையும் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்தால், செலவைக் குறைத்து அதிகமான லாபம் பார்க்கலாம்” என்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி.

வேளாண்மைத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள சக்கரபாணியின் தோட்டம், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆவூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இறால் குளத்தில் இருக்கும் கழிவுகளை மிதவை இயந்திரம் சுத்தம் செய்துகொண்டிருக்க, அதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சக்கரபாணியைச் சந்தித்தோம்.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

சொந்த நிலத்தில் சோதனைத் திடல்!

“1971-ம் வருஷம் பி.எஸ்சி அக்ரி படிச்சேன். படிப்பை முடிச்சதும் வேலை கிடைச்சது. செங்கல்பட்டுல வேளாண்மைத்துறை அலுவலரா வேலையில சேர்ந்தேன். அப்படியே பதவி உயர்வுல துணை வேளாண்மை இயக்குநர் வரைக்கும் வேலை பார்த்திட்டு, 2006-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். வேலையில இருக்கிறப்போ, வேளாண்மைத்துறையில உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்தாங்க. அதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம். அதைச் செயல்படுத்தும்போது வர்ற பிரச்னைகளை விவசாயிகள் சொல்றப்போ அதை எப்படித் தீர்க்கிறதுனு எங்களுக்குப் புரியலை. அப்பறம்தான் அரசாங்கம் சொல்ற திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் நம்ம நிலத்துலேயே செய்து பார்த்தா என்னானு முடிவு பண்ணி, அந்த முயற்சியில இறங்கினேன். அப்போதான், நடைமுறையில இருக்கிற பிரச்னைகள் தெரிய வந்தது. அந்தப் பிரச்னைகளை சரி பண்ணனுங்கிறதுக்காகவே தொடர்ச்சியா விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

 நானே விவசாயியாவும், அதிகாரியாவும் இருக்கும் போது நடைமுறைப் பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு விவசாயிகளுக்குத் தீர்வு சொல்ல முடிஞ்சது” என்ற சக்கரபாணி, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகச் சொல்லி வேலையாட்களிடம் பணித்துவிட்டு, நம்மிடம் மீண்டும் தொடர்ந்தார்.

வழிகாட்டிய ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம்!

“பயிற்சிக்காக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைத்துக்கு ஒரு தடவை போயிருந்தேன். அந்த சமயத்துல, மீன் வளர்ப்புக் குளத்துக்கு மேலே கோழி வளக்கிற முறையைப் பார்த்தேன். அதுக்கு பிறகு பல முன்னோடி விவசாயிகளோட பண்ணைகளைப் பார்த்த பிறகு, ஒருங்கிணைந்த பண்ணைய முறையில விவசாயம் பார்க்கணுங்கிற ஆசை வந்துச்சு. ஆனா, வேலை நெருக்கடி காரணமா அதைச் செயல்படுத்த முடியலை. ரிட்டையர்டு ஆன பிறகு விவசாயத்துல முழுமையா இறங்கினா... தொடர்ச்சியா ரெண்டு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. அதுல படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிடுச்சு.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

அதுக்கப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு விவசாய வேலைகளை ஆரம்பிக்கிறப்போ, இன்ஜினீயரிங் முடிச்சுட்டு திருப்பதியில வேலை பார்த்துக்கிட்டிருந்த என்னோட மகனும் விவசாயம் பார்க்கறேன்னு வந்தான். உடனே ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கான வேலைகள்ல இறங்கிட்டேன். அப்போ இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவு பண்ணினேன். அதுக்கு ஏற்ற மாதிரி ‘பசுமை விகட’னும் எனக்கு உதவியா இருந்துச்சு” என்ற சக்கரபாணி, ஒருங்கிணைந்த பண்ணையைச் சுற்றிக்காண்பித்துக் கொண்டே, அதை உருவாக்கிய முறைகள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

பரணுக்கு ஏற்ற தலைச்சேரி!

“முதல் கட்டமா 20 கறவை மாடுகள், 7 எருமை மாடுகள், 40 நாட்டு ஆடுகள், ஒரு போயர் கிடானு வாங்கிட்டு வந்து 2012-ம் வருஷம் பண்ணையை ஆரம்பிச்சேன். அதுல செம அடி விழுந்துச்சு. பால் மாடுகளுக்கு கோமாரி தாக்குதல் வந்துச்சு. நான் ஆரம்பிச்ச சமயம், பாலுக்கும் சரியான விலை கிடைக்கல. அதனால, தாக்குப்பிடிக்க முடியாம ஒரே வருஷத்துல மாடுகளை விற்பனை செய்துட்டேன். முரா எருமைனு நினைச்சு வாங்கின எருமைகள் எல்லாம் நாட்டு எருமைகள். அதுலயும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை. அதனால, எருமைகளையும் விற்க வேண்டியதாயிடுச்சு. பரண் அமைச்சு நாட்டு ஆடுகளை வளர்த்தேன். ஆனா, பரண் முறையில நாட்டு ஆடுகளுக்கு சரியா எடை கூடலை. தீவனச் செலவு அதிகமாகிக்கிட்டே போச்சு. அந்தளவுக்கு பலன் இல்லை. அதனால, அந்த ஆடுகள் மூலமா கிடைச்ச கலப்புக் குட்டிகளை மட்டும் வெச்சுக்கிட்டு, தாய் ஆடுகளை விற்பனை செஞ்சிட்டேன். அதுக்கப்பறம், தலைச்சேரி, பெங்கால் பிளாக் பெட்டை ஆடுகளை வாங்கினேன். இந்த ஆடுகள் கொட்டில் முறையில நல்லா வளருது.

நன்னீர் இறால் வளர்ப்பு!

100 அடிக்கு 100 அடி (22 சென்ட்) அளவுல பண்ணைக்குட்டை அமைச்சு அதுல, கெண்டை மீன் ரகங்களை வளர்த்தேன். அதுல பெருசா பராமரிப்பு இல்லாமலே போதுமான வருமானம் கிடைச்சது. இப்போ, குளத்தை 65 சென்ட் அளவுக்கு விரிவுபடுத்தி நன்னீர் இறால் வளர்ப்புல இறங்கி இருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைச்சது. அதனால, 1,700 சதுர அடியில கொட்டகை அமைச்சு வெண் பட்டுப்புழு வளர்ப்புல இறங்கினேன். ஒரு பேட்ச்ல மட்டும் நல்ல லாபம் கிடைச்சது. அடுத்து நோய் தொற்றுனால உற்பத்தி அதிகமா இல்லை. அதனால, இப்போ, மஞ்சள் பட்டுக்கூடு உற்பத்திக்கு மாறி இருக்கேன். இதுல லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

மொத்தம் இருக்கிற 15 ஏக்கர் நிலத்துல 7 ஏக்கர்ல தென்னை மரங்கள் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில் 4 ஏக்கர்ல ஊடுபயிரா வாழை இருக்கு. 3 ஏக்கர்ல ஊடுபயிரா தீவனப்புல் வகைகள் இருக்கு. 3 ஏக்கர்ல மல்பெரி இருக்கு. மூணரை ஏக்கரை மீன்குளம் வெட்டறதுக்காக தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். மீதி ஒண்ணரை ஏக்கர்ல இறால் வளர்ப்புகுளம், ஆட்டுக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை, வீடு, மண்புழு உரத்தொட்டி, பட்டுக்கூடு வளர்க்கும் அறைனு எல்லாம் இருக்கு” என்ற சக்கரபாணி வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வீட்டுத்தேவைக்கு மாடு!

“இப்போ வீட்டுத்தேவைக்காக 3 மாடுகளை மட்டும் வெச்சிருக்கேன். அதோட,  ரெண்டு கிடேரி கன்றுகளும், ஒரு காளைக் கன்றும் இருக்குது. மாடுகளோட சாணத்தை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்துறேன்.

ஆண்டுக்கு 100 குட்டிகள்!

நாட்டு ஆடுகளுடன் போயர் கிடாவை கலந்து கிடைச்ச 30 குட்டிகள் இப்போ வளர்ந்து இருக்கு. அதோட 13 பெங்கால் பிளாக் ஆடுகள், 40 தலைச்சேரி ஆடுகள்னு சேர்த்து மொத்தம் 83 ஆடுகள் இருக்கு. ஆடுகளுக்கு காலையும், மதியமும் ஒரு கிலோ அளவுக்கு பசுந்தீவனம் (ஒரு ஆட்டுக்குரிய அளவு) கொடுப்பேன். மதியத்துக்கு மேல மேய்ச்சலுக்கு விட்டுடுவேன். அடர்தீவனமெல்லாம் கொடுக்கிறதில்லை. 83 ஆடுகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 100 குட்டிகள் கிடைக்கிது. குட்டிகளை ஆறு மாதம் வளர்த்து விற்பனை செய்றேன். ஒரு ஆடு, 3 ஆயிரம் ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். குறைந்தபட்சமா வெச்சுக்கிட்டாலும் வருஷத்துக்கு 100 ஆடுகள் மூலமா 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதில் 70 ஆயிரம் ரூபாய் செலவாகும். மீதி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். போன மூணு வருஷத்துல ஆரம்பத்துல வாங்கின நாட்டு ஆடுகள், குட்டிகள்னு 400 ஆடுகளை விற்பனை செய்திருக்கேன். அந்த வகையில 12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

கோழியில் செலவில்லாமல் வருமானம்!

ஆடுகளுக்காக உள்ள பரணுக்கு கீழ் பகுதியில கோழி வளர்க்கிறேன். ஆரம்பத்துல வாங்கிய நந்தனம்-1 ரக கலப்பினக் கோழிகள் நோய் தாக்கி இறந்துடுச்சு. அதனால, சந்தையில் இருந்து 30 நாட்டுக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அது மூலமா கிடைச்ச முட்டைகளையும், கோழிக்குஞ்சுகளையும் விற்பனை செய்துக்கிட்டிருக்கேன். இதுவரை 200 கோழிகளையும், 2 ஆயிரம் முட்டைகளையும் விற்பனை செய்திருக்கேன். தற்சமயம் இருக்குற 25 கோழிகள் மூலமா வருஷத்துக்கு ஆயிரம் முட்டைகள் வரை கிடைக்கிது. அதுல 800 முட்டைகளை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துக்கிட்டிருக்கேன். அது மூலமா வருஷத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சா சராசரியா 120 குஞ்சுகள் வரை கிடைக்கும். அதுகளை ஒரு வருஷம் வளர்த்து ஒரு கோழி 150 ரூபாய்னு விற்பனை செய்தா 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தமா பார்த்தா... கோழி மூலம் வருஷத்துக்கு 26 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல செலவே கிடையாது. அவ்வளவும் லாபம்தான்.

பராமரிப்பு குறைவான தென்னை!

25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மொத்தம் 500 நெட்டை ரக தென்னங்கன்றுகளை நடவு செய்தேன். அதில், 100 மரங்கள் பழுதாகிடுச்சு. மீதி இருக்குற 400 மரங்களை  வருஷத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு விட்டிருக்கேன். தென்னையை இயற்கை விவசாய முறையில்தான் வளர்க்கிறேன். பராமாரிப்புச் செலவு போக தென்னை மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபமா கிடைச்சுக்கிட்டு இருக்கு.

ஆடு,கோழி,இறால், தென்னை, வாழை... ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்து 56 ஆயிரம்...

தென்னைக்கு இடையில 4 ஆயிரம் கற்பூரவல்லி வாழை இருக்கு. வாழைக்கு தனியாக உரம் கொடுக்கிறதில்லை. மாட்டுச் சிறுநீர், ஆட்டுச்சாணம் மட்டும்தான். வாழையில பக்க கன்றுகளை நீக்காம அப்படியே விட்டிருக்ககிறதால தோப்பு முழுக்க சூரிய வெளிச்சம் தரையில படாத அளவுக்கு வாழை மரங்கள் அடர்த்தியாக இருக்குது. வாழை இன்னும் மகசூலுக்கு வரலை. பெரிய அளவுல பராமரிப்பு இல்லாததால காய்கள் அளவில சின்னதாதான் இருக்கு. அறுவடைக்கு வரும்போதுதான் அதுக்கான வருமானம் பத்தி சொல்ல முடியும்.

120 நாளில் வருமானம் கொடுக்கும் இறால்!

65 சென்ட் குளத்தில் தண்ணீர் கசியாமல் இருக்க பாலிதீன் ஷீட் விரிச்சு நாலு அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... 10 நாள் வயசுல 1 லட்சத்து, 50 ஆயிரம் இறால் குஞ்சுகளை வாங்கி விட்டிருக்கேன். இப்போ 50 நாட்கள் ஆகுது. 100 நாள்ல இருந்து 120 நாட்கள்ல இறால்களை அறுவடை செய்யலாம். இதுவரைக்கும் எந்த பிரச்னையும் இல்லாம நல்லாத்தான் வளருது. ஆனா, கடைசிக் கட்டத்துலதான் ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்றாங்க. அதனால, எவ்வளவு மகசூல் கிடைக்கும்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது.

தரத்தைப் பொறுத்து, ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்ல இருந்து 850 ரூபாய் வரை விலை கிடைக்குமாம். நல்லபடியா கிடைச்சா 2 டன் அளவுக்கு இறால் அறுவடையாகும். கிலோவுக்கு சராசரி விலையா 350 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 7 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுல தீவனம், பராமரிப்புச் செலவெல்லாம் போக பாதிக்குப் பாதி லாபமா கிடைக்கும். ஆனா, இந்த வருமானத்தை உறுதியா சொல்ல முடியாது. அறுவடை பண்ணும்போதுதான் தெரியும். இறால் வளர்ப்புக்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கேன். பட்டுப்புழு வளர்ப்புலயும் இன்னும் வருமானம் எடுக்கலை. அதனால அந்த வருமானத்தையும் உறுதியா சொல்ல முடியாது. முறையா வருமானம் கிடைச்சா பட்டுப்புழு வளர்ப்புல வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்னு சொல்றாங்க” என்ற சக்கரபாணி நிறைவாக,

ஆண்டுக்கு பல லட்சம்!

“இத்தனை வருஷம் விவசாயத்துறையில வேலை செய்த அனுபவம், விவசாயத்துல நேரடியா கத்துக்கிட்ட விஷயங்கள் எல்லாத்தையும் வெச்சு முழு நம்பிக்கையோட களம் இறங்கியிருக்கேன். எப்படியும் இந்த 15 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் எடுக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார்.

அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு வந்தோம்.