Published:Updated:

'இயற்கை விவசாயத்தில் பல நன்மைகள் உள்ளன!’

மனம் திறக்கும் ‘பசுமைப் புரட்சி’யின் தந்தை..!த.ஜெயகுமார்

சென்ற இதழ் தொடர்ச்சி... 

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது கல்வி பின்புலம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அறிமுகம்... போன்றவைப் பற்றி கடந்த இதழில், பதில் சொல்லியிருந்தார். இந்த இதழிலும் அவரது நேர்முகம் தொடர்கிறது...

'அரசுகளின் வேளாண் சார்ந்த கொள்கை முடிவுகள், நிதிநிலை அறிக்கை தயார் செய்வது என அனைத்திலும் பங்கு கொள்கிறீர்கள். ஏன் விவசாய விளைபொருட்களுக்கு ஒரு நிரந்தர விலை திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் 50 சதவிகித வருமானம் கிடைக்க வேண்டும் என்று முதன்முதலாக பரிந்துரை செய்தேன். இது, இன்று இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாகவும் உள்ளது. அமைச்சர்கள் எங்கு சென்றாலும், விவசாயிகள் விலை கொள்முதலில் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்துகிறார்கள். மிக சிறிய நிலப்பரப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு வேளாண்மையை லாபகரமற்ற தொழிலாக மாற்றிவிட்டது.'

'இயற்கை விவசாயத்தில் பல நன்மைகள் உள்ளன!’

'இந்தியாவில் போதுமான விளைச்சல் இருக்க, ஏன் வெளிநாட்டில் இருந்து இன்னும் இறக்குமதியை எதிர்பார்க்கிறோம்?'

'ஏற்றுமதியோ, இறக்குமதியோ விலை நிர்ணயம் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இதனால்தான் உலக வர்த்தக நிறுவனத்திடம் பச்சைப் பெட்டி போன்று 'வாழ்வாதார பாதுகாப்புப் பெட்டி’யை உருவாக்க வலியுறுத்தியுள்ளேன். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்தியா, உணவை இறக்குமதி செய்வது வேலையில்லா திண்டாட்டத்தை இறக்குமதி செய்வதற்கு சமம் என்று கூறியுள்ளேன்.'

'இந்திய இயற்கை விவசாயிகள், ரசாயனங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் மேலாக விளைச்சலைக் காட்டி வருகிறார்கள். இதற்கு அரசாங்கமே பரிசுகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, 'இயற்கை விவசாயத்தால் 120 கோடி வயிறுகளுக்கு உணவு கொடுக்க முடியாது’ என்றே விஞ்ஞானிகள் பலரும் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதில் உண்மை இருக்கிறதா?'

''நமது விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியிலான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, விஞ்ஞான முறையில் நீர் பயன்பாடு ஆகியவற்றை சிபாரிசு செய்கின்றனர். குறுகிக்கொண்டே வரும் நிலப்பரப்பிலிருந்து நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிலம் மட்டுமல்ல, நீரும் குறைந்துகொண்டே வருகிறது. அதற்கான பயனுள்ள ஆலோசனைகள், தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.'

'இயற்கை விவசாயத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன? இயற்கைபாதி, செயற்கைபாதி என்று நீங்கள் அவ்வப்போது சொல்லி வருகிறீர்கள்... இது சரியான நடவடிக்கையா?'

'இயற்கை உரங்களையும், கனிம (ரசாயன) உரங்களையும் ஒன்றுக்கொன்று எதிரானவை எனப் பார்க்கக்கூடாது. இயற்கை இடுபொருட்கள், மண்ணின் உயிரித்தன்மையை அதிகப்படுத்துகின்றன. கனிம உரங்கள் பௌதீக, வேதித் தன்மையை அதிகப்படுத்துகின்றன. ஆனால், கனிம உரங்களால் நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்க முடிவதில்லை. இதனால் மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகப்படுத்த, குறைந்தளவு கனிம உரங்களோடு பயோ உரங்களையும் (இயற்கை உரங்கள்), தொழுவுரத்தையும் கலந்துகொடுப்பது சிறந்த முறை. இதில் பசுந்தாள் பயிர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு நைட்ரஜன் சத்துக்களைக் கொடுக்கக்கூடிய பயறு வகைகளையும் சேர்க்கலாம். இப்படிக் கலந்து செய்யும் முறையே சரியான விவசாயம்.'

'விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்ப்பது ஏன்? அரசியல்வாதிகளால் விவசாயிகளுக்கு எளிமையாகச் செய்யக்கூடியது அது ஒன்றுதான், அதையும் தடுக்கிறீர்களே?'

'விவசாயக் கடன் தள்ளுபடியை தற்போது ஆதரிக்கிறேன். இலவச மின்சார மானியத்தை மிகவும் கவனமாகச் செயல்படுத்த வேண்டும். இலவச மின்சாரத்தை வைத்து பம்ப்செட்கள் மூலம் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதற்கு வாய்ப்புள்ளது. தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது விவசாயிகளிடம் கலந்துரையாடினேன். அப்போது, அவர்கள் எல்லோரும் கூறிய ஒருமித்த கருத்து என்னவென்றால்... 'இலவச மின்சாரம் வேண்டாம். நிலையான மற்றும் நம்பத்தகுந்த மின்சாரத்தை தினமும் வழங்க வேண்டும்’ என்பதுதான்.'

'இந்திய விஞ்ஞானிகள், ரசாயன விவசாயமும், மரபணு மாற்றப்பட்ட விதைகளும் அவசியம் என்றே நினைக்கிறார்களா?'

'மாற்றம் உருவாவதற்கு அறிவியல் முதல் முன்னோடியாக இருந்து வருகிறது. நவீன வேளாண்மையில் நிலம், நீர், பல்லுயிர் பரவல், பருவநிலை மாற்றம் என பல சவால்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இத்தகைய சவால்களை முறியடிக்க விஞ்ஞானத்தை நாம் பயன்படுத்துவது அவசியம். அதைத்தான் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகிறார்கள்'

'ஒரு தாவரத்தின் மரபணுத் தன்மையை மாற்றுவது இயற்கைக்கு எதிரானது இல்லையா?'

'மரபணு மாற்றங்கள் குறித்த எனது கருத்து அனைவரும் அறிந்ததே. மரபணு மாற்றங்களால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்களை வெளிப்படையாகவும், உண்மையாகவும் அளவிட, தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள், அரசியல் சார்ந்தோர், படித்தவர்கள் மற்றும் ஊடகங்களுக்கிடையே, மரபணு மாற்றத்தைப் பற்றிய ஒருமித்த கருத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.'

'மரபணு மாற்றுப் பயிர்கள் வேண்டுமா... வேண்டாமா?'

'மரபணு மாற்றுப் பயிர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால், நமக்கு தேவையான குணாதிசயங்கள் கொண்ட பயிர்களை உருவாக்க மரபணுத் தொழில்நுட்பம் தேவை. அந்த டி.என்.ஏ. தொழில்நுட்பம் நம் நாட்டுக்குத் தேவை என்றே நம்புகிறேன்.'

'இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகள் நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள். அதற்கு சாட்சி 'பசுமை விகட’னில் வரும் விவசாயிகள். இனியாவது அரசாங்கத்திடம் இயற்கை விவசாயத்துக்கு தனி ஒரு அந்தஸ்தை கொண்டுவர வலியுறுத்துவீர்களா?'

'இயற்கை விவசாயத்தில் பல நன்மைகள் உள்ளன. அதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் சாகுபடிக்கு இயற்கை விவசாயம் பயன்படுத்துவதே நல்லது. பூச்சித்தாக்குதல்களும் குறைந்து, சமரசம் செய்யாமல் விளைச்சலும் கிடைக்குமானால் இயற்கை விவசாயம் நல்லதுதான். எனவே, நமது விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தர வேண்டும். இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறேன்.'

'நாட்டின் சில பாகங்களில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையங்கள் மூலம் சிறுதானியங்களை பயிர் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். அதை அரசு மூலமாகவே பெரிய அளவில் செய்ய வலியுறுத்தலாமே?'

'1992ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கொல்லிமலையில் சிறுதானியங்கள், பயறு வகைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டோம். ஏனென்றால், இந்தப்பயிர்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், மாறி வரும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இருப்பதுதான். அப்போதிருந்தே நாங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பயறு வகை மற்றும் சிறுதானியப் பயிர்களை பொது விநியோகத் துறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்து வருகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் சிறுதானியப் பயிர்களை, கொள்முதல் மற்றும் விநியோகத் துறையில் இணைத்தேன். ஏற்கெனவே, கர்நாடகா அரசு கேழ்வரகை பொது விநியோகத் துறை மூலம் மக்களுக்கு அளித்து வருகிறது. இனிவரும் ஏதாவது ஒரு ஆண்டை சர்வதேச சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறோம். இதுபோன்ற செயல்கள் மூலம் சிறுதானியங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டுதான் வருகிறோம்.'

'இளைஞர்களை விவசாயத்தை நோக்கி இழுக்க என்ன செய்ய வேண்டும்?'

'பொருளாதார ரீதியில் வருமானம் கொடுப்பதாகவும், தனிப்பட்ட முறையில் மனதுக்கு திருப்தி அளிப்பதாகவும் விவசாயம் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் ஈடுபட முன்வருவார்கள். புதிய தொழில்நுட்பங்களான தகவல் தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும். அத்தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில் தருகின்றன. பருவமழையும், சந்தையும் விவசாயிகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

பருவமழையைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வதும், விளைபொருட்களுக்கு சந்தையை நிறுவுவதும் புதிதாக விவசாயம் செய்ய வரும் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்களின் கல்வி மற்றும் திறனைப் பயன்படுத்தி, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவசாயம் இருந்தால் மட்டுமே வளர்ச்சியடையக் கூடும். தொழிற்சாலைகளால் தர இயலாத வேலை வாய்ப்பை, விவசாயம் மட்டுமே தர முடியும். அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் வேளாண்மை, கால்நடைத் துறை, கடல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, வனம் மற்றும் வேளாண் காடுகள், வேளாண் பொருட்களைப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரமுடியும்'

விவசாயிகளுக்கு உதவும் மையங்கள்

'இயற்கை விவசாயத்தில் பல நன்மைகள் உள்ளன!’

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதேபோன்ற நிறுவனங்கள் இந்தியாவின் பிற பாகங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி, உதவி மற்றும் வளர்ச்சி மையங்கள் வழியாக விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பல்லுயிரினப்பெருக்கம், கிராம முன்னேற்றம், நிலைத்த வேளாண்மை, கடலோரப் பாதுகாப்பு போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

கீழ்க்கண்ட இடங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்), பூம்புகார், வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்), கன்னிவாடி (திண்டுக்கல் மாவட்டம்), பரங்கிப்பேட்டை, சிதம்பரம், தெற்கு பல்பனச்சேரி (கடலூர் மாவட்டம்), திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம் ), கம்பன் நகர், இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்), தங்கச்சி மடம் (ராமநாதபுரம் மாவட்டம் ), எரமாவர்மபுரம் (நாகர்கோவில்), கல்ப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்), பிள்ளையார்குப்பம் (புதுச்சேரி), ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மையங்களின் பணிகள் குறித்து சென்னையில் செயல்படும் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.