நாட்டு நடப்பு
Published:Updated:

சாம்சன்...இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்... மக்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் !

பச்ச மனுஷன்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

காவல்துறை என்றாலே... திருடர்களைப் பிடிக்க வேண்டும்... கொலைகாரர்களைத் துரத்த வேண்டும்... என்றேதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும். இதுவே, அந்தத் துறையிலிருக்கும் பலருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கைச் சூழலே அந்தக் 'கடமை’க்குள் மட்டுமே சுருண்டுவிடும். இவர்களுக்கு நடுவே... சுற்றுச்சூழல் பக்கமும் தன் கவனத்தைத் திருப்பி, தன்னை உற்சாகமாக அவைத்திருப்பதோடு, தான் பணியாற்றும் ஊரிலும் பசுமையைப் படர விட்டுக் கொண்டிருக்கிறார்... சாம்சன். 

காவல் பணியுடன் மரங்கள் வளர்ப்பு, குப்பைகளை அகற்றுதல், மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை நீக்குதல்... எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளைச் செய்து சூழல் ஆய்வாளராகவும் திகழ்கிறார், சாம்சன்.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர், காவல் நிலையத்துக்குள் நாம் நுழைந்தபோது, அங்கிருந்த மரங்களுக்கு வாஞ்சையுடன் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார், ஆய்வாளர் சாம்சன். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் தனது பணிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

'தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பக்கத்திலுள்ள வலசக்காரன்விளைதான் என்னோட சொந்த கிராமம். தாத்தா, அப்பா எல்லாருமே மரம் வளர்ப்புல ஆர்வம் உள்ளவங்க. பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே லீவு நாட்கள்ல, தாத்தா மரக்கன்றுகள் நட கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. அப்பாவும் அப்படித்தான். வீட்டுக்குள்ளயும், வீட்டைச்சுத்தியும் நடுறதோட நிறுத்தாம கிராமச் சாலைகள்லயும் நட்டு, தினமும் தண்ணி ஊத்தி பராமரிப்போம். ஒன்பதாவது வந்ததும் என் வயசுப் பயலுகளை ஒண்ணா சேத்துக்கிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில ஊர் முழுக்க மரம் வைக்க ஆரம்பிச்சேன்.

சாம்சன்...இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்... மக்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் !

ஜனாதிபதி விருது!

பெரும்பாலும் ஆல், அரசு, புங்கன், அத்தி, வேம்பு மாதிரி மழையை ஈர்க்கும் தன்மையுடைய மரக்கன்றுகளைத்தான் அதிகம் நடுவோம். ஆடு, மாடுகள் தாக்குதல்ல இருந்து மரக்கன்றைக் காப்பாற்ற, மரக்கன்றுகள் முழுவதும் மாட்டுச் சாணத்தை பூசி விட்டுடுவோம். எந்தக் கால்நடையும் அதோட கழிவைச் சாப்பிடாது. மரம் ஓரளவு வளர்ந்துட்டா அதுக்கப்புறம் பராமரிப்புத் தேவையில்லை. எங்களோட ஜூனியர் பசங்களையும் மரம் வளர்க்கத் தூண்டி விட்டோம். இப்போ எங்க கிராமத்துல மொத்தம் 600 மரங்கள் இருக்குது. பசுமையான கிராமத்துக்கான ஜனாதிபதி விருது 2011ம் வருஷம் எங்க கிராமத்துக்குக் கிடைச்சது. இது எங்க கிராம மக்கள் எல்லாருக்குமே கிடைச்ச விருது.

தூசுகளைத் துரத்தும் மரங்கள்!

'வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுங்க’னு சொன்னா இடம் இல்ல, நேரம் இல்லனு சிலர் சொல்றாங்க. ஒரு கன சதுர அடி இடம் இருந்தா போதும், பப்பாளி நடுறதுக்கு. இரண்டு கன சதுர அடி இடத்துல முருங்கை நடலாம். மூன்று கனசதுர அடி இடத்துல வேம்பும் நடலாம். வீடுகளைச்சுற்றி, சந்து பொந்து மாதிரி இடமிருந்தா நெட்டிலிங்கம் அல்லது சவுக்கு நடலாம். இது காற்றில் பறக்குற தூசிகளை வீட்டுக்குள் வரவிடாது. மரக்கன்று நட்டால் மட்டும் போதாது தண்ணீரும் விடணும். எந்த மரமும் சுத்தமான தண்ணீரை எதிர்பார்ப்பதில்லை. சமையலறை, குளியலறைக் கழிவுநீரைத் திருப்பி விட்டாலே போதும். தண்ணீரைத் தேங்க விடாம உறிஞ்சுறதுனால கொசுத்தொல்லையும் இருக்காது. இதற்கும் இடமில்லாவிட்டால் தொட்டிச்செடிகளை வளர்க்கலாம், துளசியை வளர்த்தால் கொசுக்கள் வராது. அதோட காற்றும் தூய்மையாகும். தொட்டி வைக்கவும் இடமில்லாட்டா... காலி தண்ணீர் பாட்டில்ல கூட சின்னச் செடிகளை வைக்கலாம்.

சாம்சன்...இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்... மக்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் !

மனுஷனா பொறந்த எல்லாரும் ஏதாவது ஒரு மரக்கன்று நட்டுப் பராமரிக்கணும், இல்லாட்டா நாம பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல' என்ற சாம்சன், காவல்துறைக்கு வந்த பிறகும் மரங்களின் மீதான பாசம் குறையாமல், அதையும் தன்னுடைய கடமைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டுவிட்டது அருமை!

'1998ம் வருஷம் எம்.எஸ்.ஸி முடிச்சதுமே உதவி ஆய்வாளர் பணி கிடைச்சுது. வேலையில சேர்ந்த பிறகும் மரம் நடுறதைத் தொடர்ந்தேன். இப்ப ஆய்வாளரா பதவி உயர்வு பெற்று பணியிலிருக்கேன். என்னை சாம்சன்னு சொல்லுறத விட 'பாம்ப்சன்’னு சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும். வீடுகள், தெருக்களில் திரியும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பேன். யாருக்காவது பாம்புக்கடினு போன் வந்தா உடனே அதுக்கான முதலுதவி சிகிச்சை கொடுத்து மருத்துவமனைக்கு அழைச்சிக்கிட்டுப் போவேன். எப்பவுமே நான் போக முடியாதுங்கிறதால ஆர்வமுள்ளவர்களுக்கு பாம்புகள் பிடிக்கிறதையும், பாம்பு கடித்தவருக்கான முதலுதவி செய்வதையும் சொல்லிக் கொடுத்திக்கிட்டும் இருக்கேன்.

சாம்சன்...இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்... மக்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் !

ஆணி அடிச்சா, ஆயுள் குறையும்!

கடையநல்லூரைப் பொறுத்தவரை மரத்துல ஆணி அடிச்சு மாட்டுற விளம்பரங்கள் அதிகம். பல நிறுவனங்கள் போட்டி போட்டு மரத்து உச்சிக் கிளைகள் வரைக்கும் ஆணி அடிச்சு விளம்பரப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. விளம்பரம் செய்யுறவங்களும் படிச்சவங்கதானே... மரத்துல இப்படி ஆணி அடிச்சா மரத்தோட ஆயுட்காலம் குறையும்னு தெரியாதா? கடையநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாலை ஓரங்கள்ல இருக்கிற அத்தனை மரங்கள்லயும் இப்படி இருந்த விளம்பரங்களை மாணவர்கள் மூலமா அகற்றினோம். விளம்பரம் செய்யணும்னா, மரக்கன்றை நட்டு அதை சுற்றி இரும்புக் கூண்டு அமைச்சு அதுல விளம்பரம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமா சைக்கிள் கொடுத்து சைக்கிளின் பின்புறம் விளம்பரப்படுத்தலாம். செருப்புத் தைப்பவர், ரோட்டோரம் கூல்டிரிங்க்ஸ் கடை வச்சிருக்கிறவங்களுக்கு நிழலுக்காக குடை கொடுத்து குடையில் விளம்பரம் செய்யலாம். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள் கொடுத்து அது மேல் விளம்பரம் செய்து கொள்ளலாம்னு நிறைய யோசனைகளையும், அப்படி விளம்பரம் செய்றவங்களுக்கு அறிவுறுத்தியிருக்கோம்.

அழுகிய தேங்காயில் அழகிய கூடு!

கடையநல்லூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்கள்ல இருக்கிற போஸ்டர்களை அப்புறப்படுத்திட்டு, 'நமது நகரைச் சுத்தமாக வைப்பது நமது கடமை, காவல்துறை அறிவிப்பு இந்த இடத்தில் போஸ்டர் ஒட்டிக்கொள்ளவும்’னு எழுதி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டுறதுக்காகவே 10 போர்டுகள் வெச்சிருக்கோம். அழிஞ்சுட்டு வர்ற சிட்டுக்குருவிகளைக் காப்பாத்துறதுக்காக... அழுகிப்போன தேங்காய்களை வாங்கி அதுல துளை போட்டு தேங்காயைச் சுரண்டிட்டு குருவிக்கான கூடுகளாக்கியிருக்கோம். அதை ஸ்டேஷன் சுற்றிலும் உள்ள மரங்களில் தொங்க விட்டிருக்கோம். பக்கத்துல இருக்கிற பள்ளிகளுக்கும் கொடுத்திருக்கிறோம்' என்று சொன்ன சாம்சன் நிறைவாக, 'ஸ்டேஷனில் நடைபெறும் காதல் திருமணங்கள், ஊரில் நடைபெறும் திருமணங்களுக்குச் சென்று மணமக்களை அழைத்து ஸ்டேஷன் வளாகத்திலேயே மரம் நட வலியுறுத்திக்கிட்டு வர்றேன்.

போலீஸ் வேலையில் சேர்ந்து 16 வருஷமாச்சு. உடம்புல தெம்பு இருக்குற வரை, என்னால் முடிந்ததை சுற்றுச்சூழலுக்குச் செய்துகிட்டே இருப்பேன். இந்தியாவில சராசரியா ஒரு நிமிடத்துக்கு ஒரு ஏக்கர் பரப்பில் மரங்கள் மொட்டையடிக்கப்படுறதா சொல்றாங்க. வருங்கால தலைமுறையை வாழ வைக்கணும்னா ஆளுக்கு ஒரு மரத்தைக் கட்டாயம் நடணும்' என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.

அவருக்கு ஒரு பசுமை வணக்கத்தைச் செலுத்தி விடைபெற்றோம்!

மரங்களில் விளம்பரத்துக்குத் தடை!

கர்நாடக மாநில அரசு மரத்தில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் 1,000 ரூபாய் அபராதம் என ஆணை பிறப்பித்துள்ளது.

2013ம் ஆண்டு கேரள மாநிலம் மூவள்ளப்புழாவிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 'சாலை ஓரங்களிலுள்ள மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அம்மாநில முதல்வருக்கும், கேரள உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்கள்.

மாணவர்கள் சமூக அக்கறையோடு அனுப்பிய அக்கடித்தை பொதுநலவழக்காகக் கருதிய அப்போதைய கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், கேரளாவில் மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது விளம்பர வரையறைச்சட்டம் 6வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதிலிருந்து கேரளாவிலும் மரங்கள் மீது விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.