Published:Updated:

‘‘தூர்வாரினால்தான்... நீர்வார்க்கும்!’’ மதுராந்தகம் ஏரியும்... மருகும் விவசாயிகளும்!

பா.ஜெயவேல்

‘‘தூர்வாரினால்தான்... நீர்வார்க்கும்!’’ மதுராந்தகம் ஏரியும்... மருகும் விவசாயிகளும்!

பா.ஜெயவேல்

Published:Updated:

‘காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி’ என்கிற பெருமையுடன் கடல் போல பரந்து விரிந்துகிடக்கும் மதுராந்தகம் ஏரியை... தென் மாவட்டங்களுக்குச் சாலைவழியாகப் பயணிப்பவர்கள் தரிசிக்காமல் இருக்க முடியாது. பல ஆண்டுகளாக வறண்டே கிடந்த இந்த ஏரி, தற்போதைய பெருமழை காரணமாக... தண்ணீர் ததும்பி நிற்கும் காட்சி... கண்கொள்ளா காட்சி! ஆனால், ‘‘40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால்... தேங்கி நிற்கும் தண்ணீர் எத்தனை நாளைக்கு வருமோ தெரியாது. இதை நம்பி விவசாயத்தை எப்படி முழுமையாகச் செய்வது என்றும் தெரியவில்லை’’ என்று வருத்தம் பொங்கச் சொல்கிறார்கள் விவசாயிகள்!

இந்த ஏரி பற்றி நம்மிடம் பேசிய மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.க) உக்கம் சந்த், “சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1985-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மதுராந்தகம் ஏரி உடைந்தது. நிமிடத்துக்கு 2.20 லட்சம் கனஅடி நீர், வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டது. ராமர் கோவில் பக்கத்தில் தண்ணீர் வழிந்து வெளியேறியதால் சுமார் 500 சிமென்ட் மூட்டைகளைக் கொண்டு உடைவதைத் தடுத்தோம். ஆனால், கலங்கல் பக்கத்தில் இருக்கும் கரை அரிக்கப்பட்டு ஏரி உடைந்தது. பிறகு கரைகள் பலப்படுத்தப்பட்டன. மற்றபடி தூர்வாரும் பணி என்பது பல ஆண்டுகளாக நடக்கவே இல்லை.

‘‘தூர்வாரினால்தான்... நீர்வார்க்கும்!’’ மதுராந்தகம் ஏரியும்... மருகும் விவசாயிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1969-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது தமிழகத்தில் கடும் வறட்சி. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக, பிரதமர் இந்திரா காந்தியை இந்த ஏரிக்கு அழைத்து வந்தார் முதல்வர் கருணாநிதி. அந்தச் சமயத்தில் மட்டும் இரண்டு நாட்கள் தூர்வாரினார்கள். அதன் பிறகு தூர்வாரப்படவே இல்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. அப்போது 5 கோடி ரூபாயில் ஆரம்பித்த மதிப்பீட்டுத் தொகை, இன்று 30 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கின்றது. ஆனால், இந்த அளவுக்கு செலவுச் செய்வதால், அதற்கு இணையான வருமானத்தை ஈட்ட முடியுமா என்று அதிகாரிகள் கணக்குப் போடுவதால், கோரிக்கை நிறைவேறாமலேயே இருக்கின்றது.

‘ஏரியில் தூர்வாரும் மண்ணைக் கொண்டு, வடக்கில் அமைந்துள்ள கருங்குழி மலைகளுக்கு இடையே ஒரு அணையைக் கட்டினால் செலவுகள் குறையும். மேலும் இதனால் கூடுதலாக ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். சென்னைக்கும் இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்லலாம்’ என்று இந்த ஆண்டு நடைபெற்ற கலெக்டர் கூட்டத்தில் யோசனை சொன்னேன். தமிழக அரசுக்கு இதை அனுப்புவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்’’ என்று சொன்ன உக்கம் சந்த், 

‘‘இதுஒருபுறமிருக்க, மதுராந்தகத்தின் ஏரி நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

700 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினால், நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு உயரும். மேலும் உபரிநீர் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்” என்று சொன்னார்.

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேணு, “1985-ல் கரைகளை உயர்த்தி உயர்மட்ட கால்வாய்

‘‘தூர்வாரினால்தான்... நீர்வார்க்கும்!’’ மதுராந்தகம் ஏரியும்... மருகும் விவசாயிகளும்!

ஏற்படுத்தி இருப்பதால், இப்போது 36 கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த ஏரியால் பயன்பெற்று வருகின்றன. ஆனால், சுமார் 10 அடிக்கும் மேல் ஏரியின் நீர்மட்டம் தூர்ந்துவிட்டது. ஏரியின் பரப்பளவும் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிவிட்டது. இதனால், இந்த ஏரியின் கொள்ளளவு குறைந்துவிட்டது. ஆனால், பழைய கொள்ளளவையே அதிகாரிகள் சொல்லிக் கொண்டுள்ளனர். இதேபோல, பக்கத்தில் உள்ள மருந்து கம்பெனிகளின் கழிவுகள் ஏரியில் கலக்கின்றன. இதனால், வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளுக்கு தொற்றுநோய் ஏற்படுகின்றது.

ஏரிகள் மூலம் பயன்பெறும் விளைநிலங்களும் பாதிக்கின்றன. ஏரியைத் தூர்வாரி, உட்பகுதிகளில் மரங்களை வளர்த்தால், வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் இங்கேயும் தங்கும். பெரிய ஏரி என்பதால் மிகப்பெரிய சரணாலயமாகவும் இருக்கும். விவசாயிகளுக்கும் மூன்றுபோக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும்” என்று எதிர்பார்ப்புடன் சொன்னார்.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட உத்தம சோழன் உருவாக்கியதுதான் இந்த ஏரி. இப்போதிருப்பவர்கள், இதுபோல ஒரு ஏரியை உருவாக்கத் தேவையில்லை. ஆனால், இருப்பதையாவது காப்பாற்றி வைக்கலாமே!

ஏரி உடையவே உடையாது!

‘‘மதுராந்தகம் ஏரியைப் பற்றி தெரியாதவர்கள் பலரும், ‘ஏரி உடைந்துவிடும், மதுராந்தகம் நகரம் மூழ்கிவிடும்’ என்று  தற்போது வாட்ஸ்அப்பில் செய்தியைப் பரப்புகின்றார்கள். தற்போது 26 அடி உயரத்தில் கரைகள் வலுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏரி உடைய வாய்ப்பே இல்லை. நீரை வேகமாக வெளியேற்றுவதற்காக இரண்டாவதாக ஒரு கலங்கல் அமைக்கப்பட்டிருக்கின்றது. உபரிநீர் வரும்போது உயர்மட்ட கால்வாய் வழியாகவும் வெளியேற்ற முடியும்’’ என்று சொல்கிறார் உக்கம் சந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism