Published:Updated:

‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’

வேதனையில் வெடிக்கும் விவசாயிகள்சே.சின்னத்துரை, படங்கள்: நா.ராஜமுருகன்

‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’

வேதனையில் வெடிக்கும் விவசாயிகள்சே.சின்னத்துரை, படங்கள்: நா.ராஜமுருகன்

Published:Updated:

‘கோ-51 நெல்... ஏ.டி.டீ-43 ரகத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட ரகம், அதை விட 11 சதவிகிதம் அதிக மகசூல் கொடுக்கும். 105 முதல் 110 நாட்களில் மகசூல் கொடுக்கும். இந்த ரகத்தில் அதிகபட்ச மகசூலாக ஒரு ஹெக்டேரில் இருந்து 11 ஆயிரத்து 377 கிலோ பெறப்பட்டுள்ளது. தோராயமாக, ஏக்கருக்கு 60 முதல் 75 மூட்டை (60 கிலோ) வரை மகசூல் கொடுக்கும். குறுகிய காலப்பயிரான இதை நீலகிரி நீங்கலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பயிரிடலாம்’ என்ற அறிமுகத்துடன், 2013-ம் ஆண்டு இந்த நெல் ரகத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’

ஆனால், “இந்த ரகம், சாதாரண மழைக்கே அடியோடு சாய்ந்து விடுகிறது. 25 மில்லி மீட்டர் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் கீழே சாய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது’’ எனப் புகார் வாசிக்கிறார்கள், இதனால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்திருக்கும் மதுரை சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதிக்கப்பட்ட இடங்களில் வலம் வந்தபோது, நம்மிடம் பேசினார், கருப்பாயூரணியைச் சேர்ந்த தர்மராஜ். “நான் 40 வருஷமா விவசாயம் செய்றேன். அக்ரி ஆபீசருங்க ஆலோசனைப்படிதான் செய்வேன். நல்ல மகசூலும் எடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவங்க சொல்லித்தான் இந்த கோ-51 ரகத்தை 20 ஏக்கர்ல நடவு செஞ்சேன். பயிரெல்லாம் நல்லா செழும்பாதான் வந்துச்சு. பால் பிடிச்சு நெல்லெல்லாம் மணியாகுற நேரத்துல, காத்தோட ஒரு மழை வந்துச்சு. அந்த சின்ன காத்துக்குக் கூட தாங்காம அம்புட்டும் அடியோட சாய்ஞ்சுப் போச்சு.

‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’

சாஞ்ச கதிர்ல இருந்து நெல் முளைப்பு எடுத்துட்டதால மெஷின் வெச்சுக்கூட அறுக்க முடியலை. வைக்கோல்கூட தேறலை. எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம்” என்றார், வேதனையுடன். இதே கருத்தையே எதிரொலிக்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலரும்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விவசாய ஆர்வலர் சந்திரசூரியன், “கோ-51 ரகம் மிகவும் சிறப்பான ரகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கதிரின் எடை அதிகமா உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தண்டு இல்லை. தண்டு சிறியதாகவும், பலமில்லாமலும் இருப்பதால், பயிர் சாய்ந்து விடுகிறது. இதை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பிறகே விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகளுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்” என்று ஆக்கப்பூர்வமான யோசனையை முன்வைத்தார்.

மதுரை கிழக்கு பகுதி வேளாண்மைத் துறை துணை இயக்குநர் தனுஷ்கோடியிடம் இதுகுறித்து கேட்டபோது, “பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகுதான் விவசாயிகளிடம் விதைகளைக் கொண்டு சேர்க்கிறோம். இடையில் வந்த மழையால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இந்த ரகம் பல இடங்களில் அதிக மகசூலை ஈட்டி இருக்கிறது. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இப்பயிரின் சாயும் தன்மையை மட்டும் மறுஆய்வு செய்து விவசாயிகளிடம் கொண்டு வந்தால், இந்த ரகம் நிச்சயம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம்” என்றார்.

‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’

மதுரை, வேளாண் கல்லூரி முதல்வர் வேலாயுதத்திடம் பேசியபோது, “பல்வேறுபட்ட நிலத்தில் சோதனை மேற்கொண்டு திருப்தியான பிறகுதான் விவசாயிகளிடம் விதை கொண்டு செல்லப்பட்டது. இயற்கை மாற்றத்தால் இப்படி நடந்திருக்கலாம். அதற்காக இந்த ரகத்தை முழுமையாகக் குறை கூறிவிட முடியாது. மழை நின்றவுடன் தண்ணீரை வடித்திருந்தால் கதிர் முளைத்து இருக்காது. கோ-51 ரகத்தை முறையாகக் கையாண்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். இந்த ரகத்தை ஜூன், ஜூலையில் பயிரிடுவது நல்லது” என்று தன் தரப்பைச் சொன்னார்.

ஆராய்ச்சிகளைவிட, களத்தில் நிற்கும் விவசாயிகளின் அனுபவம்தான் நூறு சதவிகிதம் ஒரு பயிரைப் பற்றிய பார்வையைத் தரமுடியும் என்பதே உண்மை. எனவே, தமிழக அரசும், வேளாண்பல்கலைக்கழகமும் இந்த விஷயத்தை உடனடியாகக் கையில் எடுத்து, விவசாயிகளின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் முயற்சியில் இறங்குவதுதான் இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism