Published:Updated:

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

ஒன்றரை ஏக்கர்... மாதம் ரூ 18 ஆயிரம் வருமானம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

ஒன்றரை ஏக்கர்... மாதம் ரூ 18 ஆயிரம் வருமானம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

Published:Updated:

ஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அமைந்துள்ளது, மாத்தூர் கிராமம். ஒரு காலத்தில் கத்திரிக் காய்க்கு பெயர் பெற்ற ஊர். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தியதால் செலவுகள் அதிகரித்ததோடு... பூச்சி, நோய்த்தாக்குதலும் அதிகமாகி பெரும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கினர், இவ்வூரைச் சேர்ந்த விவசாயிகள். இதனால், படிப்படியாக கத்திரி சாகுபடியைக் கைவிட்டு விட்டு ‘பட்டன் ரோஜா’ (இதை பட்டுரோஜா என்றும் அழைப்பார்கள்)சாகுபடிக்கு மாறியிருக்கிறார்கள், இவர்கள். ஆரம்பத்தில் குறைவான அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி ரோஜா சாகுபடி செய்த இப்பகுதி விவசாயிகளில் பலர், தற்போது பட்டன் ரோஜாவுக்கும், இவற்றின் பயன்பாட்டை பல மடங்கு அதிகரித்து விட்டார்கள்.

இப்படி ரசாயன உரமும், பூச்சிக்கொல்லியும் கணக்கில்லாமல் புழங்கும் ஊரில்... ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் பட்டன் ரோஜாவை சாகுபடி செய்து சிறப்பான வருமானம் ஈட்டி, மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார், பிரதாபன்.

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயம் கொடுத்த ‘பயோ’... கைகொடுத்த ஜீரோ பட்ஜெட்!

தஞ்சாவூர் மலர் சந்தையில் சந்தித்த நம்மை, மாத்தூரில் உள்ள தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார் பிரதாபன்.

“இது களியும் மணலும் கலந்த இருமண் பாடு நிலம். இங்க எனக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. மூணரை ஏக்கர்ல வாழையும், ஒண்ணரை ஏக்கர்ல பட்டன் ரோஜாவும் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். அஞ்சு வருஷமா, இயற்கை முறையிலதான் பட்டன் ரோஜா சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல ‘பயோ’ங்கற பேர்ல கடைகள்ல விற்பனை செய்ற இடுபொருட்களைத்தான் வாங்கிப் பயன்படுத்தினேன். அது, விலை ரொம்ப அதிகம். ஆனா அதுக்கான பலனும் இல்லை. ரசாயனம் கலந்திருப்பாங்களோங்கிற சந்தேகமும் எனக்கு அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. அதனால, அதையெல்லாம் முழுமையா கைவிட்டுட்டு போன மூணு வருஷமா ஜீரோ பட்ஜெட் முறையில இடுபொருட்கள் தயார் பண்ணி பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இதுக்காகவே ரெண்டு உம்பளாச்சேரி மாடுகளை வளர்க்குறேன். இப்போ, வாழைக்கும் ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களைக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்ற பிரதாபன், தொடர்ந்தார்.

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

மண்ணெல்லாம் மண்புழு!

“என்னோட பட்டன் ரோஜா செடிகள் பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம ஆரோக்கியமா இருக்கிறதுக்கு காரணம், ஜீரோ பட்ஜெட் முறைதான். பூக்கள் நல்லா பார்வையா, வசீகரமான நிறத்துல இருக்கு. நீண்ட நேரத்துக்கு வாடாம, இதழ்கள் உதிராம இருக்கு. ஒரு வாரம் தண்ணீர் இல்லைனாலும் செடிகள் தாக்குப்பிடிக்குது. மண்ணு நல்லா ‘பொலபொல’னு மாறி நல்ல காற்றோட்டத்தோட இருக்கு. மண்ணுல நிறைய மண்புழுக்கள் உருவாகி இருக்கு.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி களோட பாதிப்புகளை நான் நேரடியா பார்த்தவன். எங்க ஊர் முழுக்கவே ஒரு காலத்துல கத்திரி சாகுபடி செழிப்பா நடந்துக்கிட்டு இருந்துச்சு. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு பூச்சி, நோய்த்தாக்குதலால மகசூல் ரொம்பவே குறைய ஆரம்பிச்சது. அதனாலதான், கத்திரி சாகுபடியை எல்லாரும் கைவிட ஆரம்பிச்சாங்க. மகசூல் குறைவுக்கு ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும்தான் காரணம்கிறதை பலரும் உணரவே இல்லை.
இப்போ, பட்டன் ரோஜா சாகுபடிக்கும் கூட அளவுக்கதிகமா ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளிக்கொட்டிக்கிட்டு இருக்காங்க. 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ரெண்டு மூட்டை டி.ஏ.பி போடுவாங்க. எட்டு நாளுக்கு ஒரு தடவை அஞ்சாறு வகையான பூச்சிக்கொல்லிகளை ஒண்ணா கலந்து தெளிப்பாங்க.

இயற்கை முறையை விட அதுல மகசூல் கொஞ்சம் கூடுதலா கிடைக்கும். ஆனால் செலவுக்கே அது சரியா போயிடும். இரண்டு, மூணு வருஷம் கூட செடிகள் தாங்காது. பூக்குறது குறைஞ்சிடும். அதையெல்லாம் விட மிகப்பெரிய பாதிப்பு... படிப்படியா மண்ணு மலடாகிறதுதான். இதுல நேரடியா அனுபவப்பட்டு பதறிப்போய்தான் இயற்கை விவசாயத்தைக் கையில எடுத்தேன். என்னோட மண் இனிமே எப்பவும் உயிர்ப்போட இருக்கும். எதிர்கால தலைமுறைகளுக்கும் என்னோட நிலம் வாழ்வு அளிக்கும். இயற்கையிலயும்  பட்டன் ரோஜா நல்லாவே விளையுது. ரசாயன விவசாயிகள் சம்பாதிக்கிற அளவுக்கு நானும் சம்பாதிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்” என்ற பிரதாபன் இயற்கை பட்டன் ரோஜா மூலம் ஈட்டும் வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

தினமும் 2,500 பூக்கள்!

“நடவு செஞ்ச ஆறு மாதத்திலிருந்து, ஒண்ணரை ஏக்கர்ல தினமும் 800 பூக்கள்ல இருந்து 1,000 பூக்கள் வரை கிடைக்கும். பத்து மாதங்களுக்குப் பிறகு தினமும் 2 ஆயிரம் பூக்கள் வரை கிடைக்கும். படிப்படியா மகசூல் அதிகமாகி, அதிகபட்சம் 5 ஆயிரம் பூக்கள் வரைக்கும் கூட கிடைக்கும். சராசரியா பார்த்தா... நடவு செய்த ரெண்டாவது வருஷத்தில் இருந்து தினமும் 2 ஆயிரத்து 500 பூக்கள் கிடைக்கும். 100 பூக்கள் குறைந்தபட்சம் 10 ரூபாய்ல இருந்து 80 ரூபாய் வரை விலை போகுது. 100 பூக்களுக்கு எப்படியும் 25 ரூபாய் விலை கண்டிப்பா  கிடைச்சிடுது. ஒரு மாசத்துக்கு சராசரியா 75 ஆயிரம் பூக்கள்னு வெச்சுக்கிட்டா... மாசம் 18 ஆயிரத்து 750 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல, பறிப்புக்கூலி, இடுபொருட்கள் செலவெல்லாம் கழிச்சா மாசத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் நிகர லாபமா கையில மிஞ்சும். பண்டிகை நாள், விசேஷ நாட்கள்ல அதிக விலைக்கு விற்பனையானா நமக்கு ஜாக்பாட்தான்” என்று சொன்ன பிரதாபன், நிறைவாக,

மணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா!

“பட்டன் ரோஜா பதியன் கன்றுகளை நிலத்துல ஊணுன மூணு மாசத்துக்கு உளுந்து அல்லது செண்டிப்பூவை (செண்டுமல்லி) சாகுபடி செய்யலாம். இதனால, தழைச்சத்து கிடைக்கிறதோட, உயிர்மூடாக்காவும் பலன் கொடுக்கும். நான் செண்டிப்பூதான் ஊடுபயிரா போடுவேன். செண்டியின் வேர்முடிச்சில் இருக்கிற ஒரு விதமான வாசனை நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துது. ஏக்கருக்கு 600 கிலோ செண்டிப்பூ மகசூலாச்சு. அது மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது.

செண்டியில பூ முடிஞ்சதும் செடிகளை மண்ணுக்குள்ள அமுக்கி விட்டுடலாம். விவசாயிகளுக்கு தினசரி வருமானம் வேணும்னா, அது பூ விவசாயம் மூலமாத்தான் கிடைக்கும். அதனால வாய்ப்பிருக்குறவங்க கொஞ்ச இடத்துலயாவது பூ விவசாயம் செய்தா, தினசரி செலவுகளை சுலபமா சமாளிக்கலாம்” என்று ஆலோசனையும் சொன்னார்.. 

தொடர்புக்கு,
பிரதாபன்,
செல்போன்: 98437-90737.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டன் ரோஜா சாகுபடி செய்யும் முறை குறித்து பிரதாபன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பாடமாக இங்கே... 

ஏக்கருக்கு 2,500 செடிகள்!

‘‘பட்டன் ரோஜா பதியன் (கன்று) ஊன்ற கார்த்திகைப் பட்டம் சிறப்பானது. களியும் மணலும் கலந்த இருமண் பாடு மற்றும் செம்மண் ஆகியவை ஏற்றவை. தேர்வு செய்த சாகுபடி நிலத்தில்... 3 சால் உழவு ஓட்டி பிறகு, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு இட்டு ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் ஓர் அடி அகலமும் அரையடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் நடுவில் அரையடி ஆழத்துக்கு குழி எடுத்து இரண்டடி இடைவெளியில் பட்டன் ரோஜா பதியன் கன்றுகளை ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 பதியன் கன்றுகளுக்கு மேல் ஊன்றலாம். பட்டன் ரோஜா நடவு வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். நிலத்தில் கன்றுகளை நடவு செய்த 15-20 நாட்களில் வேர் பிடித்து விடும். மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கிவிடும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீரோடு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும். 10 லிட்டர் மாட்டு சிறுநீரில், 5 கிலோ பசுஞ்சாணம், உரலில் இடித்த 5 கிலோ வேப்பிலை கலந்து 48 மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜா செடிகளின் மீது மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சிவிரட்டியாகவும் பலன் அளிக்கும். மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ கன ஜீவாமிர்தம் தூவ வேண்டும். ஒரு முறை பட்டன் ரோஜா நடவு செய்தால் 5 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். மூன்றாம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும், செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.