Published:Updated:

மரத்தடி மாநாடு: களங்களில் தேங்கும் தேங்காய்...ஏறும் எண்ணெய் விலை!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: களங்களில் தேங்கும் தேங்காய்...ஏறும் எண்ணெய் விலை!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

ருவமழையின் உபயத்தால், தோட்டத்துக்குப் போகும் வழியெல்லாம் பசுமை பூத்திருக்க... ரசித்துக் கொண்டே ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் வந்து சேர்ந்தனர். பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச அவசியம் இல்லாததால், ஏரோட்டிக்கு அன்று ஓய்வு. தேநீர் கடையில் வாங்கி வந்த பருப்பு வடையை சாப்பிட்டுக் கொண்டே இருவரும் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர, அன்றைய மாநாடு துவங்கியது.

‘‘பேப்பர், டிவி நியூஸ்னு எதுல பார்த்தாலும் வெள்ளத்தைப் பத்திதான் இருக்கு. சும்மா கொட்டுகொட்டுனு கொட்டித் தீர்த்துடுச்சே’’ என்றார், கண்ணம்மா.

‘‘வழக்கமான வடகிழக்குப் பருவமழைனு ஒரு தரப்புல சொல்றாங்க. ஆனா, இப்போ பெய்றது பருவமழை இல்லை. புயல், காற்றழுத்தத்தால பெய்ற மழைனும் சிலர் சொல்றாங்க. ஆனா, மாநிலம் முழுக்கனு பார்த்தா... மழை குறைவுதான். கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைனு கடலோர வட மாவட்டங்கள்லதான் அதிகமா மழை பெய்திருக்கு. தென் மாவட்டங்கள்ல எல்லாம் சொல்லிக்கிற அளவு இல்லை. உசிலம்பட்டி, கல்லுப்பட்டி பக்கமெல்லாம் ரொம்ப ரொம்ப குறைவாம்’’ என்ற வாத்தியார், தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரத்தடி மாநாடு: களங்களில் தேங்கும் தேங்காய்...ஏறும் எண்ணெய் விலை!

‘‘ஒவ்வொரு தடவை மழை பெய்றப்போவும், சென்னை, கடலூர் மாவட்டமெல்லாம் வெள்ளக்காடா மாறிப்போயிடுது. நாலு நாள் மழை பெய்தா அது சரியாகறதுக்கு நாப்பது நாள் ஆவுது. இருக்கிற ஏரி, குளங்களை எல்லாம் கட்டடமா மாத்தி வரத்து வாய்க்கால்களையும் ஆக்கிரமிச்சிருக்காங்க. இது பத்தி நாமளும் வருஷா வருஷம் பேசுறோம். நிறைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கரடியா கத்திக்கிட்டே இருக்காங்க. அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லை. வெள்ளம் ஓடுன ஊர்கள்ல கூட சில குளங்கள் நிரம்பாம கிடக்குதாம். அவ்வளவு தண்ணியும் கடல்லதான் கலந்திருக்கு’’ என்று கவலை பொங்கச் சொன்னார்.

‘‘மன்னராட்சினு சொன்னாலும், சர்வாதிகாரத்தையெல்லாம் தூரப் போட்டுட்டு, மக்களுக்கான ஆட்சி நடந்திருக்கு. மன்னர்களெல்லாம் ஏரி, அணைனு கட்டிக் கொடுத்திருக்காங்க. ஆனா, இப்போ மக்களாட்சினு சொல்லிக்கிட்டு, இருக்கிற நீராதாராங்களையெல்லாம் காலி பண்ணிட்டு இருக்கிறாங்க முடிசூடா மன்னர்களா சர்வாதிகாரம் பண்ணிக்கிட்டிருக்கிற அரசியல்வாதிங்க. சுதந்திர காலத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா மக்களோட அதிகாரமெல்லாம், அரசியல்வாதிங்க கைகளுக்குப் போயிடுச்சு. அரசாங்க பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரினு எல்லாத்தையும் குளத்துல கட்டுறாங்க. மதுரை உயர் நீதிமன்றக் கிளை இருக்கிறதே குளத்துலதான’’ என்றார், ஏரோட்டி.

‘‘போனது போகட்டும்... இனிமே இருக்கிற ஏரி, குளங்களையாவது அரசாங்கம் மீட்டு எடுக்கலாம்ல’’ என்று அப்பாவியாகக் கேட்டார், கண்ணம்மா.

‘‘அதுக்கெல்லாம் ஆண்டவங்களுக்கும் ஆள்றவங்களுக்கும் எங்க நேரம் இருக்கு? சொத்து வாங்கிக் குவிக்கிறதுக்கும் பஞ்சாயத்து பண்றதுக்குமே நேரம் போதலை. இருந்தாலும், சில மாவட்டங்கள்ல கலெக்டர்களே சொந்த முயற்சியில குளங்களை மீட்டு எடுக்கிற வேலைகளைச் செய்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அதுதான் கொஞ்சம் ஆறுதலான விஷயம்’’ என்று ஏரோட்டி சொல்ல, அதை ஆமோதித்த வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, காங்கேயம் பகுதிகள்ல ஆயிரக்கணக்கான கொப்பரைத் தேங்காய்

மரத்தடி மாநாடு: களங்களில் தேங்கும் தேங்காய்...ஏறும் எண்ணெய் விலை!

உலர்களங்கள் இருக்கு. அந்தப் பகுதிகள்ல தொடர்ந்து மழை பெய்றதால, தேங்காயைக் காய வைக்க முடியலையாம். அதனால, தேங்காய்கள்ல பூஞ்சணம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சாம். அப்படி வீணாகிட்டிருக்கிற பருப்போட மதிப்பு, கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவுக்கு இருக்குமாம். அதனால தேங்காய் எண்ணெய் ஆலைகள்லாம் முடங்கிக் கிடக்காம். அடுத்து கொப்பரை, தேங்காய் எண்ணெய் எல்லாம் விலை ஏறும்னு சொல்றாங்க” என்றார்.

‘‘உண்மையிலேயே வரத்து குறையுதோ இல்லையோ... இதைக் காரணம் காட்டியே மார்க்கெட்ல விலையை ஏத்திப்புடுவாய்ங்க’’ என்றார், கண்ணம்மா.

‘‘அதுதான அவங்களோட தொழிலே...’’ என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

‘‘மேட்டுப்பாளையம் பகுதியில காடுகளை ஒட்டி இருக்குற விவசாய நிலங்கள்ல அடிக்கடி காட்டு விலங்குகள் வந்து சேதம் பண்ணிடுதாம். அதுக்கு அரசாங்கம், உரிய முறையில இழப்பீடு கொடுக்கிறது இல்லையாம். அதனால, ‘விவசாய நிலங்களுக்குள்ள வர்ற விலங்குகளைச் சுட்டுக் கொல்றதுக்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கணும்’னு டாக்டர். சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கத்துக்காரங்க கோரிக்கை வைச்சிருக்கிறாங்க” என்றார்.

‘‘இந்த எல்லைப் பிரச்னைக்கு முடிவே இல்லை. இதுதான் காட்டோட எல்லை, இதைத் தாண்டிப் போகக்கூடாதுங்கிறதெல்லாம் விலங்குகளுக்கு என்ன தெரியும்... அதுகளுக்கு செடி, கொடி இருக்கிற இடமெல்லாம் வாழ்விடம்தான். இதுக்கு வேற வழியிலதான் தீர்வு தேடணும். சுட்டுக்கொன்னுட்டா இயற்கைச் சங்கிலி அறுந்து போயிடுமே’’ என்று சுற்றுச்சூழல் பற்றிய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய வாத்தியார்,

‘‘ஒரு முக்கியமான சேதி... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரா இருந்த கு.ராமசாமி, பதவிக்காலம் முடியவும், கொஞ்சநாளா புது துணைவேந்தர் இல்லாம இருந்துச்சு. இப்ப மறுபடியும் அதே ராமசாமியே துணைவேந்தரா நியமிக்கப்பட்டிருக்கார்’’ என்று தகவல் சொன்னார்.

வானம் இருட்டிக் கொண்டு தூறல் ஆரம்பிக்க, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.

‘உளவாளி’ மற்றும் ‘என் செல்லமே’ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism