Published:Updated:

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்!

பல்கலைக்கழக விஞ்ஞானியின் ஆலோசனை... காசி.வேம்பையன்

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்!

பல்கலைக்கழக விஞ்ஞானியின் ஆலோசனை... காசி.வேம்பையன்

Published:Updated:

மிழகத்தின் பல பாகங்களிலும் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த நெல் பயிர்களெல்லாம் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால், செய்வதறியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள். இந்நிலையில் வெள்ள நீர் வடிந்த பிறகு, கடைப்பிடிக்க வேண்டிய பயிர் மேலாண்மை முறைகள் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கக வேளாண்மைத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.சோமசுந்தரம்.

6 அங்குல உயரத்தில் வடிமடை!

“காவிரி டெல்டா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்துள்ள கனமழையால் நெல் வயல்களில் மழை நீர் அதிகமாகத் தேங்கி நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. மழைக்குப் பிறகு தேங்கி நிற்கும் மழை நீரை வடிக்கும்போது, ‘மண் வடிநீர்’ வெளியேறாத வண்ணம், 6 அங்குல உயரத்தில் வடிமடையை வைத்து, தண்ணீரை வடித்து விட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்!

வயலில் உள்ள நீரை முழுமையாக வடிக்கும்போது, மண்ணில் இருக்கும் கந்தகச்சத்தும், துத்தநாகச்சத்தும் குறைந்து போகக்கூடும். அதனால், இலைகள் வெளிர் நிறமாக மாறி, பயிரின் வளர்ச்சி குன்றி விடும். அங்கக வேளாண்மை முறையில் (இயற்கை வேளாண்மை முறையில்) நெல் பயிரிடும் நிலங்களில், இந்தப் பிரச்னை அதிகமாகத் தென்படுகிறது. இந்தப் பிரச்னையை, ‘முட்டை- வெங்காயக் கரைசல்’ தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தை, தமிழ்நாட்டில் உள்ள சில முன்னோடி இயற்கை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை, ரசாயனங்களுக்கு மாற்றாகப் பலவிதமான அங்கக விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் கண்டறிந்த ஒன்றுதான், முட்டை-வெங்காயக் கரைசல்.

தழைச்சத்துக்கு  முட்டை... கந்தகச்சத்துக்கு வெங்காயம்!

வயலில் நீர் அதிகமாக தேங்கும்போது, வேர் மூலம் தேவையான சத்துகளை பயிர் எடுத்துக்கொள்வது குறையும். அந்த சமயங்களில் இலைவழியாகச் சத்துகளைக் கொடுக்கும் போது... பயிர், விரைவாக பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்து விடும். முட்டையின் வெள்ளைக்கரு பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்தைக் கொடுக்கிறது. வெங்காயம் வெள்ளபாதிப்புகள் மற்றும் குளிரைத் தாங்கி வளருவதற்குத் தேவையான இரண்டாம்நிலை சத்தான கந்தகச்சத்தைக் கொடுக்கிறது.

முட்டை வெங்காயக் கரைசலில், 13 சதவிகிதம் புரதச்சத்து, கந்தகச்சத்து, மிதியோனைன், சிஸ்டீன்

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்!

ஆகியவை அமினோ வடிவத்தில் உள்ளன. மேலும், வெங்காயச்சாற்றில் ‘அல்லைல்’ கந்தகக் கூறுகள் ‘மைரோசைனஸ்’ எனும் வடிவத்தில் இருப்பதாலும், நெல்லில் தோன்றும் கந்தகக் குறைபாட்டை இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். எனவே, காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம்” என்ற சோமசுந்தரம் நிறைவாக,

“ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ள வயல்களில், மழைநீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்துடன், 80 கிலோ தூளாக்கப்பட்ட வேப்பங்கொட்டைத் தூளைக் கலந்து மேலுரமாக இட்டால், நல்ல பலன் கிடைக்கும். மேலும், பூச்சித்தாக்குதல் குறையும். பூச்சித்தாக்குதல் ஆரம்ப நிலையில் இருந்தால், 3 சதவிகித வேப்பெண்ணெய் அல்லது 5 சதவிகித வேப்பங்கொட்டைச்சாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் திரவ வடிவிலான சூடோமோனஸ் ப்ளுரஸன்ஸை கலந்து தெளிக்கலாம்” என்றார்.

தொடர்புக்கு,
ஏ.சோமசுந்தரம், 
தொலைபேசி: 0422-6611206.

மழைக்கால பயிர் பராமரிப்பு... கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்!

வடகிழக்குப் பருவமழை, தமிழகம் முழுக்க பரவலாகப் பெய்து வரும் சூழ்நிலையில், பலவகையான பூச்சி, நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை விளக்குகின்றார், கோவில்பட்டியில் உள்ள நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலரும், பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம்.

‘‘மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும்.

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்!

ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான்  தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், சாதாரண நடவு செய்த நிலங்களில் புகையான் அதிகமாகத் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நிலங்களில் முதலில் தண்ணீரை முழுமையாக வடித்துவிட வேண்டும்.

மழையில் பாதித்த பயிருக்கு முதலில் 10 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவையும்; வாரம் ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டியையும், வேப்பங்கொட்டை வெள்ளைப்பூண்டுக் கரைசலையும் மாற்றி மாற்றித் தெளித்து வந்தால், பயிரில் பூச்சித்தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிடலாம்.

 நெல் பயிரைத் தாக்கும், குலைநோய், பழுப்பு இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலை உறை அழுகல் நோய், இலை உறை கருகல் நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 10 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். நெல் ‘துங்ரோ’ நச்சுயிரி நோய், பூச்சி மூலமாகப் பரவும் நோய் என்பதால், பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலே இந்த நோய் கட்டுக்குள் வந்துவிடும்.

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழுக்கள் இவற்றை, ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை வெள்ளைப் பூண்டுக் கரைசலைத் தெளிக்கலாம். பொதுவாக இலைக்கருகல், பாக்டீரியா கருகல் நோய்த்தாக்குதல் இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் சூடோமோனஸ் கலந்து இலைவழியாகத் தெளிக்கலாம். கிழங்கழுகல் நோய், வேரழுகல் நோய் இருந்தால் ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை தண்ணீரில் கலந்துவிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்’’ என்றார்.

வேப்பங்கொட்டை வெள்ளைப்பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை 5 கிலோ, வெள்ளைப் பூண்டு அரை கிலோ இரண்டையும் சேர்த்து, அம்மியில் அரைத்தெடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, 10 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீரில் ஒருநாள் ஊறவைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி, 100 கிராம் காதிசோப்பைக் கரைத்து, 90 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கு போதுமானது.

முட்டை-வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி... லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும்.

10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்... கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும்.

இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்குகள் தேவைப்படும். தேவைப்பட்டால், இந்தக் கரைசலை ஒரு வார இடைவெளியில் மீண்டும் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தக் கரைசலுடன் 50 கிராம் சூடோமோனஸ் அல்லது 50 கிராம் வசம்புத்தூளைச் சேர்த்துத் தெளித்தால் நோய்களும் கட்டுப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism