Published:Updated:

என் செல்லமே...

செல்லப் பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

என் செல்லமே...

செல்லப் பிராணிகள் முதல் செல்வப் பிராணிகள் வரை...இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்... அள்ளிக்கொடுக்கும் வெண்பன்றிகள்...
குறைவான செலவில் நிறைவான லாபம்!

டு, கோழி இறைச்சிக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாவது, வெண்பன்றி இறைச்சிதான். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வெண்பன்றிக்கான சந்தை வாய்ப்பு பரவலாக இருப்பதால், வெண்பன்றி வளர்ப்பும் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்வத்தோடு வளர்ப்பவர்கள் பலரும் அதில் லாபம் ஈட்டி வருகிறார்கள். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலூகா, பொட்டல்பட்டியில் உள்ள சுப்பிரமணியன், அவர்களில் ஒருவர்.

தன் பண்ணையில், பன்றிகளுக்கு காலை உணவு வைத்துக்கொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் செல்லமே...

“அப்பா விவசாயக் கூலி. வீட்டுக் கஷ்டத்துனால மூணாம் வகுப்புக்கு மேல படிக்க வைக்க முடியலை. சின்ன வயசுல இருந்தே கிடைக்கிற விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டேன். எங்க ஊர்ல ஒருத்தர், ‘திருப்பரங்குன்றம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துல ஆடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்புனு பயிற்சிகள் நடத்துவாங்க’னு சொன்னார். அதுல கலந்துக்கிட்டப்போ, ஒவ்வொரு கால்நடை வளர்ப்பைப் பற்றியும் விளக்கினாங்க. எனக்கு அதுல வெண்பன்றி வளர்ப்பு லாபகரமா தெரிஞ்சுது. அதைத் தெரிஞ்சுக்கிட்டு வந்து ‘பன்றி வளர்க்கப் போறேன்’னு வீட்டுல சொன்னதும், கேலி பேசுனாங்க” என்ற சுப்பிரமணியன், தொடர்ந்தார்.

“ஆனாலும், என் முடிவை மாத்திக்கலை. ஊருக்கு வெளியே இருந்த என்னுடைய 16 சென்ட் நிலத்துல சின்னதா ஓலைக் கொட்டகை போட்டேன். கருப்பாயூரணி கிராமத்துல இருந்து 8 பெண் பன்றிகள், 2 ஆண் பன்றிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். வீட்டுல யாரோட ஒத்துழைப்பும் இல்லாததால தனியாவே கவனிச்சுக்கிட்டேன். இப்போ 8 வருஷமாச்சு. எங்கிட்ட இனப்பெருக்க நிலையில் 18 பெண் பன்றிகளும், 4 ஆண் பன்றிகளும் இருக்கு. இதன் மூலமா கிடைக்கிற குட்டிகளைத்தான் விற்பனை செய்துக்கிட்டு இருக்கேன்.

விற்பனைக்குத் தயாரா 80 குட்டிகள் இருக்குது. ஆரம்பத்துல கேலி பேசினவங்க எல்லாம் எனக்கு கிடைக்கிற வருமானத்தைப் பார்த்து வாயடைச்சுப் போய் இருக்காங்க” என்ற சுப்பிரமணியன், வருமானம் பற்றிச் சொன்னார்.

“பன்றிகள் வருஷத்துக்கு ரெண்டு முறை ஈனும். ஒரு ஈத்துக்கு சராசரியாக ஒரு பன்றி, 8 குட்டிகள் ஈனும். என்கிட்ட இருக்குற 18 தாய்ப்பன்றிகள் மூலம் ஒரு ஈத்துக்கு சராசரியா 144 குட்டிகள் கிடைக்குது. வருஷத்துக்கு 288 குட்டிகள். இறைச்சித் தேவைக்காக சாதாரண தீவனங்கள் கொடுத்து வளர்க்கும்போது, ஆறு மாசத்துல ஒவ்வொரு குட்டியும் நாற்பது கிலோவுல இருந்து அம்பது கிலோ வரை எடை வரும். சராசரியா 45 கிலோ எடை வந்துடும். பன்றிகளை உயிர் எடைக்கு ஒரு கிலோ 70 ரூபாய்ல இருந்து 100 ரூபாய் வரை எடுத்துக்கிறாங்க. எப்படிப் பார்த்தாலும் 70 ரூபாய்க்குக் குறையாது. 

என் செல்லமே...

குறைச்சலா வெச்சுக்கிட்டாலும், 288 குட்டிகள் மூலமா உயிர் எடைக்கு 12 ஆயிரத்து 960 கிலோ வரும். அதை கிலோ 70 ரூபாய்னு விற்பனை செய்றப்போ, 9 லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, தீவனச்செலவு, மருத்துவச்செலவு, பராமரிப்புச்செலவு, வேலையாள் கூலி, என்னுடைய சம்பளம்னு 4 லட்ச ரூபாய் செலவானாலும், வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். புதுசா பண்ணை வைக்கிறவங்களுக்கு உயிர் எடை கணக்குல இல்லாம உருப்படி கணக்குல விற்பனை செய்வேன். அப்போ சின்னக் குட்டிகளே 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். கிராமங்கள்ல திருவிழா காலங்கள்ல இறைச்சி அதிகமா தேவைப்படுறப்போ விலை அதிகரிக்கும். எப்படிப் பார்த்தாலும் எனக்கு வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்.

வியாபாரிகளே தேடி வர்றாங்க!

நான் வளர்க்கிற பன்றிகள் சென்னை, கேரளா, பெங்களூர், ஆந்திரா மாநிலங்கள் வரை விற்பனையாகுது. வியாபாரிகளே என்கிட்ட போன்ல பேசிட்டு என் இடத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க. அதில்லாம இறைச்சிக்காக உள்ளூர்லயும், பக்கத்து மாவட்டங்கள்லயும் இருந்து வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. நாளுக்கு நாள் பன்றி இறைச்சிக் கடைகள் அதிகமாயிட்டு வர்றதுனால விற்பனைக்குப் பிரச்னையே இல்லை” என்ற சுப்பிரமணியன் நிறைவாக,

“தொழில்ல எந்தக் கேவலமும் கிடையாது. அப்படி யோசிக்க ஆரம்பிச்சா சம்பாதிக்க முடியாது. நமக்கு இது சரியா வரும்னு நம்பிக்கை வந்துட்டா யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை. தன்னம்பிக்கையோட இறங்கி வேலை பார்த்தா, கண்டிப்பா லாபம் நிச்சயம். நான், ஆரம்பத்துல மத்தவங்க பேச்சைக் கேட்டிருந்தா இன்னிக்கும் யார்கிட்டயாவது வேலை செஞ்சுதான் பிழைச்சுக்கிட்டு இருக்கணும்.
சின்ன இடத்துல 4 பெண் பன்றிகள், ஒரு ஆண் பன்றினு வெச்சு பண்ணையை ஆரம்பிச்சாலே போதும். வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை நிச்சயமா லாபம் சம்பாதிக்க முடியும்” என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி விடைகொடுத்தார்.

-வளர்ப்போம்

தொடர்புக்கு,
சுப்பிரமணியன்,
செல்போன்: 99435-51733.

• உலகத்திலேயே சீனர்கள்தான் அதிக அளவில் பன்றி இறைச்சியை உண்கிறார்கள். ஐரோப்பா, அமெரிக்கா, பசிபிக் தீவு, தென்கிழக்காசிய நாடுகளிலும் அதிகளவில் பன்றி இறைச்சி உண்ணப்படுகிறது.

• மனிதர்களால் முதன்முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்டது பன்றி. காடுகளில், கிழங்குகளைத் தோண்டி எடுக்க மனிதர்களுக்கு பன்றிகள் உதவியிருக்கின்றன. பன்றிகள் நிலத்திலுள்ள கிழங்குகளைத் தோண்டிப் போட்ட பிறகு, அந்த நிலங்களில் உழுவதும், விதைப்பதும் எளிதாக இருந்ததாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

• பெரிய வெள்ளை யார்க்ஷயர், பெர்ஷயர், லாண்ட்ரே, டியூராக், ஷாம் ஷயர், டாம் ஒர்த் போன்ற வெண்பன்றி இனங்கள் பல உண்டு. யார்க்ஷயர் இனம்தான் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

• பன்றி வளர்ப்பவர்கள் பலர், ஹோட்டல், திருமண மண்டபங்களில் கழிவான இலைகள் மற்றும் உணவுக் கழிவுகளைச் சேகரித்து பன்றிகளுக்கு தீவனமாகக் கொடுக்கின்றனர். அதனால், பன்றிகளுக்கு நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. பச்சை வாழை இலைகளை மட்டுமே கொடுக்க வேண்டும். ஹோட்டல் கழிவுகளைத் தவிர்த்து காய்கறிகள், புற்களைப் போடுவது நல்லது.    

• காய்கறிகள், புற்களை இறைச்சியாக மாற்றும் இயந்திரம் ‘பன்றி’ என்கிறார்கள், கால்நடை மருத்துவர்கள்.

• மூலநோய்க்குத் தீர்வாக, பன்றி இறைச்சி சாப்பிடும் பழக்கமும் உண்டு.

புதிய பன்றிகளைத் தனிமைப்படுத்துதல் அவசியம்!

என் செல்லமே...

பண்ணைக்குப் புதிதாக வாங்கி வரும் பன்றிகளை இரண்டு வாரங்கள் தனி அறைகளில் அடைத்து வைத்து தடுப்பூசிகள் போட்ட பிறகே நம் பண்ணையில் உள்ள பன்றிகளோடு சேர்த்து அடைக்க வேண்டும். இல்லாவிடில், தொற்றுநோய்கள் தாக்கலாம். பண்ணையில் நோய் ஏற்பட்ட பன்றிகளை தனியே பிரித்து விடவேண்டும். உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம்.

பன்றிகள் தேர்வில் கவனம் தேவை!

இனப்பெருக்கத்துக்காக பன்றிகள் வாங்கும்போது... பெண் பன்றி 6 மாத வயதில் குறைந்தது 90 கிலோ எடையும், ஆண் பன்றி 6 மாத வயதில் குறைந்தது 100 கிலோ எடையும் இருக்க வேண்டும். பெண் பன்றிகளுக்கு சரியான இடைவெளியில் 10 முதல் 12 மடிக்காம்புகள் இருக்க வேண்டும். அதற்கும் குறைவான மடிக்காம்புகள் இருக்கும் பெண்பன்றிகளைத் தேர்வு செய்ய வேண்டாம். தேர்வு செய்யப்படும் பன்றிகளின் உடல் நீண்டும் தசைகள் திரட்சியாகவும், கால்களும், கால் குளம்புகளும் நன்றாக இருக்க வேண்டும்.

மருத்துவம் அவசியம்!

ரத்தசோகை ஏற்படாமலிருக்க குட்டிப் போட்ட 5 முதல் 10-ம் நாளுக்குள் கால்நடை மருத்துவர் மூலம் இரும்புச்சத்துக்கான ஊசி போட வேண்டும். 10 முதல் 15-ம் நாளுக்குள் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். பிறந்த 6 மாதத்தில் இருந்து, ஆண்டுக்கு ஒரு முறை பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். 40 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

6 மாதத்துக்கு ஒரு முறை இனப்பெருக்கம்!

பெண் பன்றிகள் ஒருவித உறுமல் சத்தத்துடன் தீவனம் எடுக்காமல், அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். இனப்பெருக்க உறுப்பு சிவப்பு நிறத்தில் தடித்தும், சற்று விரிந்தும் இருக்கும். காதுகள் விரைக்கும். இப்படி இருந்தால், அது சினைப்பருவத்துக்கான அறிகுறி. சினைப்பருவ காலத்திலுள்ள பன்றிகளின் முதுகை அழுத்தினால், ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கும். பருவத்துக்கு வந்த பெண் பன்றிகளின் அருகில் ஆண் பன்றிகளைக் கொண்டு செல்லும்போதும் இந்த அறிகுறிகளை பெண் பன்றிகள் வெளிப்படுத்தும். இந்த சமயத்தில் இணை சேர்க்க வேண்டும். ஆண், பெண் பன்றிகளை தனி அறையில் இரண்டு நாட்கள் விட்டால் இணை சேர்ந்து விடும். 10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண் பன்றி என்ற விகிதத்தில் பராமரிக்க வேண்டும். பெண் பன்றிகள் ஆறு மாத வயதில் பருவத்துக்கு வரும். முதல் முறை பருவத்துக்கு வரும்போது  இணைசேர்க்கக் கூடாது. இரண்டாவது பருவத்தில் இணைசேர்க்கலாம்.

என் செல்லமே...

பெண் பன்றிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை குட்டி ஈனும். பன்றியின் சினைக்காலம் 114 நாட்கள் (அதாவது 3 மாதம், 3 வாரம், 3 நாள்). இணை சேர்ந்த 109 முதல் 120 நாளுக்குள் குட்டிகளை ஈன்று விடும். இணைசேர்த்த நாளில் இருந்து 109-ம் நாளுக்கு மேல் சினைப்பன்றிகளை தனி அறையில் வைத்து கவனமாகப் பராமரிக்க வேண்டும். குட்டி ஈனுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே சினைப்பன்றி சரியாக இரை எடுக்காமல், ஒரே இடத்தில் அசைவின்றிப் படுத்திருக்கும். ஒரே ஈத்தில் 8 முதல் 13 குட்டிகள் வரை போடும். குட்டி பிறந்த அன்றே ஆண், பெண் அடையாளம் காண முடியும். குட்டிகள் ஈன்ற 45 முதல் 50 நாட்கள் வரை தாய்ப் பன்றியிடம் பால் இருக்கும். அதன் பிறகு குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விட வேண்டும். குட்டிகளைப் பிரித்த 10 முதல் 20 நாட்களுக்குள் தாய்ப் பன்றி, மீண்டும் சினைக்குத் தயாராகி விடும்.

காலையில் பசுந்தீவனம்... மாலையில் கலப்புத் தீவனம்!

காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் வாழைக்காய், பூசணிக்காய், பீட்ரூட், சுரைக்காய் ஆகிய காய்கறிகளில் ஏதாவது ஒன்றை பெரிய பன்றிகளுக்கு தலா 3 கிலோ அளவிலும்; சிறிய பன்றிகளுக்கு தலா ஒரு கிலோ அளவிலும்; குட்டிகளுக்கு அரை கிலோ அளவிலும் கொடுக்க வேண்டும். காய்கறிகள் தவிர, சோளம், மக்காச் சோளம், தட்டை ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

என் செல்லமே...

காலை தீவனம் கொடுத்த ஒரு மணி நேரம் கழித்துத்தான் அறைகளில் வைக்கப்பட்டுள்ள சிறிய தொட்டிகளில் தண்ணீர் வைக்க வேண்டும். மதிய உணவு தேவையில்லை. மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் நெல் தவிடு 30 கிலோ, அரிசி மாவு 15 கிலோ, மக்காச்சோள மாவு 5 கிலோ, கோதுமை மாவு 13 கிலோ, உப்பு ஒரு கிலோ, தாதுஉப்பு பொடி ஒரு கிலோ ஆகிய 65 கிலோ கலவையை 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி கூழ் பதத்துக்குப் பிசைந்து தீவனத் தொட்டிகளில் ஊற்றி விட வேண்டும். இதைச் சாப்பிடும்போது, விரைவில் பன்றிகளின் எடை கூடும். இது பத்து பன்றிகளுக்கு போதுமானதாக இருக்கும்.

பன்றியின் தேவையைப் பொறுத்து அளவைக் கூட்டிக் கொள்ளலாம். இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளுக்கு இது போதுமானது. இனப்பெருக்கத்துக்காக வளர்க்கப்படும் பன்றிகளுக்கு அதிகளவில் அடர்தீவனங்கள் கொடுத்து தனிக்கவனம் செலுத்திப் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் அதிக எடையுடன் வலிமையாக வளரும்.

கொட்டகை முறையே சிறந்தது!

பண்ணைகளில் வலை அடித்து பகலில் மேய்ச்சலுக்கு விட்டு, இரவில் கொட்டகையில் அடைத்து வளர்க்கிறார்கள். ஆனால், முழுவதுமாக கொட்டகையில் அடைத்து வளர்ப்பதுதான் சிறந்தது. கொட்டகை முறையில் பன்றிகளுக்குச் சோர்வு, செரிமான பிரச்னை உள்ளிட்ட நோய்களை எளிதாகக்  கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு பன்றியையும் தனித்தனியாகவும் கவனிக்க முடியும். தண்ணீர் அதிகம் தேங்காத, சொதசொதப்பான இடத்தைத் தவிர்க்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையாக தென்னைங்கீற்று, ஆஸ்பெஸ்டஸ் ஷீட்கள், இரும்புத் தகடு ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொட்டகைக்குள் காற்றோட்டமும் அவசியம். நாம் வளர்க்கும் பன்றிகளின் எண்ணிக்கைக்கேற்ப கொட்டகையின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.

என் செல்லமே...

குட்டி ஈனும் நிலையில் உள்ள பெண் பன்றிகளுக்கும், ஆண் பன்றிகளுக்கும் பத்தடிக்கு பத்தடி அளவுள்ள தனித்தனி அறை ஒதுக்க வேண்டும். தாய்ப்பன்றிகள், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பன்றிகளுக்கு எட்டடிக்கு எட்டடி உள்ள அறை தேவை. பன்றிகளைக் குளிப்பாட்டிய தண்ணீர், சிறுநீர் ஆகியவை அறைக்குள் தேங்காமல் இருக்குமாறு சரிவாகவும், பன்றிகள் வழுக்கி விடாமல் இருக்க, சொரசொரப்பாகவும் தரைப் பகுதி இருக்க வேண்டும்.     

தினமும் காலையில் பன்றிக்கழிவுகள், தீவனக்கழிவுகளை அகற்றிவிட்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, பன்றிகளைக் குளிப்பாட்ட வேண்டும். தினமும் காலையில் பன்றிகளைக் குளிப்பாட்டுவது அவசியம். குளிப்பாட்டிய பிறகே காலைத்தீவனம் வைக்க வேண்டும். ஒவ்வொரு வேளை தீவனம் கொடுக்கும்போதும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும். குடிப்பதற்கு வைக்கும் தண்ணீரை காலை, மதியம், மாலை மற்றும் இரவு என நான்கு வேளைகளும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism