Published:Updated:

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

விருதுகளைக் குவிக்கும் நாகரத்தின நாயுடு!த.ஜெயகுமார், படங்கள்: கே.கார்த்திகேயன்

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

விருதுகளைக் குவிக்கும் நாகரத்தின நாயுடு!த.ஜெயகுமார், படங்கள்: கே.கார்த்திகேயன்

Published:Updated:

டந்த 26 ஆண்டுகளாக விவசாயம் செய்து... இயற்கை விவசாயத்தின் புகழை அமெரிக்கா வரை பரப்பியிருக்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாகரத்தின நாயுடுவின் அனுபவங்கள் குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

கைகொடுக்கும் கலப்புப் பயிர் சாகுபடி!

உணவு இடைவேளைக்குப்பின் பப்பாளி, மாமரங்களைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், நாகரத்தின நாயுடு. “இப்போ ஒரு ஏக்கர்ல தனியா பப்பாளி இருக்கு. மா மொத்தமா 5 ஏக்கர்ல இருக்கு. அதுல ரெண்டு ஏக்கர் மாந்தோப்பில் ஊடுபயிரா பப்பாளி கத்திரி, சோளம், புளிச்சக்கீரை, தோசைக்காய், ரோஜாச் செடிகள், அழகுச் செடிகள், தீவனப் புல் எல்லாம் இருக்கு. தென்னை, வாழைகளுக்கிடையில் ஊடுபயிரா அழகுச் செடிகள், புளிய மரங்கள், கொய்யா, சீத்தா, சாத்துக்குடினு 2 ஏக்கர் அளவுக்கு இருக்கு. நெல் அரை ஏக்கர்ல இருக்கு. பீர்க்கன் 25 சென்ட்லயும் வெண்டை 25 சென்ட்லயும் இருக்கு. நிலக்கடலை பயிர் செய்றதுக்காக 3 ஏக்கரை விட்டு வெச்சிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

வழக்கமா 3 ஏக்கருக்குக் குறையாம நெல் பயிரிடுவேன். இந்தமுறை தண்ணீர் பற்றாக்குறையால அரை ஏக்கர்லதான் நெல் போட்டிருக்கேன். 20 சென்ட்ல ஒற்றை நாற்று நடவு முறையிலயும், 30 சென்ட்ல வழக்கமான முறையிலயும் நடவு போட்டிருக்கேன். ஒற்றை நாற்று நடவு முறையில ஒரு செடியில் 37 கிளைகள் வரை கிளைக்குது. ஏக்கருக்கு சராசரியா 70 மூட்டை அளவுக்கு நெல் மகசூலாகுது.

ஒன்றரை வருஷமாத்தான் பப்பாளி சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றேன். ரெட் லேடி ரகத்தைத்தான் போட்டிருக்கேன். இதுக்கான நாற்றுக்களை நானே தயார் பண்ணிக்குவேன். எப்போதும் ஒரே மாதிரியான பயிர்கள் இல்லாம, கலப்புப் பயிர்களாக செய்றதுதான் வழக்கம். அதனாலதான் பப்பாளியையும் சேர்த்துக்கிட்டேன்” என்ற நாகரத்தின நாயுடு, தொடர்ந்தார்.

ஊடுபயிர்களாக அழகு மலர்கள்!

“ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்த மண்ணிலும் எந்த வகையான பயிர்களையும் விளைவிக்க முடியும் என்பதற்கு இந்த பல்லுயிர் தாவரத் தோட்டமே உதாரணம். பண்ணையில சில இடங்கள்ல குறைந்த தட்பவெப்பநிலையை உருவாக்கி... குறைந்த வெப்பநிலையில் வளரக்கூடிய காபி, மிளகுச் செடிகளைக்கூட வளர்க்கிறேன். ஆரம்பத்துல தென்னை, வாழையை நடவு செய்து அதுல ஊடுபயிர்களா அழகுச் செடிகளைப் போட்டேன். இப்போ, தென்னை, வாழை வெளிய தெரியாத அளவுக்கு ஊடுபயிர்கள் வளர்ந்து நிக்குது. இங்கு இருக்கிற எல்லா அழகுச் செடிகளும் வர்த்தக ரீதியாக விற்பனையாகக் கூடியவைதான். சில மலர்களை நேரடியா விற்பனை செய்துடுவேன். சில மலர்களை பொக்கே, அலங்கார வளைவுகள் செய்தும் விற்பனை செய்றேன்.

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

மூடாக்குக் கொடுக்கும் ஈரப்பதம்!

ஹெலிகோனியா ஹேங்கிங், பேர்ட் ஆஃப் பாரடைஸ், ஆர்னமெண்டல் ஜிஞ்சர், ஷோவர் ஜிஞ்சர், லேடி ஹெலிகோனியா, ஷாம்பூ ஜிஞ்சர், ஜெர்பரா, லேடி லேஸ், ஹெலிகோனியா பேட், ரெட் ஜிஞ்சர், கிளாடியோலி, டார்ச் ஜிஞ்சர், ஜிப்சோபிலா, ஆஸ்பிரா கிராஸ், துஜா, அழகு மாதுளைப் பூ, ஃபுட்பால் ஃப்ளவர் என பலவித மலர்களைப் பயிர் செய்றேன். இதுக்கெல்லாம் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன். மரங்கள், செடிகள்ல இருந்து உதிருற இலைகளை அப்படியே மூடாக்கா போட்டுடுவேன். அதனால் தோட்டம் முழுக்க எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கும். இலைகள் மட்கி உரமாவும் மாறிடும். என்னை ஒரு வெற்றிகரமான விவசாயியா மாத்துனதில், இந்த அழகு மலர்களுக்கு முக்கிய பங்கு இருக்கு.

பருவம் தப்பாமல் பனங்கிழங்கு!

பண்ணை முழுவதும் மாமரங்கள் விரவி இருந்தாலும் மொத்தமா பார்த்தா, 140 மரங்கள்தான் மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், பெங்களூரா, ஸ்வர்ணரேகா...னு 20 ரகங்கள் இருக்கு. இதைத்தவிர 50 பனைமரம், 40 முருங்கை, 10 கொய்யா, 10 தேக்கு, 10 சீத்தா, 3 புளிய மரம், 1 சந்தன மரம், 1 செம்மரம்னு மரங்களையும் நட்டிருக்கேன்.

சீசன் சமயங்கள்ல பனைமரத்தில் பழுத்த பழங்களை விதைச்சு பனங்கிழங்குகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வேன். சீத்தாப்பழம், முருங்கை, புளி எல்லாத்துலயும் நல்ல மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்குது” என்ற நாகரத்தின நாயுடு, காய்கறிப் பயிர்கள் இருந்த நிலத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

சின்னச்சின்ன கருவிகளே போதும்!

“முன்னாடி பசுமைக்குடில் அமைச்சு, காய்கறிகள் உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருந்தேன். இப்போ, வழக்கமான முறையிலதான் பீர்க்கன், வெண்டை காய்கறி சாகுபடி செய்றேன். மாமரங்களுக்கு இடையில ஊடுபயிரா தக்காளி, கத்திரி, மிளகாய், புளிச்சக் கீரைனு பயிர் பண்ணிடுவேன். தென்னந்தோப்புல கறிவேப்பிலை ஊடுபயிரா இருக்கு. காய்கறிகளை நடவு பண்ணிட்டுத்தான் தண்ணீர் கட்ட பாத்தி அமைப்பேன். காய்கறி வயல், நெல வயல்கள்ல களை எடுக்க, ஒற்றை நாற்று நடவு முறைக்கு கயிறு கட்டி குறி போடுறதுக்கு எல்லாம் சின்னச்சின்ன கருவிகளைத்தான் பயன்படுத்துறேன்.

ஒரு லிட்டர் பால் 42 ரூபாய்!

பண்ணையில் 5 பெரிய மாடுகள், 8 வளந்துட்டு இருக்கிற கன்றுகள்னு சேர்த்து மொத்தம் 13 மாடுகள் இருக்கு. இப்போதைக்கு ஒரு மாடுதான் பால் கொடுக்குது. 3 மாடுகள் சினையில இருக்கு. கிடைக்கிற பாலை ஒரு லிட்டர் 42 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விட்டுடுவேன். பட்டியில அடைக்கிறப்போ, பசுந்தீவனம் மட்டும்தான் கொடுப்பேன். வேற தீவனங்கள் கொடுக்கிறதில்லை. இந்த மாடுகள் மூலமா, விவசாயத்துக்குத் தேவையான சாணமும் சிறுநீரும் எனக்குக் கிடைச்சிடுது” என்ற நாகரத்தின நாயுடு, ஒவ்வொரு பயிர் மூலமாகவும் தான் எடுத்து வரும் வருமானத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.  

அவையெல்லாம் அடுத்த இதழில்...

தொடர்புக்கு,

செல்போன்: 094404-24463.

ஒற்றை நாற்று நடவு முறையில் நெல் சாகுபடி...

நாகரத்தின நாயுடுவின் நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள்...

“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை 3 சால் உழவு செய்து 4 டிராக்டர் எருவைக் கொட்டிக் கலைத்து விட வேண்டும்.  பிறகு, நிலம் முழுவதும் ஈர்க்குகளோடு கூடிய வேப்பிலையைத் தூவி விட வேண்டும். அடுத்து, காய்ந்த இலை-தழைகளை அரை டன் அளவுக்கு நிலத்தில் இட்டு, சில நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, நிலத்தை சமன் செய்து சேறாக்க வேண்டும். பிறகு 25 சென்டி மீட்டர் இடைவெளியில் குறி போடும் கருவியை உருட்டினால், சதுரமாக குறி விழும். அந்தச் சதுரத்தின் முனைகளில் ஒரு குத்துக்கு ஒரு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கட்ட வேண்டும்.

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

10, 30 மற்றும் 45-ம் நாட்களில் கோனோ வீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். களையெடுத்த மறுநாள், 100 கிலோ மண்புழு உரத்தை வயல் முழுவதும் தூவ வேண்டும். 20-ம் நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இப்படிப் பராமரித்தால், பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. ஏதேனும் பூச்சிகள் தென்பட்டால்... 20 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் புளித்த மோரைக் (நான்கு நாட்கள் புளித்தது) கலந்து தெளிக்கலாம். நீம் அஸ்திரம் பயன்படுத்தியும் பூச்சிகளை விரட்டலாம்.

நெய் கலந்த ஜீவாமிர்தம்!

வழக்கமான முறையில் இல்லாமல் நெய் கலந்த ஜீவாமிர்தம் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார், நாகரத்தின நாயுடு. அதைத் தயாரிக்கும் முறை இங்கே...

10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ புற்று மண், அரை கிலோ நெய், ஒன்றரை கிலோ கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சாணத்தையும் நெய்யையும் கலந்து நன்றாகப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்து அதோடு, மாட்டுச் சிறுநீர், வெல்லத்தைச் சேர்த்து கலக்க வேண்டும். பிறகு, கடலை மாவையும் சேர்த்துக் கலக்கி 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து... காலையிலும் மாலையிலும் கலக்கி வந்தால், இரண்டு நாட்களில் ஜீவாமிர்தம் தயாராகி விடும்.

நாற்று நடவு முறையில் பப்பாளி!

ஏக்கருக்கு 70 மூட்டை நெல்...

நாகரத்தின நாயுடுவின் பப்பாளி சாகுபடி...பப்பாளியை நாற்றுகளாக வளர்த்து நடவு செய்வதுதான் நல்லது. 40 பங்கு சாணம், 40 பங்கு மண், 10 பங்கு மண்புழு உரம், 5 பங்கு கனஜீவாமிர்தம், 5 பங்கு நீம் பவுடர் ஆகியவற்றைக் கலந்து குழித்தட்டுக்களில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு, பப்பாளி விதையை விதைத்து, தினமும் தண்ணீர் தெளித்து வந்தால்... 15 நாட்களில் முளைத்து வரும். 60 நாட்களுக்குள் பறித்து நடவு செய்யலாம்.

ஒன்றரை அடி சதுரத்தில் ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... ஒவ்வொரு குழியிலும் ஒரு கைப்பிடி வேப்பிலை, 50 கிராம் நீம் பவுடர், ஒரு கிலோ சாணம், தோண்டிய மண் ஆகியவற்றைக் கலந்து குழியில் நிரப்பி செடியை நட வேண்டும். தொடர்ச்சியாக பாசன நீருடன் ஜீவாமிர்தம் கொடுத்து வர வேண்டும். களைகள் மண்டும்போது அவற்றை அகற்றி ஒவ்வொரு செடிக்கும் கைப்பிடி அளவு மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism