Published:Updated:

மரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

தொடர்ச்சியாகப் பெய்த மழையில் ஏரியின் கரை உடைந்து, ஓடையில் கரை தழும்ப வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. ‘வழக்கமான பாதைதானே’ என்று ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் மாட்டு வண்டியை ஓடைக்குள் செலுத்த, சக்கரம் சேற்றில் மாட்டிக் கொண்டது. அந்த நேரம் மழை வலுக்க ஆரம்பிக்க... வண்டியை மீட்டு வருவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விட்டது. மாட்டு வண்டியிலேயே ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் ஏறி அமர்ந்து குடைபிடித்துக் கொள்ள மூவரும் ஒரு வழியாகத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.

“மழை விட்டுடுச்சுனு நினைச்சா, திரும்பத் திரும்பப் பின்னி எடுக்குதேங்கய்யா” என்றார், காய்கறி.

“எப்படி விடும்... ‘ஐப்பசி மாசம் அடைமழை... கார்த்திகை மாசம் கனமழை’னு அந்தக் காலத்துலேயே சொல்லி வெச்சிருக்காங்க. நாமதான் அதை மறந்திட்டோம். புயல்னால வருதோ, பருவ மழையோ, டி.வியில நம்ம ரமணன் சொல்ற மாதிரி காற்றழுத்தத் தாழ்வால பெய்ற மழையோ... நாமதான் ஐப்பசி, கார்த்திகை மாசங்கள்ல சுதாரிப்பா இருக்கணும். நம்ம ஊர்ல இன்னிக்கு சாயங்காலம் இந்த வெள்ளம் வடிஞ்சிடும். மழை விட்டால் ரெண்டு மணி நேரத்துல ஓடையில தண்ணி ஓடிப் போயிடும். நம்மளுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கு. சென்னை மக்கள் எல்லாம் எவ்வளவு பாவம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

எவனெவனோ குளத்தையும், ஏரியையும் ஆக்கிரமிச்சு மனை பிரிச்சு போட... அதை வாங்கினவங்க படாத பாடு படுறாங்க. கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சு வீடு கட்டிட்டு இப்போ பரிதவிச்சு நிக்கிறாங்க. ஆக்கிரமிச்சு வித்தவனெல்லாம் வேற ஏரியாவுல சுகவாசியா இருப்பான். பாவம், பச்சைக்குழந்தைகளெல்லாம் பாலில்லாம தவிச்சுக்கிட்டு கிடக்குதுக, சென்னையில பிறந்தது அதுகளோட தப்பா?

என் பொண்ணு குடியிருக்கிற பகுதியில முதல் மாடி வரைக்கும் தண்ணி வந்துடுச்சாம். தப்பிச்சோம், பொளைச்சோம்னு பிள்ளைக்குட்டிகளோட வீட்டுக்கு வந்துட்டா. இனிமே அங்க போகவே மாட்டோம்னு குழந்தைங்க அழுகுதுக” என்று மிகவும் கவலைப்பட்டார், வாத்தியார்.

“இயற்கை அன்னைதான் அந்த மக்களைக் காப்பாத்தணும்” என்று வேண்டிக்கொண்டார், காய்கறி.

சற்று இடைவெளி விட்டு பேச ஆரம்பித்த வாத்தியார்,

“சமீபத்துல பெய்த மழையில சென்னையில இருக்கிற பல பகுதிகள்ல தண்ணீர் தேங்கி மக்கள் ரொம்ப சிரமப்பட்டாங்க. எல்லாருமே நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான் மழைநீர் தேங்கினதுக்கு முக்கிய காரணம்னு இப்போ புரிஞ்சுக்கிட்டாங்க. அது குறித்து ஆய்வு பண்ணி ஒரு பட்டியல் வெளியிட்டிருக்காங்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதுல, ‘1906-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்துச்சாம்.

2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புல 43 நீர்நிலைகள் மட்டும்தான் இருக்காம். கிட்டத்தட்ட 96 சதவிகிதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புல இருக்காம். இனிமேலாவது இயற்கையைப் புரிஞ்சுக்கிட்டு அது வழியில நாம தலையிடாம இருந்தாத்தான் சென்னையைக் காப்பாத்த முடியும்” என்றார், வாத்தியார்.

“மழையைக் குறித்த முன்னறிவிப்பெல்லாம் வரவே இல்லையா... வந்திருந்தா அரசாங்கம் முன்னெச்சரிக்கையா நடவடிக்கை எடுத்திரு ப்பாங்கள்ல” என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி. “அதெல்லாம் எல்லாத்துக்கும் தெரியும்” என்ற ஏரோட்டி, “சென்னை வானிலை ஆய்வு மையத்துல அறிக்கை வெளியிட்டாங்க. பஞ்சாங்கத்துல கூட போட்டிருந்துச்சு. ‘பசுமை விகடன்’ வெளியிட்ட  டைரியிலயும் எழுதியிருந்தாங்க. ஆனா, அரசாங்கம்தான் பெரிசா எடுத்துக்காம முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாம விட்டுடுச்சு. அவ்வளவு பேரும் வெள்ளத்துல மாட்டிக்கிட்ட பிறகு போட்டு அடிச்சுக்கிறாங்க. ஆனாலும், அரசாங்கத்துக்கு இன்னமும் புத்தி வந்ததா தெரியலை. நிவாரணமா கொடுக்கிற பொருள்கள்ல முதலமைச்சரோட படம் போடுறதுலதான் அக்கறை காட்டுறாங்களே ஒழிய, மக்களுக்கு வேலை செய்றதுல அக்கறை காட்டலை. ஆனா, ஆள்றவங்களுக்குச் சொந்தமான டி.வி ஆபீஸ்ல முன்கூட்டியே மணல் மூட்டை போட்டு தண்ணி உள்ள வராம தடுப்பு நடவடிக்கை எடுத்தாங்களாம். மழை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே ஒரு தீயணைப்பு லாரியோட மீட்புக்குழுவும் அந்த டி.வி ஆபீஸ்ல இருந்ததாவும் சொல்றாங்க” என்றார்.

“நான் கூட ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். நவம்பர் மாசம் ஆரம்பத்துல இருந்தே சென்னையில இவ்வளவு அமளி துமளி நடந்துக்கிட்டு இருக்கு... இதுக்கிடையில முதலமைச்சருக்கு அடுத்த கட்டத்துல இருக்கிற அமைச்சர்கள்ல ஒருத்தர், சத்தமே இல்லாம புதுக்கோட்டை பக்கம் 1,000 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டிருக்காராம். அவர், அமைச்சராகுறதுக்கு முன்னாடி புளி வியாபாரம் பார்த்துக்கிட்டு இருந்தவர்னு சொல்லிக்கிறாங்க. பினாமிகள் பெயர்ல கொஞ்சம் கொஞ்சமா பத்திரப்பதிவும் நடந்துக்கிட்டு இருக்காம்” என்றார், வாத்தியார்.     

“நமக்கு எதுக்கு பெரிய இடத்து விவகாரம், கோவன் மேல கேஸ் போட்ட மாதிரி, நம்ம மேலயும் கேஸ் போட்டுடப் போறாங்க” என்ற ஏரோட்டி,

“மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல வசிக்கிற யானைகள், கேரளாவுல இருக்குற சபரிமலையில இருந்து... திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப்பகுதி வரை உணவு தேடி வந்து போகுமாம். இதுல கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளும் அடக்கம்.
இப்போ, மழை பெய்ஞ்சிருக்கிறதால, பெருஞ்சாணி அணையை ஒட்டியிருக்கிற காடுகள்ல மூங்கில்கள்ல குருத்துக்கள் நல்லா வளர்ந்திருக்காம். இந்தக் குருத்துக்கள் யானைகளுக்குப் பிடித்தமான உணவாம். அதனால, குருத்துக்களைச் சாப்பிட வர்ற யானைகள் அப்படியே பக்கத்துல இருக்குற ‘காளிகேசம்’ அரசு ரப்பர் தோட்டத்துக்குள்ள புகுந்து அங்கேயே தங்கிடுதாம். பட்டாசு போட்டாலும் யானைகள் வெளியேறுறதில்லையாம். அதனால ரப்பர் தோட்ட விவசாயிகள் பயந்துக்கிட்டே இருக்கிறாங்களாம். வனத்துறை அலுவலர்களும் போதிய அளவுக்கு இல்லாததால யானைகளை விரட்ட வழியில்லாம தவிச்சுக்கிட்டு இருக்கிறாங்க, விவசாயிகள்” என்றார்.

அந்த நேரத்தில் வானம் கொஞ்சம் வெறிக்கத் தொடங்க, “இன்னும் ரெண்டு மூணு வீடு பாக்கி இருக்கு, காய் கொடுக்கணும், கிளம்பறேன்” என்று காய்கறி கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.

வாத்தியார் சொன்ன கொசுறு...

வெள்ள நிவாரணம்...

கூட்டுறவு வங்கிகளில் வரவு!

கடந்த டிசம்பர் 7-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, வெள்ள நிவாரணம் அறிவித்துள்ளார்...

மரத்தடி மாநாடு: காணாமல் போன நீர்நிலைகள்... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

‘‘கால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்புக்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்புக்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்புக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைக் கணக்கெடுக்கும் பணியினையும் விரைந்து முடிக்க நான் ஆணையிட்டுள்ளேன். கணக்கெடுப்பின் அடிப்படையில், 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500- ரூபாய்; மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.    மேற்காணும் இழப்பீட்டுத் தொகையானது சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை, விவசாயிகள் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடனுக்கு நேர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

‘மண்ணுக்கு மரியாதை’, ‘வீட்டுக்குள் விவசாயம்’ மற்றும் ‘உழவாளி’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism