Published:Updated:

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

Published:Updated:

ஷ்டமில்லாமல் விவசாயம் செய்வதற்கு விவசாய வல்லுநர்கள் சொல்லும் வழி... கலப்புப் பயிர்கள் சாகுபடி முறையையும், கால்நடைகளோடு கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையையும்தான். சிறிய இடமாக இருந்தாலும் அதில் பல பயிர்களை நடவு செய்தால், விளைச்சலின் போது ஒன்றுக்கு விலை குறைந்தாலும் மற்றொன்று அதை ஈடுகட்டிவிடும். அதேபோல, கால்நடைகளோடு கூடிய ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியும். இந்த விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் விவசாயத்தில் ஜெயிக்க முடியும். அப்படி ஜெயித்த ஒருவர்தான், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலூகா, மானங்காத்தான் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி.

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

வழிகாட்டிய பேராசிரியர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெய்வமணியை அவரது ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சந்தித்தோம். “விவசாயம்தான் குடும்பத்தொழில். நான் பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு, பில்டிங் கான்ட்ராக்டர் வேலை செய்ய ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் கிடைச்சாலும், அமைதியான வாழ்க்கை வாழ முடியலை. எந்நேரமும் வேலை டென்ஷனாவே இருக்கும். அதனால, அமைதியைத் தேடி விவசாயத்துக்கே வந்துட்டேன். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. களிமண் பூமி. ஆனா, பள்ளக்கால் பகுதி. கொஞ்ச மழைக்கே தண்ணீர் தேங்கிடும். அதனால நெல் சாகுபடி கூட பண்ண முடியாது. நிலத்தடி நீரும் உப்பா இருக்கிறதால வேற என்ன விவசாயம் செய்யலாம்னு தேடிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்துல  வேலை செஞ்ச பேராசிரியர்கள் செங்குட்டுவன், சோழன் ரெண்டு பேரும் ஒரு ஏக்கர்ல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்ககிறதுக்கான யோசனையைச் சொன்னாங்க. உடனே ஒருங்கிணைந்த பண்ணையை அமைச்சிட்டேன். இப்போ நாலு வருஷமாச்சு. நல்ல லாபமும் கிடைச்சுக்கிட்டிருக்கு” என்று முன்னுரை கொடுத்த  தெய்வமணி, தொடர்ந்தார்.

பண்ணைக்குள்ளேயே தீவனம்!

“ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்து அதை சரி செய்ய ஆரம்பிச்சேன். அதுல அப்பா காலத்துல நடவு செய்த 30 தென்னை மரங்கள் இருந்துச்சு. அதை தொந்தரவு செய்யாம இருக்கிற இடத்தை பயன்படுத்தணும்னு முடிவு செய்தேன். 33 சென்ட்ல மீன் வளர்ப்புக் குளம், 30 சென்ட்ல மீன் குஞ்சுகள் உற்பத்திக்கான குளம், 5 சென்ட்ல அசோலா வளர்ப்புக் குளம் அமைச்சிருக்கேன். மீன் வளர்ப்புக் குளம் மட்டும் 8 அடி ஆழம். மத்த குளங்கள் 5 அடி ஆழம். குளம் தோண்டுனப்போ கிடைச்ச  மண்ணை எடுத்து 32 சென்ட் நிலத்தை தண்ணி வராத அளவுக்கு மேடாக்கினேன்.

அதுல, 5 சென்ட்ல கோ 4 தீவன புல் இருக்கு. மிச்ச இடத்துல, கோழி, ஆடு, மாடுகளுக்கான கொட்டகை, வீடு இருக்கு. நிலத்துலயும், வேலியோரத்துலயும் 30 மகோகனி மரங்கள்,
6 மலைவேம்பு மரங்கள், 100 பூவரசு மரங்கள், 50 கிளரிசீடியா மரங்கள், 50 சூபாபுல் மரங்கள்,  10 கல்யாண முருங்கை மரங்கள், 10 வேப்ப மரங்களை நடவு பண்ணியிருக்கேன். ஆடு, மாடு, கோழி எல்லாத்துக்குமே பெருமளவு தீவனம் பண்ணைக்குள்ளயே கிடைச்சிடுது. 

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குறைவான செலவு... நிறைவான லாபம்!

கோடைகாலங்கள்ல மட்டும் ஆடு, மாடுகளை வெளியில மேய்ச்சலுக்கு விடுவோம். கோழிகள் பண்ணைக்குள்ளயே மேய்ஞ்சு புழு, பூச்சிகளை சாப்பிட்டுக்கும். அதோட, தேவைப்படுறப்போ  குளத்துல இருக்கிற அசோலாவை நேரடியாவே கோழிகள்  சாப்பிட்டுக்கும். மீன்களுக்கும் பெருமளவில் அசோலாவைத்தான் உணவா கொடுக்கிறேன். இப்படிப் பல வகையிலும் தீவனச் செலவைக் குறைக்சிடுறதால நிறைவான லாபம் கிடைக்குது. அதேநேரத்துல ஆடு, மாடு, கோழி, மீன் எல்லாத்துக்குமே சத்தான உணவும் கிடைச்சிடுது” என்ற தெய்வமணி பண்ணையைச் சுற்றிக்காட்டினார்.

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒரு ஏக்கரில் ஆறரை லட்ச ரூபாய்!

நிறைவாக வருமானம் பற்றிச் சொன்ன தெய்வமணி, ‘‘மீன் மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; மீன்குஞ்சுகள் மூலமா 3 லட்ச ரூபாய்; அசோலா மூலமா 12 ஆயிரம் ரூபாய்; நாட்டுக்கோழி மூலமா 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; தென்னை மூலமா  18 ஆயிரம் ரூபாய்; ஆடுகள் மூலமா 45 ஆயிரம் ரூபாய்னு வருமானம் வருது.

மொத்தமா பார்த்தா,  ஒரு ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு ஆறரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் வருது. எல்லா செலவும் போக நாலரை லட்ச ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும்” என்று பெருமிதப் புன்னகையுடன் விடைகொடுத்தார்.     

தொடர்புக்கு,
தெய்வமணி
செல்போன்: 94428-87833.

நாட்டுக்கோழி தரும் நல்ல வருமானம்!

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

“கோழிக்கு 20 அடிக்கு 12 அடி அளவுல ஒரு கொட்டகையை தரையிலயும்; 15 அடிக்கு 12 அடி அளவுல ஒரு கொட்டகையை மீன் குளத்து மேலயும் அமைச்சிருக்கேன். ஒரு நாள் வயதுடைய 300 குஞ்சுகளை... ஒரு குஞ்சு 40 ரூபாய்னு வாங்கிக்கிட்டு வந்து மூணு மாசம் வளர்த்து விற்பனை செய்துடுவோம். பகல் நேரத்துல கோழிகள் பண்ணைக்குள்ளயே மேய்ஞ்சிடும். இரவு நேரத்துல கம்பு, சோளமாவு ரெண்டையும் கலந்து கொடுப்போம். மூணு மாசம் வளர்ந்த கோழி ஒரு கிலோவில் இருந்து ஒண்ணே கால் கிலோ வரை எடை இருக்கும். ஒரு கோழி 175 ரூபாய்னு விலை போகும். கோழிக்குஞ்சு, தீவனம், தடுப்பூசி, மின்சாரம் எல்லாம் சேர்த்து ஒரு கோழிக்கு 100 ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா ஒரு கோழி மூலமா 75 ரூபாய் லாபம். 300 கோழிகள் மூலமா 22 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும். இது மாதிரி ஒரு வருஷத்துக்கு மூணு பேட்ச் வளர்க்கிறோம். அந்த வகையில வருஷத்துக்கு  67 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்குது.”

ஆண்டுக்கு இரு முறை மீன் அறுவடை!

“வருஷத்துக்கு ஒரு முறை குளத்தைக் காய விட்டு ஆற்றுத் தண்ணீர், மழைநீரை குளத்துல நிரப்பிடுவோம். தேவைப்பட்டா போர் மூலமாவும் தண்ணீர் எடுத்துக்குவோம். இந்தக் குளத்துல ரோகு, கட்லா, மிர்கால் ரகங்களைத்தான் வளர்க்கிறோம். 100 கிராம் எடை இருக்கிற மீன்குஞ்சுகளைத்தான் குளத்துல விடுவோம். வளர்ச்சி அடைஞ்ச குஞ்சுகள்ல இறப்பு விகிதம் குறைவா இருக்கும். 1,000 குஞ்சுகள் விட்டோம்னா... ஆறு மாசத்துல மொத்தம் 600 கிலோ அளவுக்கு மீன்களை அறுவடை செய்வோம். குஞ்சுகளை விட்ட முதல் ரெண்டு மாசம் வரைக்கும் தினமும் 5 கிலோ அசோலாவை மீன் வளர்ப்புக் குளத்துல தூவி விடுவோம். மூணாவது மாசத்துல இருந்து 10 கிலோ அசோலா போடுவோம். குளத்து மேல இருக்கிற கோழிகள் போடுற எச்சமும் குளத்துக்குள்ள விழும். அதுல உருவாகிற புழுக்களும் மீன்களுக்கு உணவாகிடும்.

கடலைப் பிண்ணாக்கு 20 சதவிகிதம், எண்ணெய் எடுத்த தவிடு 60 சதவிகிதம், சோளமாவு 20 சதவிகிதம்னு கலந்து வைத்து, இதையும் மீன்களுக்கு தீவனமா கொடுப்போம். முதல் மாசம் 1 கிலோ, ரெண்டாவது மாசம் 2 கிலோனு அளவை அதிகரிப்போம். 

6 மாசத்துல பிடிச்சு விற்பனை செய்துடறதால வருஷத்துக்கு ரெண்டு முறை மீன் மூலம் வருமானம் பார்க்கலாம். ஒரு கிலோ மீன் குறைந்தபட்சம் 100 ரூபாய் அளவுக்கு விலை போகும். வருஷத்துக்கு 1,200 கிலோ மீன் மூலமா 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, தீவனச் செலவு, பராமரிப்பு, மீன் பிடிக்கக் கூலி எல்லாம் போக, வருஷத்துக்கு 68 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.”

தனிக்குளத்தில் அசோலா!

ஆடு, கோழி, மீன், அசோலா, தென்னை... அசத்தும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

“அதிகத்தேவை இருக்கிறதால, பாலிதீன் ஷீட் முறையைத் தவிர்த்து விட்டு, குளத்துலதான் அசோலா வளர்க்கிறோம். குளத்துல மூணடி உயரத்துக்கு தண்ணீர் இருக்கிற மாதிரி பார்த்துக்குவோம். 10 நாட்களுக்கு ஒரு முறை 20 கிலோ பச்சை சாணத்தைக் கரைச்சி விடுவோம். மாசம் ஒரு தடவை 100 மில்லி வேப்பெண்ணெயை 3 லிட்டர் தண்ணீர்ல கலந்து அசோலா மேல தெளிச்சு விட்டால் பூச்சிகள் வராது. இந்தக் குளத்துல 50 திலேப்பியா மீன்களை விட்டிருக்கோம். இந்த மீன்கள் அசோலாவை நல்லா கலக்கி விட்டுடும். எங்கள் தேவை போக மாசம் 20 கிலோ அளவுக்கு அசோலாவை விற்பனை செய்றோம். ஒரு கிலோ 50 ரூபாய்னு 20 கிலோவுக்கு மாசம் 1,000 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைச்சிடும். இதுக்குனு எந்தச் செலவும் கிடையாது.”

குஞ்சு விற்பனையில் குதூகல லாபம்!

‘’மீன் குஞ்சு பொறிப்பகங்கள்ல இருந்து ஒரு நாள் வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி, வளர்த்து விற்பனை செய்துக்கிட்டு இருக்கோம். ரோகு, மிர்கால், கட்லா, போட்லா, புல் கெண்டைனு ஒவ்வொரு ரகத்துலயும் 2 லட்சம் குஞ்சுகள்னு மொத்தம் 10 லட்சம் குஞ்சுகளை 15 ஆயிரம் ரூபாய்னு வாங்குவோம். இந்த மீன்குஞ்சுகள் மயிரிழை அளவுதான் இருக்கும். 5 ரகங்களையும் தனித்தனியா குளங்கள்ல விட்டு மூணு மாசம் வரைக்கும் வளர்த்தா  ஒவ்வொரு குஞ்சும் 30 கிராம் அளவு எடை வரும். இந்த சமயத்துல ஒரு குஞ்சு 2 ரூபாய்னு விற்பனை செய்துடுவோம். இந்தக் குஞ்சுகளுக்கும் பிண்ணாக்கு, தவிடுதன் தீவனம். 10 லட்சம் குஞ்சுகள் விட்டாலும் ஒன்றரை லட்சம் குஞ்சுகள் மட்டும்தான் விற்பனைக்குத் தேறும். அதன் மூலமா 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக, இரண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும். மே, ஜூன் மாதங்கள்ல மட்டும்தான் பொறிப்பகங்கள்ல மீன்குஞ்சுகள் கிடைக்கும். அதனால மீன்குஞ்சுகள் விற்பனை மூலமா வருஷத்துல ஒரு முறைதான் வருமானம் பார்க்க முடியும்”

சாணத்தேவைக்கு மாடுகள்!

“ரெண்டு கலப்பின மாடுகள் இருக்கு. ஒரு மாடு எப்பவும் கறவையில் இருக்கும். தினமும் 5 லிட்டர் அளவுக்கு பால் கிடைக்குது. வீட்டுத்தேவைக்குப் போக மீதியை லிட்டர் 25 ரூபாய்னு விற்பனை செய்வோம். இதுல லாபம் ஒண்ணும் கிடையாது. சாணத் தேவைக்காகத்தான் வளர்க்கிறோம். சாணத்துல வருஷத்துக்கு 1,500 கிலோ அளவுக்கு மண்புழு உரம் தயாரிச்சு பண்ணைக்குப் பயன்படுத்திக்கிறோம். அப்பா காலத்துல நடவு செய்த தென்னை காய்ப்பில்லாம கிடந்தது. அந்த மரங்களுக்கு மண்புழு உரம் வைக்க ஆரம்பிச்சதும் காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. 30 தென்னை மரங்கள் மூலமா வருஷத்துக்கு 3 ஆயிரம் காய்கள் கிடைக்கும். ஒரு காய் சராசரியா 6 ரூபாய்னு விலை போகும். அதுல எல்லா செலவும் போக வருஷத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.”

ஆடுகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம்!

“20 அடிக்கு 12  அடி அளவுல பரண் அமைச்சு, அதுல, 7 கன்னி ஆடுகளையும் ஒரு கிடாவையும் வளர்க்கிறோம். ஆடுகள் மூலமா ரெண்டு வருஷத்துல முப்பது குட்டியில இருந்து 40 குட்டிகள் வரை கிடைக்கும். குட்டிகளை ஒரு வருஷம் வளர்த்து ஒரு ஆடு 3 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்துடுவோம். வருஷத்துக்கு 15 குட்டிகள்னு குறைச்சே வெச்சுக்கிட்டாலும், அவை மூலமா 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிடும். பசுந்தீவனம் பண்ணைக்குள்ளயே இருக்கிறதால ஆடுகளுக்குச் செலவே இல்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism