Published:Updated:

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

நாயுடுவின் நம்பிக்கை விவசாயம்!த.ஜெயகுமார், படங்கள்: கே.கார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டந்த 26 ஆண்டுகளாக விவசாயம் செய்து... இயற்கை விவசாயத்தின் புகழை அமெரிக்கா வரை பரப்பியிருக்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாகரத்தின நாயுடுவின் அனுபவங்கள், கடந்த இரு இதழ்களில் வெளியானது. அதன் நிறைவுப் பகுதி இந்த இதழில் இடம்பிடிக்கிறது...

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்யும் விதம் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த நாகரத்தின நாயுடு, “இந்த 12 ஏக்கர் மூலமா புகழ், பணம் எல்லாத்தையும் சம்பாதிச்சிட்டேன். ஹைதராபாத், தில்சுக் நகர்ல ஒரு பெரிய வீட்டையே கட்டி வாழ்ந்துக்கிட்டு வர்றேன். விவசாயத்துல சம்பாதிச்சி பெருநகரங்கள்ல வீடு கட்டுறது அவ்வளவு சாதாரணமானது இல்ல. ஆனா, விவசாயத்துல வந்த வருமானத்த வெச்சி, அதை சாத்தியமாக்கி இருக்கேன். எங்க வீட்டுக் கண்ணாடியில கிராம விவசாய சூழலை ஓவியமா வரைஞ்சி வெச்சிருக்கேன். வீட்டு அலங்காரக் கண்ணாடிகள்ல எனக்கு வழங்கப்பட்டிருக்கிற விருதுகளே நிரம்பி கிடக்குது. இதையெல்லாம் விவசாயத்திலிருந்துதான் சம்பாதிச்சேங்கறதைப் பெருமையாவும், தலைக்கனத்தோடும்தான் சொல்றேன்.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

என் பண்ணையோட வருமானம் வருஷத்துக்கு 25 லட்சத்துக்கும் அதிகம். இப்போ ரெண்டு வருஷமா போதுமான மழை இல்லைங்கிறதால வருமானம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இப்போ, நெல், பப்பாளி, காய்கறிகள், அழகு மலர்கள், மா, கீரை, முருங்கை, புளி, தென்னை, பால் மூலமா கிடைக்கிறதுதான் முக்கிய வருமானமா இருக்கு. போன வருஷ மொத்த வருமானம் 17 லட்ச ரூபாய். பண்ணையிலேயே வேலைக்கு ரெண்டு குடும்பங்கள் இருக்கு. உழவு, வேலையாட்கள், விதைனு வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் செலவு ஆகும். வருஷத்துக்கு 12 லட்ச ரூபாய் லாபமா நிக்குது” என்றவர், தொடர்ந்தார்.

“என்னோட பண்ணைக்கு வெளியிலிருந்து எந்தப் பொருளையும் கொண்டு வர்றதில்ல. பெரும்பாலும் பண்ணையிலேயே உற்பத்தி செஞ்சிக்கிறேன். அதனால எனக்கு இடுபொருட்கள் செலவு குறைஞ்சிடுது. சென்னையில இருக்கிற அளவுக்கு  ஹைதராபாத்ல இயற்கை அங்காடிகள் கிடையாது. குறைவாத்தான் இருக்கு. அதனால, என்னோட வீடு அல்லது பண்ணைக்கு வந்து மக்கள் நேரடியா வாங்கிக்கிறாங்க. அது போக மிச்சமாகிறதைத்தான் நான், இயற்கை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன்.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

பெரும்பான்மையான இயற்கை விவசாயிகள் விளைய வெச்சிக்கிட்டு விற்பனைக்கு அலையறது வாடிக்கை. நாம இயற்கை விளைபொருட்களை உற்பத்தி செய்ற விஷயத்தை மத்தவங்களுக்கு தெரிய வெச்சாலே தேடி வர ஆரம்பிப்பாங்க. நியாயமான விலைக்கு நாம சுலபமா விற்பனை செய்ய முடியும். விவசாயிகள் 5 பேரோ, 10 பேரோ கூடி, மாவட்ட தலைநகரங்கள்ல ஓரிடத்துல வெச்சி விளைபொருட்களை விற்பனை செய்யலாம். பெரு நகரங்களுக்கு விளைபொருளை அனுப்புறது தற்போதைய சூழ்நிலையில் சிரமமானது இல்லை. அதனால எங்கு இயற்கைப் பொருட்களுக்குத் தேவை இருக்கிறதோ அதையறிந்து விற்பனை செய்யலாம்’’என்று யோசனைகள் சொன்னவர், சின்னச் சின்னதாக சில நுட்பங்களையும் அடுக்கினார்.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

நுண்ணூட்டச் சத்துக்கு ஆமணக்கு விதைகள்!

“இயற்கை விவசாயத்துல மண்ணுல நுண்ணூட்டச் சத்துக்கள் வளர பிண்ணாக்குப் பயன்படுத்துவது வழக்கம். எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கைப் பயன்படுத்தும்போது அதில் சத்துக்கள் குறைவு. அதனால் முத்துக்கொட்டையை (ஆமணக்கு) தண்ணீரில் 2 நாள் ஊறவெச்சு, அரைத்தோ அல்லது இடித்தோ பயிர்களுக்குக் கொடுக்கலாம். நெல் போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு 20 கிலோ தேவை. காய்கறிகள், பழச்செடிகளுக்கு... செடிக்கு 50 கிராம் தூளைத் தூவிவிடலாம்’’ என்ற நாயுடு, நடவு செய்யப்பட்டு வளர்ந்து வரும் மாங்கன்றுகளுக்கு தண்ணீர் விட செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வெங்காயம், தக்காளி போன்ற பயிர்களை நடவு செய்துள்ளார்.

“மாஞ்செடிக்கு கொடுக்கும் தண்ணீரே இதற்கும் போதும். இதோட கழிவுகளை மூடாக்கா போட்டா மாங்கன்னுகளுக்கு உரமாகிடும்’’ என்று அதைப் பற்றி போகிறப்போக்கில் சொன்னவர்,

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

‘கிஃப்ட் பேக்‘கில் மாம்பழம்!

“தமிழ்நாட்டைப் போல இங்கும் அரிசி பயன்பாடு அதிகம்னாலும்... ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பச்சரிசிதான் அதிகம் சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கும் பச்சரிசிதான். புழுங்கல் அரிசி பயன்பாடு குறைவு. நான், நெல்லை குறைந்தபட்சம் ஏழெட்டு மாதங்கள் இருப்பு வைத்துப் பிறகுதான் அரிசியாக அரைப்பேன். அதனால் சாதத்துல ருசி கூடும். அதனால்தான் என்னோட அரிசிக்கு எப்போதுமே நல்ல கிராக்கி இருக்கு. 10 கிலோ, 5 கிலோ பைகளாக அரிசி விற்பனை செய்றேன். ஒரு கிலோ அரிசியை 45 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்றேன்.

மாம்பழ சீசனின்போது பழங்களை ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ பெட்டிகளில் அடுக்கி கிஃப்ட் பேக் பண்ணி விற்பனை செய்வேன். அதை பரிசாகவும் நிறைய பேர் வாங்கிக் கொடுப்பாங்க. அதனால, பழ விற்பனை அதிகரிக்குது” என்று சொல்லி, நமக்கு விடைகொடுத்தார் நாகரத்தின நாயுடு.  

தொடர்புக்கு,
நாகரத்தின நாயுடு,
செல்போன்: 094404- 24463.

நம்மாழ்வார்... ஒற்றை நாற்று நடவு தூதுவர்!

‘‘இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அய்யாவை, கடந்த 20 வருடங்களாகத் தெரியும். என்னை  ‘குழந்தை’ என்றே அழைப்பார். ஆம், இயற்கை விவசாயம் செய்யும் அனைவரும் அவருடைய குழந்தைகள்தான் என்றே புரிந்துகொண்டேன். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்ற கூட்டங்களில் என்னுடைய பண்ணை பற்றிய சிறப்புகளைப் பேசி, என்னை அறிமுகப்படுத்தியவர் நம்மாழ்வார்.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

‘ஒற்றை நெல் சாகுபடியில, ஆந்திராவுல இருக்கிற நாகரத்தினம் நாயுடு, இந்தியாவுக்கு வழிகாட்டியா இருக்கிறாரு. ஏக்கருக்கு 90 மூட்டை நெல்லை விளைவிச்சு சாதனை செய்திருக்காரு...’ என்று ஒற்றை நாற்று நெல் சாகுபடி முறையை தூதுவர் போன்று பல கூட்டங்களில் பேசி பரப்பினார். ஒற்றை நாற்று நடவு முறை பிரபலமானதற்கு அய்யா நம்மாழ்வார் மூலக்காரணமாகச் செயல்பட்டார். இயற்கை விவசாயம் சார்ந்த என்னுடைய செயல்பாடுகளைப் பாராட்டி, எனக்கு விருது வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் கலந்துகொண்டு என்னை கவுரவப்படுத்தியுள்ளார்.

‘விவசாயிகள் விளைவித்துக் கொடுக்கிற விளைபொருள் 100% வாடிக்கையாளருக்கு திருப்தியாக இருக்க வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார். இதை இப்போது வரைக்கும் கடைப்பிடிச்சிக்கிட்டு வர்றேன். அதனால்தான் என்னிடம் விளைபொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மண்ணின் வளத்துக்கு அமுதக் கரைசல் எப்படி உதவி புரியும் என்பதை அறிவியல்ரீதியாக அவர்தான் புரியவைத்தார். இயற்கை விவசாயத்தின் மீது பிடிப்பு அதிகமாவதற்கு அவர்தான் காரணமாக இருந்தார். இயற்கை விவசாயம் குறித்து நிறைய பேசி, விவாதிச்சிருக்கேன். ஒரு குரு, தனது சிஷ்யர்களுக்கு விளக்குவது போன்று சொல்லித் தருவார். அதனாலதான் எனக்கும் அவர் குருவாக இருந்து வருகிறார்.

‘சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், வளமான மண்’ இவைகள்தான் நம்மாழ்வாரின் நோக்கமாக இருந்தது. ‘இது விவசாயிகளிடமிருந்துதான் வரும். விவசாயிகள்தான் இந்த பூமியைக் காப்பாற்ற முடியும்’ என்று நம்பினார். இன்று ‘ஸ்வாச் பாரத்’ (தூய்மையான இந்தியா) பற்றி ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள், விளம்பரம் செய்கிறார்கள். இதை அப்போதே வலியுறுத்தியவர் நம்மாழ்வார். அவர் இன்று இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவருடைய நோக்கங்கள் என்றும் உயிரோடு இருக்கும்’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார் நாகரத்தின நாயுடு.

நெல், சில யோசனைகள்!

ஒற்றை நாற்று நெல் நடவு குறித்து நாகரத்தின நாயுடு பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...

“ஒற்றை நாற்று நடவு முறையில் வயலில் தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடாது. நிலத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் தேக்கி வைத்தால் நோய்கள் வரலாம். இந்த முறையில் நடவு செய்யும்போது, நாற்றுகளை மேலாக வயலில் வைத்தாலே போதுமானது. அழுத்தி நடவு செய்யத் தேவையில்லை. விரல் நுழையும் ஆழத்துக்கு அழுத்தி நடவு செய்யும்போது, வேர்கள் கிளை பரப்புவது பாதிக்கப்படும். முளைப்புத் திறனும் குறையும். நடவு செய்யும் ஆட்களின் காலடி வயலில் அதிகம் இருக்கக் கூடாது. நடவின்போது ஒவ்வொரு 2 மீட்டருக்கும் இடையே ஓரடி இடைவெளிவிட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையின்போது, இந்த ஓரடி இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினாலே பயிர்களைக் காப்பாற்றி விட முடியும். இந்த இடைவெளி, ஆட்கள் நடந்து செல்வதற்கும் உதவியாக இருக்கும்.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

வேப்பிலை உள்ளிட்ட இலை, தழைகளை வெட்டி வயலில் போடும்போது, ஒரு அடி நீளத்துக்கு வெட்டி போட வேண்டும். முதலில் இலை மட்கும். பிறகு குச்சிகளின் தோல் மட்கும். அடுத்து குச்சிகள் மட்கத் தொடங்கும். இப்படி வரிசையில் மட்கும்போது பயிர்களின் வளர்ச்சிக்கேற்ப தேவையான ஊட்டங்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும். நெல் அறுவடை முடித்தபிறகு, மீண்டும் வயலில் தண்ணீர் பாய்ச்சி பயிர்களை வளர்க்கலாம். முதல் அறுவடையில் கிடைத்த மகசூலை விட குறைவாக இருந்தாலும், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கும். நடவு, உழவு உள்ளிட்ட வேலைகளும் மிச்சமாகும்.

வர்த்தக ரீதியான நெல் ரகங்கள்!

தற்போது 145 நாள் வயதுடைய ‘பிபிடி-5204’ என்ற நெல் ரகத்தைப் பயிர் செய்திருக்கிறேன். இந்த ரகம் ஆந்திராவில் நல்ல மகசூல் கொடுக்கும். வர்த்தக ரீதியாக நல்ல விற்பனையும் ஆகக் கூடியது, இந்த ரகம். 110 நாள் வயதுடைய ‘அம்சா’ என்ற ரகமும் நல்ல விற்பனை வாய்ப்புடையது. தேவையைப் பொறுத்து பாரம்பர்ய நெல் ரகங்களையும் நான் பயிர் செய்கிறேன்” என்றார், நாகரத்தின நாயுடு.

93 வயது விவசாய பாட்டி!

நாயுடுவின் பண்ணையில் அவருக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருபவர் 93 வயதாகும் அவருடைய தாயார் முனிரத்தினம்மா. அவர், தினமும் 60 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்கிறார். அவரிடம் பேசினோம். “சின்ன வயசிலிருந்து விவசாயம் செஞ்சு பழகின உடம்பு. அதனால வீட்லயே முடங்கிக் கிடக்க விருப்பம் இல்ல.

12 ஏக்கரில் 17 லட்சம் வருமானம்...

தினமும் பண்ணைக்கு வந்து வேலையாட்களோடு களையெடுக்கிறது, தண்ணி பாய்க்கிறது, மாடு மேய்க்கிறதுனு எல்லா வேலைகளையும் செய்றேன். எல்லோரும் சாப்பிடுற மாதிரி சோறு, இட்லினுதான் சாப்பிடுறேன். ஆனா, எல்லாமே இயற்கையில வெளையுறது. அந்த தெம்புதான் வேலை செய்ய வைக்குது. சில வருஷங்களுக்கு முன்ன மாடு முட்டி கீழே விழுந்ததுல கூன் விழுந்துடுச்சு. இல்லைன்னா வேலையில என்னை அடிச்சுக்க ஆளே இல்ல” என்றார், முனிரத்தினம்மா.

மழையும், பயிரும்..!

‘‘எப்போதும் பண்ணையில் பயிர்கள் நிறைய இருக்கும். இந்த வருஷம் தெலங்கானா மாநிலத்தில் போதுமான மழை இல்லாததால், பண்ணையில் பயிர்கள் குறைவாகத்தான் செய்திருக்கேன். பப்பாளி, அழகு மலர்ச் செடிகளும், குறைந்தளவில் நெல், தக்காளி, வெள்ளரி, கத்திரி மற்றும் புளிச்சக் கீரையையும் பயிர் வெச்சிருக்கேன். இதைத்தவிர மா, தென்னை, தேக்கு நிரந்தர பயிர்களாக இருந்து வருகிறது’’ என்கிறார் நாகரத்தின நாயுடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு