Published:Updated:

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

முன்னாள் வங்கி அதிகாரியின், இந்நாள் இயற்கை விவசாயம்! காசி.வேம்பையன், படங்கள்: க.தனசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“பாக்கு, தென்னை மாதிரியான மர வகைகளை சாகுபடி செய்யும்போது, ஒரு பாத்தி விட்டு, ஒரு பாத்தி

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

தண்ணீர் விட்டாலே போதுமானது. உன்னோட மண்ணுக்கும், பயிர்களுக்கும் என்ன தேவைனு புரிஞ்சிக்கிட்டு விவசாயம் பார்த்தா. அது உனக்கு தேவையான வருமானத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்.

 என்னுடைய பண்ணையைப் பார்வையிட்டுட்டு நம்மாழ்வார் அய்யா என்கிட்ட சொன்ன வார்த்தைகள் இவை. அதை என்னுடைய யோசனைக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு இயற்கை விவசாயம் செய்றேன். இப்ப நல்ல வருமானத்தோட, சந்தோஷமா இருக்கேன்” என்கிறார், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலூகாவில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி கோவிந்தராஜுலு.

வானத்தை வம்புக்கு இழுக்கும் பாக்கு மரங்கள், சுற்று வட்டாரத்தை மணக்கச் செய்யும் மஞ்சள் காடு, அறுவடைக்காகக் காத்திருக்கும் நெல் வயல்கள்... எனப் பசுஞ்சோலையாகக் காட்சி கொடுக்கிறது கோவிந்தராஜுலுவின் தோட்டம். பசுமையான சூழலில் அவருடன் பேச ஆரம்பித்தோம். விதை போட்ட பசுமை விகடன்!

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

“அப்பாவுக்கு தொழில் விவசாய ங்கிறதால, சின்னப் பிள்ளையில இருந்து எங்களோட ரத்தத்துலயும் விவசாயம் கலந்திடுச்சு. படிப்புக்காக அரூர், சென்னைனு போனாலும், விவசாயம் மேல இருந்த ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. டிகிரி முடிச்சிட்டு, ஒரு வருஷம் அப்பா கூட சேர்ந்து முழுநேரமா விவசாயம் பார்த்தேன். அதுல போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்கல. அந்த சமயத்துல பேங்க்ல வேலை கிடைக்கவும் சேர்ந்துட்டேன். வேலை, குடும்பம்னு ஒதுங்கிட்டதால, விவசாயம் பார்க்க நேரமில்ல. என் கூட பிறந்தவங்க மூணு பேர். எங்க நாலு பேருக்கும் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்திட்டார் அப்பா. நான், வேற வேற ஊர்களுக்கு மாறி மாறி போய்க்கிட்டு இருந்ததால என்னோட நிலத்துல அப்பாதான் விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தார். அவர் இறந்த பிறகு ஆட்களை வெச்சு விவசாயம் பார்த்தேன். அதுவும் சரிப்பட்டு வராம, ஒரு பகுதி நிலத்தில தென்னை மரத்தை நட்டு விட்டேன். அது கொஞ்சம் பரவாயில்லாம இருந்துச்சு. அப்போல்லாம் ரசாயன விவசாயம்தான் செய்துக்கிட்டு இருந்தேன்.

2008-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். பரபரப்பா இருந்துட்டு, சும்மா இருக்க முடியலை. அதனால, விவசாயம் பார்த்துக்கிட்டே, சித்த மருத்துவ முறைகளைக் கத்துக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்த தகவல்கள் புதுசாவும் வித்தியாசமாவும் இருந்துச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சதும் ஒவ்வொரு கட்டுரையும் என்னோட மனசுல இயற்கை விவசாயம் செய்யுறதுக்கான விதையை விதைச்சு வளர்க்க ஆரம்பிச்சது. பலத்த யோசனைக்கு பிறகு முழுக்க இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவு செய்தேன்” என்று முன்னுரை கொடுத்த கோவிந்தராஜுலு, தொடர்ந்தார்.

வாழை கொடுத்த நம்பிக்கை!

“பசுமை விகடன் புத்தகத்துல அனுபவ விவசாயிங்க சொல்ற அத்தனை கரைசலையும் தயார் செய்து பயன்படுத்த ஆரம்பிச்சேன். முதல் போகத்துல வாழை சாகுபடி செய்தேன். இயற்கை விவசாயம் என்னை ஏமாற்றலை. அதிகப்படியான விளைச்சல் இல்லாட்டியும், லாபகரமான வருமானத்தைக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு இயற்கை விவசாயம் மட்டும்தான்னு முடிவு செய்தேன்.

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

வழிகாட்டிய நம்மாழ்வார்!

இயற்கை விவசாயத்துல இறங்கின பிறகு, அனுபவ விவசாயிகளைச் சந்திக்க ஆரம்பிச்சேன். நம்மாழ்வார் அய்யா, நடத்தின பல பயிற்சிகள்லயும் கலந்துக் கிட்டேன். அவர் பேசுற விதம் என்னை ஈர்த்துச்சு. நான் தெரிஞ்சுக்கிட்ட தொழில் நுட்பங்களை எங்க பகுதியில இருக்கிற விவசாயிகளும் தெரிஞ்சுக்கணும்னு நண்பர்க ளோட சேர்ந்து `லயன்ஸ் கிளப்’ மூலமா அரூர்ல அய்யாவை அழைச்சு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். அந்த நிகழ்ச்சியை முடிச்சிக்கிட்டு, நம்மாழ்வார் அய்யாவை என்னோட கிராமத்துக்கு அழைச்சிட்டுப் போனேன்.

இரவு என்னோட வீட்டுல தங்கி இருந்தார். காலையில எழுந்து என்னுடைய தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தவர், ரெண்டு பாக்கு மரங்களுக்கு இடையில ஒரு வாய்க்கால் இருந்ததைப் பார்த்திட்டு, ‘ஒரு மரத்துக்கு ரெண்டு பக்கமும் தண்ணீர் கொடுத்தா காற்றுக் கிடைக்காது. அதனால, மரத்தோட ஒரு பக்கத்துல மட்டும் தண்ணீர் கொடு, மற்றொரு பக்கம் காற்றைக் கொடு. அப்பதான் மரம் சிறப்பா வளரும். மண்ணை மதிச்சு அதுக்கு தேவையானதை நீ கொடுத்தா அதை எடுத்துக்கிட்டு, பயிருக்குத் தேவையானதை மண் கொடுக்கும். இதை கடைப்பிடிச்சாலே உன்னோட பண்ணை இன்னும் வளமான பண்ணையா மாறிடும்’னு சொன்னார். அதை மனசுல வைச்சுக்கிட்டு,  ஒரு வாய்க்கால்ல தண்ணீரும், அடுத்த வாய்க்கால்ல பண்ணைக் கழிவுகளை மூடாக்காவும் போட ஆரம்பிச்சேன்” என்ற கோவிந் தராஜுலு, தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

இடுபொருட்களைக் குறைத்த கரைசல் தொட்டி!

“தொடர்ச்சியா இயற்கை விவசாயம் பார்க்க ஆரம்பித்த பிறகு இடுபொருட்களைக் குறைக்க நினைச்சேன். அதுக்காக, ஒரு தொட்டி கட்டி அதுல, எங்கிட்ட இருக்கிற நாலு நாட்டு மாடுகள் மூலம் தினமும் கிடைக்கிற சாணம், சிறுநீர், மாட்டுத்தொழுவம் கழுவும் கழிவுநீர் எல்லாத்தையும் போட்டு கரைச்சு பாசனத்தண்ணீருடன் கலந்து விடுறேன். இப்படிச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, சர்வரோக நிவாரணியான பஞ்சகவ்யா தவிர மற்ற இடுபொருட்களோட தேவை என்னோட தோட்டத்துல குறைஞ்சு போச்சு. இப்ப பெருசா செலவு இல்லாம விவசாயம் பார்க்கிறேன்.

எனக்கு மொத்தம் ஆறரை ஏக்கர் நிலம் இருக்கு. நாலரை ஏக்கர்ல 3 ஆயிரம் பாக்கு மரங்கள் இருக்கு. வரப்பு ஓரத்துல 62 தென்னை மரங்கள் இருக்கு. 90 சென்ட் நிலத்துல மஞ்சள் சாகுபடி பண்றேன்.

70 சென்ட் நிலத்துல நெல் சாகுபடியும்,5 சென்ட் நிலத்துல தீவனப்புல்லும் இருக்கு. மீதி 35 சென்ட் நிலத்துல வீடு, கொட்டகை, களம் இருக்கு” என்ற கோவிந்தராஜுலு, நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“எனக்கு முதன்மையான வருமானம் கொடுக்கிறது, பாக்கு மரங்கள்தான். பாக்கு நடவு செய்யும்போது முதல் இரண்டு வருஷம் ஊடுபயிரான வாழையில வருமானம் கிடைச்சிடும். அடுத்த நாலு  வருஷத்துக்கு வருமானம் இருக்காது. 6-ம் வருஷத்துல இருந்து வருமானம் வர ஆரம்பிச்சுடும். ஒரு பாக்கு மரத்துல ஐந்து கிலோ வரை பச்சைப் பாக்குகளை அறுவடை செய்யலாம். சுத்தம் செய்து காய வெச்சா, ஒரு கிலோவில் இருந்து  ஒன்றரை கிலோ வரை தேறும். நான் மரத்துக்கு இவ்வளவுனு விலைபேசி மொத்தமாக விற்பனை செய்துடுவேன்.

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்... பாக்கு, தென்னை, மஞ்சள், நெல்...

இந்த வருஷம் ஒரு மரத்துக்கு 120 ரூபாய்னு 3 ஆயிரம் மரத்துக்கும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்னு விலை பேசி விட்டுட்டேன். தென்னை மரத்தையும் ஒரு மரத்துக்கு 700 ரூபாய்னு பேசி, 60 மரத்துக்கும் 42 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசியிருக்கேன்.

90 சென்ட்ல விதைச்சிருக்குற மஞ்சளை அறுவடை செய்து பதப்படுத்தி காய வைச்சா, 16 மூட்டை (100 கிலோ)  மஞ்சள் கிடைக்கும். மூட்டை 8 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்தால், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 70 சென்ட்ல 20 மூட்டை (70 கிலோ ) அளவுக்கு நெல் கிடைக்கும். அதில், 10 மூட்டையை வீட்டுத்தேவைக்காக வெச்சிக்குவேன். மீதி 10 மூட்டையை அரிசியா அரைச்சா... 350 கிலோ அரிசி கிடைக்கும். அதை கிலோ 80 ரூபாய் வீதம் நேரடியாக விற்பனை செய்தா 28 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் பாக்கு, தென்னை, மஞ்சள், நெல் மூலமா 5 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் கிடைச்சிடும். பண்ணையைப் பராமரிக்கும் ஊழியர் சம்பளம், வேலை ஆட்கள் கூலி, இடுபொருள் செலவு, அறுவடைச் செலவு எல்லாம் சேர்த்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு போக, மீதம் 3 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும்” என்று உற்சாகமாகச் சொன்னார், கோவிந்தராஜுலு.

தொடர்புக்கு,
கோவிந்தராஜுலு,
செல்போன்: 94430-28026.

பாக்குக்கு ஊடுபயிராக வாழை!

பாக்கு சாகுபடி குறித்து கோவிந்தராஜுலு சொன்ன விஷயங்கள் இங்கே...

“தென்னைக்கும், பாக்குக்கும் ஆயுள் காலம் ஒன்றுதான். நம்முடைய பராமரிப்பைப் பொருத்து, நாட்டுப் பாக்கு மரங்கள் 60 முதல் 70 ஆண்டுகள் வரை கூட பலன் கொடுக்கும். பாக்குச் செடிகள் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையும், தண்ணீர் தேங்காத மண் வகையும் தேவை.

தேர்வு செய்த நிலத்தை களை இல்லாத அளவுக்கு உழவு செய்து, 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் பூவன் அல்லது கற்பூரவல்லி வாழையை நடவு செய்ய வேண்டும். இந்த வாழைச் செடிகளுக்கு வழக்கமான முறையில் எரு, பஞ்சகவ்யா மாதிரியான இடுபொருட்களைப் பயன்படுத்தினால் போதுமானது. வாழை வளர ஆரம்பித்து, 6 மாதங்களில் நிழல் கட்டிக்கொள்ளும். அதன் பிறகு இரண்டு வாழைச்செடிகளுக்கு இடையிலோ அல்லது நாலு வாழைச்செடிகளின் மையத்திலோ 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஆறு மாத வயதுடைய பாக்குச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

இரண்டாம் ஆண்டு முதல் இடுபொருட்கள்!

முதல் ஆண்டு விளையும் வாழையை அறுவடை செய்த பிறகு, மறுதாம்பு விட்டு அதையும் அறுவடை செய்ய வேண்டும். இரண்டாண்டுகளில் பாக்கு மரங்களும் ஓரளவுக்கு வளர்ந்து விடும். அதன் பிறகு, வாழையை அழித்து விட வேண்டும். வாழை இருக்கும் வரை பாக்கு மரங்களுக்கு தனியாக இடுபொருட்கள் கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு,  ஆண்டுக்கு ஒரு முறை மரத்தின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு பாக்கு மரத்துக்கும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை எரு வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைல் அல்லது ஜீவாமிர்தக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். வளர்ச்சி குறைவாகத் தெரிந்தால், இக்கரைசலுடன் 5 லிட்டர் பஞ்சகவ்யாவையும் சேர்த்துக் கொள்ளலாம். 

6-ம் ஆண்டில் மகசூல்!

களைகள் மண்டும்போது பவர் டில்லர் மூலம் உழவு செய்ய வேண்டும். இரண்டு மரங்களுக்கு இடையில் இருக்கும் முதல் வாய்க்காலில் பண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் போட வேண்டும். அடுத்த வாய்க்காலில்தான் பாசனம் செய்ய வேண்டும். 6-ம் ஆண்டு மரங்கள் பாளை விட்டு, பாக்கு காய்க்கத் துவங்கும். 7 முதல் 8 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை பாக்கு மரங்களில் அறுவடை செய்யலாம்.”

மஞ்சளுக்கு மூடாக்கு உளுந்து!

“மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பு 90 சென்ட் நிலத்துக்கு இரண்டு கிலோ அளவில் உளுந்து விதைத்து... பிறகு மஞ்சளை நடவு செய்வேன். உளுந்துச் செடிகளில் பூவெடுத்ததும் அதைப் பிடுங்கி மஞ்சளுக்கு மூடாக்காகப் போட்டு விடுவேன். இப்படிச் செய்யும்போது களைப் பிரச்னை குறைவாக இருப்பதுடன் மஞ்சளுக்குத் தேவையான தழைச்சத்தும் கிடைத்து விடுகிறது” என்கிறார், கோவிந்தராஜுலு.

தென்னைக்கு இடையில் பாக்கு வேண்டாம்!

“தென்னை மரங்களுக்கு இடையில் பாக்கு மரங்களை நடவு செய்தால், பாக்கு மரங்களில் மகசூல் குறைகிறது. அதனால், அதைத் தவிர்ப்பது நல்லது. பாக்குத் தோப்பின் வரப்புகளில் தென்னை வைத்துக் கொள்ளலாம்” என்கிறார், கோவிந்தராஜுலு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு