Published:Updated:

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வருமானம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம், சே.சின்னதுரைபொங்கல் சிறப்பிதழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டவுளுக்குப் படையல் படைக்கும்போதும் சரி, மங்களகரமான நிகழ்ச்சிகளிலும் சரி... அதில் வெற்றிலை

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

கட்டாயம் இடம் பெற்றிருக்கும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வது ஒரு சம்பிரதாயமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பொங்கல் திருநாளன்றும் படையலில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு.

‘கும்பகோணம் வெற்றிலை’, ‘சோழவந்தான் வெற்றிலை’ என ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேக சுவையுடன் விளைகிறது, வெற்றிலை. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கும் தனி கிராக்கி உண்டு. அதற்கு அந்தப் பகுதியின் நீர் வளமே காரணம்.

ஆத்தூர் பகுதியிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தினமும் 2 ஆயிரம் கிலோ அளவில் வெற்றிலை அனுப்பப்படுகிறது. சீசன் சமயங்களில் 5 ஆயிரம் கிலோ அளவு கூட வெற்றிலை அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறார், வெள்ளாளன்விளை கிராமத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்.

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பரமன்குறிச்சி. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, வெள்ளாளன்விளை. வெற்றிலைக் கொடிகளுக்குத், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“பரம்பரையாவே விவசாயம்தான் தொழில். தாத்தா காலத்துல இருந்தே வெற்றிலை விவசாயம் செய்றோம். நான் பி.ஏ படிச்சிட்டு அப்பாவுடன் சேர்ந்து வெற்றிலை விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல ரசாயன உரம் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, காயாமொழியில் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்ற சக்திகுமார்ங்கிற விவசாயியைச் சந்திச்சேன். அவர்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லி ‘பசுமை விகட’னையும் அறிமுகப்படுத்தினார். உடனே தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். முழுமையா இயற்கை விவசாயத்துக்கும் மாறிட்டேன். முன்னெல்லாம் இந்தப் பகுதியில நிறைய பேர் வெற்றிலை போட்டிருந்தாங்க. ஆனா, தண்ணீர்த் தட்டுப்பாட்டால பலர் விவசாயத்தையே விட்டுட்டாங்க. ஆனாலும், நான் தாக்குப்பிடிச்சு நிக்கிறதுக்குக் காரணம், பசுமைவிகடன் சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயப் பாடம்தான்” என்று முன்னுரை சொன்ன ஆம்ஸ்ட்ராங், தொடர்ந்தார்.

“பொதுவாகவே வெற்றிலைக்கு கரிசல் மண் ரொம்ப ஏற்றது. எனது நிலமும் கரிசல் நிலம்தான். அதனால மகசூலுக்கு பஞ்சம் இல்லை. இறவைப் பாசனத்துலதான் வெற்றிலை சாகுபடி செய்துக்கிட்டிருக்கேன். 2 ஏக்கர்ல வெற்றிலை போட்டிருந்தேன். போன மாசம் பெய்த மழையால வயல்ல தண்ணி தேங்கினதுல... ஒரு ஏக்கர் அளவுக்கு பயிர் வீணாயிடுச்சு. இப்போ ஒரு ஏக்கர்ல மட்டும்தான் வெற்றிலை இருக்கு. இன்னொரு ஏக்கர்ல வெற்றிலை நடவுக்கான வேலைகளைச் செய்துக்கிட்டிருக்கேன். 

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

முழுக்க முழுக்க தொழுவுரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டைக் கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தித்தான் சாகுபடி செய்றேன். இயற்கை முறைங்கிறதால அதிகமா தண்ணீர் தேவைப்படுறதில்லை. அதில்லாம ரசாயன உரம் பயன்படுத்தினா மூணு வருஷம்தான் வெற்றிலை மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கை முறையில அதை விட அதிக வருஷங்கள் மகசூல் இருக்கும்” என்ற ஆம்ஸ்ட்ராங், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

‘’நடவு செய்த 90-ம் நாளுக்கு மேல தொடர்ந்து வெற்றிலை பறிக்கலாம். பொதுவா, 20 நாளுக்கு ஒரு முறைதான் பறிப்பாங்க. நான் தினசரி வருமானத்துக்காக சுழற்சி முறையில பறிக்கிறேன். ஒரு ஏக்கர்லயும் மொத்தமா ஒரே நாள்ல பறிச்சுக்கிட்டுப் போறப்போ... சில சமயம் குறைவாதான் விலை கிடைக்கும். அதே நேரத்துல தினமும் கொஞ்சம் கொஞ்சம் பாத்திகளா பிரிச்சுக்கிட்டு சுழற்சி முறையில பறிக்கிறப்போ... எப்பவாவது விலை குறைஞ்சாலும் பிரச்னை இருக்காது. ஆத்தூர், உடன்குடி ரெண்டு ஊர்லயுமே வெற்றிலைச் சந்தை இருக்கு. இங்கதான் வெற்றிலையை விற்பனை செய்றேன். வெற்றிலை படர்வதற்காக நட்டிருக்கிற அகத்தியிலும் தினமும் கீரை பறிக்கிறேன். இதை உள்ளூர்லயே விற்பனை செய்துடுவேன்.

பறித்த வெற்றிலையைக் கட்டாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஈரத்துணியால மூடிடணும். சராசரியா ஒரு கட்டுக்கு 300 வெற்றிலை இருக்கும். காற்று, வெயில் பட்டு வெற்றிலை காய்ந்தால் எடை குறைஞ்சிடும். தோட்டத்தில் எடைபோடும்போது 1,100 கிராம் இருந்தா, சந்தைக்குக் கொண்டுபோகும்போது ஒரு கிலோதான் இருக்கும்.

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

நான் தினமும் பத்து பாத்திகள்ல அறுவடை செய்றேன். தினமும் சராசரியா 20 கிலோ வெற்றிலையும், 15 கட்டு அகத்தியும் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு 600 கிலோ வெற்றிலையும், 450 கட்டு அகத்தியும் கிடைக்குது. முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள், மழை நாட்கள்ல வெற்றிலை விலை கூடும். மற்ற நாட்கள்ல விலை குறைவா இருக்கும். ஒரு கிலோ வெற்றிலை 60 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரை விற்பனையாகும். கணக்குப் பாக்கிறப்போ  சராசரியா கிலோவுக்கு 70 ரூபாய் கிடைச்சிடும். அந்த வகையில ஒரு ஏக்கர் வெற்றிலை மூலமா மாசத்துக்கு 42 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஒரு கட்டு அகத்தி 10 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த வகையில மாசத்துக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுடும். வருஷத்துக்குனு பார்த்தா ஒரு ஏக்கர்ல இருக்கிற வெற்றிலை, அகத்தி ரெண்டுலயும் சேர்த்து... 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுல எல்லா செலவும் போக, 3 லட்ச ரூபாய் வரை லாபமா நிக்கும்” என்றார், சந்தோஷமாக.  

தொடர்புக்கு,
ஆம்ஸ்ட்ராங்,
செல்போன்: 94429-48672.

வெற்றிலை சாகுபடி செய்யும் முறை:

வெற்றிலை சாகுபடி குறித்து, ஆம்ஸ்ட்ராங்

சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 300 பாத்திகள்!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடி மாதத் தொடக்கத்தில் ஒரு சால் உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து 12, 18, 24, 30-ம் நாட்களில் உழவு செய்ய வேண்டும். இறுதி உழவின்போது ஏக்கருக்கு 5 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி உழ வேண்டும். பிறகு, 12 அடி நீளம் 10 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் 2 அடி அகலத்தில் வாய்க்கால்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆறு பாத்திகளுக்கும் இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த வகையில் ஏக்கருக்கு சுமார் 300 பாத்திகள் வரை எடுக்கலாம்.

கொடி படர அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கை!


கடைசியாக உழவு செய்து 10 நாட்கள் கழிந்த பிறகு, பாத்திகளில்... வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளி, செடிக்குச் செடி 1 அடி இடைவெளி என்ற கணக்கில்... ஆமணக்கு, அகத்தி, முள் முருங்கை ஆகிய பயிர்களின் விதைகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பயிர்கள் வளர்ந்த பிறகு இவற்றில்தான் வெற்றிலைக் கொடிகளைப் படர விட வேண்டும். வழக்கமாக அகத்தியை மட்டும்தான் நடவு செய்வார்கள். ஆனால், ஆமணக்கு, முள்முருங்கை போன்றவற்றை கலந்து பயிரிடும்போது பூச்சிகளின் தாக்குதல் குறையும். இந்தப் பயிர்கள், 40 நாட்களுக்குள் இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதுதான் வெற்றிலை நடவுக்கு சரியான தருணம். இதற்குள் களைகள் முளைத்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும்.

ஏக்கருக்கு 18 ஆயிரம் கொடிகள்!

8 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்த வெற்றிலைக் கொடிகளில் உச்சியில் 3 அடி அளவுக்கு வெட்டி எடுத்து, அதை ஒரு அடி நீளமுள்ள மூன்று துண்டுகளாக்க வேண்டும். ஒரு துண்டில் மூன்று கணுக்கள் இருக்க வேண்டும். இவைதான் விதைக் கொடி. இவற்றை ஒரு கட்டுக்கு 50 விதைக் கொடிகள் எனக் கட்டி வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 380 கட்டுகள் (19,000 கொடிகள்) வரை தேவைப்படும். ஒரு பாத்தியில் 60 கொடிகள் நடவு செய்யலாம். அந்த வகையில் 18 ஆயிரம் கொடிகளே போதுமானவை. ஆனாலும், சில கொடிகள் நடவுக்குள் அழுகி விட வாய்ப்புண்டு. அதனால் 19 ஆயிரம் கொடிகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 

தண்ணீர்... கவனம்!

ஒன்றரை அடி ஆழம், ஐந்தடி சதுரத்தில் ஒரு குழி பறித்து அதில் விதைக் கொடிக் கட்டுகளைப் போட்டு இரண்டு கணுக்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3-ம் நாள் அவற்றை எடுத்து அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கைச் செடிகளின் அருகில்... ஒவ்வொரு செடியின் அருகிலும் கைகளால் குழி பறித்து தலா ஒரு வெற்றிலைக் கொடியை இரண்டு கணுக்கள் குழிக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் மாலையில் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் நிலத்தில் தேங்கக் கூடாது. அதிக தண்ணீர் பாய்ச்சினால் கொடிகள் அழுகி விட வாய்ப்புண்டு.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்!


வெற்றிலைக் கொடிகளை நடவு செய்த 5-ம் நாள், செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் கொடிகள் ஓரளவுக்கு வளர்ந்து விடும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி ஜீவாமிர்தக் கரைசல் எனக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒரு முறை கொடியின் தூரிலிருந்து மேற்பகுதி வரை நனையுமாறு இதேபோல ஜீவாமிர்தத்தைத் தெளித்து வர வேண்டும். 40-ம் நாள் வெற்றிலைக் கொடிகளை... அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கை செடிகளில் தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு கட்டி விட வேண்டும்.

நடவு செய்ததில் இருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை... 100 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்த கலவையில், ஒரு கைப்பிடி அளவை ஒவ்வொரு கொடியின் தூரிலும் வைக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு கொடியின் தூரிலும் இரண்டு கைப்பிடி அளவு தொழுவுரம் வைக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்தால் நோய் எதிர்ப்புச்  சக்தியும் கூடுதலாக இருக்கும்.

சில சமயங்களில் தூர் அழுகல் நோய் வரும். இந்நோய் தென்பட்டால், அந்தக் கொடியில் உள்ள வெற்றிலைகளைப் பறித்து விட்டு, அக்கொடியின் கீழ்ப் பகுதியை மண்ணுக்குள் பதியமிட்டு படர விட வேண்டும். அதிக வெயில் நேரங்களில் இலை வெளிறினால், கூடுதலாக தண்ணீர் பாய்ச்சினால் சரியாகி விடும்.

இலைச்சுருட்டுப் புழுக்கள் தாக்கினால்... வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து 12 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 2 நாட்கள் ஊற வைத்தால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இந்தக் கரைசலில் 300 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதைத் தெளித்த மறுநாள் இதே அளவில் பஞ்சகவ்யா தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உயரமாக வளர்ந்த கொடிகளின் தண்டையும் நுனியையும், இறுக்கமாகக் கட்ட வேண்டும். இதைதண்டயம் கட்டுதல்’(கொடிக்கட்டுதல்) என்பார்கள். அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கைச் செடிகளுக்கு குறுக்காக சவுக்குக் கம்பு கட்டி அவற்றிலும் கொடிகளைப் படர விடலாம்”.

வெற்றிலையில் ஆரோக்கியம்

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் உள்ளன. கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் வெற்றிலையில் உள்ளன. வெற்றிலைக்கு ‘நாக இலை’ என்ற பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தையே முறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதால் சித்தர்கள் வெற்றிலையை நாக இலை என்று குறிப்பிட்டுள்ளனர். வெற்றிலையுடன் மிளகை தட்டிக் கொடுத்தால் பூச்சிக்கடிபட்டவர்களுக்கு விஷம் இறங்கும். இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் 9 மிளகை மடக்கி வாயில் போட்டு மென்று விழுங்கினால் தேள்கடி விஷம் இறங்கும்.

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கி பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. வெற்றிலைச்சாறுடன் நீர் கலந்த பாலைக் குடித்தால் சிறுநீர் பிரியும், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும். வெற்றிலையை கடுகு எண்ணையில் இளஞ்சூட்டில் வதக்கி மார்பில் கட்டினால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தடவி ஆசன வாயினுள் செலுத்தினால் மலம் வெளியேறும்.

தேங்காய் எண்ணையில் வெற்றிலையை சேர்த்து சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் இறக்கி அந்த எண்ணையைத் தடவினால் தோல், சொறி , சிரங்கு நோய்கள் குணமாகும். வெற்றிலை வேரை சிறிதளவு எடுத்து மென்று வந்தால், குரல்வளம் பெருகும்.

வெற்றிலை விழா

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் ஊர் ஒற்றுமைக்காவும், விவசாயம் செழிக்கவும்... ஒவ்வொரு ஆண்டும் வெற்றிலைப் பிரி விழா கொண்டாடி வருகிறார்கள். வெள்ளூர் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வெள்ளூரைச் சுற்றியுள்ள 58 கிராமங்கள் ஒன்றிணைந்து, ‘வெள்ளூர் நாடு’ என்றழைக்கப்படுகிறது. இந்த 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூண்டவாசி, சலிப்புளி, நண்டன்... என 11 பிரிவுகளாக உள்ளனர்.

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

ஒரு பிரிவை நிர்வகிக்க இரண்டு அம்பலக்காரர், இரண்டு இளங்கச்சிகள் என 44 நபர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளன்று இந்த 44 பேரும் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு வெள்ளூரிலுள்ள கருங்கல் மந்தையில் ‘ப’ வடிவில் அமர்ந்து... 58 கிராமங்களுக்கும் வெற்றிலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டினரும் அந்த வெற்றிலையைப் பெற்றுக் கொண்டு மாடுகளை நிலத்துக்கு ஓட்டிச் சென்று அந்த வெற்றிலையை வைத்து பூஜை செய்து பிறகு உழுகிறார்கள். இப்படி கோடை உழவு செய்தால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இவர்களது நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு