Published:Updated:

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!
வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

அசத்தும் அணுமின் நிலைய அலுவலர்!படிச்சோம்... விதைச்சோம்...10-ம் ஆண்டு சிறப்பிதழ்துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்

நெல்லில் எத்தனை புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும்... தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு ஈடு இணையே கிடையாது.  வறட்சி, வெள்ளம், பனி என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை சாகுபடி செய்தவரை, விவசாயிகளுக்கு எந்த வில்லங்கமும் இல்லை.

மடுமுழுங்கி ரகத்தை விதைத்து,  வெள்ளத்தில் தண்ணீருக்குள் மூழ்கிய பயிர்களை பரிசலில் சென்று அறுவடை செய்து இயற்கைச் சீற்றத்தை வென்றது!

கடுமையான வறட்சிக் காலத்தில் மாப்பிள்ளைச்சம்பா, கிச்சலிச்சம்பா போன்ற ரகங்களைப் பயிர் செய்து பருவகால சிக்கல்களில் வென்றது!

இப்படி நம் முன்னோர் அறிவுக்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது வரும் வீரிய ரகங்களைப் பயிர் செய்யும் விவசாயிகள், பருவநிலையால் படும்பாட்டை சொல்ல வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கும் சரி, விவசாயிகளின் வருமானத்துக்கும் சரி... பாரம்பர்ய ரகங்கள்தான் இன்றளவும் கைகொடுத்து வருகின்றன.

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

இயற்கைக்கு ஈர்த்த மண்புழு உரம்!

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதிகமான நஷ்டத்தை அனுபவித்தனர். ஆனால், தனது நான்கு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய ரக நெல்லை விதைத்து... வயலில் ஒன்றரை அடி தண்ணீர் நின்றும் எந்த விதமான நஷ்டமும் இல்லாமல் மகசூல் எடுத்திருக்கிறார்,  மாமண்டூரைச் சேர்ந்த விவசாயி, முருகப்பா.

சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டில் இருந்து பத்தாவது கிலோ மீட்டரில் உள்ள மாமண்டூரில் அமைந்துள்ளது, முருகப்பாவின் பண்ணை. அறுவடை வேலைகளில் முனைப்பாக இருந்த முருகப்பாவைச் சந்தித்தோம்.

“நான், பிறந்தது விவசாயக் குடும்பத்துலதான். சின்னவயசுல இருந்தே விவசாயச் சூழல்லயே வளர்ந்தவன். படிக்கிற காலத்துல தாத்தா கூட விவசாயத்துக்கு உதவியா இருப்பேன். படிச்சு முடிச்சதும் அணுமின் நிலையத்துல வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆனாலும் விவசாயத்தை விடலை. மொத்தம் நாலு ஏக்கர் நிலம் இருக்கு. கரும்பையும், நெல்லையும் சுழற்சி முறையில விதைக்கிறேன். சுழற்சி முறையில விவசாயம் செய்றதுதான் பயிருக்கும், மண்ணுக்கும் நல்லது. நான் விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னால என் நிலத்துல ரசாயன உரம்தான் உபயோகப்படுத்தினாங்க. நான், மண்புழு உரம் தயாரிக்கிறதைக் கத்துக்கிட்டு அதைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். மண்புழு உரத்தை உபயோகப்படுத்துறப்போ... கரும்புல விளைச்சல் கூடியது. நல்ல தடிப்பாகவும் இருந்தது. எனக்கு இயற்கை உரத்தை உபயோகப்படுத்துற ஆர்வம் அதுலதான் அதிகமாச்சு’’ என்று முன்கதை சொன்ன முருகப்பா தொடர்ந்தார்.

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

விதை வாங்கிக் கொடுத்த விகடன்!

“கிணறு, போர்வெல் இரண்டுமே இருக்கு. நாலு ஏக்கர்லயும் கிச்சலிச்சம்பா சாகுபடி பண்ணி, இப்பத்தான் அறுவடை செஞ்சேன். கிச்சலிச்சம்பா விதைநெல்லை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துல இருந்துதான் வாங்கினேன். இந்த பாரம்பர்ய விதைநெல்லை வாங்கிறதுக்கு உதவியா இருந்தது, ‘பசுமை விகடன்’தான். அதுல தெரிஞ்சுக்கிட்டுதான் ஆஸ்ரமத்துல விதை வாங்கினேன். அவங்க கொடுத்த அரை கிலோ விதைநெல்லை விதைச்சு, விதைநெல்லைப் பெருக்கிக்கிட்டேன். அப்படிப் பெருக்கிறதுக்காக ஒரு ஏக்கர்ல இந்த ரகத்தை விதைச்சப்பத்தான்... பாரம்பர்ய ரகங்களோட சிறப்பு எனக்குத் தெரிஞ்சது. கிச்சலிச்சம்பா நெல், போன முறை வறட்சியைத் தாங்கி வளர்ந்தது. இந்த முறை வெள்ளத்தைத் தாங்கி வளர்ந்திருக்கு. இந்தப் பெருமை அத்தனையும் பசுமை விகடனைத்தான் சேரும்.

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

தண்ணீரிலும் தளராத பயிர்!

டிசம்பர் மாதத்துல பெய்த மழை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளை ரொம்பவே பாதிச்சிடுச்சு. பாரம்பர்ய ரகப் பயிரை நட்ட விவசாயிகள் மட்டும்தான் ஓரளவுக்கு தாக்குப் பிடிச்சிருக்கோம். என்னோட நிலத்தில 15 நாளா தண்ணி நின்னது. ஆனாலும், பயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நான், பயோ டைனமிக் முறையில மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் பார்த்து கொம்பு சாண உரம் பயன்படுத்தி விவசாயம் செய்றதால பூச்சி, நோய் தாக்குதலே கிடையாது. தண்ணீர்ல மூழ்குனதுக்குப் பிறகும் குறைவில்லாத மகசூல் கிடைச்சதுக்கு பயோ- டைனமிக் முறையும் ஒரு காரணம். இந்த பயோ-டைனமிக் விவசாய முறையும் கூட, எனக்கு பசுமை விகடன் மூலமாத்தான் அறிமுகமாச்சு.

மழைக்குப் பின்னாடி, நெல்லை அறுவடை செய்தப்போ... ஒரு ஏக்கருக்கு பதினேழரை மூட்டை (75 கிலோ மூட்டை) நெல் கிடைச்சது. மொத்தமாக நாலு ஏக்கருக்கும் சேர்த்து 70 மூட்டை கிடைச்சது. அதாவது 5 ஆயிரத்து 250 கிலோ நெல் கிடைச்சது. நானே அரிசியா மாத்தி நேரடியா விற்பனை செய்யலாம்னு இருக்கேன்.

வெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா!

அரிசியா அரைக்கிறப்போ 5 ஆயிரத்து 250 கிலோ நெல்ல இருந்து, 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். பச்சரிசியை கிலோ 55 ரூபாய்னும், புழுங்கல் அரிசியை கிலோ 50 ரூபாய்னும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். குறைந்தபட்ச விலையா ஒரு கிலோ அரிசி 50 ரூபாய்னு விற்பனை செய்தாலே, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுடும். இதுல, 40 ஆயிரம் ரூபாய் செலவு போக, 85 ஆயிரம் ரூபாய் வரை லாபமா நிக்கும்” என்ற முருகப்பா நிறைவாக,

“என் முன்னோர்கள் கொடுத்துட்டுப் போன நிலத்தை என்னால முடிஞ்ச அளவு கெட்டுப் போகாம பாதுகாக்கணும். இதுதான் என்னோட ஆசை. அதுக்கு பசுமை விகடன் எனக்கு உற்ற வழிகாட்டியா இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு,

முருகப்பா,

செல்போன்: 94432-77311.

கொம்பு சாண உரம் தயாரிப்பது எப்படி?

கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும். சுமார் 6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால்... கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் தூள் போல இருக்கும். ஒரு வித வாசனையும் அடிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால்... கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகி விட்டது என்று பொருள்.

இதை மண் பாத்திரத்தில் ஓர் ஆண்டு காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஓர் அடி அளவுள்ள கொம்பில் 180 கிராம் வரை உரம் கிடைக்கும். ஒரு கொம்பை இரண்டு முறைகூட பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 15 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்றவேண்டும். கீழ்நோக்கு நாளில் மாலைவேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும். இப்படித் தெளிக்கும்போது அந்த நிலத்தில் ஈரப்பதமும், கம்போஸ்ட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. மண்புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மூடாக்கை மட்க வைப்பதோடு, கம்போஸ்ட்டை வேகமாகச் செயல்பட வைக்கவும் இந்த உரம் உதவுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இயற்கை வேளாண்மை என்பது சித்த மருத்துவம் போன்றது. உயிர்ச்சக்தி வேளாண்மை என்பது ஹோமியோபதி மருத்துவ முறை போன்றது. குறைந்த அளவிலான இடுபொருட்கள் என்றாலும் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

நத்தைக்குத் தீர்வு!

“மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வந்தன. அவை நெல்பயிரின்  அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தின. நத்தைகளைத் தடுக்க.... கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டோம். அதில் சிறப்பான பலன் கிடைத்தது” என்கிறார், முருகப்பா.

கிச்சலிச்சம்பா சாகுபடி!

கிச்சலிச்சம்பா சாகுபடி செய்யும் முறை குறித்து முருகப்பா சொன்ன விஷயங்கள் இங்கே...

“கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக்  கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு இலை, தழைகளை (எருக்கன், ஆவாரை போன்றவை) போட்டு உழ வேண்டும். நாற்றுகளை நடவு செய்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20  நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். களை எடுத்த 10 நாட்களுக்குள் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 20 கிலோ அளவு தெளிக்க வேண்டும். 45 நாட்களுக்குள் பத்து லிட்டர் நீரில், 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்கலாம். 

75 மற்றும் 100-ம் நாட்களில் 150 கிராம் கொம்பு சாண உரம் இட வேண்டும். கொம்பு சாண உரம் இல்லை என்றால், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 20 கிலோ அளவு தெளிக்கவேண்டும். 120 நாட்களுக்கு மேல் பாசனத்தைக் குறைக்க வேண்டும். 150-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.”

அடுத்த கட்டுரைக்கு