Published:Updated:

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!
சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

ஒரு ஏக்கர்... மாதம் ரூ 57 ஆயிரம்!படிச்சோம்... விதைச்சோம்...10-ம் ஆண்டு சிறப்பிதழ்காசி.வேம்பையன், படங்கள்: கா.முரளி

வியாபாரம் செய்ததுல கடன் அதிகமாகிப் போச்சு. அடுத்து என்ன செய்றதுனே தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்பதான், எங்களுக்கு வழிகாட்டியா வந்தது ‘பசுமை விகடன்’. அது எங்க வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சிடுச்சு. இப்போ சம்பங்கி விவசாயம் செய்து சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கின்றனர், திருவண்ணாமலை மாவட்டம், விசுவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்-பிரேமா தம்பதி.

சம்பங்கி மொட்டுக்கள் காற்றில் நடனமாடிக் கொண்டிருக்க... பூக்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரனிடம் பேசினோம். ‘‘மருந்தாளுநர் படிப்பு படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துல அப்பா இறந்துட்டார். அதனால, அப்பா செய்துக்கிட்டிருந்த மல்லிகைப் பூ மொத்த வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அதுல எனக்கு போதுமான முன் அனுபவம் இல்லை. அதனால அந்தத் தொழில் எனக்கு சரிப்பட்டு வரலை. அதுக்குள்ள கடன் ஏறிப்போச்சு. அந்தக் கடனை அடைக்கிறதுக்காக விவசாயத்துல இறங்கினேன்.

எங்க வயலுக்கு ஏரிப் பாசனங்கிறதால நெல் சாகுபடி செய்தேன். அப்பவும் தண்ணீர்ப் பற்றாக்குறை. உடனே கிணறு வெட்டினேன். அப்படியும் பெரியளவுல சம்பாதிக்க முடியலை. விவசாயத்துலயும் கடனாகிப்போய் உரம் வாங்கக்கூட காசில்லாத நிலைமை வந்துடுச்சு. அந்த சமயத்துலதான் என்னோட நிலைமையை ஒரு நண்பர்கிட்ட சொன்னேன்” சற்று இடைவெளி விட்டு பேச ஆரம்பித்தார், பிரபாகரன்.

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

வழிகாட்டிய பசுமை விகடன்!

“அவர்தான், இயற்கை விவசாயம் குறித்துச் சொன்னார். அதைக் கத்துக் கறதுக்காக அவர் கூடவே மூணு வருஷம் சுத்தினேன். ஆனா, அவர் முழுமையா சொல்லிக் கொடுக்கலை. அந்த சமயத்துலதான், (2007-ம் ஆண்டு) இன்னொரு நண்பர் ‘பசுமை விகடன்’ புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். அதை படிச்சதுமே, நாம தேடினது கிடைச்சிடுச்சேனு பயங்கர சந்தோஷம். அதுலருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த இதழ்லதான், துறையூர் பக்கத்துல சம்பங்கி சாகுபடி செய்திருந்த ஒரு விவசாயியோட பேட்டி வந்திருந்துச்சு. உடனே, நாமளும் சம்பங்கி சாகுபடிதான் செய்யணும்னு முடிவு செய்துட்டேன். அதே சமயத்துல பசுமை விகடன் ஈரோட்டுல நடத்தின ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்க எனக்கு கூடுதல் நம்பிக்கை கிடைச்சது. அப்பறம் தைரியமா 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, 500 கிலோ விதைக்கிழங்கு வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். மேலும் கடன் வாங்கிறதுக்கு வீட்டுல கொஞ்சம் எதிர்ப்பு. ஆனாலும், நான் நம்பிக்கை வைத்து ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம்...னு தயார் செய்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.

 ஆறு மாதத்துல பூவெடுக்க ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா வருமானம் அதிகரிக்க ஆரம்பிச்சது. ரெண்டே வருஷத்துல எனக்கிருந்த கடன்ல முக்கால்வாசியை அடைச்சிட்டேன். அடுத்த வருஷம் கொஞ்சம் கிழங்கை வெட்டி விற்பனை செய்து மீதி கடனையும் அடைச்சிட்டேன். மொத்தக் கடனையும் அடைச்சதுல, வீட்டுல அவ்வளவு பேருக்கும் சந்தோஷம். இப்போ முழுக்க ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செய்றேன். மனைவி, அம்மா எல்லோரும் எனக்கு முழுஒத்துழைப்பு கொடுக்கிறதால விவசாயம் சிறப்பா நடந்துக்கிட்டிருக்கு” என்றார்.

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

பாலேக்கர் சொன்ன யோசனை!

தொடர்ந்து பேசிய பிரபாகரனின் மனைவி பிரேமா, “இவர் திரும்பவும் கடன் வாங்கி விவசாயத்தை ஆரம்பிச்சப்போ, வருமானம் கிடைக்கும்னு நம்பிக்கையே இல்லை. ஆனா, சம்பங்கியில கிடைச்ச வருமானம்தான் விவசாயத்து மேலயே நம்பிக்கையை உருவாக்குச்சு.

குடும்பமே உழைக்கிறதால, எங்களுக்கு செலவு குறையுது. நாங்க ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, திருவண்ணாமலையில (2010-ம் ஆண்டு) ஜீரோ பட்ஜெட் பயிற்சி நடந்துச்சு. அதுலயும் இவர் கலந்துக்கிட்டார். அங்க, ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்றவங்களை கை தூக்கச் சொல்லியிருக்கிறார், பாலேக்கர். இவரும் கை தூக்கி இருக்கிறார். அந்த சமயத்துல ரெண்டு ஏக்கர்ல சம்பங்கி, ஒரு ஏக்கர்ல சிந்தாமணி (துலுக்கன் சாமந்தியில் ஒரு ரகம்)னு மொத்தம் 3 ஏக்கர்ல பூ சாகுபடி செய்திருந்தோம். இதைக் கேட்டு வெச்சுக்கிட்டார், பாலேக்கர்.

பயிற்சி முடிஞ்ச மறுநாள், எங்க தோட்டத்துக்கு வந்துட்டார், பாலேக்கர். அன்னைக்கி இவர், பூவுக்கான பணம் வாங்க கும்பகோணம் போயிட்டார். நான்தான் பாலேக்கர் அய்யா கிட்ட எங்களோட விவசாய முறையைச் சொன்னேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டவர், நாங்க செய்திருந்த சில தவறுகளைச் சுட்டிக்காட்டி... உயிர்மூடாக்கு குறித்து சொல்லிக்கொடுத்தார். அதோட, நூற்புழுவைக் கட்டுப்படுத்தறதுக்கு உன்னிச்செடியை ஊற வைத்து அந்தக் கரைசலைத் தெளிக்கச் சொல்லி யோசனையும் சொன்னார். ‘ஒவ்வொரு செடிக்கும் தனியா ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டியதில்லை. பாசனத் தண்ணீர்ல கலந்து விட்டாலே போதும்’னு சொல்லிக் கொடுத்தார்” என்றார்.

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

வேர் அழுகலுக்கு சோற்றுக்கற்றாழை!

தொடர்ந்து தனது அனுபவம் குறித்துப் பேசிய பிரபாகரன், “சம்பங்கி சாகுபடியில ஆரம்பத்துல அதிகளவுல நோய்த்தாக்குதல் இல்லை. அதிகமா வேர் அழுகல் நோய் வர ஆரம்பிக்கவும், நோய்க்கு விதைக் கிழங்குதான் காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பறம் நல்ல கிழங்கா தேர்வு செய்து விதைநேர்த்தி செய்து நட ஆரம்பிச்சதும் கொஞ்சம் பலன் கிடைச்சது. நானே சோற்றுக்கற்றழை கரைசலைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுல நல்ல பலன் கிடைச்சது.

வறட்சியைப் போக்கிய மூடாக்கு!

இடையில் போன ரெண்டு வருஷமா வறட்சியால தண்ணீர்ப் பற்றாக்குறை. அதுக்கு மூடாக்குதான் கைகொடுத்தது. சம்பங்கி நடவு செய்திருக்கிற இடங்கள்ல உயிர்மூடாக்கு போட்டோம். பாத்திகளுக்கான இடைவெளியில கரும்பு சோகையை மூடாக்கா போட்டோம். தினமும் பத்து நிமிஷம் மட்டும் தெளிப்பு நீர்ப் பாசனம் செய்தே மூடாக்கால செடிகளைக் காப்பாத்திட்டேன். மகசூல் கொஞ்சம் குறைஞ்சாலும், செடிகள் பிழைச்சிடுச்சு.

வெப்பநிலையைக் குறைக்கும் பொறிப்பயிர்கள்!

சம்பங்கிச் செடிகளுக்கு இடையில உளுந்து, கேந்திப் பூ, தட்டைப்பயறு, ஆமணக்கு, துவரை மாதிரியான செடிகளோட விதைகளை விதைச்சுவிட்டா, அங்க நுண் வெப்பநிலை (மைக்ரோ கிளைமேட்) கிடைக்கிறதால... சம்பங்கி நல்லமுறையில வளருது. அதோட களைப் பிரச்னைகள் இருக்காது. பூச்சித் தாக்குதலும் குறையும். மொத்தம் 6 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். இதுல ரெண்டு ஏக்கர் குத்தகை நிலம். நாலரை ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்கள் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல சம்பங்கி இருக்கு” என்ற பிரபாகரன் நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

மாதம் ரூ 75 ஆயிரம் வருமானம்!

“ஒரு சென்ட்ல தினமும் 300 கிராம்ல இருந்து ஒரு கிலோ வரை பூ கிடைக்கும். எப்படியும் ஒரு ஏக்கர்ல தினமும் 50 கிலோவுக்குக் குறையாம பூ கிடைச்சுடும். இந்தக் கணக்குல ஒன்றரை ஏக்கர்ல மாசம் 2 ஆயிரத்து 250 கிலோ பூவுக்குக் குறையாம கிடைச்சுக்கிட்டிருக்கு. ஒரு கிலோ பூ 40 ரூபாய்ல இருந்து 400 ரூபாய் வரை விற்பனையாகும். முகூர்த்த சமயங்கள்ல அதிக விலை கிடைக்கும். குறைஞ்சபட்சமா ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்தாலே... 2 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக 85 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும். ஏக்கருக்குனு பார்த்தா 57 ஆயிரம் ரூபாய் லாபம்” என்றார், மகிழ்ச்சியுடன்!  

தொடர்புக்கு,

பிரபாகரன்,

செல்போன்: 94423-77489.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் விதம் குறித்து பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒன்றே முக்கால் அடி இடைவெளி!


“சம்பங்கி சாகுபடி செய்ய... களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டன் தொழுவுரத்தைச் சலித்து, அதனுடன் 150 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து நிழலான இடத்தில் குவித்து வைத்திருந்து அதை ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் தூவி ஒரு உழவு செய்ய வேண்டும். இரண்டு அடி இடைவெளியில், மூன்றரை அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியின் இரண்டு ஓரங்களிலிருந்தும் அரையடி உள்ளே தள்ளி, செடிக்குச் செடி ஒன்றே முக்கால் அடி இடைவெளி விட்டு... பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட சம்பங்கி விதைக்கிழங்கை லேசாகப் பள்ளம் பறித்து நடவு செய்ய வேண்டும் (50 லிட்டர் பீஜாமிர்தக் கலவையில் 250 கிலோ விதை கிழங்கை அரை மணி நேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்). ஏக்கருக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை விதைக்கிழங்குகள் தேவைப்படும்.

உயிர்மூடாக்காக உளுந்து!

நடவு முடிந்ததும், மேட்டுப்பாத்தி முழுவதும் உளுந்து, நரிப்பயிர் போன்ற குறுகிய காலப்பயிர்களைச் சாகுபடி செய்யலாம். இரண்டு பாத்திகளுக்கு இடையில் இருக்கும் பகுதிகளில் கரும்பு சோகை அல்லது நெல் வைக்கோல் மாதிரியான பயிர் கழிவுகளை மூடாக்காக இட வேண்டும். வேர் அழுகலையும், நூற்புழுக்களையும் கட்டுப்படுத்த 20 அடிக்கு ஒரு கேந்திச் செடியை நடவு செய்ய வேண்டும். வரப்பில் 10 அடிக்கு ஓர் ஆமணக்கு, ஓர் அடி இடைவெளியில் தட்டைப்பயறு, சோளம், துவரை ஆகிய பயிர்களின் விதைகளை விதைத்துவிட்டால், அவை பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தும்.

15 நாட்களுக்கு ஒரு கரைசல்!

நடவு செய்த 10 நாட்களில் வேர் பிடித்து, துளிர்க்க ஆரம்பிக்கும். 30-ம் நாளுக்கு மேல், செழித்து வளர ஆரம்பிக்கும். சம்பங்கிச் செடிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதால், தெளிப்பு நீர்ப் பாசனம் சிறந்தது. இம்முறையில் தினம் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பாசனம் செய்தாலே போதுமானது. நேரடிப் பாசனம் செய்தால், மண் எப்போதும் புட்டுப் பதத்தில் இருப்பது போல பார்த்துக்கொள்ளவேண்டும்.

30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரில் கலந்துவிடவேண்டும். மாதம் ஒரு முறை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளிக்கவேண்டும். மாதம் ஒரு முறை 200 கிலோ கனஜீவாமிர்தக் கலவையை நிலத்தில் தூவி விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, புளித்த மோரை (3 நாட்கள் புளிக்க வைத்தது) டேங்குக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை கலந்து தெளிக்கவேண்டும். மாதம் ஒரு முறை டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் அக்னி அஸ்திரத்தை கலந்து தெளிக்கவேண்டும். வேர் அழுகல் தாக்குதல் இருந்தால் சோற்றுக்கற்றாழைக் கரைசலையும், நூற்புழுத்தாக்குதல் இருந்தால் உன்னிச்செடிக் கரைசலையும் ஒவ்வொரு செடியின் தூரிலும் ஊற்ற வேண்டும்.

4-ம் மாதம் அறுவடை!

மூடாக்கு இட்டிருப்பதால், செடிகளில் களைகள் குறைவாகத்தான் இருக்கும். மீறி முளைக்கும் களைகளை கைகளால் அகற்றிக் கொள்ளலாம். நடவு செய்த, 3-ம் மாதம் மொட்டு வைத்து, 4-ம் மாதம் முதல் தினமும் 2 கிலோ, 3 கிலோ அளவில் பூக்கள் கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். நான்கு ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மகசூல் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.”

நூற்புழுவுக்கு உன்னிச்செடிக் கரைசல்!
 
15 கிலோ உன்னிச்செடி, 10 கிலோ எருக்கன் செடி ஆகியவற்றை இடித்து... அத்துடன் 2 கிலோ சாணம், 10 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து, 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இதன் மூலம் நூற்புழுக்கள் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.

வேர் அழுகலுக்கு சோற்றுக்கற்றாழைக் கரைசல்!

இடித்த சோற்றுக் கற்றாழை-5 கிலோ, சுண்ணாம்பு-1 கிலோ, மஞ்சள்-1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, ஒவ்வொரு செடிக்கும் 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இப்படிச் செய்யும் போது, வேர் அழுகல் நோய் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.

அடுத்த கட்டுரைக்கு