Published:Updated:

நம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...

நம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...
நம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...

பாதை காட்டிய பசுமை விகடன்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

‘சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் மனதில் இருந்தால் போதும். உடல் ஊனம் ஒரு குறையே இல்லை’ என்பதை தனது செயல் மூலமாக நிரூபித்து வருகிறார், திருவாரூரைச் சேர்ந்த அண்ணாதுரை. விபத்தில் ஒரு காலை இழந்த நிலையில், செயற்கைக் காலுடன் திருவாரூரில் இருந்து கொரடாச்சேரி அருகில் உள்ள செட்டிச் சிமிழி கிராமத்துக்கு தினமும், 40 கிலோ மீட்டர்  தூரம் பயணம் செய்து, இயற்கை விவசாயம் செய்து வருகிறார், இவர்.

ஒரு காலைவேளையில் அண்ணாதுரையைச் சந்தித்தோம். “37 வருஷம் காவல்துறையில் வேலை செய்தேன். திருவாரூர்ல சிறப்பு உதவி ஆய்வாளரா வேலை பார்த்து பணி ஓய்வு பெறுகிற சமயத்துல, ஒரு சாலை விபத்துல என்னோட இடதுகாலை இழந்துட்டேன். உலகமே இருண்டு போன மாதிரி இருந்துச்சு. வாழவே பிடிக்காம வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தேன். அந்த மாதிரியான இறுக்கமான சூழல்ல ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவில் இருக்கிற ஒரு கடையில ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். பொழுதைப் போக்குறதுக்காக அதை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அது, என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு. இன்னிக்கு இவ்வளவு உற்சாகமா நான் நடமாடிக்கிட்டு இருக்கிறதுக்கு காரணம், பசுமை விகடன் கொடுத்த தெம்புதான்” என்று சொன்ன அண்ணாதுரை சற்று இடைவெளி விட்டுத்தொடர்ந்தார்.

நம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...

“இயற்கை விவசாயம் குறித்து பசுமை விகடன்ல வெளி வந்த கட்டுரைகள் எனக்குள்ள பெரிய தாக்கத்தை உண்டாக்கிடுச்சு. எனக்குச் சொந்தமான பூர்விக நிலத்துல நான் ஆட்களை வெச்சுதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தேன். அந்த நிலத்துல இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்தேன். ‘இதெல்லாம் நடக்கிற காரியமா? ஒரு காலால் உங்களால அவ்வளவு தூரம் அலைய முடியுமா?’ னு சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாம் கேட்டாங்க. ஆனாலும் ‘பசுமை விகடன்’ எனக்குள் ஏற்படுத்திய ஆர்வமும் நம்பிக்கையும் என்னைப் புத்தம்புது மனுஷனா இயங்க வெச்சுது.

என்னோட மனைவி சரிதாவும் எனக்கு உறுதுணையா இருந்து உற்சாகப்படுத்தினாங்க. தினமும் அவங்கதான் டூவிலரை ஸ்டார்ட் பண்ணிக் கொடுப்பாங்க. நானே தனியா வண்டியில கிராமத்துக்கு வந்து விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். இந்த கிராமத்துல உள்ள தினேஷ்ங்கிற பையனும் எனக்கு ஒத்தாசையா இருக்கான். இப்போ படிப்படியா இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி நாலு ஏக்கர்ல நெல் சாகுபடி செய்துக்கிட்டிருக்கேன்.

50 சதவிகிதம் ரசாயன உரங்களைக் குறைக்சிருக்கேன். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை முழுமையா

நம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...

தவிர்த்துட்டேன். நெல் வயல்ல அகத்தியையும் தட்டைப்பயறையும் விதைச்சுதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தியிருக்கேன். இதுவும் பசுமை விகடன்ல படிச்சு தெரிஞ்சிக்கிட்டதுதான்” என்ற அண்ணாதுரை தட்டைப்பயறுச் செடியில் இருந்த பூச்சிகளை நம்மிடம் காட்டினார்.

தொடர்ந்து பேசியவர், அதோட முன்னெச்சரிக்கையா கதிர் பிடிக்கிற சமயத்துல இஞ்சி-பூண்டுக் கரைசலைத் தெளிச்சி விட்டுட்டேன். அதனால, மற்ற பூச்சிகளும் வரலை. பக்கத்துல இருக்கிற வயல்கள்ல எல்லாம் பூச்சிக்கொல்லி தெளிச்சும் முழுமையா பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியலை. அவங்க எல்லாம் ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு செய்திருப்பாங்க. ஆனா, எனக்கு இஞ்சி-பூண்டுக் கரைசலுக்கு நாலு ஏக்கருக்கும் சேர்த்து 500 ரூபாய் கூட செலவாகலை. பக்கத்து விவசாயிகள் எல்லாம் ஆச்சர்யமா பார்க்கிறாங்க. வயல்ல இருக்கிற களைச்செடிகளை எல்லாம் பிடுங்கி, வாய்மடையில போட்டு மட்க வெச்சு அப்படியே பாசனம் பண்ணிடுவேன். அதுவும் நல்ல பலன் கொடுக்குது” என்ற அண்ணாதுரை நிறைவாக,

“இந்த முறை நெல் அறுவடை செய்த பிறகு, நூறு சதவிகிதம் இயற்கை  விவசாயத்துல உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். அடுத்தடுத்த நெல் சாகுபடியும் இனிமே முழு இயற்கை முறைதான். அதுக்காகவே நாலு ஆடுகளையும், ஒரு மாட்டையும் வாங்கலாம்னு இருக்கேன்” என்று கண்களில் நம்பிக்கை மின்ன விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

அண்ணாதுரை,

செல்போன்: 94981-63743.

அடுத்த கட்டுரைக்கு