Published:Updated:

நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.

நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.
நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.

50 சென்ட்... 120 நாட்கள்... ரூ 27 ஆயிரம்...இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

னியார் துறைப் பணியாளர்களாயினும் சரி... அரசுத்துறைப் பணியாளர்களாயினும் சரி... மனநிம்மதி தேவையெனில், அவர்களில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது விவசாயத்தைத் தான். அத்தகையோரில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலூகா, மூலைப்புலி கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன். மனநிம்மதிக்காக பணியை உதறிவிட்டு தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக சாதித்துக் கொண்டிருக்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம், கானம் கஸ்பாவில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊத்தங்கரைவிளையில் இருக்கிறது, ரவீந்திரனின் தோட்டம். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ரவீந்திரனைச் சந்தித்தோம்.

“தாத்தா, அப்பா எல்லாரும் வாழை விவசாயம்தான் செய்தாங்க. நான், பி.காம் படிச்சுட்டு... மும்பை, சென்னை, பெங்களூரு, புனேனு 26 வருஷம் ஷிப்பிங் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். அங்க நல்லா சம்பாதிச்சாலும் வேலை பரபரப்புல மனசுக்கு நிம்மதியே இல்லை. ஒரு கட்டத்துல ‘வேலையே வேணாம்’னு தோணுச்சு. அதனால,  வேலையை விட்டுட்டு போன வருஷம் சொந்த ஊருக்கே வந்துட்டேன்.

நான் ஊருக்கு வந்த பிறகு சொத்து பிரிச்சாங்க. அப்போ எனக்கு ஏத்தன் ரக வாழையோடு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சது. வாழையில தூர்பகுதியில் வெடிப்பு விழுந்து இருந்துச்சு.  அதுக்கு என்ன பண்றதுனு அப்பாகிட்ட கேட்டப்போ... ‘‘அப்பப்போ இப்படி ஏதாவது நோய் வரத்தான் செய்யும். உரக்கடையில போய் என்ன பிரச்னைனு சொன்னா மருந்து தருவான், அதை வாங்கி அடிச்சா சரியா போயிரும்’னு சொன்னார்.

நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.

மனமாற்றம் ஏற்படுத்திய ஜீவாமிர்தம்!

அந்த நேரத்துல, எங்க ஊருக்குப் பக்கத்து ஊரான காயாமொழியில சக்திகுமார்ங்கிற விவசாயி குறித்து கேள்விப்பட்டு அவரைப் பார்த்து வாழையில உள்ள பிரச்னையச் சொன்னேன். ‘அதிகமா ரசாயன உரம் போட்டா, இந்த மாதிரிப் பிரச்னைகள் வரத்தான் செய்யும். இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பாருங்க, பிரச்னையிருக்காது’னு சொல்லி... ஜீவாமிர்தம் தயாரிக்கச் சொல்லிக் கொடுத்தார். ‘ரெண்டு லிட்டர் ஜீவாமிர்தத்தை தண்ணீர் கலக்காம தூர் வெடிப்பு உள்ள வாழை மரங்கள்ல ஊத்துனா சரியாகிடும்’னு சொன்னார். முதல்ல 10 வாழைகளுக்கு மட்டும் அவர் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். அஞ்சு நாள்லயே மாற்றம் தெரிஞ்சுது. உடனே, சக்திகுமார்கிட்ட தகவலைச் சொன்னேன். அப்போதான், இயற்கை விவசாயத்தின் முழுபலன் குறித்தும் ‘பசுமைவிகடன்’ குறித்தும் அவர் சொன்னார். பசுமை விகடனைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு பயிர் குறித்த கட்டுரைகள்லயும் உழவுல இருந்து அறுவடை வரை தெளிவா புரியுற மாதிரி சொல்லப்பட்டிருக்கு. அதுதான் எனக்கு விவசாய ஆசிரியர்”

-முன்கதை சொன்ன ரவீந்திரன், தொடர்ந்தார்.

நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.

இயற்கை மலைவாழை!

‘‘இந்த வருஷம் ரெண்டு ஏக்கர்ல மலை ஏத்தன் வாழையை சாகுபடி செஞ்சிருக்கேன் முழுக்கமுழுக்க இயற்கை முறைதான். ஆறு மாசம் ஆகுது. வாழை வருமானம் வர்றதுக்குள்ள குறுகிய காலத்துல மகசூல் எடுக்கிற மாதிரி இயற்கை முறையில ஏதாவது சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக இந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை (ஊத்தங்கரைவிளை) குத்தகைக்கு எடுத்திருக்கேன். இது செம்மண் நிலம், இந்தப் பகுதிகள்ல நிலக்கடலையை அதிகமா சாகுபடி செய்றாங்க. குறுகிய காலப்பயிராவும் இருக்கிறதுனால நானும் நிலக்கடலை போடலாம்னு முடிவெடுத்தேன். 50 சென்ட்ல நிலக்கடலை சாகுபடி செய்திருக்கேன். 30 சென்ட்ல கத்திரி, 30 சென்ட்ல பீர்க்கன், 30 சென்ட்ல புடலை போட்டிருக்கேன். காய்கறிகளை நடவு செய்து ஒரு மாசம்தான் ஆகுது. மீதியுள்ள 60 சென்ட் நிலம் இப்போதைக்கு காலியாத்தான் இருக்கு.

ரூ 17 ஆயிரம் லாபம்!

இயற்கை முறையில கடலைச் செடிகள் செழிப்பா வளர்ந்து வந்தது. ஆனா, எதிர்பாராம மழை பெய்ததால மகசூல் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. 50 சென்ட்ல 380 கிலோ கடலைதான் கிடைச்சுது. அந்த நேரத்துல மழை இல்லாம இருந்திருந்துச்சுனா, 500 கிலோ வரை கிடைச்சிருக்கும். அந்தளவுக்கு செடிகள் நல்லா இருந்துச்சு.

380 கிலோ கடலையை உடைச்சா 300 கிலோ பருப்பு கிடைக்கும். இதை, திருநெல்வேலியில இருக்கிற நண்பரோட இயற்கை அங்காடியில  விற்பனை செய்யலாம்னு இருக்கேன். ஒரு கிலோ 90 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்னு எதிர்பார்க்கிறேன். அந்த விலையில் விற்பனையாச்சுனா... 300 கிலோவுக்கு 27 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். உழவு, நடவு, விதைக்கடலை, களையெடுப்பு, அறுவடைனு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. அதைக்கழிச்சா 17 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். கடலைக்கொடிகளை, உறவினர் வீட்டு கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன்” என்ற ரவீந்திரன் நிறைவாக,

நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!.

“எனக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்தது பசுமை விகடன்தான். முதல்முறையா நிலத்தை உழுது, கடலை ஊன்றி இயற்கை முறையில சாகுபடி செஞ்சு அறுவடை செஞ்ச கடலைகளை கையில அள்ளிப் பார்க்கும் போது பூமியில புதுசா கால் பதிச்ச குழந்தை மாதிரி இருந்துச்சு.

பசுமை விகடனைப் படிக்காமப் போயிருந்தா நானும் ரசாயன விவசாயியாதான் இருந்திருப்பேன். இப்படி விஷமில்லாத கடலையை சாகுபடி செய்திருக்கிற சந்தோஷம் கிடைச்சிருக்காது” என்று கடலைகளை அள்ளிக்காட்டி நெகிழ்ந்தபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

ரவீந்திரன்,

செல்போன்: 90030-61474

இயற்கை முறையில் கடலை சாகுபடி!

ரவீந்திரன் சொல்லிக்கொடுக்கும் கடலை சாகுபடிப் பாடம் இங்கே...

நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும்.  பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் 130 பாத்திகள் வரை எடுக்கலாம். பிறகு, பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலையை விதைக்கவேண்டும் (50 சென்ட் நிலத்துகு 20 கிலோ விதைக்கடலை தேவைப்படும்). நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு 3 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். நடவு செய்த 3-ம் நாள் முளைப்பு எடுக்கும். விதைத்த 15, 25-ம் நாட்களில் களை எடுத்து, செடிகளின் தூர் பகுதியில் மண் அணைக்கவேண்டும். 

10 நாளுக்கு ஒரு முறை ஊட்டம்... வாரம் ஒரு முறை பூச்சிவிரட்டி!

10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்கவேண்டும். இப்படி சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றித் தெளிக்கவேண்டும். 

20 முதல் 25 -ம் நாளில் பூப்பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் சிவப்புக் கம்பளிப் புழுத்தாக்குதல் இருக்கும். இந்த சமயத்திலிருந்து, வேப்பங்கொட்டைக் கரைசல் மற்றும் இஞ்சி-பூண்டுச் சாறை வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தெளிக்கவேண்டும்.

4 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 2 நாட்கள் ஊற வைத்தால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

இஞ்சி-அரைகிலோ, பூண்டு-அரை கிலோ, பச்சை மிளகாய்-கால் கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து, 5 லிட்டர் தண்ணீரில் கரைத்தால், இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார். இதை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

செடியின் இலைகளில் மஞ்சள் கலந்த வெளிர் நிறம் தெரிந்தாலோ, செடி வாடலாகத் தெரிந்தாலோ... கால் கிலோ பிரண்டைத் தண்டு, கால் கிலோ வேலிப்பருத்தி இலை, கால் கிலோ வேப்பிலை ஆகியவற்றை உரலில் இடித்து, 7 லிட்டர் மோரில் 2 நாட்கள் ஊற வைத்து, வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

110-ம் நாளில் இருந்து 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு