Published:Updated:

கீரை வாங்கலையோ கீரை!

கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம் + அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்புதிய பகுதிவளத்துக்கு மட்டுமல்ல... வருமானத்துக்கும்!ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம் + அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்புதிய பகுதிவளத்துக்கு மட்டுமல்ல... வருமானத்துக்கும்!ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!

கிராமங்களில் தோட்ட வேலைக்குச் செல்பவர்கள், வேலை முடிந்து வரும்போது சாலையோரங்களில், வேலியோரங்களில்  கண்ணில் படும் கீரைகளை எல்லாம் பறித்து வந்து சமைத்து உண்பார்கள். அப்படிக் கொண்டு வரும் கீரைகளை, ‘பல கீரை’ என்று அழைப்பார்கள். அதுதான், அவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம். நாகரிக மோகத்தில் கீரை உணவுப் பழக்கத்தை கைவிட்டு விட்டோம். ஆனால், தற்போது உணவின் மீது ஏற்பட்டு வரும் விழிப்பு உணர்வு காரணமாக... கீரைகளுக்கும் மவுசு கூடிக்கொண்டே வருகிறது. சந்தையில் அவற்றின் விலையை வைத்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்!

நம் முன்னோர், அத்தனை கீரைகளையுமே ‘மூலிகைகள்’ என்றுதான் வகைப்படுத்தியுள்ளனர். ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என்ற கொள்கையுடன் வாழ்ந்த முன்னோர், பெரும்பான்மை உணவாக உட்கொண்டது, கீரைகளைத்தான். பஞ்சம், பட்டினி காலங்களில் மக்களின் பசியாற்றியது... கீரைகளும், கிழங்குகளும்தான். காடு, மேடெல்லாம் விளைந்து கிடக்கும் கீரைகளைப் பறித்து சமைத்து சாப்பிட்டு, ஊசலாடிய உயிரைத் தக்கவைத்துக் கொண்ட செய்திகள், வரலாற்றின் பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.

‘உண்டாகு நன்மை யுரைக்க விசமன்று

கொண்டாடு நோய்போய்க் குணமாகி யுண்டி

பலுக்க மலநீங்கிப் பந்தமற நன்மை

யிலைக்கறி யாங்கீரை யில்’ -

இது தேரையர் வெண்பா


‘மனித உடலில் உள்ள பிணிகளைக் குணமாக்கி, கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், உடல் வலிமைக்கும் காரணமாகத் திகழும் கீரைகளைக் கொண்டாடு’ என்பதுதான் இப்பாடலின் சுருக்கமான பொருள்.

கீரை வாங்கலையோ கீரை!

இலைகள் அல்ல... ஆரோக்கியம் அடைந்து கிடக்கும் அறைகள்!

மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும், நோய்களை ஆற்றும் மருந்துகளின் மூலக்கூறுகளும் கீரைகளில் அடங்கிக் கிடக்கின்றன. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களான புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து, கந்தகச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றுடன்... உயிர்ச்சத்துக்களான வைட்டமின்-ஏ, வைட்டமின் பி.1, பி2, பி 12, வைட்டமின்-சி ஆகிய சத்துக்களும் கீரைகளில் நிறைந்து கிடக்கின்றன. உண்மையில், அவை வெறும் இலைகள் அல்ல... ஆரோக்கியம் அடைந்து கிடக்கும் தாவர அறைகள்.  அசைவ உணவுகளை விட அதிக சத்துக்கள் கீரைகளில் அடைந்து கிடக்கின்றன. கீரைகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான், ‘கீரை இல்லா அன்னம்... கூரையில்லா வீடு’ எனச் சொல்லி வைத்தனர், நம் முன்னோர்.

கவலையில்லாத பயிர் கீரை!

தன்னை தினமும் உண்பவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் கீரைகள், தன்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வருமானத்தை அள்ளிக் கொடுக்கத் தவறுவதில்லை. வீட்டுத்தோட்டம் முதல் ஏக்கர் கணக்கிலான விவசாயம் வரை அனைத்துக்கும் ஏற்றது, கீரை சாகுபடி. குறைந்த நிலமும் குறைந்த முதலீடும் இருந்தாலே போதுமானது.  தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்புப் பயிராகவோ ஏதோ ஒரு வகையில் கீரையை சாகுபடி செய்தால், குடும்ப ஆரோக்கியம் மேம்படுவதுடன், தினமும் ஒரு வருமானமும் கிடைக்கும்.

கீரை வாங்கலையோ கீரை!

விவசாயத்தில் மிகக் குறுகிய நாளில் அறுவடையாகும் ஒரே பயிர் கீரைதான். விதைத்த 15 நாட்களிலேயே பலன் கொடுக்கும் கீரை ரகங்களும் உண்டு. விதைத்த பயிரில் பூக்குமா... அப்படியே பூத்தாலும் பூக்கள் எல்லாம் காயாகுமா... அத்தனை காயும் காசாகுமா? போன்ற கவலைகள் இல்லாத பயிர் கீரை. 10 சென்ட் இடத்தில் கீரை சாகுபடி செய்து, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கும் விவசாயிகள் அநேகம் உண்டு.

சந்தை வாய்ப்புள்ள கீரைகள், அதை சாகுபடி செய்யும் விவசாயிகளின் அனுபவங்கள், சாகுபடி முறைகள், விற்பனை வாய்ப்புகள், அதிலுள்ள சத்துக்கள் போன்ற பல தகவல்களை இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த வரிசையில், 10 சென்ட் இடத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை பொன்னாங்கண்ணி கீரை மூலமாக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கும் தேனி மாவட்டம், சீலையம்பட்டி, ராஜு, முதலில் உங்களைச் சந்திக்க வருகிறார், அடுத்த இதழில்!

-தழைக்கும்

கீரைகளில் உள்ள சத்துக்கள்!

‘கீரையைப் போன்ற உணவும் இல்லை, நோய் நீக்கும் வைத்தியனும் இல்லை’ என்பது சித்தர்கள் வாக்கு. நாம் உணவுக்காகப் பயன்படுத்தும் கீரைகளில் குளோரோஃபில் என்ற பச்சையம் அதிக அளவில் இருக்கிறது. அத்துடன், ஸ்டீராய்டு, அல்கலாய்டு, கரோட்டினாய்டு, சிட்ரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் ஆகியவையும் அடங்கி உள்ளன. கொழுப்பு, கார்போ-ஹைட்ரேட் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. இப்படி அநேக சத்துக்களோடு, விலை மலிவாகக் கிடைக்கும் அளவில்லா ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், மீன் உட்பட அசைவ உணவு சாப்பிடும் நேரங்களில் கீரைகளைச் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், கீரைகளில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால், அசைவ உணவுகள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படும். இதனால் ஜீரணக் கோளாறுகள், கழிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரம் அசைவம் சாப்பிட்டதற்கு அடுத்த நாள், கீரைகளைச் சாப்பிட்டால், அசைவத்தால் ஏற்பட்ட மலச்சிக்கல் தீரும்.

துவையல்... மசியல்... ரசம்!

கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது என்றாலும், அதற்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன.

‘காலை துவையல், மதியம் மசியல், ராத்திரியில் ரசம் என்ற அடிப்படையில்தான் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர், முன்னோர். அதாவது, துவையல் செய்து சாப்பிடக்கூடிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை போன்றவற்றை காலை சிற்றுண்டிகளில் சேர்த்துக் கொள்வது சிறப்பான பலனளிக்கும். மசியல், கூட்டு செய்ய பயன்படும் முளைக் கீரை, அகத்திக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, முருங்கைக் கீரை, பசலைக் கீரை போன்றவற்றை மதிய உணவுடன் மட்டுமே சாப்பிட வேண்டும்.

பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்றவற்றை ரசம் (சூப்) வைத்து இரவில் உண்பது நல்லது’ என்கின்றனர், சித்தர்கள்.