Published:Updated:

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

மனமிருந்தால், மாடியிலும் ஆடு வளர்க்கலாம்!கால்நடைஇ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

மனமிருந்தால், மாடியிலும் ஆடு வளர்க்கலாம்!கால்நடைஇ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு ஏக்கர் கணக்கிலோ, சென்ட் கணக்கிலோ இடம் வேண்டும் என்பதுதான் முதலில் தோன்றும் கவலையாக இருக்கும். ஆனால், அதற்கு அவசியமில்லை. தன்னம்பிக்கையும், ஈடுபாடும் இருந்தால் போதும் என்றபடி மொட்டை மாடியிலேயே விவசாயம் செய்பவர்கள் பலருண்டு! இதோ, ‘‘விவசாயம் என்ன... ஆடுகளைக்கூட மொட்டை மாடியிலேயே வளர்க்க முடியும்” என்று உறுதியுடன் பேசுகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள்ராஜ்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள என்.ஜி.ஓ காலனி, ஜெபா கார்டனில் உள்ளது, பெருமாள் ராஜின் வீடு. தரைதளத்தில் உணவகம் நடத்தி வருகிறார். முதல் தளத்தில் குடியிருந்து கொண்டு மொட்டை மாடியில் சிறிய ஆட்டுப் பண்ணையும் வைத்துள்ளார்.

உணவகத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்த பெருமாள்ராஜை சந்தித்தோம். பணியாளர்களிடம் வேலைகளைச் சொல்லிவிட்டு, நம்மை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அவருடைய மனைவி அன்னலட்சுமி, நறுக்கி வைத்திருந்த காய்கறிக்கழிவுகளை, ஆடுகளுக்குப் போட்ட பெருமாள்ராஜ், நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

“திருநெல்வேலி மாவட்டம், ஆனையார்குளம் கிராமம்தான் என்னோட சொந்த ஊரு. தாத்தா, பாட்டி காலத்துல நெல் சாகுபடி பண்ணிக்கிட்டே ஆடு, மாடுகளும் வளர்த்தாங்க. ஆனா, அப்பா விவசாயம் பார்க்காம சைக்கிள் கடை வெச்சிட்டார். 9-ம் வகுப்புக்கு மேல நான் படிக்கலை. அப்பவே குஜராத் மாநிலத்துல ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்துட்டேன். அங்க 11 வருஷம் வேலை பார்த்தேன். தாத்தா இறந்து போகவும் ஊருக்கு வந்தேன். அப்பறம் இங்க சித்தப்பா ஹோட்டல்ல கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு 93-ம் வருஷம் ஹோட்டல் ஆரம்பிச்சேன்.

இடவசதி இல்லாததால் மொட்டை மாடி!

எனக்கு சின்னவயசுல இருந்தே ஆடு, மாடுகள் வளர்க்கிறதுல ரொம்ப இஷ்டம். அதனால 2 பெட்டை ஆடுகளை வாங்கி என் தம்பி வீட்டுல வெச்சு வளர்த்துக்கிட்டு இருந்தேன். அந்த ஆடுகள் குட்டி போட்டதும் குட்டிகளை விற்பனை செய்தப்போ, ஒரு வருமானம் கிடைச்சது. அப்போ இருந்தே 10 ஆடுகளையாவது வளர்க்கணும்னு ஆசை. ஆனா, இடவசதி இல்லை. அதனாலதான், மொட்டை மாடியிலேயே வளர்த்தா என்னனு யோசிச்சு...

9 மாசத்துக்கு முன்னாடி 150 சதுர அடி இடத்துல இரும்புக் கொட்டில் அமைச்சு வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். கரும்போர், சிவலைப்போர் ஆடுகளைத்தான் வளர்த்துக்கிட்டு இருக்கேன். 3 கிடா, 11 பெட்டை ஆடுகள்னு மொத்தம் 14 ஆடுகள் இருக்கு. 3 குட்டிகள் இருக்கு. 8 பெட்டைகள், இப்போ சினையா இருக்கு, ஒரு மாசத்துக்குள்ள குட்டி போட்டுடும்” என்றவர், கொட்டில் மற்றும் ஆடு வளர்ப்பு குறித்த விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

தீவனத்துக்கு செலவில்லை!

“10 அடி சதுரம், 7 அடி உயரத்தில் ஒரு கொட்டில்... 10 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் ஒரு கொட்டில்னு ரெண்டு கொட்டகை இருக்கு. சினை ஆடுகளை ஒரு கொட்டில்லயும், குட்டிகளை இன்னொரு கொட்டில்லயும் பிரிச்சு வெச்சிருக்கேன். கொட்டிலோட மேல்கூரையை தென்னை ஓலையில வேய்ஞ்சிருக்கிறதால, வெப்பம் அதிகமா இறங்காது. சிமெண்ட் தளம் சரிவா இருக்கிறதால மூத்திரம், கழுவுற தண்ணீர்லாம் தேங்காது. கீழயே ஹோட்டல் இருக்கிறதால, காய்கறிக்கழிவுகள், வாழை இலைக்கழிவுகளை அப்படியே பொடிப்பொடியா நறுக்கி ஆடுகளுக்குத் தீவனமா கொடுத்துடுவோம். தீவனத்துக்குனு தனியா செலவு செய்றதில்லை.

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

இரண்டு வேளை தீவனம்!

காலையில பத்தரை மணிக்கு ஒருதடவையும், ராத்திரி ஏழரை மணிக்கு ஒரு தடவையும் தீவனம் வைப்போம். இடையில தண்ணீர் மட்டும் வைப்போம். 14 ஆடுகளுக்கும் சேர்த்து ஒருவேளைக்கு 7 கிலோ காய்கறிக்கழிவு, 7 கிலோ இலைனு கொடுப்போம். காய்கறிக்கழிவுகளை நறுக்கும்போதே தேவையில்லாததை நாங்களே கழிச்சிடுவோம். நல்ல பாகங்களை மட்டுமே துண்டு துண்டுகளா போட்டு கொடுக்கிறதால ஆடுகள் கழிக்காம சாப்பிட்டுடும். தீவனம் சரியான அளவுல இருக்கணுங்கிறதால... எப்பவுமே நான்தான் தீவனம் வைப்பேன். நேரம் கிடைச்சா என் மனைவியும் வைப்பாங்க.

பருவம் தவறாமல் தடுப்பூசி!

தினமும் காலையிலயும், சாயங்காலமும் கொட்டகையை சுத்தம் செய்து சாம்பிராணி காட்டி விடுவோம். அதனால, மூத்திரவாடை இருக்காது. சுத்தமா இருந்தாதான் ஆடுகளுக்கு நோய்கள் வராது. வாரம் ஒருமுறை ஆடுகளைக் குளிப்பாட்டியும் விட்டுடுவோம்.

மேய்ச்சலுக்கு அனுப்புறதில்லைங்கிறதால ஆடுகளுக்கு தொற்றுநோய் எதுவும் வர்றதில்லை. புதுசா ஆடுகளை வாங்கிட்டு வந்தா மட்டும், ஒரு மாசம் தனியா வெச்சிருந்து தடுப்பூசி போட்டு, குடற்புழு நீக்கம் செய்துக்கிட்டுத்தான் கொட்டிலுக்குள்ள விடுவோம். அதேமாதிரி ஒவ்வொரு பருவத்திலயும் தவறாம தடுப்பூசி போட்டுடுவோம். துள்ளுமாரி, கோமாரி நோய்களுக்கும் தடுப்பூசி போட்டுடுவோம். குட்டிகளுக்கு மாதம் ஒரு முறையும்; பெரிய ஆடுகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்திடுவோம்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா மாற்றம்!

பெட்டை ஆடுகள் சினைபிடித்த ஆறு மாதங்கள்ல குட்டி போடும். குட்டியை ரெண்டு மாசம் வரைக்கும் தாய் ஆட்டோட விடுவோம். அதுக்கப்பறம் தனியா பிரிச்சிடுவோம். பிரிச்ச பத்து பதினஞ்சு நாட்கள்ல தாய் ஆடு திரும்பவும் பருவத்துக்கு வந்துடும். வெள்ளாடுகள் ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டி ஈனும். முதல் ஈத்துல ஒரு குட்டிதான் இருக்கும். அடுத்தடுத்த ஈத்துகள்ல ரெண்டு குட்டி ஈனும்.

குட்டிகள் ஆறு மாசத்துக்கு மேல பருவத்துக்கு வந்துடும். வாலை ஆட்டிக்கிட்டே இடைவிடாம கத்துறதை வெச்சும், இனப்பெருக்க உறுப்பில் திரவம் சுரக்கிறதை வெச்சும் பருவத்துக்கு வந்ததைத் தெரிஞ்சுக்கிட்டு கிடாவோட இணை சேர்க்கணும். கிடாக்களை ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை மாத்திடுவோம். இணை சேர்க்கிறதுக்கு முன்னாடி, கிடாவுக்கு 2 நாட்டுக்கோழி முட்டையும், ஒரு ஸ்பூன் நல்லெண்ணையையும் கலந்து குடிக்க வெச்சா ஊக்கமா இருக்கும்” என்ற பெருமாள்ராஜ், நிறைவாக வருமானம் பற்றி சொன்னார்.

ஆண்டுக்கு ரூ 60 ஆயிரம் வருமானம்!

ஆண்டுக்கு 15 குட்டிகள்!

“இப்போதான் மூணு குட்டி கிடைச்சிருக்கு. இன்னும் பத்து பதினஞ்சு நாளுக்குள்ள மீதி ஆடுகள் குட்டி போட்டுடும். குட்டிகளை ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரை வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். ஒரு வருஷம் வரை வளர்க்கிறதா இருந்தா... குட்டிகள் நிறைய சேர்ந்துடும். இடவசதியும் அதிகமா தேவைப்படும். அதனால ஆறு மாசத்துல கொஞ்சத்தை விற்பனை செய்துட்டு இடவசதியைப் பொறுத்து, வெச்சிருந்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன்.

11 பெட்டை ஆடுகள்ல இருந்து வருஷத்துக்கு எப்படியும் 15 குட்டிகளுக்கு குறையாமல் கிடைக்கும். ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்றப்போ ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். எங்களுக்கு தீவனச் செலவே கிடையாது. மருத்துவச் செலவு மட்டும்தான். இதுக்காக ஒரு குட்டிக்கு 300 ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும், ஒரு குட்டிக்கு 3 ஆயிரத்து 700 ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு 15 குட்டிகள்ங்கிற கணக்குல, 55 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

குட்டி போட்டா எனக்குதான் கொடுக்கணும்னு தெரிஞ்சவங்க பலரும் இப்பவே சொல்லி வெச்சிட்டாங்க. அதனால விற்பனைக்கு பிரச்னை கிடையாது” என்ற பெருமாள்ராஜ், ஆடுகளை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.

தொடர்புக்கு, பெருமாள்ராஜ், செல்போன்: 88703-39976