நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் மகசூல்..!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்படிச்சோம்... விதைச்சோம்...

வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை 2007-ம் ஆண்டில் தமிழக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியது, ‘பசுமை விகடன்’. சாகுபடிச் செலவைக் குறைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை... ‘இதெல்லாம் பேச்சுக்கு நல்லா இருக்கும். ஆனா, செயல்ல சாத்தியம் இல்லை’ என்று மறுத்தனர், சில விவசாயிகள்.

ஆனால், தொடர்ச்சியாக, சுபாஷ் பாலேக்கர் மூலம் பயிற்சி வகுப்புகள், வெற்றி பெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள்... என ஜீரோ பட்ஜெட் சிந்தாந்தத்தைத் தொடர்ந்து பசுமை விகடன் முன்னெடுத்து வருகிறது. அதன் விளைவாக, இன்று, பட்டி தொட்டியெங்கும் பரவிக் கிடக்கிறது, ஜீரோ பட்ஜெட். ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறி வரும் விவசாயிகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். குறிப்பாக அவர்களில் பெரும்பாலானோர் இளம் விவசாயிகள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி விஜய் மகேஷ்.

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

மண்ணை வளமாக்கிய புழுக்கள்!

அவரது தோட்டத்துக்கு நாம் சென்றபோது, ஜீவாமிர்தம் தயாரிப்பு பணியில் மும்முரமாக இருந்த விஜய் மகேஷ், வேலைகளை முடித்து விட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“காலேஜ் முடிச்சிட்டு பிரைவேட் பேங்குல ஏழு வருஷம் வேலை பார்த்தேன். அது எனக்கு சரிப்பட்டு வராததால குடும்பத் தொழிலான விவசாயத்துக்கே வந்துட்டேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செய்துட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பித்த பிறகுதான் இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்தது. குறிப்பா, ‘சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம்’ தொடர் எனக்கு அதிக நம்பிக்கை கொடுத்தது. அந்தத் தொடர்ல ஜீரோ பட்ஜெட் முறையை ரொம்ப எளிமையா எழுதியிருந்தாங்க.

நாலு வருஷமா ஜீரோ பட்ஜெட் முறையிலதான் 11 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன். இதுக்காகவே நாலு உம்பளாச்சேரி மாடுகளை வளர்த்துக்கிட்டு இருக்கேன். என் பண்ணையில, ஜீவாமிர்தம்தான் முதன்மையான இடுபொருள். அதைக் கொடுக்க ஆரம்பிச்ச பிறகுதான், மண்ணுல உயிர்ச்சத்துக்கள் அதிகமாகி, நிலம் வளமா மாறியிருக்கு. ஜீவாமிர்தத்தின் மகிமையால எந்த இடத்துல தோண்டினாலும் மண்புழுக்கள் இருக்கும்” என்று முன்கதை சொன்ன விஜய் மகேஷ், மண்ணைத் தோண்டி மண்புழுக்களை அள்ளிக் காட்டினார். திரட்சியாக நெளிந்தன மண்புழுக்கள்.

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

பருவம் தவறாமல் நெல்!

தொடர்ந்து பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், விஜய் மகேஷ். மொத்தம் பதினோரு ஏக்கர். 10 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம். கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, சீரக சம்பா, கவுனி, பாஸ்மதி, வெள்ளைப்பொன்னினு பாரம்பர்ய ரகங்களை சம்பா பட்டத்துல (ஆடிப்பட்டம்) விதைப்போம். கோடையில 3 ஏக்கர்ல மட்டும் மைசூர் மல்லி சாகுபடி செய்வோம். ரெண்டு போகமும் சேர்த்து, வருஷத்துக்கு 325 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் கிடைக்குது. 

நெல்லுக்கு அடுத்து உளுந்து!

நெல் அறுவடை செய்றதுக்கு 5 நாள் முன்னாடி 4 ஏக்கர் நெல் வயல்ல 32 கிலோ உளுந்து விதையைத் தெளித்து விட்டுடுவோம். நெல் அறுவடை செய்யும்போது, உளுந்து விதை மண்ணுக்குள்ள போயிடும். உளுந்துக்கும் ஜீவாமிர்தம்தான் கொடுக்கிறோம். 70-80 நாள்ல உளுந்து அறுவடைக்கு வந்துடும். 

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

மாசிப் பட்டத்தில் எள்!

மாசிப் பட்டத்தில் 3 ஏக்கர் நிலத்தில் எள் சாகுபடி செய்வோம். ஒரு சால் புழுதி உழவு ஓட்டி, ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு கிலோ வீதம் எள் தெளிச்சி, ரோட்டோவேட்டர் மூலம் மறுபடியும் உழவு ஓட்டுவோம். 15-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிப்போம். இதைத் தவிர வேற எதுவும் செய்றதில்லை. 90-ம் நாள் எள் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ எள் மகசூலாகும்.

முக்கால் ஏக்கர் நிலத்தில் தென்னை... ஊடுபயிராக வாழை!

முக்கால் ஏக்கர் நிலத்துல 60 தென்னை மரங்கள் இருக்கு. அதுல ஊடுபயிரா பூவன், ரஸ்தாளி, பச்சை நாடன் ரகங்கள்ல 200 வாழை மரங்கள் இருக்கு. தென்னை நட்டு நாலு வருஷம் ஆகுது. வேலி ஓரத்துல 20 பூவரசு, 50 வேம்பு இருக்கு. தென்னை, வாழை ரெண்டுக்கும் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீரோடு கலந்து விடுவோம். அதுலயே நல்லா செழிப்பா வளருது. மறுதாம்பு வாழை அருமையா வருது. இப்போதைக்கு வாழை மட்டும்தான் மகசூல் கொடுத்துட்டு இருக்கு. தென்னையில அடுத்த வருஷத்துல இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிச்சுடும்.

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

கால் ஏக்கர் நிலத்தில் வீட்டுத்தோட்டம்!

இதுபோக, வீட்டைச் சுத்தி கால் ஏக்கர் நிலத்துல வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்கேன். இந்த நிலத்துல ஆரம்பத்துல இருந்தே 15 தென்னை மரங்கள் இருந்துச்சு. அதுக்கு இடையில, பூவன், ரஸ்தாளி, பச்சை நாடன் ரகங்கள்ல 100 வாழை மரங்கள் இருக்கு. தென்னை மரங்கள்ல முன்னாடி ஒரு மரத்துக்கு வருஷத்துக்கு 50 காய்தான் கிடைக்கும்.

ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறின பிறகு கொஞ்சம் கொஞ்சமா மகசூல் அதிகரித்து ஒவ்வொரு தென்னையிலும் இப்போ 200 காய்களுக்கு மேல காய்க்குது. ஒரே ஒரு மரத்துல மட்டும் வருஷத்துக்கு 450 காய் கிடைச்சது. வாழை எல்லாமே நான்காம் தாம்பு வாழை. ஒவ்வொரு வாழைக்கும் அடித்தண்டு இரண்டரையடி சுற்றளவுக்கு இருக்கு. தார்கள் நல்லா பெரிசா நாலரையடி உயரத்துக்கு காய்க்குது. இதில்லாம, 3 எலுமிச்சை, 2 கொய்யா, 2 நார்த்தங்காய், 1 சாத்துக்குடி மரங்களும் இருக்கு. இது எல்லாத்துக்கும் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீரோடு கலந்து பாய்ச்சிறதோட சரி” என்ற விஜய் மகேஷ்,

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

“10 ஏக்கர் நெல் வயல், முக்கால் ஏக்கர் தென்னை, வாழை, கால் ஏக்கர் வீட்டுத்தோட்டம்னு மொத்தம் பதினோரு ஏக்கர் நிலத்துல ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்றது மூலமா வருஷத்துக்கு 11 லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கிது. அதுல எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 7 லட்ச ரூபாய் அளவுக்கு லாபமா நிக்குது” என்றார், சந்தோஷமாக! 

தொடர்புக்கு,
விஜய் மகேஷ்,
செல்போன்: 87549-69831.

மருத்துவ குணமும் உண்டு!

கிச்சிலி சம்பா அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். இது நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

கவுனி அரிசியில், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர... அபரிமிதமான நார்ச்சத்தும் உள்ளது. இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மாங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன. கவுனி அரிசியை அதிகமாக சாப்பிட்டால், ரத்தக்குழாய்கள் விரிவடையும். அதனால், இதயத்துக்கு நல்லது.

மாட்டுச் சிறுநீர் லிட்டர் 10 ரூபாய்... சாணம் கிலோ 5 ரூபாய்!

“பண்ணையில இருக்கிற நாலு மாடுகளுக்கும், வரப்பில் இருந்தே புல் எடுத்துக்குவோம். கொஞ்சம் வைக்கோலும் கொடுப்போம். அடர்தீவனமா தினமும் 11 கிலோ நெல் தவிடும், 3 கிலோ கோதுமை தவிடும் கலந்து கொடுக்கிறோம். தினமும் ஒரு கிலோ எள்ளுப்புண்ணாக்கு, 1 கிலோ கடலைப்புண்ணாக்கு ரெண்டையும் கலந்து கொடுக்கிறோம். கோதுமை தவிடு, கடலைப்புண்ணாக்கு ரெண்டையும் வெளிய இருந்து வாங்குறோம். மற்றது எல்லாம் எங்க தோட்டத்துலயே கிடைச்சிடும். அடர்தீவனத்துக்கு தினமும் 200 ரூபாய் செலவாகுது.

எப்பவும் ரெண்டு மாடுகள் பால் கொடுத்துட்டே இருக்கும். அதுங்க மூலமா, தினமும் 6 லிட்டர் பால் கிடைக்குது. அதை ஒரு லிட்டர் 50 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா, தினமும் 300 ரூபாய் வருமானம். இதுல தீவனச்செலவு போக, தினமும் 100 ரூபாய் லாபமா கிடைக்கும். வருஷத்துக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு குறையாது. மாசம் 100 லிட்டர் மாட்டு சிறுநீரை லிட்டர் 10 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. சாண விற்பனை மூலமா வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். ஆக, 4 மாடுகள் மூலமா, பண்ணைக்கு இடுபொருட்கள் கிடைக்கிறதோட, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது” என்கிறார், விஜய் மகேஷ்.

11 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 11 லட்சம்!

எண்ணெய்க்கும் பிண்ணாக்குக்கும் எள்!

3 ஏக்கர் நிலத்தில் 450 கிலோ எள் மகசூலாகும். இதை செக்கில் கொடுத்து ஆட்டினால், 225 லிட்டர் நல்லெண்ணெய் மற்றும் 210 கிலோ எள்ளுப் பிண்ணாக்கு கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெய் 180 ரூபாய் வீதம் 225 லிட்டருக்கு 40 ஆயிரத்து 500 ரூபாய், ஒரு கிலோ பிண்ணாக்கு 70 ரூபாய் வீதம் 210 கிலோவுக்கு 14 ஆயிரத்து 700 ரூபாய் விலை கிடைக்கும். எண்ணெய், பிண்ணாக்கு மூலமாக மொத்தம் 55 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். விதைப்பு முதல் எண்ணெய் எடுக்கும் வரை மொத்த செலவு 18 ஆயிரம் ரூபாய் போக, 37 ஆயிரத்து 200 ரூபாய் லாபம்.

அரிசியா அரைத்தால் கூடுதல் லாபம்!

10 ஏக்கர் நெல் மூலமாக இரண்டு போகத்துக்கும் சேர்த்து, ஆண்டுக்கு 325 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் கிடைக்கிறது. அதாவது, 19,500 கிலோ நெல்.  இதை அரைத்தால் 11 ஆயிரம் கிலோ கிலோ அரிசி கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோ அரிசி 60 ரூபாய் விலைக்கு போகும். ஆண்டுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவெல்லாம் போக, 4 லட்ச ரூபாய் லாபம். மாடுகளுக்குத் தேவையான வைக்கோலும், தவிடும் கிடைத்துவிடும்.

விதைநெல் கிடைக்குமிடம்!

“நான், பசுமை விகடன் புத்தகத்தில் பசுமை சந்தை பகுதியில் வரும் தகவல்கள் மூலமாகத்தான் விதைநெல்லை வாங்கி வருகிறேன். தவிர, அனைத்து பாரம்பர்ய ரக நெல் விதைகளையும் திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் வாங்க முடியும்” என்கிறார், விஜய் மகேஷ்.

ஜீரோ பட்ஜெட் முறையில் நெல் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விஜய் மகேஷ் சொன்ன விஷயங்கள் இங்கே...

“ஒரு ஏக்கர் வயலில் விதைக்க 3 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். நாற்றங்காலுக்காக தேர்வு செய்த நிலத்தில், இரண்டு சால் உழவு ஓட்டி 20 கிலோ கன ஜீவாமிர்தம் இட்டு மண்ணைச் சமப்படுத்தி... 7 கிலோ பாரம்பர்ய ரக விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் 13 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 11-ம் நாள் 15 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் பாசன நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். 20-ம் நாள் அரை லிட்டர் புளித்த தயிரை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க  வேண்டும். இப்படிப் பராமரித்தால், நாற்றுகள் நன்கு வளர்ந்து 25-ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 200 கிலோ கனஜீவாமிர்தம் இட்டு, இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். நடவுக்கு முதல் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நிலம் முழுக்க பரவலாகத் தெளிக்க வேண்டும். நிலத்தை சகதியாக்கி வரிசைக்கு வரிசை ஒரு அடி, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி இடைவெளியில், ஒற்றை நாற்று முறையில நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். 30-ம் நாள் வடிகட்டிய 10 லிட்டர் ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் 6 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 144 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சிகளைத் தடுத்துவிடும். 75-ம் நாள் தண்டு உருளும் பருவத்தில் 4 லிட்டர் புளித்த தயிரை, 144 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நெல்மணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, திரட்சியாகவும் இருக்கும். கதிர் பிடித்தவுடன் 144 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் புளித்த தயிர், 50 கிராம் மஞ்சள்தூள் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் பூஞ்சணத் தாக்குதல் கட்டுப்பட்டு, நெற்பழ நோயும் தடுக்கப்படும்.”

உளுந்து கொடுக்கும் வளமான வருமானம்!

1 ஏக்கர் நிலத்துக்கு 4 குவிண்டால் உளுந்து மகசூல் கிடைக்கும். 4 ஏக்கர் நிலத்துக்கு 16 குவிண்டால். ஒரு குவிண்டால் 8 ஆயிரம் ரூபாய் வீதம் 16 குவிண்டாலுக்கு 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 32 ஆயிரம் போக, நிகர லாபம் 96 ஆயிரம் ரூபாய்.

ரகம்... வயது... ஏற்ற மண் வகை!

கிச்சிலி சம்பா ரகத்தின் வயது 125லிருந்து 135 நாட்கள். அனைத்து வகையான மண்ணிலும் விளையக்கூடியது.

சீரக சம்பா ரகத்தின் வயது 130லிருந்து 140 நாட்கள். அனைத்து மண்ணிலும் விளையக்கூடியது. ஆனால், வடிகால் வசதியுடைய மேட்டுப் பாங்கான நிலம் அவசியம்.

இலுப்பைபூ சம்பா ரகத்தின் வயது 120லிருந்து 130 நாட்கள். அனைத்து மண்ணிலும் விளையக்கூடியது. ஆனால், வடிகால் வசதியுடைய மேட்டுப் பாங்கான நிலம் அவசியம்.

பாஸ்மதி ரக நெல்லின் வயது  145 நாட்கள். அனைத்து மண்ணிலும் விளையக்கூடியது. ஆனால், வடிகால் வசதியுடைய மேட்டுப் பாங்கான நிலம் அவசியம்.

கவுனி ரகத்தின் வயது 130லிருந்து 140 நாட்கள். அனைத்து வகையான மண்ணிலும் விளையக்கூடியது.

வெள்ளைப்பொன்னி ரகத்தின் வயது 135லிருந்து 145 நாட்கள். அனைத்து வகையான மண்ணிலும் விளையக்கூடியது.

மைசூர் மல்லி ரகத்தின் வயது 120லிருந்து 130 நாட்கள். அனைத்து வகையான மண்ணிலும் விளையக்கூடியது.

மைசூர் மல்லி தவிர மீதி 6 ரகங்களும் சம்பா பட்டத்துக்கு ஏற்றவை. மைசூர் மல்லியை சம்பா பட்டத்திலும், கோடை பட்டத்திலும் நடவு செய்யலாம்.