நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா... அழிவுத் தொழில்நுட்பமா?

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா...  அழிவுத் தொழில்நுட்பமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா... அழிவுத் தொழில்நுட்பமா?

தூரன் நம்பி

ர்நாடக மாநிலம், ராய்ச்சூரு மாவட்டத்தில் பி.டி பருத்தி விவசாயிகளின் கண்ணீர்க் கதைகளை கடந்த சில இதழ்களாகப் பார்த்து வருகிறோம். ‘கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாள்’ என்று சொல்வது போல... ‘காய்ப்புழுத் தாக்குதலைத் தாங்கி வளரும்’ என்ற பி.டி தொழில்நுட்பம், தோல்வியடைந்து விட்டது எனப் பறைசாற்றியிருக்கின்றன, கருகிக் கிடக்கும் பருத்தி வயல்கள்.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் பிரத்யேகமான மரபணுவை இயற்கை உருவாக்கி வைத்துள்ளது. பண வெறி, வணிக வெறி பிடித்த கும்பல், இயற்கையின் சூட்சுமங்களை உடைத்து, புதிய புதிய உயிர் அணுக்களை இணைத்து பயிர்களை உருவாக்கி, அதற்கு பட்டாவும் (காப்புரிமை) பெற்றுக்கொண்டு வருகின்றன. விவசாயிகளின் சொத்தாக இருந்த விதை, இன்றைக்கு கார்ப்ரேட் கம்பெனிகளின் கைக்கு மாறி, விவசாயிகளை விஷம் குடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா...  அழிவுத் தொழில்நுட்பமா?

கர்நாடக மாநிலத்தில் மட்டும் பல லட்சம் ஏக்கர் பி.டி பருத்தி வெடிக்காமல், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்... ராய்ச்சூரில் இயங்கி வரும் விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ‘டாக்டர்.பி.எம்.சாலி மட்’டிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர், தமது விஞ்ஞானிகளோடு நமது கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளித்தார்.

‘‘காய்புழுக்களை அழித்தொழிக்கும். பூச்சிக்கொல்லிச் செலவு மிச்சம். மகசூல் அதிகரிக்கும். அதிக வருமானம் கிடைக்கும், போன்ற ஆசைவார்த்தைகளைக் கூறித்தானே, பி.டி பருத்திக்கு பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது. ஆனால், மகசூலுக்கு பதிலாக தற்போது விவசாயத் தற்கொலைகளை அல்லவா அதிகப்படுத்துகிறது?”

“நீங்கள் சொல்வது உண்மைதான். விவசாயிகள் துக்கத்தில் நாங்களும் பங்கு ஏற்கிறோம். ஆனால், அதே

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா...  அழிவுத் தொழில்நுட்பமா?

சமயம், பி.டி என்பது ஒரு விஷக்கிருமி (வைரஸ்). பருத்தி விதைக்குள் இதன் மரபணுவைப் புகுத்தி விட்டால்... இது பல்கிப் பெருகி, பருத்திச் செடி முழுக்கப் பரவி விடும். பருத்தியைத் தாக்க வரும் புழுக்களை குறிப்பாக காய்ப்புழுவை இது செயல் இழக்கச் செய்து கொன்று விடும். இது அறிவியல் உண்மை.”

“அறிவியல் உண்மையாகவே இருக்கட்டும். விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கை, அரசு கொடுத்த அனுமதியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தானே விவசாயிகள் பி.டி பருத்தியைப் பயிரிட்டார்கள். இப்பொழுது ஒரு பருத்தி கூட வெடிக்காமல் போனதே ஏன்? இதற்கு என்ன சொல்கிறது, உங்கள் அறிவியல்?”

“அதற்கான ஆய்வில் இறங்கியுள்ளோம். தார்வார்டு விவசாயப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் எங்களது விஞ்ஞானிகள் இணைந்து களத்தில் இறங்கியுள்ளனர். எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். முதல்கட்ட ஆய்வு அறிக்கை இன்றுதான் வந்து இருக்கிறது.”

“என்ன சொல்கிறது ஆய்வு அறிக்கை?”

“ஐந்து நிறுவனங்கள் விற்பனை செய்த பி.டி விதைகளை ஆய்வு செய்து, அறிக்கை கொடுக்கும்படி அரசு கூறியுள்ளது. முதல் கட்ட ஆய்வு முடிந்துள்ளது. இதில் விதையில் இருக்க வேண்டிய பி.டி விஷம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. விஷம் நீர்த்துப் போனதால்தான் காய்ப்புழுக்கள் வெற்றி கண்டுவிட்டன.’’

“பருத்தி விதைப்புக் காலத்துக்கு முன்பு இந்த விதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லையா... அப்படி செய்து இருந்தால், இந்த பெரிய இழப்பைத் தவிர்த்து இருக்கலாமே?”

“பருத்தி விதைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுங்கள் என்று அரசு சொன்னால்தானே... நாங்கள் ஆய்வு செய்ய முடியும். அரசு சொல்லவில்லை. நாங்கள் செய்யவில்லை. இப்போது அரசு கேட்டிருக்கிறது. ஆய்வு நடக்கிறது’’

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா...  அழிவுத் தொழில்நுட்பமா?

“ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், இந்த பி.டி தொழில்நுட்பத்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்களே... அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

“முதல்கட்ட ஆய்வுதான் முடிந்து இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வு வந்த பிறகு முழுமையாகத் தெரிய வரும். அதன் பிறகு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்” என்று சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார், துணைவேந்தர்.

பல்கலைக்கழகத்தின் தரப்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 5 நிறுவன விதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், அப்பகுதியில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவன விதைகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. சில போலி கம்பெனிகளும் இருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விதைகளில் அப்பகுதியில் அதிகளவு பயிர் செய்யப்பட்ட நிறுவனத்தின் விதைகள் இடம்பெறவில்லை என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள். பக்கத்து மாநிலத்தில் நடந்துள்ள, இந்தத் துயரத்தைப் பார்த்த பிறகாவது, தமிழ்நாட்டில் பி.டி பயிர் செய்யும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பருத்தியைக் கொளுத்திய விவசாயிகள்!

பி.டி. பருத்தி... அறிவியல் தொழில்நுட்பமா...  அழிவுத் தொழில்நுட்பமா?

கர்நாடக மாநிலம், நார்ச்சூகி மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கரில் பயிர் செய்த பி.டி பருத்தி முற்றிலுமாக நாசமாகியுள்ளது. அதனால், பி.டி பருத்திக்கு எதிராக விவசாயிகள் உக்கிரமாகப் போராடி வருகின்றனர். ஜனவரி 24-ம் தேதி, ராய்ச்சூரில் கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பி.டி பருத்தி விவசாயிகள், பருத்தியைத் தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.