நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பஞ்சகவ்யா - 2

பஞ்சகவ்யா - 2
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சகவ்யா - 2

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய், க.சத்தியமூர்த்தி

*பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்குப் பதில் கரும்புச்சாறு பயன்படுத்தலாம்.

*மஞ்சள் காட்டில் மண்வாசம்

*நெல் வயலில் நெய்வாசம்

*வீரியமான பூச்சிகொல்லி விஷத்தை வருஷக் கணக்கில் தெளித்தேன்... எனக்கு சுவாசக்கோளாறு, பக்கவாதம், அலர்ஜினு ஏகப்பட்ட நோய்கள் வந்தன.

*இது மண்ணுக்கும் மனிதர்களுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. எல்லா பயிர்களுக்கும் இதைத் தெளிக்கலாம்.

*இந்த 18 ஆண்டுகளில் ஈரோடு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்
பஞ்சகவ்யாவுக்கு மாறி பலன் பெற்றுள்ளார்கள்.

க்திப் பிரசாதமாக விளங்கிய பஞ்சகவ்யாவைப் பண்ணைக்குக் கொண்டு வந்து சேர்த்த விவரங்களைக் கடந்த இதழில் பகிர்ந்துகொண்ட கொடுமுடியைச் சேர்ந்த மருத்துவர் கே.நடராஜன், தனது அனுபவங்களைத் தொடர்கிறார்.

“எனது வீட்டில் இருந்த முருங்கைச்செடிக்கு பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்த பிறகு, அதில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. வெட்டி அப்புறப்படுத்தலாம் என்ற எண்ணம் மாறிப்போனது. சடைசடையாய் காய்கள் காய்த்துத் தொங்கின. முதல் பரிசோதனை வெற்றியடைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அடுத்து விவசாயப் பயிர்களில் பரிசோதனை செய்து பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில், பஞ்சகவ்யா கரைசலைத் தயாரித்து வைத்துக்கொண்டு, முன்னோடி விவசாயி யாராவது கிடைப்பாரா எனத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார், ‘கருக்கம்பாளையம்’ செல்லமுத்து.

பஞ்சகவ்யா - 2

என் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இவர்தான், நான் உருவாக்கிய பஞ்சகவ்யாவை, ஆரம்ப காலத்தில் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர். அதை, நானே சொன்னால் சுவையாக இருக்காது. அவரிடமே கேளுங்கள்” என்று செல்லமுத்துவின் முகவரியைக் கொடுத்தனுப்பினார், நடராஜன்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்து இருக்கிறது, கருக்கம்பாளையம். வளைந்து நெளிந்து செல்லும் தார்ச்சாலையின் இருபுறமும் வளர்ந்து மணம் வீசும் மஞ்சள் தோட்டங்கள், ஊரைச்சுற்றி ஊர்ந்து செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், என பசுமை கொஞ்சும் பரிசுத்த பூமி. ‘விர்ர்ர்..’ என்ற ஓசையுடன் ஓடும் விசைத்தெளிப்பானை முதுகில் கட்டிக்கொண்டு மஞ்சள் காட்டுக்கு பஞ்சகவ்யா தெளித்துக் கொண்டிருந்தார், செல்லமுத்து. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், தெளிப்பானை இறக்கி களத்துமேட்டில் வைத்து விட்டு, வாய்க்கால் தண்ணீரில் கை, கால் கழுவிவிட்டு பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்தமா இருந்தது 40 சென்ட் நிலம்தான். அதை வெச்சி குடும்பம் நடத்த முடியாதுங்கிற நிலையில, பவர் ஸ்பிரேயர் (விசைத்தெளிப்பான்) வாங்கி, வாடகைக்கு பூச்சிக்கொல்லி தெளிச்சிட்டு பொழப்பைப் பாத்துக்கிட்டு இருந்தேன். பயிர்கள்ல, நோய் தாக்கினா, விவசாயிங்க, கூப்பிடுவாங்க. உரக்கடைகள்ல போய் நோய்க்கு ஏத்த மாதிரி பூச்சிக்கொல்லியை வாங்கிட்டு வந்து தெளித்து விடுவேன். நான் தெளித்தது எல்லாம் வீரியமான விஷம். இப்படி, வருஷக் கணக்குல தெளிச்சதுல... எனக்கு சுவாசக்கோளாறு, பக்கவாதம், அலர்ஜினு ஏகப்பட்ட நோய் வந்துடுச்சு. அதுக்கு சிகிச்சை எடுக்கத்தான், டாக்டர்.நடராஜன்கிட்ட போனேன். ‘தினமும் பூச்சிக்கொல்லியோட புழங்கினதுதான் உங்க நோய்க்குக் காரணம். தொடர்ந்து அதையே செய்தால் உயிருக்கே உலைவெச்சிடும்’னு சொன்னார், டாக்டர். ‘எனக்கு வருமானமே அதுதானுங்களே... எப்படி திடீர்னு விட முடியும்’னு கேட்டேன். அப்பதான் ‘நான் வழி சொல்றேன்’னு சொல்லி கலங்கலான திரவம் இருந்த ஒரு பாட்டிலைக் கொடுத்தார்.

பஞ்சகவ்யா - 2

மாற்றம் ஏற்படுத்திய மருத்துவர்!

‘இதுக்குப்பேரு பஞ்சகவ்யா. பசுமாட்டில் இருந்து கிடைக்கிற பொருட்களை வெச்சு தயாரிக்கிற கரைசல். இது மண்ணுக்கும் மனுஷனுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. எல்லா பயிருக்கும் இதைத் தெளிக்கலாம்’னு சொல்லி அவர் வீட்டில் இருந்த முருங்கை மரத்தைக் காட்டி, ‘இது, இப்படிக் காய்க்கிறதுக்கு காரணம் பஞ்சகவ்யாதான்’னு சொன்னார். அதை அரை மனசோடு வாங்கிக்கிட்டுப் போய், என்னோட மஞ்சள் வயல்ல, ஒரு லிட்டர் தண்ணிக்கு 300 மில்லிங்கிற அளவுல கலந்து தெளிச்சேன். இன்னொரு நெல் வயல்லயும் சோதனை அடிப்படையில நடவுல இருந்து 15 நாளுக்கு ஒரு முறை தெளிச்சேன். ஆச்சர்யமா, எந்தப் பூச்சிக்கொல்லியும் தெளிக்காம நெல்லு, மஞ்சள் ரெண்டும் தளதளனு வளர்ந்து அதிக மகசூலைக் கொடுத்துச்சு.

வழக்கமா பூச்சிக்கொல்லி தெளிக்க என்னைக் கூப்பிடுற விவசாயிங்களை சோதனை வயல்களுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டினேன். ‘அட... நெல் வயல்ல நெய்வாசம் வீசுது. மஞ்சள் வயல்ல மணம் வீசுது’னு ஆச்சர்யப்பட்டாங்க. பயிருக்கும் உயிருக்கும் ஏற்ற பாதுகாப்பான மருந்து பஞ்சகவ்யாதான்னு எடுத்துச் சொன்னேன். உடனே, சிலர் மட்டும் ‘எங்க வயல்ல எதை வேணும்னாலும் தெளிங்க... வெள்ளாமை வெளைஞ்சா சரி’னு பஞ்சகவ்யா தெளிக்க அனுமதி கொடுத்தாங்க. சிலர் ‘இந்த வேலையெல்லாம் வேணாம். வழக்கமா தெளிக்கிறதைத் தெளிங்க’னுட்டாங்க.

பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்கிற விதத்தை டாக்டர்கிட்ட நல்லா கத்துக்கிட்டு, நானே தயாரிக்க ஆரம்பிச்சேன். ரசாயனத்துக்கு மாற்றான ஒரு புரட்சினு கூட இதை எடுத்துக்கலாம். ஒரு விவசாயி, ரெண்டாகி, ரெண்டு மூணாகி, இந்த 18 வருஷத்துல இந்தப் பகுதியில மட்டும் ஆயிரக்கணக்கான விவசாயிங்க பஞ்சகவ்யாவுக்கு மாறி இருக்காங்க” என்று பழைய நினைவுகளில் மூழ்கிய செல்லமுத்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

அதிகரித்த வருமானம்..!

“ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்க ஒரு டேங்க்குக்கு 25 ரூபாய் வாடகை வாங்கினேன். பஞ்சகவ்யா தெளிக்க

பஞ்சகவ்யா - 2

ஒரு டேங்க்குக்கு 70 ரூபாய் வாங்கினேன். அதுல மகசூல் அதிகம் கிடைக்கவும், பஞ்சகவ்யா அடிக்கச் சொல்லி அதிகமான விவசாயிகள் தேடி வர ஆரம்பிச்சாங்க. அதனால, என்னோட மாத வருமானமும் அதிகமானது. உடம்புக்கும் பாதிப்பும் இல்லை. வாடகை வீட்ல இருந்த நான், இப்ப சொந்த வீடு கட்டி, வாகனம் வாங்கி, குழந்தைகளை நல்லமுறையில் படிக்க வெச்சுக்கிட்டிருக்கேன். பல ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சு விவசாயம் பண்றேன். எல்லாமே பஞ்சகவ்யா கொடுத்த கொடைதான்”  என்று பெருமிதமாகச் சொன்ன செல்லமுத்து, களத்துமேட்டில் இருந்த விசைத்தெளிப்பானை தோளில் மாட்டிக்கொண்டு வேலையில் மும்முரமானார்.

 சிறந்த இயற்கை இடுபொருள் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுத்து சேவை செய்தைமைக்காக, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து, ‘சுற்றுச்சூழல்’ விருதையும், பாராட்டையும் பெற்றுள்ளார் செல்லமுத்து.

-மணம் பரப்பும்

தொடர்புக்கு,
கே.எம்.செல்லமுத்து,
செல்போன்: 94866-02389.

பஞ்சகவ்யாவைப் பரவலாக்கிய நம்மாழ்வார்!

பஞ்சகவ்யா - 2

செல்லமுத்து குறித்து அறிந்த நம்மாழ்வார், அவரைப் பாராட்டி விட்டு... தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லமுத்துவை அழைத்துச் சென்று, விவசாயிகளுக்கு பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறையைக் கற்றுக் கொடுத்தார். கர்நாடக மாநிலம் சென்று அங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா செய்முறைப் பயிற்சியும் கொடுத்துள்ளார், செல்லமுத்து.

நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு!

பசு மாட்டுச்சாணம்-5 கிலோ, மாட்டுச்சிறுநீர்-2 லிட்டர், பால்-2 லிட்டர், நெய்-1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை-1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் நடராஜன் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து. “சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல வளர்ச்சி கிடைக்குது” என்கிறார், செல்லமுத்து.