Published:Updated:

கீரை வாங்கலையோ கீரை!

கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!

பொன்னாங்கண்ணி...

40 நாள்... 10 சென்ட்... ரூ 10 ஆயிரம் லாபம்!

*அனைத்து மண் வகைகளிலும் வளரும்

*ஆண்டுதோறும் நடவு செய்யலாம்

*25-ம் நாள் முதல் மகசூல்

*தண்டுப் பகுதியை ஒடித்து நட்டால் போதும்

*ஒரு முறை நடவு... ஆண்டு முழுவதும் அறுவடை!

கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி. இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால், பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் எனச் சொல்வார்கள். அந்தளவுக்கு கண்பார்வையை கூர்மையடையச் செய்யும் சக்தி இக்கீரைக்கு உண்டு.

‘‘காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்

கூசும் பிலீகம் குதாங்குர நோய்-பேசிவையால்

என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்

பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’’

எனப் போற்றுகிறது, அகத்தியர் குண பாடம்.


‘பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான நோய்கள், காச நோய், இருமல், உடல் உஷ்ண நோய்கள், வாதம் தொடர்பான நோய்கள் வராது’ என்பது இப்பாடலின் சுருக்கமான பொருள். இதில், மூன்று நான்கு ரகங்கள் இருந்தாலும் பச்சை, சிவப்பு என இரண்டு வகைககள்தான் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. அதிலும் சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத்தான் நுகர்வோர் அதிகம் விரும்புகிறார்கள்.

கீரை வாங்கலையோ கீரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனைச் சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையை சாகுபடி செய்யும் விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?. தேனி மாவட்டம் சீலையம்பட்டி, கீரை சாகுபடிக்குப் பெயர் பெற்ற ஊர். இந்த ஊரில் தொடர்ந்து கீரை சாகுபடியில் ஈடுபட்டு வரும் ராசு. பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“வழக்கமா எங்க ஊர்ல கீரைதான் பெருங்கொண்ட வெள்ளாமை. நான் கறிவேப்பிலை, அகத்தி, பொன்னாங்கண்ணிக் கீரை விதைச்சிருக்கேன். ஒரு ஏக்கர் நிலத்துல கறிவேப்பிலை, வரப்புகள்ல அகத்தி, 10 சென்ட் நிலத்துல பொன்னாங்கண்ணிக் கீரை இருக்கு. இம்சை கொடுக்காத சுருக்கமான வெள்ளாமை கீரை வெள்ளாமை. கீரைத் தோட்டத்துல இருந்தா, பையில பணம் இருந்த மாதிரி. தினமும் வருமானம் கிடைச்சிடும். சீசனுக்கு ஏத்த மாதிரி சிறுகீரை, அரைக்கீரைனு மாத்தி மாத்தி விதைப்போம். ஆனால், பொன்னாங்கண்ணிக்கு எப்பவுமே சீசன்தான்.

அதனால எப்பவும் வயல்ல இருக்கும். இது, அறுக்க அறுக்க வந்துக்கிட்டே இருக்கும். இந்த 10 சென்ட்ல பொன்னாங்கண்ணி நட்டு ஏழு மாசம் ஆகுது. தினமும் சராசரியா 100 கட்டு அறுப்போம். ஒரு கைப்பிடி கட்டு நாலு ரூபாய்க்குக் கொடுக்கிறோம். என்கிட்ட மொத்தம் 30 பாத்தியில(12 அடிக்கு 12 அடி) கீரை இருக்கு. சுழற்சி முறையில அறுவடை செய்றோம் வரிசையா ஒவ்வொரு பாத்தியா 30 பாத்தியையும் அறுத்து முடிக்கிறப்போ... முதல் பாத்தியில அறுப்புக்குத் தயாரா மறுபடியும் கீரை இருக்கும். ஒரு நாளைக்கு 100 கட்டு மட்டுமே அறுக்கிறதால ஒரு சுத்து வர்றதுக்கு 40 நாள் ஆகிடும். ஒரு நாளைக்கு 100 கட்டுனு 40 நாளைக்கு நாலாயிரம் கட்டு கீரை கிடைக்கும்.

ஒரு கட்டு நாலு ரூபாய் விலைனு கொடுக்கிறப்போ, 16 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல, கடலைப்பிண்ணாக்கு உரம், களை எடுப்பு, அறுப்புக்கூலினு அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாய் செலவானாலும் மீதி 10 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். 40 நாள்ல 10 சென்ட் இடத்துல இருந்து 10 ஆயிரம் ரூபாய்ங்கிறது எனக்குப் பெரிய வருமானம்தான். கறிவேப்பிலை, அகத்தி மூலமா வர்ற வருமானம் தனி” என்றார்.

கீரை வாங்கலையோ கீரை!

எப்படி சாகுபடி செய்வது?

இது அனைத்து மண் வகைகளிலும் வளரும் என்றாலும், செம்மண் நிலங்களில் அதிக மகசூல் கொடுக்கும். கரிசல் மண்ணில் மகசூல் குறையும். கீரையின் தண்டுப்பகுதியை ஒடித்து நட்டால் தழைத்து வந்து விடும். நிலத்தில் தொழுவுரம் இட்டு, புழுதியாக உழுது... 12 அடி சதுரத்தில் சதுரப்பாத்தி எடுக்க வேண்டும். பிறகு, நிலத்தில் பாசனம் செய்து, ஈர நடவாக, கீரை விதைக்குச்சிகளை (பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுப் பகுதி) நடவு செய்ய வேண்டும். ஈரம் காயாமல் பாசனம், செய்து வந்தால் 25-ம் நாள் அறுவடை செய்யலாம்.
அனைத்துப் பாத்திகளையும் ஒரே நாளில் அறுவடை செய்யாமல் சந்தையின் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்ய வேண்டும். ஒரு முறை அறுவடை முடிந்த பாத்தியில், அடுத்த 20 நாட்களில் அடுத்த அறுவடை செய்யலாம். மேலே சொன்ன அளவுள்ள ஒரு பாத்தியில் இருந்து, ஒர் அறுவடைக்கு 70 கட்டுகள் (ஒரு கைப்பிடி அளவுள்ள சிறிய கட்டு) வரை கீரை கிடைக்கும். ஒர் அறுவடை முடிந்தவுடன் களை எடுக்க வேண்டும். இரண்டு அறுவடை முடிந்தவுடன், ஒரு சென்ட் நிலத்துக்கு 500 கிராம் கடலைப் பிண்ணாக்கை தண்ணீரில் கரைத்து அக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். இதில், பூச்சித்தாக்குதல் பெரும்பாலும் இருக்காது என்பதால், பூச்சிவிரட்டி தேவைப்படாது.

சந்தை வாய்ப்பு!

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொறுத்தவரை சத்தான சந்தை வாய்ப்புள்ளது. சிறிய கட்டுகள் 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், 300 கிராம் அளவுள்ள ஒரு கட்டு 7 ரூபாய் விலையிலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யும் போது, 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் கீரை வியாபாரிகள் உள்ளனர். இதைத் தவிர, உழவர் சந்தைகளில் கீரை விற்பவர்களை அணுகினாலே, மொத்த விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

பச்சைப் பொன்னாங்கண்ணி!

காடு, மேடு வாய்க்கால், வரப்பு என ஈரப்பதம் உள்ள அனைத்து இடங்களிலும் தானாக வளரும் தன்மை கொண்டது, பச்சைப் பொன்னாங்கண்ணி. பச்சை இலைகளுடன், வெள்ளை நிறப் பூக்களுடன் காணப்படும். இதற்கு கொடுப்பை, சீதை, என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர், ஆல்டிமேந்த்ரா செஸ்ஸில்ஸ் (altemanthera sessilis).

மருத்துவ குணங்கள்!

பொன்னாங்கண்ணிக் கீரையை வாரம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இன்சுலின் சுரப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு சோர்வைப் போக்கும். ஆண்களின் மலட்டுத் தன்மை நீங்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வரவிடாமல் காக்கும். குடலிறக்க நோய் குறையும். நெஞ்சு சளியைக் கரைத்து, மார்பு இறுக்கத்தைப் போக்கும். நரம்பு மண்டலத்தைச் சீர் செய்யும், நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். கண்கள், மூளைக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். இதை எண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தடவினால் முடி நன்றாக வளரும்.

பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச் சத்து-1.63 மில்லி கிராம், கால்சியம்-510 மில்லி கிராம், வைட்டமின்-ஏ, பி, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின்-ஏ அதிக அளவில் உள்ளது. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து கடைந்து, 48 நாட்கள் உண்டு வந்தால் உடல் வனப்பு பெற்று பொன்னிறமாகப் பொலிவு பெறுவதுடன், நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism