கோயம்புத்தூர் அடுத்துள்ள வையம்பாளையம் கிராமத்தில்... மறைந்த விவசாய சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும்’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இது, தமிழக விவசாயிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய சில விவசாய சங்கத் தலைவர்களின் கருத்துக்கள் இங்கே...
கு.செல்லமுத்து, தலைவர், ‘உழவர் உழைப்பாளர் கட்சி’: “நாராயணசாமி நாயுடுவால் துவக்கப்பட்டதுதான், ‘உழவர் உழைப்பாளர் கட்சி’. இது, காலம் கடந்த அறிவுப்புதான் என்றாலும், நன்றியுடன் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். விவசாயிகளின் நலனுக்கு பல தியாகங்களைச் செய்த அய்யாவுக்கு கிடைத்த மரியாதை இது” என்றார்.

பேராசிரியர். சின்னசாமி, மாநிலத்தலைவர், ‘தமிழக விவசாயிகள் சங்கம்’: “இன்று 25 லட்சம் விவசாய பம்ப்செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ‘அந்த சலுகையை அரசு கொடுக்க வேண்டும்’ என்று 1973-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து... விவசாயிகளைத் திரட்டி போராடி வந்தவர், நாராயணசாமி நாயுடு. ஆனால், அவரது கனவு அவரது மறைவுக்குப் பிறகுதான் நிறைவேறியது. மேலும், உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டிப் போராட்டத்தை நடத்திக்காட்டியவர் அவர். ‘ஒன்று சேரவே மாட்டார்கள்’ என்கிற இலக்கணத்தை மாற்றி பல லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டிக்காட்டியவர்” என்றார்.
‘வேட்டவலம்’ மணிகண்டன், தலைவர், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி: ‘‘அய்யா நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது சொந்த கிராமத்தில் ‘மணிமண்டபம் கட்டப்படும்’ என்கிற அறிவிப்பு மனநிறைவு தருகிறது. விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு நன்றி...’’
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்.எஸ்.பழனிச்சாமி, தலைவர், ‘கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்’:“மிக மிக காலதாமதமான அறிவிப்பு. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது சொந்த கிராமத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எங்கள் சங்கத்தால் வைக்கப்பட்டு வருகிறது. அதை, அப்போதே அறிவித்திருக்கலாம். இப்போதாவது எங்கள் கோரிக்கை நிறைவேறியது என்பதில் மகிழ்ச்சிதான்.”