Published:Updated:

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...
பிரீமியம் ஸ்டோரி
மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

நல்ல லாபம் கொடுக்கும் நாவல் பழச்சாறு!மதிப்புக் கூட்டல்துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

நல்ல லாபம் கொடுக்கும் நாவல் பழச்சாறு!மதிப்புக் கூட்டல்துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...
பிரீமியம் ஸ்டோரி
மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

ழைக்காலங்களில் நாவல் நடவு செய்யலாம்

• 5-ம் ஆண்டிலிருந்து மகசூல்

• பழமாக விற்றால் `140

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• சாறாக விற்றால் `315

சாதாரண விவசாயியா இருந்த நான், இன்னிக்கு தொழில்முனைவோரா மாறி ரெண்டு மடங்கு வருமானம் எடுத்துட்டு இருக்கேன். பயிரையும், பருவத்தையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சில நேரத்தில் விலை கிடைக்காமப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும்போது கண்டிப்பா லாபம் பார்த்துட முடியும். ஒரு முறை நெல்லிக்காய்க்கு விலை கிடைக்கலை. அதனால, மதிப்புக் கூட்டி விற்பனை செய்து பார்க்கலாமேனு... நெல்லிச்சாறு தயார் செய்து விற்பனை செய்தப்போ நல்ல லாபம் கிடைச்சது. அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். இப்போ அடுத்ததா நாவல் பழத்துலயும் சாறு எடுத்து விற்பனை செய்து நல்ல வருமானம் எடுத்துக்கிட்டு இருக்கேன்”  என உற்சாகமாகப் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டம், மெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்.

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

இவர், நாவல் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டிய நெல்லி போன்ற கட்டுரைகள் மூலம், ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்... கொடைரோடு அருகேயுள்ள மெட்டூர் மேம்பாலத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது, ஜெயக்குமாரின் பண்ணை.

நெல்லிச்சாறு தந்த நம்பிக்கை!

“நான் ஒன்பது வருஷமா பசுமை விகடன் வாசகர். பசுமை விகடன்ல சொல்ற வழிமுறைகளையும், தொழில்நுட்பத்தையும் உடனே பரிசோதனை பண்ணிப் பார்த்துடுவேன். பசுமை விகடன்ல வெளியான ‘மதிப்புக்கூட்டும் மந்திரம்’ தொடர்தான் என்னோட அத்தனை வெற்றிக்கும் ஆணிவேர். அந்தத் தொடரை படிச்சிட்டு, தஞ்சாவூர்ல இருக்கிற இந்திய பயிர் பதனீட்டு தொழில்நுட்ப மையம் மூலமா நெல்லிக்காயை மதிப்புக் கூட்டி விற்பனை செஞ்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.  அதனாலதான், ஒரு ஏக்கர் நிலத்துல விளையுற நாவல் பழங்களையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்து, அது தொடர்பான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.

நாவல் சாறுக்கு ‘கிராக்கி’!

நாவல் பழ சாகுபடி தமிழ்நாட்டுல குறைவுதான். ஆனா, இங்க தேவை அதிகம். அதனால, நாவல் பழத்துக்கே நல்ல கிராக்கி உண்டு. ஆனா, இது சீசன்ல 2 மாசம் மட்டும்தான்  கிடைக்குங்கிறதால, இதோட ஜூஸுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. பெரும்பாலும் இங்க  வெளிமாநிலங்கள்ல இருந்து வர்ற நாவல்பழ ஜூஸைத்தான் கடைகள்ல விற்பனை செய்றாங்க. ஜூஸுக்கு இருக்கிற சந்தை வாய்ப்பைத் தெரிஞ்சிக்கிட்டதும் உடனடியா செயல்ல இறங்கிட்டேன்.

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

நாவல் பழத்துல சாறு எடுக்கிற மெஷினை  ஹரியானாவிலிருந்து 2 லட்ச ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். அதுல நாவல் பழத்தை அப்படியே போட்டு பிழிஞ்சி, எந்தவிதமான பொருளையும் சேர்க்காம அப்படியே கவர்ல அடைச்சு விற்பனைக்கு அனுப்பினேன். இயற்கை அங்காடிகள்ல நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்ததா, 450 மில்லி,

700 மில்லினு கண்டெய்னர் பேக்கிங் பண்ணி இப்போ விற்பனைக்கு அனுப்புறேன். இதுல, நல்ல லாபம் கிடைக்குது” என்ற ஜெயக்குமார் சாறு பிழியும் இயந்திரத்தை இயக்கிக் காட்டினார்.

நிறைவாகப் பேசிய ஜெயக்குமார், “விளைய வெச்சோமா... விற்பனை செய்தோமானு இல்லாம, மதிப்புக் கூட்டி விற்பனை செய்தா எல்லா விளைபொருளுக்கும் நிச்சய லாபம் கிடைக்கும். சாதாரண விவசாயியா இருந்த நான், இன்னிக்கு தொழில்முனைவோரா மாறி ரெண்டு மடங்கு வருமானம் எடுத்துக்கிட்டு இருக்கேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கையால, ‘சிறந்த மதிப்புக் கூட்டல் விவசாயி’க்கான விருது வாங்கியிருக்கேன். என்னோட இத்தனை வெற்றிக்கும் அடிப்படை பசுமை விகடன்தான்” என்றார் நன்றிப்பெருக்குடன்.

தொடர்புக்கு,
ஜெயக்குமார்,
செல்போன்: 98659-25193.

மதிப்புக் கூட்டும் மந்திரத்தின் பலன்!

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

தனது விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “நாவலைப் பொறுத்தவரை ஒவ்வொரு சீசனின் போதும் விளைச்சல் வித்தியாசப்படும். போன சீசனின் போது, 4 ஆயிரம் கிலோ கிடைச்சுது. இந்த சீசன் போது, 2 ஆயிரத்து 800 கிலோதான் அறுவடையாச்சு. ஒரு கிலோ நாவல் பழத்தைப் பிழிஞ்சு சாறு எடுத்தா ஈரப்பதத்தைப் பொறுத்து 700 மில்லி முதல் 900 மில்லி வரை சாறு கிடைக்கும். எங்க நாவல்ல நல்ல தண்ணிச்சத்து அதிகம் இருக்கிறதால நல்லாவே சாறு கிடைச்சுது. 2 ஆயிரத்து 800 கிலோ பழத்துல இருந்து 2 ஆயிரத்து 100 லிட்டர் சாறு கிடைச்சுது. ஒரு லிட்டர் சாறு 350 ரூபாய்னு விற்பனை செய்ததுல... 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம். நாவல் பழக் கொட்டையை காய வெச்சு, அரைச்சு பொடியாக்கி அதையும் விற்பனை செய்றோம். மொத்தம் 220 கிலோ கொட்டை கிடைச்சுது. அதை காயவெச்சு அரைச்சப்போ... 90 கிலோ பொடி கிடைச்சுது. ஒரு கிலோ பொடி 400 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதன் மூலமா, 36 ஆயிரம் ரூபாய்  வருமானம். ஆக, மொத்தம் 7 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வருமானம். போன வருஷம் 4 ஆயிரம் கிலோ நாவல் பழத்தை அப்படியே விற்பனை செய்தப்போ... 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்தான் லாபம். இந்த முறை, 2 ஆயிரத்து 800 கிலோ மட்டுமே மகசூலுல அதே 5 லட்ச ரூபாய் லாபமா கிடைச் சிருக்கு. இதுதான் மதிப்புக்கூட்டும் மந்திரம் செய்யும் மாயாஜாலம்” என்றார்.

சொன்னார்... சொன்னபடி செய்தார்!

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

25.06.2014-ம் தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘ஒரு ஏக்கர்... 5 லட்சம்... நச் லாபம் கொடுக்கும் நாவல்’ என்ற தலைப்பில் ஜெயக்குமாரின் நாவல் சாகுபடி பற்றிய செய்தி அட்டைப்பட கட்டுரையாக இடம் பெற்றிருந்தது. கட்டுரையின் முடிவில், “நான் பழத்தை அப்படியே விற்பனை செய்யாம மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுக்கான வேலையையும் ஆரம்பிச்சிட்டேன்” எனச் சொல்லியிருந்தார், ஜெயக்குமார். சொன்னபடியே நாவலை மதிப்புக்கூட்டி, விற்பனை செய்து நல்ல லாபம் எடுப்பதுடன் ‘சிறந்த மதிப்புக்கூட்டல் விவசாயி’ விருதையும் பெற்று விட்டார்.

மருத்துவ குணங்கள்!

நாவல் பழம், அதிக மருத்துவப் பயன் கொண்டது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-பி போன்ற தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. நாவல் பழத்தின் உவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். ரத்தத்தின் கடினத்தன்மை மாறி இலகுவாகும். இது ரத்தத்தில் கலந்துள்ள வேதிப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும். நாவல் சாறு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால்... இன்சுலின் சுரப்புக் குறைபாடு உள்ளவர்கள் நாவல் பழச்சாறை உண்ணலாம்.

நாவல் மர பராமரிப்பு!

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்...

நாவல் மரங்களை மழைக் காலங்களில் நடவு செய்வது நல்லது. தனியாக பட்டம் கிடையாது. அனைத்து மண் வகைகளிலும் வளரும். நாவல் மரம் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்தாலும்... வருமான ரீதியாக காய்ப்புக்கு வர 8 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும். அறுவடையின்போது, பழம் சிதையாமல், மண் படாமல் பக்குவமாகப் பறிக்க வேண்டும். வீரிய ரக நாவல் உடையாது, அடிபடாது. அதிக நாள் தாங்கக்கூடியது. இயற்கை இடுபொருட்கள் கொடுக்கும்போது பழத்தின் சுவை கூடுவதோடு தரமும் கூடுகிறது.

நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், ஜம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. நாவலில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு என மூன்று சுவைகளும் உள்ளன. மதுரை மாவட்டத்தில் பாலமேடு, சத்திரப்பட்டி, அழகர்கோவில் போன்ற மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் நாவல் மரங்கள் ஏராளமாக உள்ளன.

லாபம் பெறலாம்..!

தஞ்சாவூரில், இந்திய பயிர் பதனீட்டுத் தொழில்நுட்ப மையம் (Indian Institute of Crop Processing Technology - IICPT) உள்ளது. அங்கு நடைபெற்று வரும் மதிப்புக்கூட்டல் தொடர்பான பயிற்சிகள் குறித்து அதன் இயக்குநர் லோகநாதனிடம் கேட்டப்போது. ‘‘விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாத காலத்தில் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். நாவல் பழம் மட்டுமல்ல நெல்லிக்காய், எலுமிச்சை, மாதுளை, அன்னாசி, தக்காளி, கோவைக்காய் உள்ளிட்ட அனைத்து விளைப்பொருட்களையும் மதிப்புக் கூட்டுவதன் மூலம் லாபத்தைப் பெறலாம். மதிப்புக் கூட்டுவது தொடர்பான பயிற்சிகள், எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கட்டணம் உண்டு’’ என்றார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04362-228155

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism