Published:Updated:

தென்னையில் ஜாதிக்காய்!

தென்னையில் ஜாதிக்காய்!
பிரீமியம் ஸ்டோரி
தென்னையில் ஜாதிக்காய்!

ஒரு ஏக்கர்... 70 மரங்கள்... 4 லட்ச ரூபாய்! ஊடுபயிர் கொடுக்கும் உன்னத வருமானம்... ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

தென்னையில் ஜாதிக்காய்!

ஒரு ஏக்கர்... 70 மரங்கள்... 4 லட்ச ரூபாய்! ஊடுபயிர் கொடுக்கும் உன்னத வருமானம்... ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
தென்னையில் ஜாதிக்காய்!
பிரீமியம் ஸ்டோரி
தென்னையில் ஜாதிக்காய்!

தனியாக பட்டம் இல்லை.

தென்னைக்கு இடையில் ஊடுபயிர்

தனிப்பயிர் சாகுபடிக்கு ஏற்றதல்ல

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மிகாத வெப்பநிலை வேண்டும்

தெ
ன்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை, பாக்கு, கோகோ, தீவனப்பயிர்கள்... எனப் பல பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அந்த வரிசையில் ஜாதிக்காய் (ஜாதிபத்ரி) சாகுபடியும் இணைந்திருக்கிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடிவாரப்பகுதிகளில் ஜாதிக்காய்க்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால்... அதை ஊடுபயிராக சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகரித்து வருகிறார்கள். தவிர, நல்ல லாபம் கொடுக்கும் பயிராகவும் இருக்கிறது, ஜாதிக்காய்.

தென்னையில் ஜாதிக்காய்!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சேத்துமடை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தென்னைக்கு இடையில் ஜாதிக்காயை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

மேகங்கள் மேயும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்... அதில் உருகும் வெண்ணெய் போல் வழிந்து, விழுந்து, வளைந்து, நெளிந்து சாலையைக் கடக்கும் சிற்றோடைத் தண்ணீர்... பச்சை ஓலை சாமரம் வீசி பரந்து கிடக்கும் தென்னை மரங்கள்... என்று எட்டுத்திக்கும் இயற்கை தாண்டவமாடும் எழில் பிரதேசத்தில் இருக்கிறது, சண்முகசுந்தரத்தின் பண்ணை. நீர் ததும்பி பொங்கும் நிறை கிணறு. அதில் நீர் இறைக்கும் பம்ப்செட். சொட்டுநீர்ப் பாசனத்தில் செழுமை கட்டி நிற்கும் தென்னை, அதில் ஊடுபயிராக ஜாதிக்காய் மரங்கள். அமைதி தவழும் அற்புத அழகுடன் பார்க்கவே ரம்யமாக இருக்கிறது, அவரின் தென்னந்தோப்பு.

இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த நம்மை தோள் தொட்டு வரவேற்ற சண்முகசுந்தரம், தனது விவசாய அனுபவங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

30 ஏக்கர் தென்னை!

“திருப்பூர்தான் எனக்குச் சொந்த ஊரு. பரம்பரை விவசாயக்குடும்பம். சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். ஆனா, திருப்பூர்ல இருக்கிற எங்க பூர்வீக நிலத்துல விவசாயம் பண்ணமுடியாத சூழல். அதனால, வக்கீல் தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும், விவசாய ஆசை குறையவே இல்லை. பூர்வீக நிலம் சரிவராதுங்கிறதால புதுசா எங்கயாவது நிலம் வாங்கி விவசாயம் பண்ணலாம்னு நிலம் தேட ஆரம்பிச்சேன். கேரளா, கர்நாடகா...னு அலைஞ்சும் தோதான இடம் அமையலை. அப்பறம் ஒரு வழியா இந்த 30 ஏக்கர் மலை அடிவார நிலத்தை வாங்கினேன். நான் வாங்கும்போது, புதர் மண்டி பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. ஏராளமான செலவு செய்து கடுமையா உழைச்சு மராமத்து பார்த்து சமன் செய்து அருமையான நிலமா மாத்தினேன்.

பாசன ஏற்பாடுகளைச் செய்து... 25 அடி இடைவெளி கொடுத்து தென்னையை நடவு செய்தேன். கொஞ்சமா பாக்குக் கன்னுகளையும் நடவு செய்தேன்.

தென்னையில் ஜாதிக்காய்!

தென்னைக்குப் போக ஏராளமான தண்ணி இருந்தது. அதுனால, மீதி நிலத்துல வேற ஏதாவது ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்னு விசாரிச்சப்போ... கேரளாவுல ஜாதிக்காய் நடவு செய்றதைக் கேள்விப்பட்டேன். அந்தப் பண்ணைகளைப் பார்த்துட்டு விவசாயிகள்கிட்ட விசாரிச்சப்போ... ‘பொள்ளாச்சி மலையடிவாரப் பகுதிகள்ல ஜாதிக்காய் நல்லா வளரும்’னு தைரியம் கொடுத்தாங்க. அதனால, ஜாதிக்காயையே நடவு செய்யலாம்னு முடிவு செய்து... கள்ளிக்கோட்டை, இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்துல ஜாதிக்காய்க் கன்றுகளை வாங்கிட்டு வந்து, 10 ஏக்கர் தென்னையில் ஊடுபயிரா நடவு செய்தேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். ஜாதிக்காய் நடவு செய்து 16 வருஷம் ஆச்சு. இப்போ, மொத்தம் 1,900 தென்னை மரங்கள் காய்ப்பில் இருக்கு. 700 ஜாதிக்காய் மரங்கள் காய்ப்பில் இருக்கு” என்ற சண்முகசுந்தரம் பண்ணையைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

இயற்கையில் செழிப்பான வளர்ச்சி!

“முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களை மட்டும்தான் கொடுக்கிறேன். அதனால எந்தக்குறையும் இல்லாமல் வளர்ந்து அடுத்த அஞ்சு வருஷத்துல இருந்து நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சிடும். முதல் மகசூலப்போ... மரத்துக்கு 25 காய்கள் மட்டும்தான் கிடைச்சது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெருகி இப்போ முழு மகசூல் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ, ஒரு மரத்துக்கு ஆயிரம் காய்கள் வரை கிடைக்குது.

தென்னையில் ஜாதிக்காய்!

ஜாதிக்காய் விவசாயம் தென்னை போல எளிமையானது இல்லை. இதோட வளர்ச்சி மெதுவாத்தான் இருக்கும். ரொம்ப நல்லா பராமரிச்சாத்தான் அஞ்சு வருஷத்துல மகசூல் ஆரம்பிக்கும். நல்ல வருமானம் எடுக்க... குறைஞ்சது 10 வருஷம் ஆகும். ஒரு ஏக்கர் நிலத்துல இருக்குற 70 தென்னையில் இருந்து வருஷத்துக்கு சராசரியா 9 ஆயிரம் தேங்காய் கிடைக்குது. அதுமூலமா குறைந்தபட்ச வருமானம்னு

தென்னையில் ஜாதிக்காய்!

பார்த்தா ஏக்கருக்கு 90 ஆயிரம் ரூபாய்தான். ஆனா, அதே ஒரு ஏக்கர் நிலத்துல இருக்குற 70 ஜாதிக்காய் மரங்கள் மூலமா வருஷத்துக்கு நாலு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது” என்ற சண்முகசுந்தரம் நிறைவாக, 

பொறுமை அவசியம்!

“ஆனா, இந்த அளவு வருமானம் எடுக்கணும்னா பொறுமையும் கவனமான பராமரிப்பும் ரொம்பவே அவசியம். அதுல கிடைக்கிற வருமானத்தைக் கண்கூடா பார்த்துட்டேன். அதனால இப்போ, இன்னும் 14 ஏக்கர் நிலத்துல இருக்கிற தென்னையிலும் ஊடுபயிரா ஜாதிக்காய் நாற்றுக்களை நடவு செய்துக்கிட்டு இருக்கேன். இன்னும் அஞ்சு வருஷத்துல 30 ஏக்கர் நிலத்துலயும் ஜாதிக்காய் இருக்கும்” என்று சொல்லிவிட்டு பராமரிப்புப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

தொடர்புக்கு,
சண்முகசுந்தரம்,
செல்போன்: 98422-42936.

அரசு மானியம் உண்டு!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் இளங்கோவன், “ கடந்த சில ஆண்டுகளாக...  உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தென்னையில் ஊடுபயிராக, ஜாதிக்காய் நாற்றுக்களை நடவு செய்ய நாங்கள் பரிந்துரை செய்து வருகிறோம். சென்ற ஆண்டு, மலிவான விலையில் நாற்றுகளைக் கொடுத்ததோடு, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியமும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மானியம் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை. மேட்டுப்பாளையம் பகுதியில், கல்லாறு, பரளியாறு ஆகிய இடங்களில் இயங்கி வரும் தோட்டக்கலைத்துறை பழப் பண்ணைகள் மற்றும் குற்றாலம் தோட்டக்கலைத்துறை பழப் பண்ணை ஆகியவற்றில் நாற்றுகள் கிடைக்கும். அதிக விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

தொடர் அறுவடைப்பயிர்!

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும், மத்திய அரசு நறுமணப் பொருட்கள் வாரியத்தின் உதவி இயக்குநர், முனைவர் கண்ணன் ஜாதிக்காய் குறித்து பகிர்ந்த தகவல்கள் இங்கே... “தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் ஜாதிக்காயை நடவு செய்யலாம். இது தொடர் அறுவடைப்பயிர். ஒன்றில் பூவெடுக்கும் பருவத்தில் இன்னொன்றில் காய் பிடிக்கும். கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் இயங்கிவரும் நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி மையத்தில் இதற்கான நாற்றுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மையத்தின் விதிகளுக்கு உட்பட்டு முன் பதிவு செய்துகொள்வது அவசியம்” என்றார்.

தொடர்புக்கு : கொச்சி, நறுமணப்பொருட்கள் வாரியம், தொலைபேசி: 0484-2347965.

எங்கு வளர்க்கலாம்?

தமிழ்நாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைசாரலை ஒட்டியுள்ள பகுதிகளில் நன்கு வளரும். தேனி, கம்பம், தென்காசி, குற்றாலம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் வளர்க்கலாம். குறிப்பாக, 30 சென்டிகிரேட் வெப்பநிலைக்கு மேல் வெப்பம் இல்லாத பகுதிகளில் தோட்டக்கலைத்துறையிடம் ஆலோசனை பெற்று நடவு செய்யலாம். வடிகால் வசதியுள்ள, தண்ணீர் தேங்கி நிற்காத மண் மிக அவசியம். தண்ணீரைத் தேக்கினால் காய்ப்பு நின்று விடும். நிழலும் வெயிலும் மாறிமாறிக் கிடைக்கும் உயர்ந்த தென்னை மரங்களுக்குள்தான் இது நன்கு வளர்ந்து பலன் தரும். எக்காரணம் கொண்டும் தனிப்பயிராக தமிழ்நாட்டில் நடவு செய்யக்கூடாது. தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களில் ஊடுபயிராக மட்டுமே மேற்கொள்ள முடியும்.

வருமானம்!

ஒரு மரத்தில் கொட்டைகளை அறுவடை செய்து காய வைத்து தரம் பிரிக்க 700 ரூபாய் வரை செலவாகும்.

15 ஆண்டுகள் வயதான தரமாக வளர்ந்த ஒரு மரத்தில் இருந்து 15 கிலோ கொட்டையும், 4 கிலோ பத்ரியும் கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோ கொட்டை 250 ரூபாய் எனவும், ஒரு கிலோ பத்ரி 900 ரூபாய் எனவும் விற்பனையாகிறது. 15 வயது முடிந்த ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக  7 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவானாலும், 6 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். அந்த வகையில் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும்.

உப்புத் தண்ணீர் ஏற்றதல்ல !

சாகுபடி முறை குறித்து சண்முகசுந்தரம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

“25 அடி இடைவெளியுள்ள நான்கு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு மரம் என்ற கணக்கில் (25 அடிக்கு 25 அடி இடைவெளி) நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். 3 அடிக்கு 3 அடி அளவில் குழி எடுத்து ஓவ்வொரு குழியிலும்...

5 கிலோ மட்கிய உரம், 3 கிலோ மண்புழு உரம், 200 கிராம் உயிர் உரம் ஆகியவற்றைக் கலந்து நிரப்பி, நாற்றை நடவு செய்து, மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். எவ்வளவு தாராளமாக தண்ணீர் வசதி கிடைத்தாலும், ஜாதிக்காய்க்கு சொட்டு நீர்ப் பாசன முறைதான் ஏற்றது. ஒரு செடிக்கு தினமும் குறைந்தபட்சம் 10 லிட்டர் தண்ணீர் அவசியம். 5-ம் ஆண்டு முதல் காய்ப்பு தொடங்கிய பிறகு ஒரு நாளுக்கு 50 லிட்டர் தண்ணீர் அவசியம். உப்புத் தண்ணீர் ஜாதிக்காய்க்கு ஏற்றதல்ல.

ஒவ்வொரு செடிக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை... 25 கிலோ தொழுவுரம், 10 கிலோ மண்புழு உரம், 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 2 கிலோ எலும்பு உரம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட வேண்டும். இப்பயிருக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் என்பதால், நோய் தாக்குவதில்லை. நறுமணப்பயிர் என்பதால் பூச்சிகளும் வருவதில்லை. மாதம் இரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து செடிகள் மீது தெளித்து வந்தால், பூச்சி, நோய் தாக்காமல் தரமான விளைச்சல் கிடைக்கும்.

கோழி முட்டை வடிவில் இருக்கும் காய்கள் முற்றி லேசாக வெடிக்கத் தொடங்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் சேதாரம் ஆகாதபடி பறிக்க வேண்டும். வெடித்த காய்களுக்குள் கறுப்பு நிற கொட்டையும், மணக்கும் தன்மை கொண்ட சிவப்பு நிற பத்ரியும் இருக்கும். இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்து கொட்டைகளை வெயிலிலும், பத்ரியை நிழலிலும் காய வைக்க வேண்டும்.”

ஆண் செடி அவசியம்... நாற்றுக்கள் கவனம்!

ஒரு நாற்று 150 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாற்றுகள், ஒட்டுக்கட்டுதல் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. கிளை ஒட்டு மற்றும் பரு ஒட்டு ஆகிய இரண்டு முறைகள்தான் இதில் உண்டு.

நல்ல விளைச்சலைக் கொடுக்கும் மரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுக்களைத் தேடி விசாரித்து வாங்க வேண்டும். கள்ளிக்கோட்டை இந்திய நறுமணபொருட்கள் ஆராய்ச்சி மையம், கொச்சி நறுமண பொருட்கள் வாரியம், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஆகியவற்றின் ஆலோசனையுடன் கன்றுகளைத் தேர்வு செய்வது நல்லது. அல்லது ஏற்கெனவே நல்ல மகசூல் எடுத்து வரும் விவசாயிகளின் வயலுக்கு நேரில் சென்று தரமான கன்றுகளைப் பார்த்து வாங்க வேண்டும். தனியார் நர்சரிகளிடம் நாற்றுக்கள் வாங்கும்போது கவனம் தேவை.

நடவு செய்யும்போது, 20 செடிகளுக்கு ஒரு ஆண் மரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண் மரங்களை ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்பம் மூலம் நாமே உற்பத்தி செய்துகொள்ளலாம். கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் உள்ள தனியார் நாற்றுப் பண்ணைகளிலும் ஜாதிக்காய் நாற்றுக்கள் கிடைக்கும்.

பூச்சி, நோய்க்கு ஆலோசனை!

கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நறுமணப்பொருட்கள் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சுரேஷ், “ஜாதிக்காய் குறித்த ஆராய்ச்சிகள் பெரிய அளவில் இங்கு நடைபெறவில்லை. ஆனால், நோய்த்தாக்குதல் குறித்த சந்தேகங்களுக்கு எங்கள் துறை மூலம் ஆலோசனை சொல்கிறோம். ஜாதிக்காய் சாகுபடி குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் வேலை நாட்களில் எங்கள் துறை அலுவலகத்துக்கு நேரில் வரலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்புக்கு: நறுமணப்பொருட்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொலைபேசி: 0422-6611284.

பனி கொட்டும் பகுதிகளில் வளராது!

ஜாதிக்காயின் பிறப்பிடம், இந்தோனேசியாவில் உள்ள பாண்டா தீவுகள். மலேசியாவில் இது இயற்கையாக காட்டு மரங்களாக வளர்கின்றன.  இலங்கை மற்றும் கோவா, மாஹி, கூர்க் ஆகிய பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. காஷ்மீர், சிம்லா, நீலகிரி போன்ற பனி கொட்டும் பகுதிகளில் இது வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் மட்டும்தான் வளரும்.

விற்பனைக்குக் கவலையில்லை!

பிப்ரவரி மாதம்  தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஜாதிக்காய் அறுவடை செய்யலாம். ஜாதிக்காய்க் கொட்டை மற்றும் ஜாதிபத்ரி ஆகியவற்றை ஓர் ஆண்டு வரை இருப்பு வைத்தும்  விற்பனை செய்யலாம். உள் நாட்டுத் தேவை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புக்கள் என தேவை அதிகம் உள்ளதால், வியாபாரிகள் தேடி வந்து கொள்முதல் செய்து கொள்கிறார்கள்.

மருத்துவ குணமும் உண்டு!

ஜாதிக்காயின் மேல் ஓட்டில் இருந்து ஊறுகாய், சர்பத்,  கறுப்புத் தேநீர், ஒயின் ஆகியவற்றைத் தயாரிக்கிறார்கள். கொட்டைகளில் இருந்து நறுமணம் கொண்ட சமையல் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், ஊட்ட மருந்துகள், மதுவகை, உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறார்கள். இது, ஆண்மைக்குறைவுக்கு சிறந்த நிவாரணி.